Published:Updated:

’ஜானி’ அர்ச்சனா, ’முள்ளும் மலரும்’ மங்கா, ’நெஞ்சத்தைக் கிள்ளாதே’ விஜி... மகேந்திரனின் திரைப் பெண்கள்!

’ஜானி’ அர்ச்சனா, ’முள்ளும் மலரும்’ மங்கா, ’நெஞ்சத்தைக் கிள்ளாதே’ விஜி... மகேந்திரனின் திரைப் பெண்கள்!
’ஜானி’ அர்ச்சனா, ’முள்ளும் மலரும்’ மங்கா, ’நெஞ்சத்தைக் கிள்ளாதே’ விஜி... மகேந்திரனின் திரைப் பெண்கள்!

``என்னை மனைவியா ஏத்துக்க தயாரா இருக்கீங்களா?'' - ஓர் ஆணிடம், பெண் தன் காதலை வெளிப்படுத்துவதில் இன்று வரை அல்டிமேட் மகேந்திரனின் அர்ச்சனா கேரக்டர்தான். 

சினிமாவில் பெண்களை மரியாதையாகக் காட்ட வேண்டுமென்கிற எண்ணம் இயக்குநர் மகேந்திரனிடம் அதிகமாகவே இருந்தது. அவருடைய படங்களைப் பார்த்தவர்களுக்கு மட்டுமல்ல, அவரின் பேட்டிகளை வாசித்தவர்களுக்குக்கூட இந்த உண்மை நன்றாகத் தெரியும். அவர் படைத்த பெண் கதாபாத்திரங்கள் அத்தனையுமே தனித்தன்மை வாய்ந்தவைதாம் என்றாலும், ஒரு சில கதாபாத்திரங்கள் அடி மனதின் ஆழம் வரைச் சென்று இனிக்கக் கூடியவை. அப்படிப்பட்ட சில கதாபாத்திரங்களில் இயல்புகளை, உணர்வுகளை மறுபடியும் நினைவுகூர்ந்து ரசிக்கலாமா..? 

பிறந்த வீட்டு சோகம், நேசிக்கத் தெரியாத கணவன் என்று சோகமே வடிவாகச் சித்திரிக்கப்பட்ட கேரக்டர் உதிரிப்பூக்களின் லஷ்மி. ஆனால், அந்தக் கதாபாத்திரத்திடமும் சின்னக் குறும்பு ஒன்றை ஒளித்து வைத்திருப்பார் மகேந்திரன். வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருக்கிற லஷ்மியிடம், அவளுடைய மகன் பூப் பொட்டலத்தை கொண்டு வந்து கொடுத்துவிட்டு, ``அப்பா நம்ம எல்லாரையும் சினிமாவுக்குக் கூட்டிட்டுப் போகப் போறாராம். உன்னைச் சமைக்க வேணாம்னு சொல்லிட்டாரு. ஹோட்டல்ல சாப்பிட்டுக்கலாமாம்'' என்பான். முகம் நிறைய சந்தோஷத்துடன் திண்ணையிலிருந்து எழும் லஷ்மி கேரக்டர், அடுத்த கணம் `மழை வரப் போகிறதா' என்று வானத்தை அண்ணாந்து பார்க்கும். அந்த நொடி அந்தப் பாத்திரத்தின் சோகத்தையும் தாண்டி படம் பார்ப்பவர்களின் உதட்டோரத்தில் சின்னப் புன்னகையைக் கொண்டு வந்து விடுவார் மகேந்திரன்.  

``என்னை மனைவியா ஏத்துக்க தயாரா இருக்கீங்களா?'' - ஓர் ஆணிடம், பெண் தன் காதலை வெளிப்படுத்துவதில் இன்று வரை அல்டிமேட் `ஜானி' அர்ச்சனா கேரக்டர்தான். நாயகன் முதலில் மறுத்துவிட்டு, பிறகு சம்மதித்தவுடன், ``நான் அப்படித்தான் பேசுவேன்.. '' என்றபடி புடவை முந்தானையால் ஒரு பாதி முகத்தை மூடியபடி நாயகனைப் பார்த்து வெட்கப்பட்டுச் சிரிக்கும் இந்த சீனைப் பார்க்கும்போதெல்லாம், நம்மையறியாமல் நம் மனது மகேந்திரனைக் காதலிக்க ஆரம்பித்திருக்கும். 

அண்ணன் தன் திருமண விஷயத்தில் தவறு செய்கிறான் என்று முள்ளும் மலரும் வள்ளிக்குத் தெளிவாக தெரியும். இருந்தாலும்,  ``என்னைக் கொல்றதுக்குக்கூட எங்கண்ணனுக்கு உரிமை இருக்கு. எங்க அண்ணனுக்குத் தெரியாத நல்லது, கெட்டது உனக்குத் தெரிஞ்சுடுச்சா..?'' அண்ணியிடம் வாதாடும் இடத்தில் நம் வீட்டு அக்கா, தங்கைகள் மனதுக்குள் வந்து போவார்கள். மகேந்திரனின் சினிமாப் பெண்கள் எப்போதுமே இயல்பானவர்கள். இயல்பு வாழ்க்கையில் இருந்துதான் அவர் தன்னுடைய நாயகிகளைத் தேர்ந்தெடுத்தார் என்பதற்கு வள்ளி கேரக்டர் ஓர் உதாரணம். அதுவும் தன்னுடன் வந்திருக்கும் கூட்டத்தினரிடமிருந்து விலகி, ஓடிப்போய் அண்ணனை வள்ளி கட்டிக்கொள்ளும் தருணத்தில்... படம் பார்த்த ஒவ்வொருவரும் காளியாக இறுமாப்பாகவும், வள்ளியாக அழுதுகொண்டிருந்தார்கள். அந்த ஆனந்த அழுகைக்கு முழுச் சொந்தக்காரர் இயக்குநர் மகேந்திரன்.

அதே `முள்ளும் மலரும்' பட மங்கா. காதலிலிருந்து பின்வாங்கும் தன் நாத்தனாரின் காதலனிடம், ``மனசுல தைரியம் இல்லாதவங்க படிக்கக்கூடாது, இல்ல கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படக்கூடாது. ஓர் உதவாக்கரை ஆளை வள்ளிக்கு என் புருசன் நிச்சயம் பண்ணியிருக்குன்னா அதுக்கு காரணம் நீங்கதான். உங்கள மாதிரி மனசுல தைரியம் இல்லாதவங்க, ஆம்பளைன்னு சொல்லிக்கிறதே தப்பு'' என்று சாடிவிட்டுப் போகும். 

அடுத்து நெஞ்சத்தைக் கிள்ளாதே விஜி. சந்தேகப்பிராணி காதலன். தவறுணர்ந்து மன்னிப்புக் கேட்டால், சராசரிப் பெண்கள் என்ன செய்வார்கள்? `நீங்க போயி என்கிட்ட மன்னிப்புக் கேட்கலாமா?' என்று உருகுவார்கள். ஆனால், மகேந்திரனின் நாயகி விஜி என்ன கேட்பாள் தெரியுமா? ``உங்க மேலே எனக்குப் பரிதாபமா இருக்கு. சரி, இந்த வியாதி உங்களைவிட்டு எப்போ போகும், கல்யாணத்துக்குப் பிறகு நீங்க என்னைச் சந்தேகப்பட மாட்டீங்க அப்படீங்கிறதுக்கு என்ன உத்தரவாதம் இருக்கு?'' 

மெட்டி - மூன்று பெண்களின் வாழ்க்கையைப் பற்றிய கதை. எந்தச் சூழ்நிலையிலும் ஒழுக்கம் தவறாத கல்யாணி, `எங்கம்மா பேரு தெரிஞ்சவங்க எல்லாம் எங்கம்மாவுக்கு புருஷனாகிட முடியாது' என்று தவறு செய்த அப்பாவைத் தூக்கி எறிகிற சுலேகா, அக்காவை அம்மாவாகப் பார்க்கிற ப்ரீத்தா. சுயமாக முடிவெடுக்கத் தெரிந்த பெண்கள் இவர்கள். அவர்கள் வாழ்க்கையை அவர்களே செதுக்கிக் கொள்கிறார்கள் என்பதைத்தான் படம் முழுக்கக் காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குநர் மகேந்திரன். இந்த மூன்று பேருமே வார்த்தைகளுக்கு வசப்படாத பெண் கதாபாத்திரங்கள். ஆணாக இருந்தாலும் `மெட்டி'யில் வருகிற பட்டாபி கதாபாத்திரத்தைப் பற்றிக் கட்டாயம் குறிப்பிட வேண்டும். தவறான ஆணை திருமணம் முடித்த தங்கையின் குங்குமத்தை அழித்துவிட்டு, ``இந்தக் குங்குமத்துலதான் பொம்பளைங்களுக்கு உலகமே இருக்குதா? அடுத்த கல்யாணத்துல மறுபடியும் வைச்சுக்கலாம்'' என்று வசனம் பேசும். இன்னோர் இடத்தில், ``மாப்பிள்ளை, கல்யாணம்... ஒரு பொம்பளைக்கு இதைவிட்டா வாழ்க்கையில் வேற ஒண்ணுமே இல்லையா?'' என்று கேள்வி எழுப்பும். இந்த கேரக்டர் இயக்குநர் மகேந்திரனாகவே நம் கண்களுக்குப்படுகிறது. 

Screenshots grabbed from YouTube

தமிழ் சினிமாவுக்கு இயல்பான பெண் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்திய உங்களுக்குப் பெண்கள் சார்பாக நன்றியும் அன்பும். 

அடுத்த கட்டுரைக்கு