Published:Updated:

``யோகி பாபுவுக்கு அடுத்து பிஸியா இருக்கிறது பிஜிலி ரமேஷ்தான்!’’ - ஓர் இயக்குநரின் ஸ்டேட்மென்ட்

``யோகி பாபுவுக்கு அடுத்து பிஸியா இருக்கிறது பிஜிலி ரமேஷ்தான்!’’ - ஓர் இயக்குநரின் ஸ்டேட்மென்ட்
``யோகி பாபுவுக்கு அடுத்து பிஸியா இருக்கிறது பிஜிலி ரமேஷ்தான்!’’ - ஓர் இயக்குநரின் ஸ்டேட்மென்ட்

யோகிபாபு, யாஷிகா ஆனந்த், கோபி - சுதாகர் போன்ற யூடியூப் ஸ்டார்கள் ஆகியோர் நடித்திருக்கும் `ஜாம்பி’ படம் பற்றி பேசுகிறார் இயக்குநர் புவன் நல்லான்.

" 'மோ' படத்துக்குப் பிறகு சின்ன பட்ஜெட்ல ஒரு படம் பண்ணலாம்னு யோசிச்சப்போதான், இந்த ஐடியா வந்தது. ஜாம்பிகூட காமெடி சேர்ந்தா புதுமையா இருக்கும்னு நினைச்சேன். கோபி, சுதாகர், அன்புதாசன், பிஜிலி ரமேஷ், டி.எம்.கார்த்திக் எல்லோரும் ஒரு டிரிப் போலாம்னு கெளம்பி ஒரு ரிசார்ட்டுக்கு வருவாங்க. யாஷிகா காலேஜ்ல இருந்து அந்த ரிசார்ட்டுக்கு டிரிப் வருவாங்க. யோகி பாபுவும் வேறொரு காரணத்துக்காக அங்கே வருவார். இவங்க எல்லோரும் ஜாம்பிகள்கிட்ட மாட்டிக்குவாங்க. பிறகு எப்படி அங்கிருந்து தப்பிக்கிறாங்க... இதான் கதை!" எனத் தொடங்குகிறார் 'ஜாம்பி' இயக்குநர் புவன் நல்லான். 

"யோகி பாபுதான் படத்துல முக்கிய கேரக்டராமே... கதையைக் கேட்டு என்ன சொன்னார்?" 

"படத்துல எல்லோருக்கும் முக்கியத்துவம் இருக்கும். 'மோ' படத்துல யோகி பாபு இருந்தார். அவர் எவ்ளோ பிஸி, அவருக்கான மார்க்கெட் என்னனு எல்லோருக்குமே தெரியும். இருந்தாலும், அப்போ எப்படிப் பழகினாரோ, அப்படியேதான் இருக்கார். வளர்ந்து வந்த நேரத்துல யாரெல்லாம் கூட இருந்தாங்களோ, அவங்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார். சம்பளத்தைப் பற்றியெல்லாம் யோசிக்கிறதில்லை. இந்தக் கதையை முழுசாகூட சொல்லலை; கேரக்டரைச் சொன்னதுமே நடிக்கிறேன்னு சொல்லிட்டார்." 

"பல யூடியூப் ஸ்டார்ஸ் படத்துல இருக்காங்களே?" 

"ஆரம்பத்துல இந்த யோசனை இல்லை. சினிமாவைப் பாதிக்கிற ஒரு விஷயமாதான் நான் டிஜிட்டல் மீடியாவைப் பார்த்தேன். ஆனா, அங்கே இருக்கிறவங்களுக்கு சினிமாதான் கனவா இருக்குங்கிற உண்மையைப் புரிஞ்சுக்கிட்டதும், என் எண்ணம் மாறிடுச்சு. மக்களுக்குத் தெரிஞ்ச முகங்கள் இருந்தா நல்லா இருக்கும்னு யூடியூப் ஸ்டார்ஸை நடிக்க வெச்சேன். கோபி - சுதாகர் இவங்க வீடியோக்களைப் பார்த்து ரசிச்சிருக்கேன். அன்புதாசனை எனக்கு 'பிளாக் ஷீப்'பைவிட 'கோலமாவு கோகிலா' படத்துல ரொம்பப் பிடிச்சிருந்தது. திடீர்னு பாப்புலரான 'பிஜிலி' ரமேஷ், 'டிக்டாக்' புகழ் சித்ரா காஜல்... இப்படிப் புதுமையான டீம் அமைஞ்சது."

"இவங்களுக்கெல்லாம் என்ன கேரக்டர்?"

"படத்துல பிஜிலி ரமேஷுக்கு 'பேட்ட' பிலிப்ஸ்னு பெயர். தீவிர ரஜினி ரசிகராவே வர்றார். அவருக்கு பில்டப் கொஞ்சம் தூக்கலா இருக்கும். மருத்துவக் கல்லூரி பேராசிரியரா சித்ரா காஜல் நடிக்கிறாங்க. கோபி, சுதாகர், அன்புதாசன் மூணுபேரும் சின்ன வயசில இருந்து நண்பர்கள். இதுல கோபியும் சுதாகரும் கல்யாணமாகி வீட்டுப் பிரச்னைகளையும் ஆபீஸ் பிரச்னைகளையும் தட்டுத் தடுமாறி சமாளிக்கிற நபர்களா வருவாங்க." 

"ஷூட்டிங் ஸ்பாட் எப்படி இருந்தது?"

"இவ்ளோ யூடியூப் ஸ்டார் இருக்கிறப்போ, ஷூட்டிங் ஸ்பாட் எப்படி இருந்திருக்கும்... சித்ரா அக்கா ஸ்பாட்டுக்கு வந்ததும் ஜூனியர் ஆர்டிஸ்ட்டை சேர்த்துக்கிட்டு 'டிக்டாக்' பண்ணி அப்லோட் பண்ணிக்கிட்டு இருப்பாங்க. பிஜிலி ஒரு பக்கம் கலக்கிட்டு இருப்பார். கோபி - சுதாகர் ரெண்டுபேரும் யாரையாவது கூப்பிட்டுக் கலாய்ச்சுட்டு இருப்பாங்க. ஆனா, எல்லோருமே வேலைனு வந்துட்டா, வெள்ளைக்காரனா மாறிடுவாங்க. படத்துக்கு பிரேம்ஜி மியூசிக் பண்ணியிருக்கார். ஜாலியான படத்துக்கு ஜாலியான நபர் இருந்தா நல்லா இருக்கும்னு இவரைக் கமிட் பண்ணோம். படத்துல ஒரு பாட்டுதான், அதுவும் 'பார்ட்டி' சாங். வெளியே பேசிக்கிற மாதிரியெல்லாம் இல்லை. பிரேம்ஜி சின்சியரான நபர்." 

" 'மோ' யோகி பாபுவுக்கும் 'ஜாம்பி' யோகி பாபுவுக்கும் என்ன வித்தியாசம்?"

"காலையில விஜய் சார் படம், ராத்திரி இந்தப் படம்னு... இரவு பகல் பார்க்காம வேலை பார்த்துக்கிட்டு இருக்கார். அவர் செட்டுக்கு வந்தாதான், கொஞ்சம் சீரியஸ் ஆகும். ஏன்னா, ஒரு பெரிய ஹீரோவை வெச்சுப் படம் பண்ற மாதிரி எங்களுக்குள்ள ஒரு ஃபீல்! அவர் கொடுத்த நேரத்தை வீணாக்கிடக் கூடாதுனு ரொம்பக் கவனமா இருப்போம். ஆனா, அவர் ஏதாவது கலாட்டா பண்ணி ஸ்பாட்டை ஜாலியா மாத்திடுவார். முன்ன இருந்ததுக்கும் இப்போ இருக்கிறதுக்கும் நடிப்புல அவர்கிட்ட நிறைய வித்தியாசம் தெரியுது. நீளமான வசனத்தையெல்லாம் மறந்தவர், இப்போ அசால்ட்டா பேசி மாஸ் பண்றார்."    

"யூடியூப் ஸ்டார்ஸ்கூட நடிக்கிற அனுபவம் யோகி பாபுக்கு எப்படி இருக்கு?" 

"அவர் எப்போவுமே ஜாலியான ஆள். அவருக்கான வசனத்தை மத்தவங்களுக்குப் பிரிச்சுக் கொடுத்திடுவார். 'நான் இப்படிச் சொல்றேன். அதுக்கு நீ இந்த ரியாக்‌ஷன் கொடுத்து என்னைக் கலாய்க்கணும் சரியா?'னு சொல்லி, எல்லோருக்கும் ஸ்பேஸ் கொடுப்பார். நாமதான் பெரிய நடிகர் என்ற எண்ணம் அவர்கிட்ட இல்லை. ஒவ்வொரு காட்சியையும் நடிக்கிறதுக்கு முன்னாடி உட்கார்ந்து பேசி உள்வாங்கிக்கிறார். எழுதிய விஷயத்தை டிஷ்கஷனுக்குப் பிறகு வேற லெவலுக்கு மாத்திடுவார். படத்துல அவருக்கு 'பிஸ்டல் ராஜ்' என்ற டான் கேரக்டர். அவருக்குத் தனி டிராக்தான். ஒரு புள்ளியில மத்த எல்லோரும் ஒண்ணு சேர்வாங்க. அங்கேதான் கதை களைகட்டும்!" 

"யாஷிகா ஆனந்த்?"

"யாஷிகா, மருத்துவக் கல்லூரி மாணவி. 'ஐஸ்வர்யா'ங்கிற கேரக்டர்ல நடிச்சிருக்காங்க. கதையைச் சொன்னதும், 'வாவ் சூப்பர்'னு குஷியாகிட்டாங்க. படத்துல சில இடங்கள்ல காமெடி வொர்க் அவுட் ஆகலைனா, யாஷியா ஆடியன்ஸை ஈர்த்திடுவாங்கனு நம்புறேன். அதுக்காக, கிளாமர் கேரக்டர்னு நினைச்சிடாதீங்க. அப்படி எதுவும் இல்லை." 

"சோஷியல் மீடியா ஆர்ட்டிஸ்ட்டை இயக்கிய அனுபவம் எப்படி இருந்தது?" 

"எல்லோருமே சிங்கிள் டேக் ஆர்டிஸ்ட்டா இருந்தாங்க! பிஜிலி ரமேஷ்கிட்ட வேலை வாங்குறது மட்டும்தான் கொஞ்சம் சவாலா இருந்தது. அவர் கவுன்டரை கன்ஃபியூஸ் பண்ணிக்கிறதே செம காமெடியா இருக்கும். ஒருமுறை யாஷிகா பேசி முடிச்சதும், இவர் ஒரு வசனம் பேசணும். ஆனா, அதை இவர் சொல்றதுக்குள்ள மத்தவங்க ரெண்டு வசனம் பேசி முடிச்சிடுவாங்க. திடீர்னு ஒரு வசனம் சொல்வார். 'அது முடிஞ்சு அரைமணி நேரம் ஆகுதுண்ணா'னு பிஜிலியை யாஷிகா கலாய்ப்பாங்க. 'ஓ! அப்படியா... சரி விடும்மா'னு எஸ்ஸாகிடுவார். யோகி பாபுக்குப் பிறகு ரொம்ப பிஸியா இருக்கிறது, பிஜிலி அண்ணன்தான். காலையில 'நட்பே துணை' படத்துல நடிச்சுட்டு, ராத்திரி 'ஜாம்பி' ஷூட்டிங்ல கலந்துக்கிட்டார். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா... தன் ரசிகர் மன்ற வேலைகளில் பிஸியா இருக்கார், பிஜிலி ரமேஷ். ஏரியாவுல எங்கெல்லாம் கட் அவுட் வைக்கலாம்னு பெரிய பிளான் பண்ணிக்கிட்டு இருக்கார்." 

அடுத்த கட்டுரைக்கு