Published:Updated:

``சதுரங்க வேட்டை 2, சலீம் 2, சசிகுமாருக்கு ஒரு ஆக்‌ஷன் படம்...’’ - நிர்மல் குமார்

``சதுரங்க வேட்டை 2, சலீம் 2, சசிகுமாருக்கு ஒரு ஆக்‌ஷன் படம்...’’ - நிர்மல் குமார்
``சதுரங்க வேட்டை 2, சலீம் 2, சசிகுமாருக்கு ஒரு ஆக்‌ஷன் படம்...’’ - நிர்மல் குமார்

'சலீம்' படத்துக்குப் பிறகு 'சதுரங்க வேட்டை 2' படத்தை இயக்கிய இயக்குநர் நிர்மல் குமார், தற்போது சசிகுமார், பாரதிராஜா, சரத்குமார் ஆகியோர் நடிக்கும் ஆக்‌ஷன் படம் ஒன்றை இயக்கிக்கொண்டிருக்கிறார்.

'சலீம்' படத்துக்குப் பிறகு இயக்குநர் நிர்மல் குமார் இயக்கியிருக்கும் படம், 'சதுரங்க வேட்டை 2'. அர்விந்த் சாமி, த்ரிஷா நடித்திருக்கும் இப்படம் ரிலீஸுக்குக் காத்திருக்கிறது. இந்நிலையில், சசிகுமார் நடிக்க தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் நிர்மல் குமார். அவரிடம் பேசினேன்.  

"சசிகுமார் நடிக்கும் படம் என்ன மாதிரியான களம்?" 

"இது ஒரு ஆக்‌ஷன் அட்வெஞ்சர் படம். மும்பை மற்றும் சென்னையில் நடக்கிற மாதிரி திரைக்கதை எழுதியிருக்கேன். ஷூட்டிங் நடக்குது. இதுவரை சசிகுமாரை இப்படிப் பார்த்திருக்க மாட்டீங்க. இந்தப் படத்துல வித்தியாசமான நடிப்பை அவர்கிட்ட இருந்து வாங்கியிருக்கேன். இந்தக் கதையை அவர்கிட்ட சொன்னப்போ, 'இப்படி ஒரு ஜானர்ல எனக்குக் கதை வரல, எல்லாம் கிராமத்துக் கதைகளாவே வந்துச்சு'னு ஃபீல் பண்ணார் சசிகுமார். அவருடைய கெட்டப், கேரக்டர் எல்லாமே சஸ்பென்ஸா வெச்சிருக்கோம். மும்பை ஐபிஎஸ் அதிகாரியா சரத்குமார் நடிச்சிருக்கிறார். சசிகுமார் அப்பாவா பாரதிராஜா சார் நடிக்கிறார். 'சலீம்' ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு பண்றார். 'அர்ஜுன் ரெட்டி' ஹர்ஷவர்தன் இந்தப் படத்துக்கு மியூசிக் பண்ணியிருக்கார். தவிர, மும்பை மாடல்ஸ் 40 பேர் படத்துல நடிச்சிருக்காங்க. எல்லோரும் மெயின் கேரக்டரா படத்துல வருவாங்க." 

"தெலுங்கில் ஒரு படம் டைரக்ட் பண்றீங்கனு கேள்விப்பட்டோமே?"

" 'சலீம்' படத்துக்குப் பிறகு தெலுங்குப் படம் பண்றதா இருந்தது. அப்போதான், மனோபாலா சார் 'சதுரங்க வேட்டை 2' பண்ணச் சொன்னார். இப்போ, ஐஸ்வர்யா ராஜேஷ் மெயின் கேரக்டர்ல நடிக்க, 'மிஸ்மேட்ச்'னு ஒரு தெலுங்குப் படம் பண்ணிக்கிட்டு இருக்கேன். இது ஒரு ஸ்போர்ட்ஸ் ஜானர் படம். ஹீரோவா உதய்சந்தர் நடிக்கிறார். இந்தப் படத்தோட ஷூட்டிங் இன்னும் சில நாள்ல முடிஞ்சிடும். தவிர, ஐஸ்வர்யா ராஜேஷூக்குத் தமிழிலும் மார்க்கெட் இருக்கு. அவங்க நடிச்ச பல படங்கள் ஹிட் ஆகியிருக்கு. அதனால, 'மிஸ்மேட்ச்' ரிலீஸ் தேதி முடிவாகுற சமயத்துல தமிழ், தெலுங்கு ரெண்டு மொழியிலும் படத்தை ரிலீஸ் பண்றதை யோசிக்கலாம்னு இருக்கோம்." 

'சதுரங்க வேட்டை 2' ரிலீஸ் தள்ளிப்போறதுக்கு என்னதான் காரணம்?" 

"இதை இப்போ பேசத் தேவையில்லைனு நினைக்கிறேன். ஏன்னா, படத்தின் எல்லாப் பிரச்னைகளும் முடிஞ்சிடுச்சு. அடுத்த மாசம் நிச்சயம் ரிலீஸ் ஆகிடும். என் ஆசையும் அதுதான். பாரதிராஜா சாரை எனக்குப் பல வருடங்களா தெரியும். அவர்கிட்டதான் 16 வருடங்கள் நான் இணை இயக்குநரா வேலை பார்த்தேன். அப்போதான் மனோபாலா சார் பழக்கம். மனோ சார் சொன்னதாலதான், இந்தப் படத்தை டைரக்ட் பண்ணேன். கதை திரைக்கதையை இயக்குநர் ஹெச்.வினோத் சார் எழுதியிருக்கார். நான் சில மாற்றங்களைப் பண்ணிப் படமாக்கியிருக்கேன்." 

"ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும்போது நிறைய பொறுப்புகள் கூடும்... அதை எப்படிச் சமாளிச்சீங்க?" 

"ஸ்கிரிப்ட் பேப்பரை நம்புன அளவுக்கு என்னையும் நம்பினேன். 'சதுரங்க வேட்டை2' டீசரைப் பார்க்கிறப்போ தெரிஞ்சிருக்கும், படம் எப்படிப்பட்டதுன்னு! முக்கியமா, காந்தி பாபு கேரக்டர் முதல் பாகத்திலிருந்து இரண்டாம் பாகத்துக்கும் டிராவல் ஆகுறதுனாலதான், படத்துக்கு 'சதுரங்க வேட்டை 2'னு பெயர் வெச்சுட்டோம். முக்கியமா, முதல் பாகத்தில் இருந்த காந்தி பாபு, லோக்கல் பையனா ஏமாத்திக்கிட்டு இருந்திருப்பான். இதுல, ஹைடெக் ஆளா வருவார்."

" 'சலீம் 2' ஐடியா இருக்கா?" 

" 'சலீம்' படத்தோட இயக்குநர்னு என்னை அறிமுகப்படுத்தும்போது, எனக்கான மரியாதை நல்லாயிருக்கு. சசிகுமார் சார் படம் வெளியானதுக்குப் பிறகு, அந்த மரியாதை இன்னும் உயரும். 'சலீம்' கதையை விஜய் ஆண்டனிக்கு சொல்றதுக்கு முன்னாடியே சில ஹீரோக்கள்கிட்ட சொன்னேன். யாரும் பண்றதுக்கு முன் வரல. விஜய் ஆண்டனி என்னை நம்பி வந்தார். மத்தபடி, 'சலீம் 2' கண்டிப்பா வரும். அந்தக் கதைக்கான ஒன்லைனை விஜய் ஆண்டனி சார்கிட்ட சொல்லிட்டேன். அவரும் ஓகே சொல்லிட்டார்." 

அடுத்த கட்டுரைக்கு