Published:Updated:

மகேந்திரன்... உலகை, மனிதர்களை, திரைப்படங்களை மனம் கொண்டு பார்த்த கலைஞன்!

மகேந்திரன்... உலகை, மனிதர்களை, திரைப்படங்களை மனம் கொண்டு பார்த்த கலைஞன்!
மகேந்திரன்... உலகை, மனிதர்களை, திரைப்படங்களை மனம் கொண்டு பார்த்த கலைஞன்!

இயக்குநர் மகேந்திரனின் படைப்புகள் குறித்த ஒரு ரீவைண்டு.

சினிமாவில், தனது முதல் பிரவேசத்தின்போதே முழுமையாகத் தனது திறமையைச் சொல்லிவிடுவது எல்லோருக்கும் நிகழ்வதில்லை. ஒரு ஓரமாகக்கூட இருந்துகொண்டு, தனக்கு அமைகிற வாய்ப்புகளில் அதன் எல்லை வரை சென்று சிறிது சிறிதாகத் தன்னை வெளிக்கொணரப் பலரும் போராடியவாறு இருப்பார்கள். 'அசலான கலை, ஒருநாள் சபையேறியே தீரும்' என்ற விதியின்படி, மகேந்திரன் ஒருநாள் ஒளிர்ந்தார். 'எங்கிருந்து வந்தான் இந்தக் கலைஞன்' என்று மக்கள் மூக்கின்மீது விரல் வைத்தார்கள். ஆனால், கவனித்துப் பார்த்திருந்தால், அதற்கு முன்னிருந்த எத்தனையோ சந்தர்ப்பங்களில் அவர் தனது கலையை முடிந்தவரை அழுத்தமாகவே வெளிப்படுத்தியிருந்தார்.

சினிமா, ஒவ்வொரு காலத்துக்கும் ஒவ்வொரு பாணியைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும். மனித வாழ்வின் நடுவே உருவாகி எழும் நாடகங்களை உலகமே படமாக்கிக்கொண்டிருந்ததுதான். இன்றைய நாளில், அது சற்றே பின்னடைவாகப் பட்டாலும் அது தேவையாய் இருந்தது என்பது முக்கியம். கதை வசன கர்த்தாக்கள், பிரபலங்களாகக்கூட இருந்தார்கள். நடிக, நடிகையர் பேசி நடிக்க ஆர்வம் கொண்டிருந்தனர். நல்ல உரையாடல் நிகழ்ந்த படங்கள் இசைத் தட்டுகளாகச் சுழன்று, மக்கள் அதை மனப்பாடம் செய்வதில் நிபுணத்துவம் பெற்றனர். படத்தைப் பார்க்காமலே, சத்தம் கேட்டு அப்படத்தை முழுமையாக அறிந்துகொள்ள முடியுமானால், இந்த கேமராவைக் கொண்டு சினிமாக்காரன் படம் பிடிக்கச் செல்வதின் பொருள்தான் என்ன?! ஒரு மக்கள் கூட்டம், நெளிந்துகொண்டுதான் இருந்திருப்பார்கள். சினிமா, வேறு வழியில் பயணிக்கவேண்டியிருக்கிறது என்று பெருமூச்செறிந்திருப்பார்கள். அதில் ஒரு ஆளாக இருந்திருக்கக்கூடிய மகேந்திரன், தான் வசனம் எழுதுகிற படங்களில்கூட தன்னை மட்டுப்படுத்திக்கொண்டு, வித்தியாசம் காட்டுவதைப் பலரும் கவனித்திருக்க முடியும். அப்படித்தான், அவர் தனது சொந்த ஆர்வத்துடன் சினிமாவில் ஊடுருவியவாறிருந்தார். ஒரு மாற்றம் விரும்பியவர்களெல்லாம் அவரை அறிந்தவாறே பெருகினர்.

எல்லோருக்கும் தெரிந்த 'தங்கப்பதக்கம்' முக்கிய உதாரணம். அது, செந்தாமரை நடிப்பதற்கு நாடகமாக எழுதப்பட்டது. அன்று நிலவிய சிவாஜியைப் பற்றி, அவரது நடிப்பைப் பற்றிய எதிர்பார்ப்புகள் பயங்கரமானவை. மிகையின் மிகைக்கு செல்லச் செல்ல, படத்தின் வெற்றி உறுதிப்பட்டவாறு இருக்கும். ஆனால், இந்தப்படம் வெறும் வசனங்களில் நகராமல், தனது உளவியலை ஓரளவேனும் நம்பியிருந்தது. கடமை தவறாத போலீஸ் அதிகாரிக்கு ஒரு குடும்பத்தில் இருக்கவேண்டிய பொறுப்புகள் எல்லாம் பேசப்பட்டிருந்தன. படம், கஞ்சிபோட்ட காக்கியாய் விறைப்பில் முடிந்துவிடாமல், அவிழக்கூடிய பல ஊற்றுகளையும் திறந்து, அப்படத்திற்கு ஒரு குளிரையும் கொண்டுசேர்த்தது. அதன் சற்றே மாறுபட்ட கோணத்திற்கு மகேந்திரன் மட்டுமே காரணமாக இருந்தார். இந்த மாதிரி நிறையப் படங்களைச் சொல்ல வேண்டும். 'நாம் மூவர்' மக்கள் கொண்டாடிப் பார்த்த படம். 'மோகம் முப்பது வருஷம்', 'வாழ்ந்து காட்டுகிறேன்' போன்ற படங்களில் ஒருவிதமான சீற்றம் நிறைந்திருந்ததாக நினைவு. அவை, கண்களில் நிழலாடுவதை மறக்க முடியவில்லை. எப்படியும் இருபதுக்கும் அதிகமான படங்கள் அவரது கைவண்ணத்தைப் பறைசாற்றும்.

நாம் படித்திருப்போம். எம்.ஜி.ஆர் இருந்த மேடையில் சினிமா பற்றிப் பேசி, அவருடைய அழைப்பின் பேரில் சினிமாவுக்கு வந்தவர் மகேந்திரன். அவரது அரவணைப்பில்கூட இருந்திருக்கிறார். அவருக்காக, 'பொன்னியின் செல்வ'னை திரைக்கதையாக்கி இருக்கிறார். ஆனால், எம்.ஜி.ஆருக்கு மகேந்திரனின் திறமைகள் பற்றி பெருமிதம் இருந்திருக்கலாம். தன்னோடு அவரால் செயல்பட முடியாது என்கிற உண்மையும் தெரிந்திருக்க வேண்டும். மகேந்திரனேகூட இன்னமுமே தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிற உந்துதலில் இருந்திருக்க வேண்டும். அது அவரை டைரக்‌ஷன் பக்கம் வரவைத்தது. உண்மையில், அந்தக் காலம் தமிழ் சினிமாவின் பொற்காலமாகவும் இருந்தது.

1977 - 'ஆடுபுலி ஆட்டம்' படத்திற்கு எழுதியிருக்கிறார். அதற்கு அடுத்த வருடம், 'முள்ளும் மலரும்'.

உமா சந்திரன் என்பவர் எழுதிய நாவல். படித்திருக்கிறேன். மாறுபட்ட ஒரு பிரதேசத்தில் கதை நிகழ்கிறது என்பது தவிர, அது நமது உணர்வுகளைத் தாக்குவதில்லை. அந்தக் காலத்தில் தொடர்கதைகளை நாவல் என்றுதான் சொல்வார்கள். அதன் அடிப்படைப் போக்கே வேறு. ஆனால், அதற்குள் இருந்து ஒரு 'காளி' அசலாக எழுந்து வந்தது ஆச்சர்யம். அவன் யாரும் கற்பனை செய்யமுடியாத அளவிற்கு வீரியத்துடன் இருந்தான். யாருமே தமது தங்கையாக எடுத்துக்கொள்ளும் கோணத்தில் அவனது தங்கையாக வள்ளி இருந்தாள். எந்த சினிமாவைப் பார்த்தாலும் அதை ஒரு கதையாக மட்டும் சுருக்கிக்கொள்கிற ஒரு ஆர்வக் கோளாறின் பார்வையில், "இது என்ன பெரிய 'முள்ளும் மலரும்', அந்தக் காலத்திலேயே 'பாசமலர்' என்கிற அற்புதமான படம் வந்திருக்கிறது ஐயா." உண்மை. இரண்டும் ஒருவேளை ஒரே கதைதான். ஆனால், இரண்டு படங்களுக்கும் நடுவே இருந்த வித்தியாசம் கொஞ்சநஞ்சமல்ல. மகேந்திரன் நிகழ்த்தியிருந்தது ஒரு பாய்ச்சல். 'முள்ளும் மலரும்' ஒரு முழுமையான காட்சிகளின் விருந்து. முதல்நாள் படம் பார்த்து, உள்ளே அதிர்ந்துகொண்ட ஒன்றை விரட்ட முடியாமல் தவித்தது நான் மட்டுமே அல்ல, வியந்தவாறிருந்தோம்.

அப்புறம், அவர் இன்னமும் மேலெழுந்தார். அந்த நேரத்தில், 'உதிரிப் பூக்கள்' தமிழில் நிகழ்ந்த அதிசயம். அப்புறம் வேறு படங்கள் எழுதிய பிறகுதான், 'பூட்டாத பூட்டுக்கள்'. அதற்கு அப்புறம் 'ஜானி' எல்லாம் வருகிறது. அப்புறம் வந்த 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' படத்தை மிக முக்கியமான படமாகக் கருதுகிறேன். அந்தப் படத்தை உடைத்து, 100 படங்கள் செய்தார்கள். பிறகு, 'மெட்டி', 'நண்டு' போன்ற படங்கள். கடைசியாக மிகவும் கவனித்தது, 'சாசனம்'.

இவற்றை வரிசையாகச் சொல்லிக்கொண்டு வந்த காரணம் ஒன்று உண்டு. இந்தப் படங்களில் எல்லாம் முழுக்க முழுக்க மகேந்திரனே மேவியிருந்தார். ஒரு இயக்குநர் என்றால், அவருக்கு ஒரு டச் இருக்க வேண்டும் என்போம். இவர் அதற்கும் மேலாக! ரஜினியோ, சரத் பாபுவோ, விஜயனோ, சாரு ஹாசனோ... யாரிலும் நாம் அவரை அடையாளம் காண முடியும். ஆனால், யாருக்கும் எந்த இடறலும் தோன்றாது. காரணம், அந்தப் பாத்திரங்களுக்குள் உயிர்போல நீண்டுவந்தது மகேந்திரனின் நடிப்பு அல்ல, மனம். அவரது மனதைத்தான் பாத்திரங்களாக நாம் வியந்துகொண்டிருந்தோம். எவ்வளவு வந்தாலும் புதுமை குன்றாத ஆற்றல் அவர் மனத்திற்கு இருந்தது. அவர் நம்மைப் பார்ப்பதுபோல, அவர் நம்மோடு நேரடியாக உரையாடுவதுபோல... யாரேனும் என்னைப்போல உணர்ந்திருந்தால், அவர்கள் அவரைக் காதலிப்பதை நிறுத்தவே மாட்டார்கள்.

நான் சொல்லி வந்ததற்கு எதிரானது, அவர் இழைத்துக்கொண்டு வந்த பெண் கதாபாத்திரங்கள். அதிலும் அவரது மனம் செயல்படாதிருக்கவில்லைதான். 

ஆனால், 'உதிரிப் பூக்களி'ல் மனத்தாலும், உடலாலும் உருக்குலைந்த லட்சுமி இறந்துபோனாலுமே, தன்னை நிலைநிறுத்திக்கொள்வது அறிவோம். சுந்தரவடிவேலுவின் சாவு, அந்த ஊருக்கும் பார்வையாளருக்கும் எவ்வளவு எதிர்பார்ப்பாயிருந்தது?! லட்சுமி அலட்டிக்கொள்ளாமல் யாரையும் வெல்கிறாள். அது, இயக்குநரின் வெற்றியாக இருந்தாலும், அஸ்வினியின் தனித்தன்மை அதில் இணைந்திருந்தது. 'ஜானி'யில் வந்த அந்தப் பாடகி ஸ்ரீதேவிதானா?! ஒரே ஒரு பாடலில் வந்து நமது கண்களைப் பார்த்தவாறு ஆடிய காட்டுவாசிப் பெண்ணான சுபாஷினியின் கண்கள் எக்காலத்திலும் நம்மைவிட்டு விலகப்போவதில்லை. ஒரு சிறிய தவற்றுக்கு மொத்த ஜென்மத்தையும் சுருக்கிக்கொள்கிற கன்னியம்மா, மகேந்திரன் படைத்ததில் மிகவும் டீட்டெயில் கொண்டது என்று நம்புகிறேன். 

ஆமாம், 'உதிரிப் பூக்களை'ப் போலவே 'பூட்டாத பூட்டுக்களி'ல் தமிழ் நிலத்தின் ஒட்டுமொத்த பெண்களின் துயரமும் இருந்தது. காதலில் அடிபட்டு, கல்யாணத்தின் முற்றுகையில் சிக்கித் திணறி, இறுதியாக சமரசத்துக்கு வந்துசேரும் விஜி, 'நெஞ்சத்தைக் கிள்ளாதே'யில் எதிர்பார்க்க முடியாதவளாகத்தான் இருந்தாள். இன்று அந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தால், முடிவு வேறாக இருந்திருக்கலாம். என்றாலுமே குடும்ப நிறுவனத்துக்குள் பொருந்திக்கொள்ள வேரோடு பிடுங்கப்படும் பெண் எவ்வளவு போராடவேண்டியிருக்கிறது?! 'மெட்டி' படத்தில் வடிவுக்கரசி, ராதிகா மட்டுமில்லை, தனது திரைவாழ்வு முழுவதும் காட்டியிருக்க முடியாத ஒரு முகத்தை விஜயகுமாரி நிறைத்திருந்தார். 'சாசனம்' என்றொரு படம். உலகின் எந்த ஒரு மேன்மையான சினிமாவிற்கும் ஈடுகொடுக்கும் அளவில் படத்தில் பல காட்சிகள் உண்டு. (சில மோசமான காட்சிகளும் உண்டு. அவற்றை எடுத்தது வேறு ஆள்கள் என்கிறார்கள். உண்மை தெரியாது.). விசாலாட்சி என்கிற பெண்ணாக கவுதமி வந்தார். அதேதான் சொல்ல வேண்டும், எல்லாப் பெண்களும் ரத்தமும் சதையுமாக! ரேவதி நடித்த ஒரு தொலைக்காட்சித் தொடரைக்கூட  பலரும் பார்த்திருப்போம். அந்தப் பாத்திரம் பலருக்குள்ளும் நிலைத்திருக்கலாம்.

மக்கள் விரும்பாத படத்தை எடுத்துவிட்டேன் என்று 'பூட்டாத பூட்டுகள்' பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். அது முற்றிலும் உண்மையல்ல. அது, காலத்தைக் கடந்திருந்தது. அதை அவர் சொன்ன அளவில் நேரிட, அன்றைய மக்கள் திரள் ரசிகத் திறன் கொண்டிருக்கவில்லை. எந்தக் கலைஞனுக்கும் சறுக்கல்கள் இருக்கும். நக்கீரப் பார்வை கொண்டிருப்பதாகச் சொல்லி, அவரது கடுகுக் குறைகளை மலையளவில் உருட்டுவது எதற்கு? மனைவியைக் கொல்லாமல் கொன்று, ஊரே வெறுக்கும் செயல்களைச் செய்து, மச்சினியைத் துகிலுரித்துத் தனது அதிகாரத்தை உறுதிசெய்து, யாருமே பார்த்தாலும் விழிகளில் நீர் துளிர்த்துவிடக்கூடிய தேவதைகளைப் போன்ற சொந்தப் பிள்ளைகளைப் பசியில் நடக்கவிட்ட சுந்தர வடிவேலுவின் சாவை நாம் எவ்வளவு விரும்பினோம் என்பதை முதலிலேயே சொல்லியிருந்தேன். நமது கொலைவெறி முறுகி, நாம் உச்சத்துக்குப்போகும்போது, அந்தக் கொலைகார சுந்தர வடிவேலு நம்மைநோக்கி ஒன்று சொல்கிறான். ஒரு கணம் நம்மையே நம்மில் பார்த்து திடுக்கிட்டோமல்லவா?! அப்பன் மூழ்குவதைப் பார்த்தவாறு ஆற்றின் கரையில் நடக்கிற அந்தக் குழந்தைகள், அப்படி நடந்தவாறே இருப்பதை நிறுத்த முடியவில்லையே?! இப்படி ஒரு கலை வெற்றி அடைந்த மேதையின் குறைகளெல்லாம் குறையே அல்ல.

சொல்லப்போனால், இந்த மாதிரி வறண்ட சினிமாக்களின் காலத்தில் அதையெல்லாம் தொகுப்பதற்கு நமக்கு அருகதையே இல்லை. மனசின் கண்களால் உலகை, மனிதர்களை, திரைப்படங்களைப் பார்த்தவர் அவர். அவரை நாம் மனத்தால் அள்ளிக்கொள்வோம்.

அடுத்த கட்டுரைக்கு