Published:Updated:

"ராட்சசி ஜோதிகா, அட்வெஞ்சர் த்ரிஷா, இளவரசி ஆண்ட்ரியா... வரிசை கட்டும் 18 வுமென் சென்ட்ரிக் படங்கள்!"

ஹீரோயின்களை மையமாக வைத்துத் தயாராகும் படங்கள் தமிழில் அதிகமாக வரத் தொடங்கியுள்ளன. அவற்றின் தொகுப்பு இது!

"ராட்சசி ஜோதிகா, அட்வெஞ்சர் த்ரிஷா, இளவரசி ஆண்ட்ரியா... வரிசை கட்டும் 18 வுமென் சென்ட்ரிக் படங்கள்!"
"ராட்சசி ஜோதிகா, அட்வெஞ்சர் த்ரிஷா, இளவரசி ஆண்ட்ரியா... வரிசை கட்டும் 18 வுமென் சென்ட்ரிக் படங்கள்!"

ஹீரோக்களை மையப்படுத்தி வரும் படங்களில் ஹீரோயின்கள் பெர்ஃபார்ம் செய்வதற்கு வாய்ப்பு ரொம்பவே குறைவாக இருக்கும். சில படங்களில் கிளாமருக்கு மட்டுமே நடிகைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலை மாறி, ஹீரோயின்களை மையமாக வைத்துத் தயாராகும் படங்கள் நிறைய வரத் தொடங்கி, அது ஒரு முக்கியமான ஜானராகவும் மாறிவிட்டது. பல ஹீரோயின்கள் அதில் தீவிரமாக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதோ, தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வரவிருக்கும் வுமென் சென்ட்ரிக் படங்கள்.

ஜோதிகா 

திருமணம், குழந்தைகள் எனப் பிஸியாக இருந்த ஜோதிகாவின் ரீஎன்ட்ரி, சூப்பர் கம்பேக் என்றே சொல்லலாம். '36 வயதினிலே', 'மகளிர் மட்டும்', 'காற்றின் மொழி' எனத் தன்னை மையப்படுத்தி உருவான கதைகளில் அதிக கவனம் செலுத்தி வந்தார். அதற்கான பலனும் கிடைத்தது. திருமணத்துக்கு முன்பு நடித்த படங்களைவிட, இப்போது நடிக்கும் படங்கள்தான் என் மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது என்று தனது பேட்டிகளில் கூறியுள்ளார். இப்போது அறிமுக இயக்குநர் ராஜ் இயக்கத்தில் 'ராட்சசி' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் அவருக்குப் பள்ளி ஆசிரியை கேரக்டர். 'காக்க காக்க' படத்துக்குப் பிறகு, இந்தப் படத்தில் பள்ளி ஆசிரியையாக நடிக்கிறார் ஜோ. தொடர்ந்து, 'குலேபகாவலி' கல்யாண் இயக்கத்தில் டார்க் காமெடிப் படமொன்றில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஜோதிகா, ரேவதி, யோகிபாபு ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. 

த்ரிஷா 

2000-களின் தொடக்கத்திலிருந்தே சினிமாவில் இருக்கும் த்ரிஷா, இடையில் சில தோல்விகளைச் சந்தித்தார். இருந்தும், 'விண்ணைத்தாண்டி வருவாயா' மாதிரியான படங்கள் இவர் கரியரில் மேஜிக் காட்டின. ஹீரோயின் சென்ட்ரிக் படங்கள் என்றால் பெரும்பாலும் ஹாரர் கதையாகத்தான் இருக்கும். அப்படித் த்ரிஷாவுக்கு அமைந்ததுதான், 'நாயகியும் மோகினி’யும். இப்போது சிம்ரனுடன் இணைந்து அட்வென்சர் படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். இதில் த்ரிஷாவுக்கு ஆக்‌ஷன் சீக்வென்ஸும் உண்டு. ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை, சுமந்த் இயக்குகிறார். தவிர, ஏ.ஆர்.முருகதாஸ் கதையில் 'எங்கேயும் எப்போதும்' சரவணன் இயக்கத்தில் ஒரு த்ரில்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். 

நயன்தாரா

ஹீரோயின் சென்ட்ரிக் கதைகளுக்கு அதிக  முக்கியத்துவம் கொடுத்து வந்தார் நயன்தாரா. கோபி நயினார் இயக்கிய 'அறம்' நயன்தாராவுக்கு இன்னும் மைலேஜ் கொடுத்தது. டார்க் காமெடியில் உருவான 'கோலமாவு கோகிலா', டூயல் ரோலில் 'ஐரா' என தனக்கான ஏரியாவில் இறங்கி விளையாடினார் நயன். உச்ச நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே இருந்த அதிகாலைக் காட்சி, ஹீரோயினுக்கும் வசமானது, நயன்தாராவுக்கு மட்டுமே. இவரது நடிப்பில் இப்போது 'கொலையுதிர் காலம்' ரிலீஸூக்கு ரெடியாக இருக்கிறது. ஒரு வீட்டில் நடக்கும் த்ரில்லர் கதையான இதை, சக்ரி டோலட்டி இயக்கியிருக்கிறார்.

ஆண்ட்ரியா 

தான் நடிக்கும் படங்களின் கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்கும் ஆண்ட்ரியா, டூயல் ஹீரோயின் சப்ஜெக்டில் நிறைய படங்கள் நடித்திருந்தாலும் அதில் இவரது கேரக்டர் நிச்சயம் பேசப்பட்டிருக்கும். தற்போது 'கா' என்ற படத்தில் வைல்ட் லைஃப் போட்டோகிராபராக நடித்திருக்கிறார். காட்டில் தனியாக மாட்டிக்கொள்ளும் ஆண்ட்ரியா, அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார் என்பதுதான் கதை. த்ரில்லர் அட்வெஞ்சர் மூவியாக உருவாகும் இப்படத்தை மூணார், அந்தமான், மேகாலயா உள்ளிட்ட இடங்களில் உள்ள வனப் பகுதிகளில் எடுத்துள்ளனர். தவிர, 'மாளிகை' என்ற படத்தில் காவல்துறை அதிகாரி, கடந்த காலத்தின் இளவரசி என டூயல் ரோலில் நடித்திருக்கிறார். 

அமலா பால் 

அமலா பால் நடித்திருக்கும் 'ஆடை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. எல்லோரும் சுதந்திரமாக இருக்க வேண்டும். ஆனால், அந்தச் சுதந்திரத்துக்கு ஒரு வரம்பு இருக்கிறது என்பதை த்ரில்லர் காமெடி ஜானரில் உருவாக்கியுள்ளாராம் இயக்குநர் ரத்னகுமார். தொடர்ந்து, அறிமுக இயக்குநர் வினோத் இயக்கத்தில் 'அதோ அந்தப் பறவைபோல' என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். தமிழ்நாடு - கேரளா எல்லையில் உள்ள வனப் பகுதியில் இந்தப் படத்துக்கான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. தவிர, 'கடாவர்' என்ற ஹீரோயின் சென்ட்ரிக் படத்தை முதன்முறையாகத் தயாரிக்கிறார் அமலா பால். அதில் இவருக்குத் தடயவியல் நிபுணர் கேரக்டர். இவருடன் அதுல்யா ரவியும் இணைந்து நடிக்கிறார். 

காஜல் அகர்வால் 

கங்கனா ரணாவத் நடித்து பாலிவுட்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘குயின்’. சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகைக்கான தேசிய விருதுகளைப் பெற்ற இப்படத்தை, விகாஸ் பாஹல் இயக்கினார். நான்கு தென்னிந்திய மொழிகளிலும் ரீமேக் ஆகும் இப்படத்தின் தமிழ் வெர்ஷனான 'பாரிஸ் பாரிஸ்' படத்தில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்க, ரமேஷ் அரவிந்த் இயக்கியிருக்கிறார். 

வரலட்சுமி சரத்குமார்

வழக்கமான ஹீரோயினாகக் களமிறங்கி நடிகை வரலட்சுமி சரத்குமார், தன் அடுத்தடுத்த படங்களில் அழுத்தமான கேரக்டர்களில் நடிக்கத் தொடங்கினார். 'சண்டக்கோழி 2', 'சர்கார்' படங்களில் வில்லத்தனத்திலும் மிரட்டினார். தற்போது 'வெல்வெட் நகரம்' என்ற சைக்கலாஜிகல் த்ரில்லர் படத்தில் பத்திரிகையாளராக, 'ராஜபார்வை' என்ற படத்தில் பார்வையற்ற பெண்ணாக, 'டேனி' என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக... என வெரைட்டி காட்டி வருகிறார். 'டேனி' படத்தில் வரலட்சுமியுடன் ஒரு நாய் நடித்துள்ளது. இவை தவிர, 'கன்னித்தீவு' என்ற க்ரைம் த்ரில்லர் கதையில் ஐஷ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.  

ஹன்சிகா 
 

டாப் நடிகைகள் லிஸ்ட்டில் இருந்த ஹன்சிகா, சில படங்களின் தோல்விகளால் அதிக படங்களில் கமிட் செய்யாமல் இருந்தார். இனி எனக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் கதைகளை மட்டுமே தேர்ந்தெடுப்பேன் என முடிவுசெய்த ஹன்சிகா நடித்துக்கொண்டிருக்கும்  'மஹா' இவருக்கு 50-வது படம்; இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு 25-வது படம். அறிமுக இயக்குநர் ஜமீல் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் போஸ்டர்கள் சர்ச்சையானது. த்ரில்லர் கதையில் உருவாகும் இப்படத்துக்கு மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார். தவிர, இதில் 'சோயப்' என்ற ஒரு முக்கியமான கேரக்டரில் சிம்பு நடிக்கிறார். 

மேலும், யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் 'ஆலிஸ்' என்ற படத்தில் ரைசா நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் லைலா கம்பேக் கொடுக்கவிருக்கிறார். 'மாயா' படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கத்தில் 'கேம் ஓவர்' என்ற ஹாரர் படத்தில் நடித்து முடித்துள்ளார் டாப்ஸி. நடிகை அஞ்சலியின் கைசவம் 'லீசா', 'ஓ' ஆகிய பேய் படங்கள் உள்ளன.