Published:Updated:

``ஒட்டுமொத்த ரசிகர்களும் கதறி அழும் இடம் இதுதானே...'' `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஒரு க்விக் அறிமுகம் - அத்தியாயம் 7

தார்மிக் லீ
``ஒட்டுமொத்த ரசிகர்களும் கதறி அழும் இடம் இதுதானே...'' `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஒரு க்விக் அறிமுகம் - அத்தியாயம் 7
``ஒட்டுமொத்த ரசிகர்களும் கதறி அழும் இடம் இதுதானே...'' `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஒரு க்விக் அறிமுகம் - அத்தியாயம் 7

மொத்த 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ரசிகர்களும் கதறி அழும் இடம் இதுவாகத்தான் இருக்கும். ஜார்ஜ் ஆர்.ஆர்.மார்டினின் ரைட்டிங் ஸ்டைல் இப்படியாகத்தான் இருக்கும்.

'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடரின் கடந்த அத்தியாயத்தில் டினேரியஸ் டார்கேரியன், அஸ்டோபர் நகருக்கு விடுதலை பெற்றுத் தந்ததைப் பார்த்தோம். டினேரியஸ் டார்கேரியனைப் பிடித்தவர்களுக்கு, அந்த 'டிராகரிஸ்' மொமன்ட் எப்போதுமே ஃபேவரைட். அதிலிருந்து ஆரம்பித்து மூன்றாவது சீஸனின் இறுதிவரை இந்த அத்தியாயத்தில் பார்க்கலாம். 

ப்ரான் ஸ்டார்க், ஓஷா, மீரா ரீடு, ஜோஜன் ரீடு, ஹோடோர், ரிக்கன் ஸ்டார்க்... ஆகியோர் ஜான் ஸ்நோவைத் தேடிப் பயணப்பட்டுக்கொண்டிருப்பதையும் ஜோஜன் ஒரு 'Warg' என்பதையும் சொல்லியிருந்தேன். இந்தப் பயணத்தின்போது, ஜோஜன் ரீடு தனது கனவில் ஜான் ஸ்நோவின் தற்போது இருக்கும் இடத்தைப் பார்த்திருப்பார். 'நான் ஜான் ஸ்நோவைப் பார்த்தேன். ஆனால், அவர் சுவரின் தவறான பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறார்' என்று ப்ரான் ஸ்டார்க்கிடம் சொல்வார் ஜோஜன். அடுத்ததாகக் கதை அப்படியே ஜான் ஸ்நோ பக்கம் நகரும். இக்ரிட், டோர்மன்ட் மற்றும் சில ஒயில்டுலிங்ஸ்களோடு 700 அடி சுவரில் ஏற முயற்சி நடந்துகொண்டிருப்பார்கள். முழு ஏற்பாடுகளோடு சுவரில் ஏறும் சமயத்தில் சில பிரச்னைகள் நடந்தாலும், எல்லோரும் பாதுகாப்பாக சுவருக்கு அந்தப் பக்கம் சென்றுவிடுவார்கள். 

கதை அங்கிருந்து கிங்ஸ் லேண்டிங் நோக்கி நகரும். 'நான் இளவரசியான பின் என் சகோதரரான சர் லோரஸுக்கு உன்னைத் திருமணம் செய்து வைக்கிறேன்' என்று மார்கேரி டைரல், சான்ஸா ஸ்டார்க்கிடம் சொல்லியிருப்பார். இதை எப்படியோ தெரிந்துகொண்ட டைவின் லானிஸ்டர், டிரியன் லானிஸ்டரை சான்ஸாவுக்குத் திருமணம் செய்துவைக்கத் திட்டமிடுவார். அதுமட்டுமன்றி, சர் லோரஸை செர்சிக்குத் திருமணம் செய்துவைக்கவும் திட்டமிட்டிருப்பார். இந்த முடிவுகளில் இருவருக்குமே விருப்பம் இருக்காது. மறுபக்கம், ஃப்ரே குடும்பத்திடம் மன்னிப்பு கேட்கும் ராப் ஸ்டார்க், 'உன்னுடைய மன்னிப்பை நான் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால், நீ கொடுத்த சத்தியத்தை உன்னுடைய மாமா எட்ம்யூர் டல்லி நிறைவேற்ற வேண்டும்' என்ற நிபந்தனையை முன் வைப்பார். அதாவது, ஃப்ரே குடும்பம், ஸ்டார்க்குகளுக்கு உதவ வேண்டுமென்றால், வால்டர் ஃப்ரேவின் ஏதாவது ஒரு மகளை ராப் ஸ்டார்க் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதுதான் இவர்களுக்குள் இருந்த ஒப்பந்தம். அதை மீறி ராப் ஸ்டார்க், டலிசாவைத் திருமணம் செய்ததால், அவருடைய மாமா எட்ம்யூர் டல்லியிடம் அந்தச் சத்தியத்தைக் காப்பாற்றச் சொல்வார். இப்படிப் பல அரசியல் திருமணங்களுக்கு வெவ்வேறு இடத்தில் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கும்.

இப்போது நாம் எஸ்ஸோஸில் இருக்கும் டினேரியஸ் டார்கேரின் பக்கம் வருவோம். அஸ்டோபரில் இருக்கும் அன்சல்லீடு மக்களை விடுவித்துத் தன்னோடு சேர்த்துக்கொண்ட பின், டினேரியஸின் குதிரை யூங்காய் எனும் இடத்தை நோக்கிப் பாய்கிறது. காரணம், அந்த ஊரின் சிற்றரசர்கள் அங்குள்ள மக்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பார்கள். டினேரியஸின் வருகையைத் தெரிந்துகொண்ட அந்த ஊரின் அரசர், அவர் சார்பாக ஒருவரை அனுப்பி தங்கங்களைக் கொடுத்து, 'எங்களை எதுவும் செய்துவிடாதீர்கள்' என்று தாழ்மையாகக் கேட்பார். 'என்னுடைய நோக்கம் தங்கம் கிடையாது. மக்களின் சுதந்திரம்தான்' என்று சொல்வார் டினேரியஸ். அதற்கு மறுப்பு சொல்லும் விதமாக அந்த ஊரின் அரசர் மூன்று படைத் தளபதிகளை அனுப்பி மிரட்டல் விடுப்பார். அவர்களில் ஒருவரான டாரியோ நஹாரிஸ், டினேரியஸுக்கு ஆதரவாக நிற்க முடிவெடுப்பார். அதற்குச் சான்றாக மிரட்டிய மற்ற இரண்டு வீரர்களையும் கொன்று, டினேரியஸைத் தலை வணங்குவார். 

மறுபக்கம், ஜெண்ட்ரியோடு பயணப்பட்டுக்கொண்டிருந்த ஆர்யா ஸ்டார்க், ஜெண்ட்ரியைப் பணயம் வைத்து சண்டையிட்டது தெரிந்த பின், அவர்களிடமிருந்து தப்பிக்க முயற்சி செய்வார். அப்போது, சாண்டோர் கிளிகேன் (தி ஹவுண்ட்) தமக்கு ஏதாவது ஆதாயம் இருக்கும் என அவரை வலுக்கட்டாயமாக அவருடன் அழைத்துச் செல்வார். அதேசமயம், ஜெண்ட்ரியை சிறைபிடிக்கும் மெலிசாண்ட்ரே, அவர்களது இருப்பிடமான டிராகன்ஸ்டோனுக்கு அழைத்து வருவார். அவர் உடலில் ராஜ ரத்தம் இருப்பது தெரிந்து, அவரை வைத்து ப்ளாக் மேஜிக் செய்யத் திட்டமிட்டுக்கொண்டிருப்பார் மெலிஸாண்ட்ரே. ராப் ஸ்டார்க், பேலான், ஜோஃப்ரி போன்றவர்களைக் கொன்று ஸ்டானிஸ் பராத்தியனை அரியணையில் அமரவைப்பதுதான், அவரது திட்டம். 

போல்டன் குடும்பத்திடம் மாட்டியிருக்கும் ஜேமி லானிஸ்டரை ஒருவழியாக அவரது தந்தை டைவின் லானிஸ்டரிடம் அனுப்பி வைக்கும் முடிவுக்கு வந்திருப்பார் ரூஸ் போல்டன். ஆனால், ரூஸ் போல்டனின் தளபதி அவருடன் இருந்த பிரையின் டார்த்தைச் சித்ரவதை செய்து கொல்லத் திட்டமிட்டிருப்பார். இதைத் தெரிந்துகொண்ட ஜேமி லானிஸ்டர், பிரையின் டார்த்தைத் தன்னுடன் அழைத்துச் சென்றுவிடுவார். மறுபக்கம், ரூஸ் போல்டனின் மகனான ராம்ஸே போல்டனிடம் மாட்டியிருக்கும் தியோன் க்ரேஜாயை மேலும் மேலும் சித்ரவதை செய்து, அவருடைய உணர்வுகளை இழக்கச் செய்துகொண்டிருப்பார் அவர். அரசியல் திருமணங்கள், அடிமைத்தனங்கள், பயணங்கள், சண்டைகள் என ஒவ்வொரு குடும்பத்தாரும் ஒவ்வொரு நோக்கத்தோடு செயல்பட்டுக்கொண்டிருப்பார்கள். ஜோஜன் மீண்டும் வார்காக மாறி சில விஷயங்களைப் பார்த்திருப்பார். இதனால், அவர்கள் சுவர் நோக்கிப் பயணத்தைத் தொடங்குவார்கள். 

மறுபக்கம், சாமுடன் பயணப்படும்போது குழந்தையைப் பெற்றெடுப்பார் கில்லி. அந்தப் பனிக்காற்றில் தனியாகப் பயணப்பட்டிருக்கும் இருவரும் ஓய்வெடுப்பதற்காக ஒரு வீட்டில் தங்குவார்கள். அப்போது குழந்தையின் சத்தம் கேட்டு ஒரு ஒயிட்வாக்கர் இவர்களை நோக்கி வரும். என்ன செய்வதெனத் தெரியாத சாம், தன்னிடம் இருந்த டிராகன் க்ளாஸை எடுத்து அந்த ஒயிட்வாக்கரைக் குத்திக் கொன்றுவிடுவார். அப்போதுதான் டிராகன் கிளாஸை வைத்து மரணமே இல்லாத ஒயிட்வாக்கர்களைக் கொல்லலாம் என்றே சாம் அறிந்து கொள்வார். இந்த டிராகன் கிளாஸானது ஸ்டானிஸ் பராத்தியனின் இருப்பிடமான டிராகன் ஸ்டோனில் மட்டுமே கிடைக்கும். 

ப்ரான் ஸ்டார்க், ஜோஜன், மீரா, ஓஷோ, ஹோடோர், ரிக்கன் ஸ்டார்க் ஆகிய ஆறுபேரும் புயல் காற்றுக்கு ஒதுங்கி, ஒரு சிறிய கோட்டையில் பதுங்கியிருப்பார்கள். அந்தச் சமயத்தில் ஒயில்டுலிங்ஸோடு பயணப்பட்டுக்கொண்டிருக்கும் ஜான் ஸ்நோவும் அந்த இடத்துக்கு வருவார். அப்போது ஏற்படும் சண்டையில் ஒயில்டுலிங்ஸில் இருக்கும் ஓரெல் என்பவரைக் கொன்று, 'இதற்கு மேல் இவர்களுடன் இருந்தால் ஆபத்து' என்று நினைத்து, சில அடியோடு அவர்களிடமிருந்து தப்பித்துவிடுவார் ஜான் ஸ்நோ. இந்தச் சண்டையால் இரு அணிகளாகப் பிரிந்து பயணத்தைத் தொடங்கலாம் என்று திட்டமிடுவார் ப்ரான் ஸ்டார்க். ரிக்கன் ஸ்டார்க்கை அழைத்துக்கொண்டு பாதுகாப்பு கருதி அம்பர்ஸ் எனும் இடத்துக்குப் பயணப்படுவார் ஓஷா. ப்ரான், ஜோஜன், மீரா, ஹோடோர் ஆகியோர்கள் தங்களது பயணத்தைத் தொடரத் திட்டமிடுவார்கள். 

இன்னொரு பக்கம், காஸ்டர்லி ப்ளாக்கை எதிர்த்துப் போர் புரியத் திட்டமிடுவார் ராப் ஸ்டார்க். காஸ்டர்லி ப்ளாக்தான் லானிஸ்டர்களின் இருப்பிடம். ஆகையால், அங்கிருந்து சண்டையிடத் திட்டமிட்டிருப்பார். அதற்குமுன், ராப் ஸ்டார்க், ஃப்ரே குடும்பத்திடம் மன்னிப்பு கேட்கும் வாய்ப்பாக ஒரு சின்ன நிகழ்வுக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கும். அந்த நிகழ்விலேயே எட்ம்யூர் டல்லியின் திருமணத்தை நடத்தவும் வால்டர் ஃப்ரே ஏற்பாடுகளைச் செய்திருப்பார். மத்தள சத்தம், ஒயின், விதவிதமான சாப்பாடுகள் என அந்த இடமே கோலாகலமாகக் காணப்பட்டாலும், கேட்டலின் ஸ்டார்குக்கு ஏதோ சரியில்லாததுபோலத் தோன்றும். அந்தச் சமயத்தில்தான் ஆர்யா ஸ்டார்க்கை அவரின் குடும்பத்திடம் ஒப்படைத்துவிட்டு தனக்கான சன்மானத்தைப் பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டிருப்பார் சாண்டோர் கிளிகேன். 

சரியாக திருமணம் நடக்கும் சமயத்தில் கூட்டத்தில் இருக்கும் சிலர், ஸ்டார்க் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொரையும் குத்திக் கொல்லத் தொடங்குவார்கள். மொத்த இடமுமே குழப்பத்தில் காணப்படும் நேரத்தில் ராப் ஸ்டார்கின் மனைவி டலிசா ஸ்டார்க்கின் வயிற்றில் கத்தியை வைத்துக் குத்திக் கிழித்துவிடுவார்கள். அப்போதுதான், கேட்டலின் ஸ்டார்குக்கும், ராப் ஸ்டார்குக்கும் ரூஸ் போல்டன் லானிஸ்டர்களுடன் இணைந்து தமக்குத் துரோகம் செய்திருப்பது தெரியவரும். இதற்கு, வால்டர் ஃப்ரேவும் உடந்தை. வால்டர் ஃப்ரேவின் மனைவியின் கழுத்தில் கத்தி வைத்து, ராப் ஸ்டார்க்கை விடுவிக்கும்படி அழுவார், கேட்டலின் ஸ்டார்க். எதையும் கண்டுகொள்ளாத ரூஸ் போல்டன், ராப் ஸ்டார்க்கை இரக்கமின்றிக் கொன்றுவிடுவார். கண் முன்னே மகனைப் பறிகொடுத்த விரக்தியில் வால்டர் ஃப்ரேவின் மனைவியைக் கொன்றுவிடுவார் கேட்டலின். வாழ்க்கையே முடிந்துவிட்ட துயரம் கேட்டலினின் கண்ணில் தெரியும். தெம்பின்றி மயக்கமாகும் சமயத்தில் கேட்டலின் ஸ்டார்க்கின் கழுத்தையும் கிழித்துவிடுவார்கள் லானிஸ்டரின் வீரர்கள். மொத்த இடமும் போர்க்களமாகக் காட்சியளிக்கும் சமயத்தில் ஆர்யா ஸ்டார்க் தன் அண்ணனையும் அம்மாவையும் பார்க்க அங்கே வந்துகொண்டிருப்பார். வெளியே ஸ்டார்க் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரையும் விட்டுவைக்காமல் லானிஸ்டர்களும் ஃப்ரேக்களும் கொன்று குவித்துக்கொண்டிருக்கும். அதைப் பார்த்துப் பதைபதைத்து உணர்ச்சிவசப்படும் ஆர்யா ஸ்டார்க், உள்ளே செல்ல முயற்சி செய்வார். அவரைக் காப்பாற்ற, வந்த குதிரையிலேயே மீண்டும் திரும்பிவிடுவார் சாண்டோர் கிளிகேன். 

மொத்த 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ரசிகர்களும் கதறி அழும் இடம் இதுவாகத்தான் இருக்கும். ஜார்ஜ் ஆர்.ஆர்.மார்டினின் ரைட்டிங் ஸ்டைல் இப்படியாகத்தான் இருக்கும் என்பதை முதல் அத்தியாயத்திலேயே சொல்லியிருந்தேன். தன் தந்தைக்காக ராப் ஸ்டார்க்தான் பழிவாங்கப்போகிறார் என்று நாம் நினைத்துக்கொண்டிருந்த சமயத்தில், அவரையும் அவரின் அம்மா கேட்டலின் ஸ்டார்க்கையும் கொல்லும் சம்பவம் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியிருக்கும். காரணம், ஒவ்வொரு கேம் ஆஃப் த்ரோன்ஸ் பார்வையாளர்களும் ஸ்டார்க் குடும்பத்தின் பாயின்ட் ஆஃப் வியூவில்தான் அதைப் பார்த்திருப்போம். அவர்களுக்கு எந்தப் பாதிப்பு ஏற்பட்டாலும் அது நமக்கானதாகத் தோன்றும். கதைப்படி, மொத்த ஸ்டார்க் குடும்பமுமே சிதைந்த நிலையில் இருக்கும். கண் முன்னே அப்பா, அம்மா, அண்ணனை இழந்த ஆர்யா ஸ்டார்க் ஒரு பக்கம், லானிஸ்டர்களிடம் சிக்கித் தவிக்கும் சான்ஸா ஸ்டார்க் ஒரு பக்கம், எதிர்காலத்தை நோக்கி பயணப்பட்டுக்கொண்டிருக்கும் ப்ரான் ஸ்டார்க் ஒரு பக்கம், ஒயில்டுலிங்ஸ்களை அழிக்கப் பயணப்பட்டுக்கொண்டிருக்கும் ஜான் ஸ்நோ ஒரு பக்கம்... இப்படி மொத்த ஸ்டார்க் குடும்பத்தையும் பார்க்கும்போது, நமக்கும் வருத்தம் மேலோங்கும். 

இப்படியாக, கொடுமைகளின் உச்சமாகக் கதை நகர்ந்துகொண்டிருந்தாலும், டினேரியஸ் டார்கேரியனின் வளர்ச்சி, டிரியன் லானிஸ்டரின் நல்லுள்ளம் போன்றவை நம்மை இளைப்பாற்றும். இதற்கு நடுவே சான்ஸா ஸ்டார்குக்கும் டிரியனுக்கும் திருமணம் நடந்து முடிந்திருக்கும். அவ்வளவு வலிகளைச் சுமந்து ஆர்யா ஸ்டார்க் சாண்டோருடன் பயணப்பட்டுக்கொண்டிருப்பார். வாங்கிய சில அடிகளோடு ஜான் ஸ்நோ காஸ்டில் ப்ளாக்கை அடைந்து ஒயில்டுலிங்ஸைப் பற்றி எச்சரித்திருப்பார். ஸ்டானிஸ் பராத்தியன் நடந்திருக்கும் சூழல்களை அவருக்குச் சாதமாக மாற்றிக்கொண்டு சதித் திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருப்பார். டினேரியஸ் கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் ஆதரவைப் பெற்றுக்கொண்டிருப்பார். இவர்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்!

வின்டர் வந்துகொண்டிருக்கிறது...

அடுத்த கட்டுரைக்கு