Published:Updated:

``21 வருட ரெக்கார்ட்... அதிர்ச்சியாகிட்டேன்!" - ஓய்வு குறித்து ராதிகா #VikatanExclusive

``என் அலுவலக ஊழியர்களிட்ட என் சீரியல் நடிப்பு குறித்த விவரங்களை சேகரிக்கச் சொன்னேன். அதில், நீங்க சொன்ன தகவல்களைக் கொடுத்தாங்க. எனக்கு இன்ப அதிர்ச்சியாகவும் வியப்பாகவும் இருந்துச்சு. `இவ்வளவு வேலைகள் செய்திருக்கிறோமா'னு ஆச்சர்யத்தில், கொஞ்சநேரம் அப்படியே உட்கார்ந்து கடந்துவந்த பயணத்தை சிந்திச்சுப் பார்த்தேன்."

``21 வருட ரெக்கார்ட்... அதிர்ச்சியாகிட்டேன்!" - ஓய்வு குறித்து ராதிகா #VikatanExclusive
``21 வருட ரெக்கார்ட்... அதிர்ச்சியாகிட்டேன்!" - ஓய்வு குறித்து ராதிகா #VikatanExclusive

சினிமாவில் முத்திரைப்பதித்த நடிகை ராதிகா, சின்னத்திரை சீரியல் தயாரிப்புக்கு முன்னோடி பாதையையும் வகுத்துக்கொடுத்தார். 21 ஆண்டுகளாக இடைவிடாத சீரியல் நடிப்பால் ரசிகர்களை மகிழ்வித்தவர், திடீரென சன் டிவி `சந்திரகுமாரி' சீரியலில் இருந்து விலகியிருக்கிறார். இதற்கு என்ன காரணம்? மீண்டும் சின்னத்திரை நடிப்பைத் தொடர்வாரா? மாட்டாரா? ரசிகர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம்பெற, அவரிடம் பேசினோம். உற்சாகமாகப் பேசினார், ராதிகா.

`` `சந்திரகுமாரி' சீரியலில் இருந்து விலக என்ன காரணம்?"

``என் சினிமா பயணத்தில் இது 40-வது வருஷம். சின்னத்திரைப் பயணத்தில், 21-வது வருஷம். இடைவிடாம நடிச்சுகிட்டு இருக்கேன். தொடர்ந்து பல மாதங்களா, அதிகமா வேலை செய்துட்டேன். இதனால, இப்போ எனக்கு உடல்நிலை கொஞ்சம் ஒத்துழைக்கலை. சீரியலில், தினமும் நடிக்க வேண்டியதா இருக்கு. அதனாலதான் எனக்கு கொஞ்சம் ஓய்வு தேவைப்படுது. எனவேதான் `சந்திரகுமாரி' சீரியல் நடிப்பில் இருந்து விலகினேன். மத்தபடி வேறு எந்தக் காரணமும் இல்லை. இந்தச் சூழல்ல நிறைய சினிமா வாய்ப்புகள் வருது. அவை மறுக்க முடியாதபடி நல்ல கதைகளா இருப்பதால, நடிக்கிறேன். ஆனா, நேரம்தான் பற்றாக்குறையா இருக்கு. அதனால், நேரத்துடன் ரொம்பவே சண்டைப்போடுறேன் (சிரிக்கிறார்)." 

``மீண்டும் எப்போது சீரியல் நடிப்பைத் தொடர்வீங்க? அது `சந்திரகுமாரி'யா அல்லது புது சீரியலா? 

`` `சந்திரகுமாரி' சீரியலில் நான் மீண்டும் நடிக்க மாட்டேன். அந்த சீரியலுக்கான நேரம் மாறிடுச்சு. எனவே புது நடிகர்களைக் கொண்டு அந்த சீரியலை தயாரிக்கிறேன். நேரப்பற்றாக்குறையால், சீரியல் நடிப்பு மறுபடியும் வேண்டாமேனு நினைச்சேன். சேனல் தரப்புல என்னை நடிக்க வலியுறுத்தி கேட்டாங்க. எனவே, நான் புது சீரியலில் நடிக்கப்போறேன். அதற்கான கதை விவாதங்கள் நடந்துகிட்டு இருக்கு. மீண்டும் ஜூன் மாதத்திலிருந்து, சீரியல் நடிப்பைத் தொடரப்போறேன். நல்ல கதை, ஜனரஞ்சகமான திரைக்கதை மற்றும் நடிகர்கள்னு புது சீரியல் ரொம்பவே மாறுபட்டதா இருக்கும். அது ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். புது சீரியலைப் பார்த்துட்டு, நீங்களே எனக்கு ஃபீட்பேக் சொல்லுங்க."

``6850 எபிசோடுகள், 3430 மணிநேர நடிப்பு, இரவு 9.30 மணி ப்ரைம் டைம், 21 ஆண்டுகள்... இதெல்லாம் எப்படிச் சாத்தியமானது?"

(சிரிக்கிறார்) ``எனக்கே தெரியலைங்க. நடிப்புதான் என் தொழில். எந்த இலக்கும் இல்லாமதான் தொடர்ந்து சினிமா, சீரியல்ல நடிக்கிறேன். இதில், ஒரு சீரியல் முடிஞ்சதும், இன்னொரு சீரியல்ல நடிக்க வேண்டிய சூழல்கள் இயல்பாவே அமைஞ்சது. திடீர்னு இப்போ பிரேக் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால, என் அலுவலக ஊழியர்களிட்ட என் சீரியல் நடிப்பு குறித்த விவரங்களை சேகரிக்கச் சொன்னேன். அதில், நீங்க சொன்ன தகவல்களைக் கொடுத்தாங்க. எனக்கு இன்ப அதிர்ச்சியாகவும் வியப்பாகவும் இருந்துச்சு. `இவ்வளவு வேலைகள் செய்திருக்கிறோமா'னு ஆச்சர்யத்தில், கொஞ்சநேரம் அப்படியே உட்கார்ந்து கடந்துவந்த பயணத்தை சிந்திச்சுப் பார்த்தேன். நிறைவா இருந்துச்சு. இத்தனை வருஷ சீரியல் நடிப்புக் குறித்து என் குடும்பத்தினர்கிட்ட ஆலோசனை பண்ணினேன். `இவ்வளவு வேலை செய்திருக்கீங்களா? நீங்க கொஞ்சம் ஓய்வெடுத்தே ஆகணும்'னு என் மகள் ரேயானும் சொன்னாள். இந்தச் சாதனையை யாராலும் முறியடிக்க வாய்ப்பில்லை. எனவே, மக்கள் எனக்குக் கொடுத்த அன்பு மற்றும் ஆதரவை நல்ல முறையில் தக்கவெச்சுக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கு. அதை மனசுக்குள்ள ஆழமா பதியவெச்சுகிட்டேன்."

``தொடர்ந்து 21 வருஷமா, `இரவு 9.30 மணி ப்ரைம் டைம்' உங்ககிட்டதான் இருந்துச்சு. அதை இழந்துட்டதால, வருத்தம் உண்டா?"

``பிசினஸ் கண்ணோட்டத்துல பார்க்கிறப்போ சின்ன வருத்தம் இருந்துச்சு. ஆனா, எனக்குத் தனிப்பட்ட முறையில் எந்த வருத்தமும் இல்லை. தொழிலில் இதெல்லாம் சகஜம்தானே! நான் மீண்டும் நடிக்கவிருக்கும் சீரியல், வழக்கம்போல இரவு 9.30 மணிக்குத்தான் ஒளிபரப்பாகும். நான் பிரேக் எடுக்கிறதா அறிவிச்சதிலிருந்து, `நீங்க ஏன் நடிக்கலை? எப்போ நடிப்பீங்க? சீக்கிரம் நடிக்க வாங்க'னு ஏகப்பட்ட போன் அழைப்புகள். என் ரசிகர்களுக்கும், என் மேல் பாசம் கொண்டவங்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன்."

``தொடர்ந்து நிறைய திரைப்படங்கள்ல நடிக்கிறீங்களே..."

``மோகன்லால்கூட நீண்ட வருஷத்துக்குப் பிறகு, ஒரு மலையாளப் படத்துல நடிக்கிறேன். புனித் ராஜ்குமாரின் கன்னடப் படத்துல நடிக்கிறேன். `தெறி' படத்தின் தெலுங்கு ரீமேக்கில், அதே அம்மா ரோல்ல நடிக்கிறேன். மணிரத்னம் இயக்கத்துல நானும், என் கணவர் சரத்குமாரும் நடிக்கிறோம். `மிஸ்டர் லோக்கல்' படத்தில் சிவகார்த்திகேயன் அம்மாவா நடிச்சிருக்கேன். தவிர, ஜீ.வி.பிரகாஷ்குமாருடன் 'ஜெயில்', `மார்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்', `குருதி ஆட்டம்' உட்பட நிறைய படங்கள் கைவசம் இருக்கு. ஒரே நேரத்துல சினிமா மற்றும் சீரியல்ல நடிக்க எப்படி நேரத்தைத் திட்டமிடப்போறோம்னு சின்னக் கவலை இருக்கு. இதுபோன்ற சவால்களை எதிர்கொண்டுதான், 40 வருஷமா சினிமாவுல இருக்கேன். எனவே, என்னால நிச்சயம் சமாளிக்க முடியும்."

``சீனியர் நடிகையாக, தற்போதைய இளம் நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள்கூட வேலை செய்ற அனுபவம் எப்படி இருக்கு?"

``ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை மற்றும் சிறப்பு இருக்கு. அவர்களுடன் வேலை செய்றப்போ புதுமையா இருக்கு. மாற்றம் ஒன்றுதான் மாறாதது. மாற்றத்துக்கு ஏற்ப தன்னை மாத்திக்காதவங்க, ஓரிடத்தில் தேங்கி நின்னுடுவாங்க. அதனால, மாற்றங்களை மகிழ்ச்சியா ஏத்துக்கிறேன். இப்போ தொழில்நுட்ப வளர்ச்சியால, வேலைகள் எளிமையாகியிருக்கு. எல்லாமே வரவேற்கக்கூடியவைதான்."

``இயக்குநர் மகேந்திரனின் இழப்பு குறித்து உங்க கருத்து?" 

``தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பு. அவரின் படங்கள்ல ஆபாசங்கள் இருக்காது. எல்லா கேரக்டர்களுமே பிழையில்லாம, தனித்தன்மையுடன் இருக்கும். சிறந்த எழுத்தாளரா, பல படங்களின் வெற்றிக்கு பங்காற்றியிருக்கார். அவரின் எழுத்துகள், உணர்ச்சிகரமா, ஆழமா இருக்கும். அவர் இயக்கத்துல, `மெட்டி' படத்துல நான் நடிச்சது அரிய வாய்ப்பு. அப்போ எனக்குப் பெரிசா சினிமா அனுபவமெல்லாம் இல்லை. எந்த நிர்பந்தமும் இல்லாம, என்னைச் சுதந்திரமா நடிக்கவிட்டார். அவர் நடிப்பு சொல்லிக்கொடுக்கிற விதமே புதுமையா இருக்கும். அவரை ரொம்பவே மிஸ்பண்றேன்" என்கிறார் உருக்கமாக.