Published:Updated:

"அ.தி.மு.க., அ.ம.மு.க., தி.மு.க. ஆங்... மக்கள் நீதி மய்யம்லருந்தும்...!’’ - ஆரத்தியின் ரெட் சிக்னல்

"அ.தி.மு.க., அ.ம.மு.க.,  தி.மு.க. ஆங்... மக்கள் நீதி மய்யம்லருந்தும்...!’’ -  ஆரத்தியின் ரெட் சிக்னல்
"அ.தி.மு.க., அ.ம.மு.க., தி.மு.க. ஆங்... மக்கள் நீதி மய்யம்லருந்தும்...!’’ - ஆரத்தியின் ரெட் சிக்னல்

கடந்த காலங்களில் தொடர்ந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த ஆரத்தி கணேஷ்கர், இந்தத் தேர்தல் சமயத்தில் நிம்மதியாக இருப்பதாகச் சொல்கிறார்.

ட்டசபைத் தேர்தலோ, நாடாளுமன்றத் தேர்தலோ... அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நடிகர், நடிகைகளால் களைகட்டும். தமிழ்நாட்டில் மற்ற கட்சிகளைக் காட்டிலும், அ.தி.மு.கவில் இந்த நட்சத்திரங்களின் எண்ணிக்கை கொஞ்சம் அதிகமாகவே உண்டு. இவர்களில் கடந்த தேர்தலில் பரபரப்பாகப் பிரசாரம் செய்த பலரை இந்தத் தேர்தலில் பார்க்க முடியவில்லை. `எங்கே போனார்கள் இவர்கள்?! - கடந்த தேர்தலில் அ.தி.மு.க-வுக்காகச் சுற்றுப்பயணம் செய்த சில பிரபலங்களிடம் பேசினேன்.

`இப்போ தமிழ்நாட்டின் அரசியல் நிலைமையே சரியில்லை. அன்னைக்கு ஜெயலலிதாவுக்காக மக்கள் ஓட்டு போட்டாங்க. அந்த ஆட்சி தொடருமா இல்லையாங்கிறதைத் தீர்மானிக்கற தேர்தலா இந்தத் தேர்தல் இருக்கு. அதனால, இந்த நேரத்துல எதையும் பேசுறது நல்லதல்ல’ என்றவர்கள், `என்ன நடக்குதுனு இப்போ வேடிக்கை மட்டும் பார்க்கப்போறோம். தேர்தல் முடிவு வந்த பிறகு எதையும் பேசலாம்’ எனப் பெரும்பாலானவர்கள் மறுத்துவிட, நடிகை ஆரத்தி கணேஷ்கர் மட்டும் பேச முன்வந்தார். 

``2014  தேர்தல் சுற்றுப்பயணம்தான் நான் பண்ண பிரசாரத்துலயே மறக்க முடியாதது. அ.தி.மு.க தலைமைக் கழகத்தின் நட்சத்திரப் பேச்சாளராக தமிழ்நாடு முழுக்கப் பயணம் பண்ணிப் பேசினேன். எந்த ஊருக்குப் போனாலும் அங்கே கண் முன்னாடி, ஜெயலலிதா அம்மா செஞ்ச ஒவ்வொரு விஷயமும் மக்களுக்குப் பலனளிக்கிறதைப் பார்க்கலாம். அந்த விஷயத்துல இருந்தே தொடங்கிப் பேசுவேன். அப்படிப் பேசுனது வீண்போகவும் இல்லை. கட்சி நாற்பதுக்கு 37 தொகுதிகள்ல ஜெயிச்சு நாட்டையே திரும்பிப் பார்க்க வெச்சது! அந்த வெற்றியில கடுகளவுக்காவது என் பங்கும் இருந்தது.

ஆனா, இந்தத் தேர்தல்ல பிரசாரத்துக்கே போகமுடியாத நிலை வரும்னு அப்போ நினைச்சுக்கூடப் பார்த்திருப்பேனா?! என்ன செய்ய... அந்த அம்மா இல்லாத ஒரு சூழல்ல என்னால கட்சிப் பணியில ஈடுபட மனசு இடம் தரலை. அதனாலேயே முறைப்படி ராஜினாமா கடிதம் கொடுத்துட்டு ஒதுங்கிட்டேன்." என்றவர், ``கட்சி அம்மா இருந்த மாதிரி இப்போ இல்லைங்கிறதுதான் யதார்த்தம். இதைப் புரிஞ்சுகிட்டுத்தான் பலபேர் சைலன்டா ஒதுங்கிட்டாங்க. ஒருசிலர்தான் இன்னும் `அம்மாவின் கட்சி’ங்கிற ஒரு ஈர்ப்புல இருக்காங்க. அவங்ககூட இந்தத் தேர்தல்ல பிரசாரம் போறாங்களான்னு தெரியலை." என்றார்.

``மறுபடியும் உங்களைக் கட்சியில இருந்து கூப்பிடலையா?" என்றேன்.

"கூப்பிடத்தான் செஞ்சாங்க. நான் இருந்த அதிமுக-வுல இருந்து மட்டுமல்ல, டி.டி.வி.தினகரன் கட்சியில இருந்தும் கூப்பிட்டாங்க. ‘ஒதுங்கியது ஒதுங்கியபடியே இருக்கட்டும்’னு மறுத்துட்டேன். மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி, நடக்கிறதையெல்லாம் பார்த்துக்கிட்டேதான் இருக்கோம். மக்கள்கிட்ட என்னத்த போய் பேசுறது?! அதனால, ஆளை விடுங்க சாமிகளானு சொல்லிட்டேன். இப்போதான் நிம்மதியா இருக்கு. இன்னொரு விஷயம் என்னன்னா, நான் இருந்த கட்சியில இருந்து கூப்பிட்டது ஆச்சரியமில்லை. ஆனா, திமுக, மக்கள் நீதி மய்யம் கட்சியில இருந்தும் கூப்பிட்டாங்க." என்றவர், அடுத்து சொன்னது ஹைலைட் விஷயம்!

"எந்தக் கட்சின்னு பெயரைக் குறிப்பிட்டுச் சொல்ல நான் விரும்பலை. ஆனா, நடந்தது இதுதான். ‘கட்சிக்கு வாங்க, கொள்கை பிடிச்சிருந்தா பிரசாரம் செய்யுங்க’னு கூப்பிட வழியைக் காணோம். எடுத்ததும், ‘உங்களுக்குக் கடன் எவ்வளவு இருக்கு’ன்னு கேட்குறாங்க. என்னடா இதுன்னு புரியாம முழிச்சா, 'இ.எம்.ஐ கட்டிக்கிட்டு இருக்கீங்களா, மொத்தமா கடனை அடைச்சுடலாம்’னு சொல்லிக் கூப்பிட்டாங்க. அவங்க கூப்பிட்டது தப்பில்லை. ஆனா, இப்படியான அப்ரோச் எனக்குப் பிடிக்கலை. அதாவது, கடனை அடைக்கிறதுக்கு நான் அவங்க கட்சியில சேர்ந்து பிரசாரம் செய்யணுமாம். என் கடனை நானே அடைச்சுக்கிறேன்; முதல்ல கிளம்புங்கன்னு சொல்லிக் கதவை அடைச்சுட்டேன்." என்கிறார், ஆரத்தி. 

அடுத்த கட்டுரைக்கு