Published:Updated:

``வெட்கத்தைவிட்டு வாய்ப்பு கேட்டிருக்கேன்!’’ - சாந்தி மாஸ்டர்

``வெட்கத்தைவிட்டு வாய்ப்பு கேட்டிருக்கேன்!’’ - சாந்தி மாஸ்டர்

``நான் ரொம்ப உயரமா, ரொம்ப ஒல்லியா இருப்பேன். நிறமும் கறுப்புதான். அப்போதைய டிரெண்டுக்கு கொஞ்சம் பப்ளியா இருக்கிற பெண் டான்ஸர்களுக்குத்தான் அதிகம் வாய்ப்பு கொடுப்பாங்க. அதனால, என்னைப் பெரும்பாலும் பின் வரிசையிலதான் நிற்கவைப்பாங்க.’’

``வெட்கத்தைவிட்டு வாய்ப்பு கேட்டிருக்கேன்!’’ - சாந்தி மாஸ்டர்

``நான் ரொம்ப உயரமா, ரொம்ப ஒல்லியா இருப்பேன். நிறமும் கறுப்புதான். அப்போதைய டிரெண்டுக்கு கொஞ்சம் பப்ளியா இருக்கிற பெண் டான்ஸர்களுக்குத்தான் அதிகம் வாய்ப்பு கொடுப்பாங்க. அதனால, என்னைப் பெரும்பாலும் பின் வரிசையிலதான் நிற்கவைப்பாங்க.’’

Published:Updated:
``வெட்கத்தைவிட்டு வாய்ப்பு கேட்டிருக்கேன்!’’ - சாந்தி மாஸ்டர்

மீபத்தில் நடந்த இயக்குநர் பா.இரஞ்சித்தின் `கூகை திரைப்பட இயக்கம்' நிகழ்ச்சியில், சினிமா நடன இயக்குநர் சாந்தி கலந்துகொண்டு பேசினார். அதில், சினிமா துறையில் பெண்கள் சந்திக்கும் சவால்கள் குறித்து தன் அனுபவங்கள் வாயிலாகப் பேசியிருந்தார். இதுகுறித்து அவரிடம் பேசினோம். சினிமாவில் தான் சந்தித்த சவால்களை விரிவாகப் பேசினார். 

`` `லக்ஷ்மி' படத்துல வரும் குழந்தைபோலத்தான் நானும். சினிமா பாடல்களைப் பார்த்தே டான்ஸ் கத்துக்கிட்டேன். சினிமாவுல டான்ஸ் மாஸ்டராக ஆசைப்பட்டேன். என் சின்ன வயசுல டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் கிடையாது. சினிமாவில் வேலை செய்ய வாய்ப்பு கிடைக்கிறதே பெரிய சவாலாக இருந்துச்சு. டான்ஸ் யூனியன்ல உறுப்பினரா இருந்தால்தான், டான்ஸரா வேலை செய்ய முடியும். டான்ஸ் மாஸ்டர்கள் 9 பேர் கிட்ட டான்ஸ் ஆடிக்காட்டி கையொப்பம் வாங்கினால்தான், டான்ஸ் யூனியன்ல உறுப்பினராகச் சேர்த்துப்பாங்க. 

தாரா மாஸ்டர், ரகுராம் மாஸ்டர், பிரகாஷ் மாஸ்டர் உட்பட ஒன்பது பேர்கிட்ட நான் கையொப்பம் வாங்கினேன். டான்ஸ் யூனியன்ல உறுப்பினரானேன். நான் நல்லா டான்ஸ் ஆடுவேன். அதனால வேலை வாய்ப்புக்கு நான் கஷ்டப்படலை. 13 வயசுல சினிமாவுல, குரூப் டான்ஸரா சேர்ந்தேன். மழை, வெயில், பனினு எல்லாச் சூழல்லயும் வேலை செய்தே ஆகணும். நடிகர், நடிகைகள் எத்தனை முறை டேக் எடுத்தாலும், நாங்களும் ஆடித்தான் ஆகணும். காலில் செப்பல்கூட இல்லாம டான்ஸ் ஆடுவோம். காலையில 3 மணிக்கு எழுப்பிவிடுவாங்க. 5 மணிக்கெல்லாம் ஷூட்டிங் வண்டியில ஏறிடணும். இரவு 8 மணிக்கு மீண்டும் ரூமுக்கு வந்து, சாப்பிட்டுத் தூங்க 10 மணியாகிடும். பிரேக் டைம்ல மட்டும்தான் ஓய்வு கிடைக்கும். மத்தபடி எப்போ பார்த்தாலும் டான்ஸ் ஆடிட்டேதான் இருக்கணும். தொடர்ச்சியா 16 மணிநேரமெல்லாம் வேலை செய்திருக்கேன். குடும்பக் கஷ்டத்துக்கு அப்படியெல்லாம் வேலை செய்தாலும், அதுக்காக நான் கவலைப்படலை" என்பவர், ஆரம்பகாலத்தில் தான் எதிர்கொண்ட சிரமங்களைக் கூறுகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``பாடல்களின் சூழலுக்கு ஏற்ப, மாடர்ன் டிரெஸ் அதிகம் பயன்படுத்த வேண்டியிருக்கும். என் டிரெஸ்ஸைப் பார்த்து, ஷூட்டிங் வேடிக்கைபார்க்க வரும் ஆண்கள்ல பலரும் கிண்டல் பண்ணுவாங்க. ரயில்ல போறப்போக்கூட பல ஆண்கள் கிண்டல் பண்ணுவாங்க. அதனால நான் அழுத தருணங்கள் நிறைய உண்டு. ரயில்ல, பஸ்ல தூங்கும்போது சில ஆண்கள் வக்கிற புத்தியில என்னை டச் பண்ணி, அதனால பெரிய சண்டைகளெல்லாம் வந்திருக்கு. வெளியூர் ஷூட்டிங்ல, டான்ஸர்களுக்கு நல்ல ரூம்கூட இருக்காது. ஜன்னல்ல, கதவு ஓட்டையில நாங்க குளிக்கிறதைப் பார்க்க ஒரு கும்பல் இருக்கும். அதையெல்லாம் மீறித்தான் பெண் டான்ஸர்கள், எங்க பாதுகாப்பை உறுதிசெய்துப்போம். அப்போ எங்க டான்ஸ் டீம் ஆண்கள்தான் ஆதரவா பாதுகாப்புக்கு இருப்பாங்க.

1990-களில் இந்திப் படங்களில்தான் டான்ஸரா அதிகம் வேலை செய்தேன். நான் ரொம்ப உயரமா, ரொம்ப ஒல்லியா இருப்பேன். நிறமும் கறுப்புதான். அப்போதைய டிரெண்டுக்கு கொஞ்சம் பப்ளியா இருக்கிற பெண் டான்ஸர்களுக்குத்தான் அதிகம் வாய்ப்பு கொடுப்பாங்க. அதனால என்னைப் பெரும்பாலும் பின் வரிசையிலதான் நிற்கவைப்பாங்க. அக்காட்சிகளை, 1990-களில் வெளியான பல மொழிப் பாடல்கள்லயும் பார்க்கலாம். என்னை `பென்சில் டான்ஸர்'னு கிண்டல் பண்ணுவாங்க. கொஞ்சம் குண்டா தெரிய, மூணு பேன்ட் போட்டு, அதுக்குமேல ஜீன்ஸ் உடுத்துவேன். இதனால் நான் வருத்தப்பட்ட காலங்கள் நிறைய உண்டு. என்னதான் கஷ்டப்பட்டு வேலை செஞ்சாலும், ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கில்தான் வருமானமும் கிடைக்கும். இப்படி நிறைய கஷ்டப்பட்டிருந்தாலும், அதுக்கான பலன் அவ்வளவு சீக்கிரம் கிடைச்சுடலை. சீக்கிரம் டான்ஸ் மாஸ்டர் ஆகணும்னா, பேக்ரவுண்டு இருக்கணும். எனக்கு எந்த பேக்ரவுண்டும் இல்லை. அதனால டான்ஸராகவும் அசிஸ்டென்ட் மாஸ்டராகவும் சுமார் 3,000 பாடல்களுக்கு மேல வேலை செய்தேன்." 

நம்பிக்கையுடன் பணிசெய்து, டான்ஸ் மாஸ்டரானது குறித்துப் பேசுபவர், ``நான் அசிஸ்டென்ட் மாஸ்டரா இருந்தப்போ, `உங்க திறமைக்கு மாஸ்டர் ஆகிடுங்க'ன்னு பல ஹீரோக்களும் இயக்குநர்களும் சொன்னாங்க. ஆனா, அப்படிச் சொன்ன யாருமே நான் டான்ஸ் மாஸ்டர் ஆன பிறகும்கூட வாய்ப்பு கொடுக்கலை. அப்படிச் சொன்னவங்க வீட்டுக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும் போய் வெட்கத்தைவிட்டு வாய்ப்புக் கேட்டிருக்கேன். அப்போதும் ஒருவரும் மாஸ்டராக எனக்கு வாய்ப்புக் கொடுக்கவே இல்லைங்கிறதுதான் பெரிய கொடுமையும் காமெடியும். 

இப்படி ரொம்பக் கஷ்டப்பட்டு, 12 வருஷம் கழிச்சுத்தான் என் சொந்தத் திறமையால் டான்ஸ் மாஸ்டர் ஆனேன். நான் பிருந்தா மாஸ்டர் அசிஸ்டென்ட்டா இருந்த நேரம். அவங்கதான், `ஆய்த எழுத்து’ படத்தின் டான்ஸ் மாஸ்டர். அவங்க ஊருக்குப் போனதால், வேறு ஒரு மாஸ்டரை வச்சு ஷூட்டிங் பண்ணவேண்டிய சூழல். ஒருகட்டத்துல, `உன் சின்சியாரிட்டிக்கு வாய்ப்புக் கொடுக்கிறேன். நீயே மாஸ்டராகிடு'னு என் மேல் நம்பிக்கைவச்சு, என்னை மாஸ்டராக்கினார் இயக்குநர் மணிரத்னம் சார். `ஜன கன மன' பாடலை கோரியோகிராபி பண்ணினேன். பிறகு, ஐந்து மொழிகள்ல 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள்ல டான்ஸ் மாஸ்டரா வேலை செய்திருக்கேன். மாஸ்டரா, விஜய், விக்ரம் உட்பட பல முன்னணி ஹீரோக்களை டான்ஸ் ஆட வச்சிருக்கேன். `மெட்டி ஒலி' சீரியல் டைட்டில் பாடல்ல நடனமாடின பிறகுதான், என்னைப் பத்தி வெகுஜன மக்களுக்கும் தெரிய ஆரம்பிச்சது. டான்ஸ் மாஸ்டரா ஓரளவுக்குப் புகழ்பெற்றிருந்தாலும், 26 வருட சினிமா பயணத்துல நான் எதிர்பார்த்த அளவுக்கு புகழ் கிடைக்கலை. 

குழந்தைகள் பிறந்த பிறகு, மறுபடியும் டான்ஸ் மாஸ்டரா வேலை செய்ய முடிவெடுத்தேன். அதுக்காக வாய்ப்புக் கேட்டு போனப்போ, ஒரு தயாரிப்பாளர் தவறான கண்ணோட்டத்தில் என்கிட்ட பேசினார். அவரைச் சத்தம்போட்டுவிட்டதுடன், அப்போதிலிருந்து வாய்ப்பு கேட்டுப்போறதையே நிறுத்திட்டேன். இப்பவும் தொடர்ந்து டான்ஸ் மாஸ்டரா வேலை செய்றேன். சினிமா, சீரியல்களிலும் நடிக்கிறேன். சினிமா துறையில பெண்கள் வாய்ப்புக்காக, அந்த மாதிரியான விஷயத்துக்கு ஒத்துழைச்சுப் போகிறதெல்லாம் நடந்துகிட்டுதான் இருக்கு. இதில், இரு தரப்பிலும் சுமுகமான உடன்பாடுதான் அதிகம் நடக்குது. இது, அவரவர் தனிப்பட்ட விருப்பம். இந்த மாதிரியான விஷயங்களை ஒருபோதும் நான் ஆதரிக்க மாட்டேன். ஒருவேளை வாய்ப்புக்காக, கட்டாயப்படுத்தி ஒரு பெண்கிட்ட தவறா நடந்துகிட்டா, அது ரொம்பத் தப்பு. அப்படி நடந்தால், பெண்கள் வெளிப்படையா சமூகத்தில் சொல்லணும்" என வேண்டுகோள் விடுக்கிறார் சாந்தி.