Published:Updated:

`ஒருநாள் என்னை நினைத்துப் பெருமைப்படுவீர்கள்!' - தாய் குறித்து நடிகை சங்கீதா உருக்கம்

தார்மிக் லீ
`ஒருநாள் என்னை நினைத்துப் பெருமைப்படுவீர்கள்!' - தாய் குறித்து நடிகை சங்கீதா உருக்கம்
`ஒருநாள் என்னை நினைத்துப் பெருமைப்படுவீர்கள்!' - தாய் குறித்து நடிகை சங்கீதா உருக்கம்

`வயதான என்னை வெளியேற்றிவிட்டு, நான் வசித்து வரும் வீட்டை அபகரிக்க முயல்கிறார்' என நடிகை சங்கீதாவின் தாய் பானுமதி அவர் மீது மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் பின்னர் இரண்டு நாள்கள் முன்பு தன் கணவர் கிரிஷுடன் நேரில் ஆஜரானார் சங்கீதா.

`ஒருநாள் என்னை நினைத்துப் பெருமைப்படுவீர்கள்!' - தாய் குறித்து நடிகை சங்கீதா உருக்கம்

எம்.ஜி.ஆரை வைத்து 10 படங்களுக்கும் மேல் தயாரித்த கே.ஆர்.பாலனின் மகள்தான் பானுமதி. சென்னை வளசரவாக்கத்தில் இருக்கும் அவர், தன் மாமனார் வீட்டு வழியாக வீடு ஒன்றைப் பெற்றிருக்கிறார். அந்த வீட்டின் கிரவுண்ட் ஃப்ளோரில் பானுமதியும் முதல் ஃப்ளோரில் சங்கீதாவும் வசித்து வந்தனர். மொத்த வீடும் சங்கீதாவின் பெயரில் இருப்பதால்தான் இந்தச் சிக்கலே என்று சிலர் சொல்லி வருகிறார்கள்.

வயதான நிலையில் தன்னை வீட்டைவிட்டு வெளியேற்றியதாக மகள் சங்கீதா மீது பானுமதி மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். அதுகுறித்துப் பேசிய பானுமதி, ``எனக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் என்னை வீட்டைவிட்டு வெளியேற்றியதால்தான் போலீஸில் இந்தப் புகாரை அளிக்கிறேன். நல்லது நடக்கும் என நம்பிக்கை உள்ளது. அப்படி இல்லையென்றால் அப்போது விரிவாகப் பேசலாம்'' என பத்திரிகையாளர்களிடம் பதிலளித்திருந்தார். இதுகுறித்து சங்கீதாவிடம் கேட்டதற்கு, `சினிமா தொடர்பான விஷயம்னா பேசலாம். இது என்னுடைய சொந்த விஷயம்'' எனச் சொல்லி பேசுவதற்கு மறுத்துவிட்டார். 

`ஒருநாள் என்னை நினைத்துப் பெருமைப்படுவீர்கள்!' - தாய் குறித்து நடிகை சங்கீதா உருக்கம்

இதைத் தொடர்ந்து தற்போது அவரது டிவிட்டர் பக்கத்திலிருந்து ட்வீட் ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அதில், ``அன்புள்ள அம்மா. என்னை இந்த உலகத்துக்குக் கொண்டுவந்ததற்கு நன்றி. பள்ளிக்கூடத்துக்குச் சென்ற என்னை படிப்பை நிறுத்தி 13 வயதில் வேலைக்கு அனுப்பியதற்கும் நன்றி. வெற்று காசோலைகளில் என்னை கையெழுத்திட வைத்ததற்கும் நன்றி. காலம் முழுக்க குடிப்பழக்கத்துக்கும், போதைப்பழக்கத்துக்கு அடிமையாகி வேலைக்கே போகாத உங்கள் 2 மகன்களுக்காக என் வாழ்வை சீரழித்ததற்கு நன்றி. உன்னுடைய சில முடிவுகளை நான் ஏற்றுக்கொள்ளாததற்காக சொந்த வீட்டுக்குள்ளேயே என்னை கார்னர் செய்ததற்கு நன்றி'' என்று அந்த ட்வீட் நீள்கிறது. கடைசியாக, ``எனக்கு எப்போதுமே உங்களைப் பிடிக்கும். ஒரு நாள் நீங்கள், தான் என்ற அகங்காரத்தைத் தூக்கி எறிந்துவிட்டு என்னை நினைத்துப் பெருமைப்படதான் போகிறீர்கள்'' என்று பதிவிட்டிருக்கிறார் நடிகை சங்கீதா.