Published:Updated:

"என்ன பண்ணாலும் பொல்லாப்பு ஆகுது... அதான், வேற முடிவு எடுத்துட்டேன்!" - முத்தையா

"என்ன பண்ணாலும் பொல்லாப்பு ஆகுது... அதான், வேற முடிவு எடுத்துட்டேன்!" - முத்தையா
"என்ன பண்ணாலும் பொல்லாப்பு ஆகுது... அதான், வேற முடிவு எடுத்துட்டேன்!" - முத்தையா

`தேவராட்டம்' படம் குறித்து அப்படத்தின் இயக்குநர் முத்தையா பேட்டி.

`குட்டிப்புலி', `கொம்பன்', `மருது' ஆகிய படங்களை இயக்கிய முத்தையா, தற்போது கெளதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் நடிக்க `தேவராட்டம்' படத்தை இயக்கி முடித்துள்ளார். அக்கா - தம்பி - மாமா உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் குறித்து இயக்குநர் முத்தையாவிடம் பேசினேன்.   

``சிட்டி பையனா நடிச்சுக்கிட்டு இருந்த கெளதம் கார்த்திக்கை, இந்தக் கதையில் நடிக்க வைக்க என்ன காரணம்?"  

``கெளதம் கார்த்திக் சிட்டி பையனா இருந்தாலும், அவருக்கான ரசிகர்கள் பி, சி சென்டர்லதான் அதிகமா இருக்காங்க. அது மட்டுமல்லாம, சிட்டி சப்ஜெக்டல அவரைப் பார்த்துட்டு இந்தப் படத்துல பார்க்க ரொம்ப வித்தியாசமா இருக்கும். கார்த்தி, விஷால், சசிகுமார்னு நான் வொர்க் பண்ண நடிகர்கள் எல்லோரும் ஏற்கெனவே மக்கள் மத்தியில ஹீரோவா பதிவானவங்க. ஆனா, கெளதம் மாதிரி வளர்ந்து வரும் ஹீரோவுக்கு இந்தக் கதை முக்கியமானதா இருக்கும்னு நினைச்சேன். இந்தப் படத்துக்குப் பிறகு, மக்கள் மத்தியில ஹீரோவா பதிவாகிடுவார். தப்பு நடக்கிறதைப் பார்த்துட்டு ஒதுங்கி, ஒப்புக்கிட்டுப் போகாம, தட்டிக் கேட்கிற ஹீரோவா நடிச்சிருக்கார். இன்றைய இளைஞர்கள் இப்படித்தான் இருக்கணும்னு இந்தக் கேரக்டரை உருவாக்கியிருக்கேன்."  
 

``மஞ்சிமா மோகன்?"

``மஞ்சிமாவைக் `கொடிவீரன்' படத்துக்கே அப்ரோச் பண்ணேன். அப்போ அவங்க `இப்படை வெல்லும்' படத்துல பிஸியா இருந்ததுனால பண்ண முடியல. என் கதைக்கு கிராமத்து முகமுள்ள, மிடில் கிளாஸ் பொண்ணு லுக்ல ஹீரோயின் இருக்கணும். நிறைய இடங்கள்ல இதை எப்படிப் பண்ணுவாங்களோனு யோசிச்சுக்கிட்டே இருப்பேன். ஆனா, நான் எதிர்பார்க்கிறதை அசால்டா நடிச்சுக் கொடுப்பாங்க, மஞ்சிமா." 

`` `தேவராட்டம்' டைட்டிலுக்கு என்ன காரணம்?" 

``வெற்றிக்கான ஆட்டத்தைத் `தேவராட்டம்'னு சொல்வாங்க. படத்துல ஹீரோ பெயர், வெற்றி. அந்த வெற்றியின் ஆட்டம்தான் தேவராட்டம். இதை ஒரு சமுதாய ரீதியான தலைப்பா பார்க்கத் தேவையில்லை. வெற்றியோட ஆட்டம்னு நினைச்சுதான் டைட்டில் வெச்சிருக்கேன். அதை எடுத்துக்கிறவங்க மனநிலையைப் பொறுத்தது."  

`` `நிக்கிற தொனியே கோரிப்பாளையம் சிலை கணக்கா கம்பீரமா இருக்கு!' என்ற வசனம் டீஸர்ல இருக்கே?!" 

``படத்தின் கதைக்களம் செல்லூர்ப் பகுதி. கோரிப்பாளையம், மதுரையின் அடையாளம். அந்த இடத்துல எல்லாச் சிலையுமே இருக்கு. பெரியார் சிலைகூடதான் இருக்கு. கதையோடு பார்க்கும்போது, இந்த வசனம் தனியா தெரியாது. அதைப் பிரச்னையா பார்க்காதீங்க!" 
 

``உங்ககிட்ட இருந்து வேற ஜானர்ல படத்தை எதிர்பார்க்கலாமா?" 

``ஹாரர், த்ரில்லர்னு பல ஜானர்ல படம் எடுக்கிறாங்க. ஆனா, அது எந்த வகையிலேயும் யாருக்கும் உதவாது. அந்தக் காலகட்டத்துக்கு இயக்குநராகி ஜெயிச்சுக்கலாம். ஆனா, முன்னுதாரணமா இருக்க முடியாது. `முள்ளும் மலரும்', `முதல் மரியாதை' மாதிரியான கிராமத்துப் படங்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உயிர்ப்போடு இருக்கும். `ஊமை விழிகள்' நல்ல படம் அவ்ளோதான். ஆனா, என்னைக்குமே அதை ஒரு சினிமாவா மக்கள் ஏத்துக்கிட்டதில்லை. அதனால, நம்ம மக்களுக்கான படம் எடுக்கணும். மக்கள்கிட்ட நடக்கிற விஷயங்களைப் படமா எடுக்கணும். அவ்ளோதான்."

``இதேமாதிரி படங்கள்தான் பண்ணணும்னு முடிவு பண்ணிட்டீங்களா?"

``நேட்டிவிட்டி, எமோஷன், சென்டிமென்ட்... தயாரிப்பாளர்கள் என்கிட்ட இதைத்தான் கேட்கிறாங்க. என் முதல் படமான `குட்டிப்புலி'யை முடிச்சதுமே ஒரு சிட்டி சப்ஜெக்ட்தான் எடுக்கணும்னு நினைச்சேன். ஆனா, நடக்கல. `கொம்பன்' வந்ததுக்குப் பிறகு, `இவன் இப்படித்தான்'னு முடிவு பண்ணிட்டாங்க. அப்புறம், `மருது'. `சார் நீங்களும் நானும் சேர்ந்து படம் பண்றோம். சிட்டி சப்ஜெக்ட் ஒண்ணு இருக்கு. ஓகேவா'னு சசிகுமார் சார்கிட்ட கேட்டேன். அவரும் நேட்டிவிட்டி படம்தான் கேட்டார். `கொடிவீரன்' பண்ணேன். இந்தப் படத்துக்கும் அப்படித்தான்! ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்துல கதையைச் சொன்னப்போ, `7 சதவிகித சினிமா எங்களுக்கு வேண்டாம். 93% சதவிகித சினிமாவைப் பண்ணுங்க. செங்கல்பட்டுக்கு அடுத்து இதைத்தான் கேட்குறாங்க.'னு சொன்னாங்க. பணம் போடுறவங்களும், ஹீரோக்களும் கேட்கிறதைத்தான் நான் படமா எடுக்கிறேன்." 
 

``அடுத்து?" 

``ஒரு குறிப்பிட்ட சமுதாயம் சார்ந்த படங்களையே பண்றேன்னு என்மேல குற்றம் சொல்லிக்கிட்டே இருக்காங்க. என்னதான் டெக்னாலஜி அதிகமா வந்தாலும், பழைமைவாதத்தைத் தேவையில்லாம புகுத்திக்கிட்டிருக்காங்க. வில்லேஜ் சப்ஜெக்ட் பண்ணா, இந்த மாதிரி விமர்சனம் வருது. சிட்டி படம் பண்ண நினைச்சா, தயாரிப்பாளர் வேண்டாம்னு சொல்றார். அதனால, ஒரு கன்னடப் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிட்டு வந்துட்டேன். அதைதான் அடுத்து பண்ணணும். சிவராஜ்குமார் சார் நடிச்ச `டகரு'னு ஒரு போலீஸ் படம் அது. பார்த்ததும் பிடிச்சுப்போச்சு. அதைத் தமிழ் சினிமாவுக்கு ஏத்தமாதிரி மாத்தி வெச்சிருக்கேன். திரும்பவும் `நேட்டிவிட்டி படம் கொடுங்க'னு கேட்கிறவங்களைக் கடவுள்தான் பார்த்துக்கணும்!" 

அடுத்த கட்டுரைக்கு