Published:Updated:

``தோசை சுட கத்துக்கொடுத்த மகேந்திரன்; எட்டு வருட பிரேக் ஏன்?" - `உதிரிப்பூக்கள்' பேபி அஞ்சு

``தோசை சுட கத்துக்கொடுத்த மகேந்திரன்; எட்டு வருட பிரேக் ஏன்?" - `உதிரிப்பூக்கள்' பேபி அஞ்சு
``தோசை சுட கத்துக்கொடுத்த மகேந்திரன்; எட்டு வருட பிரேக் ஏன்?" - `உதிரிப்பூக்கள்' பேபி அஞ்சு

இயக்குநர் மகேந்திரனின் `உதிரிப்பூக்கள்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார், பேபி அஞ்சு. பிறகு பல படங்களில் நடித்தவர், கடந்த எட்டு வருடமாக எந்தப் படத்திலும் கமிட் ஆகவில்லை. அதுகுறித்தும், ரீஎன்ட்ரி குறித்தும் பகிர்ந்துகொள்கிறார், பேபி அஞ்சு. 

`உதிரிப்பூக்கள்', `மீண்டும் கோகிலா', `டார்லிங் டார்லிங் டார்லிங்' உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும் ஏராளமான மலையாள, தெலுங்குப் படங்களிலும் நடித்தவர், பேபி அஞ்சு. மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் 40-க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக, சில படங்களில் ஹீரோயினாக, பல படங்களில் குணச்சித்திர நடிகையாக... என 100-க்கும் மேற்பட்ட படங்களிலும், `சித்தி', `தீபம்' உள்ளிட்ட சில சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

``தோசை சுட கத்துக்கொடுத்த மகேந்திரன்; எட்டு வருட பிரேக் ஏன்?" - `உதிரிப்பூக்கள்' பேபி அஞ்சு

கன்னட நடிகர் டைகர் பிரபாகரைத் திருமணம் செய்த இவர், அவரிடமிருந்து விவாகரத்து பெற்று பிறகு நடிகர் ஓ.ஏ.கே.சுந்தரைக் கரம் பிடித்தார். இப்போது இவருக்கு அர்ஜூன் என்ற ஒரு மகன் இருக்கிறார். தமிழில் கடைசியாக `மதயானைக் கூட்டம்' படத்தில் நடித்த இவர், பிறகு சினிமாவிலிருந்து விலகியே இருந்தார். இதனால், இவர் இறந்துவிட்டதாகவும் வதந்திகள் வந்தன. இயக்குநர் மகேந்திரனின் `உதிரிப்பூக்கள்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான பேபி அஞ்சுவிடம் பேசினோம்.

``தோசை சுட கத்துக்கொடுத்த மகேந்திரன்; எட்டு வருட பிரேக் ஏன்?" - `உதிரிப்பூக்கள்' பேபி அஞ்சு

``எப்போவும் எனக்கு மானசீக குருவாக இருந்தவர், இயக்குநர் மகேந்திரன் அங்கிள். அவருக்கு உடல்நிலை சரியில்லைனு கேள்விப்பட்டேன், மீண்டு வருவார்னுதான் நினைச்சேன். ஆனா, தவறிடுவார்னு எதிர்பார்க்கவே இல்லை. அவர் இறந்த செய்தியே அவர் உடலை அடக்கம் பண்ண பிறகுதான் எனக்குத் தெரியும். பையன் படிப்புக்காக கடந்த எட்டு வருடமா எங்கேயும் போகாம, கேரளாவுலதான் இருக்கேன், சென்னைக்கு வர்றதில்லை. `அவர் நல்லா இருக்கும்போதே ஒருமுறை போய் பார்த்திருக்கலாம்'னு தினம் தினம் அழுதுகிட்டிருக்கேன்." என உடையும் அஞ்சு, மகேந்திரனுடனான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.  

`` `உதிரிபூக்கள்' படத்தில் நடிக்கும்போது எனக்கு ஒன்றரை வயசுதான். அந்தப் படத்தில் என்ன நடந்தது, எப்படி நடித்தேன் எதுவும் எனக்கு ஞாபகமில்லை. ஷூட்டிங் ஸ்பாட்ல எப்போவும் பால் புட்டியோடுதான் சுத்திக்கிட்டு இருப்பேனாம், தண்ணியில விளையாடுவேனாம். அதனால, எங்க பாட்டி என்னைத் திட்டுவாங்க. என்னைத் திட்டினா, மகேந்திரன் அங்கிளுக்குக் கோபம் வந்திடுமாம். இதெல்லாம், அந்த ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்தவங்க பிற்காலத்துல எனக்குச் சொன்னது. 

அந்தப் படத்தில் அம்மா இறந்தபோது வளையல்களைப் பிடித்து விளையாடுவது, முத்தம் கொடுப்பது, க்ளைமாக்ஸ் காட்சியில் அப்பா ஆற்றில் இறங்கும்போதும் சிரித்துக்கொண்டே இருப்பது... என நான் நடிச்ச பெரும்பாலான காட்சிகளையெல்லாம், என் போக்குல விட்டு, நான் என்ன பண்றேனோ... அதைப் படமாக்கினாராம், மகேந்திரன் அங்கிள். தவிர, இந்தப் படத்துல நடிக்க எங்க வீட்டுல முதல்ல ஒப்புக்கல. எங்க அத்தை `படாபட்' ஜெயலட்சுமி நடித்த `ஆறிலிருந்து அறுபதுவரை' பட ஃபங்ஷனுக்குப் போனப்போதான், மகேந்திரன் அங்கிள் கேட்டாராம். அத்தைதான் எங்க வீட்டுல எடுத்துச் சொல்லி, என்னை நடிக்க வெச்சிருக்காங்க. `உதிரிப்பூக்களு'க்குப் பிறகு `நண்டு', `அழகிய கண்ணே' படங்களிலும் நடிச்சேன். `அழகிய கண்ணே' படத்துல சுமலதாவின் ஆவி குழந்தையான என் உடம்பில் புகுந்து பழி வாங்குற மாதிரி ஒரு சீன். இந்தப் படத்துல காந்திமதி இட்லிக் கடை வெச்சிருப்பாங்க. நான் தோசை ஊத்திக் கொடுக்கிற மாதிரி ஒரு சீன். அந்தக் காட்சியில மகேந்திரன் அங்கிள்தான் எனக்கு தோசை சுடக் கத்துக்கொடுத்தார்." என்பவர், தொடர்ந்தார்.

``அட்வைஸ்தான் மகேந்திரன் அங்கிள் எனக்குக் கொடுத்துட்டு போன பொக்கிஷம். குழந்தை நட்சத்திரமா பல படங்களில் நடிச்சுட்டு, `கேளடி கண்மணி'யில ஹீரோயின் ஆனேன். அதுக்குப் பிறகு, `ரீங்காரம்'ங்கிற ஒரு படம் ஆரம்பிச்சாங்க. அது ரிலீஸ் ஆகல. அந்தப் படத்தோட இயக்குநருக்கும், எனக்கும் தொடர்புனு அவதூறுகள் பரவிக்கிட்டு இருந்துச்சு. `நடிகை அஞ்சு மீது இயக்குநர் வலை, சிக்குவாரா?'ங்கிற தலைப்புல நியூஸ் வந்திருக்கிறதா, மகேந்திரன் அங்கிளோட மகன் ஜான் எனக்கு போன் பண்ணிச் சொன்னார். அப்போ, நான் அழ ஆரம்பிச்சுட்டேன். நேரா, மகேந்திரன் அங்கிளைப் பார்க்க வந்துட்டேன். 

`இதெல்லாம் பப்ளிசிட்டினு நினைச்சுக்கோ. வளர, வளர இந்தமாதிரி விஷயங்களெல்லாம் வரத்தான் செய்யும். ஒவ்வொரு தடவையும் அழுதுகிட்டா இருப்ப... எதுக்கு வந்தியோ, அந்த வேலையைப் பாரு'னு சொல்வார். அதுக்குப் பிறகு, என் பெர்ஷனல் லைஃப்லேயும் சரி, பொது இடத்திலேயும் சரி... இந்தமாதிரி விஷயங்களைக் கேர் பண்ணிக்கவே மாட்டேன். ஆனா, இன்னைக்கு அங்கிள் ஃபேமிலியில இருந்து எனக்கு யாருடைய தொடர்பும் இல்லை, போன் நம்பரும் இல்லை." என்கிறார். 

`` `கேளடி கண்மணி' படத்துல நடிக்கும்போது நான் ஆறாம் வகுப்பு படிச்சுக்கிட்டு இருந்தேன். லயோலா காலேஜுக்கு எதிர்லதான் வீடு. சினிமாவுல என் கால்ஷீட்ஸ் எல்லாம் பாட்டியும், அம்மாவும்தான் பார்த்துக்கிட்டிருந்தாங்க. `கேளடி கண்மணி'யில நடிச்சுக்கிட்டிருந்த சமயத்துல எங்க பாட்டி இறந்துட்டாங்க. அவங்கதான் என்னோட போட்டோஸ் எல்லாத்தையும் கலெக்ட் பண்ணி வெச்சிருந்தாங்க. அவங்க கலெக்‌ஷன்ல மகேந்திரன் அங்கிள் படமும் இருந்தது. இப்போ, அவர்கூட ஒரு படம் எடுத்துக்க முடியாமப் போச்சேனு நினைச்சா, அழுகையாதான் வருது.  

``தோசை சுட கத்துக்கொடுத்த மகேந்திரன்; எட்டு வருட பிரேக் ஏன்?" - `உதிரிப்பூக்கள்' பேபி அஞ்சு

பிறகு, கல்யாணம் ஆச்சு. குழந்தைக்கு ஒரு வயசாகும்போதே குடும்பப் பிரச்னை காரணமா பையன் அர்ஜூன் தூக்கிட்டு அம்மா வீட்டுக்கு வந்துட்டேன். பிறகு ஒரு வருடத்துல கணவர் டைகர் பிரபாகர் இறந்துட்டார். பிறகு, அம்மாதான் எங்களைப் பார்த்துக்கிட்டாங்க. நடிகர் ஓ.ஏ.சுந்தரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். கடந்த 11 வருடத்துக்கு முன்னாடி அம்மா இறந்துட்டாங்க. பிறகு, என் பையனுக்கு நான் மட்டும்தான் உலகம். நிறைய கஷ்டத்தைக் கடந்து வந்துட்டேன். அதானே வாழ்க்கை?! 

மகன் படிப்புக்காகத்தான் கடந்த எட்டு வருடமா பிரேக்ல இருந்தேன். நல்ல கேரக்டர்கள் கிடைச்சா, இனி நடிக்கத் தயார். மகன் அர்ஜூன் ப்ளஸ் டூ முடிச்சுட்டார். காலேஜ்ல சேர்க்கணும். அதுக்காகத்தான், கேரளாவுல இருந்து இப்போ சென்னைக்கு வந்துட்டோம்." என்கிறார், அஞ்சு.

அடுத்த கட்டுரைக்கு