குள்ள அப்பு மர்மம், இரண்டரை கோடி டிக்கெட், ஃபுல் ஹேண்ட் சர்ட்... அபூர்வ சகோதரர்கள் படத்தின் 6 ஹைலட்ஸ்! - #30YearsOfApoorvaSagodharargal | 30 Years Of Apoorva Sagodharargal

வெளியிடப்பட்ட நேரம்: 09:20 (16/04/2019)

கடைசி தொடர்பு:08:39 (18/04/2019)

குள்ள அப்பு மர்மம், இரண்டரை கோடி டிக்கெட், ஃபுல் ஹேண்ட் சர்ட்... அபூர்வ சகோதரர்கள் படத்தின் 6 ஹைலட்ஸ்! - #30YearsOfApoorvaSagodharargal

முதல் பாதியில் சர்க்கஸில் வளரும் குள்ள அப்புவின் ஜாலி, கேலி, காதல் தோல்வி என்ற கதை ஒருபுறம், ராஜாவின் கதை ஒருபுறம் என... ஃபாஸ்ட் கியரில் போகும் படம். தந்தையின் கதையை அறிந்த பின்பு அப்பு எடுக்கும் அல்டிமேட் ரிவென்ஞ்தான் அதகளம்!

குள்ள அப்பு மர்மம், இரண்டரை கோடி டிக்கெட், ஃபுல் ஹேண்ட் சர்ட்... அபூர்வ சகோதரர்கள் படத்தின் 6 ஹைலட்ஸ்! - #30YearsOfApoorvaSagodharargal

மிழ் சினிமா பல்வேறு கட்டங்களில் பல பரிமாணங்களையும், முன்னேற்றத்தையும் கண்டுள்ளது. அவை சினிமாவில் எடுக்கப்படும் புதுவிதமான முயற்சிகளாகவும், பிரமாண்டமாகவும் இருந்தது. அப்படி 80, 90-களில் வயல்வெளி, கிராமம் எனத் தமிழ் சினிமா க்ளாசிக்கல் கூடாரத்திற்குள் சுற்றிக்கொண்டிருந்த வேளையில், கொஞ்சம் மசாலா தூவி சர்க்கஸ் கூடாரத்திற்குள் இழுத்துச்சென்ற திரைப்படம், `அபூர்வ சகோதரர்கள்'. இப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவாகியிருக்கிறது.

ரசிகர்களின் ரசனையை நன்கு புரிந்தவர், பல கெட்டப்புகளுக்கு டிரேட் மார்க் கொடுத்தவர், புதுப்புது முயற்சிகளை எடுப்பதற்கு அஞ்சாதவர், கமல்ஹாசன். முதலில் சர்க்கஸில் வேலை பாா்க்கும் பஃபூனின் காதல் தோல்வியைத் தழுவி நகரும் கதையாக அமைத்து வைத்திருந்தாா், பஞ்சு அருணாச்சலம். பின்பு கமல்ஹாசன் அவர் வைத்திருந்த கதையோடு சில கதாபாத்திரங்களை இணைத்து, அதற்கான கமர்ஷியல் வடிவம் கொடுத்தார். காதல், காமெடி, சர்க்கஸ், ரிவென்ஞ் என இருக்கும்படி கமல் - கிரேஸி மோகன் கூட்டணி அதற்கு திரைக்கதை - வசனத்தை எழுத, பக்கா கமர்ஷியல் திரைப்படமாக உருவெடுத்தது இப்படம். 

அபூர்வ சகோதரர்கள்

ஒரு படத்தின் வெற்றிக்கு முதல் காரணமாக இருப்பது, கதையம்சமும், கதாபாத்திர வடிவமைப்பும்தாம். இன்ஸ்பெக்டர் சேதுபதி நேர்மையான காவல் அதிகாாி. தொழிலதிபர் தர்மராஜ் (நாகேஷ்) மற்றும் அவரது கூட்டாளிகளான ஃப்ரான்சிஸ் அன்பரசன் (டெல்லி கணேஷ்), நல்லசிவம் (நாசர்), சத்யமூர்த்தி (ஜெய்சங்கர்) ஆகியோர் தங்கக் கடத்தலில் ஈடுபடவே, கையும் களவுமாகப் பிடிக்கிறாா், சேதுபதி. அதற்குப் பழிவாங்கும் நோக்கோடு சேதுபதியின் குடும்பத்தைக் குறிவைக்கிறது, வில்லன் கும்பல். கர்ப்பிணியான மனைவி காவேரியை (ஸ்ரீவித்யா) தப்பிக்க வைத்துவிட்டு, சேதுபதி இறந்துவிடுகிறாா். சேதுபதிக்கும், காவேரிக்கும் பிறக்கும் இரட்டைக் குழந்தைகள், விரட்டும் வில்லன் கும்பலால் பிரிந்துவிடவே, ஒரு குழந்தை காவேரியிடமும் (அப்பு) மற்றொரு குழந்தை முனியம்மாவிடமும் (ராஜா) வளர்கிறது. 

முதல் பாதியில் சர்க்கஸில் வளரும் குள்ள அப்புவின் ஜாலி, கேலி, காதல் தோல்வி என நகரும் கதை, இன்னொருபுறம் ராஜாவின் கதை.. என ஃபாஸ்ட் கியரில் போகும் படம். தந்தையின் கதையை அறிந்த பின்பு அப்பு எடுக்கும் அல்டிமேட் ரிவென்ஞ் அதகளம்! 

அபூர்வ சகோதரர்கள்

படத்தின் வெற்றிக்குக் காரணமாக இருந்த ஒரு கதாபாத்திரம் என்றால், அது சர்க்கஸில் வளரும் அப்பு கமல்தான். நடை உடைகளில் தொடங்கி, பி.சி.ஸ்ரீராமின் கேமரா டெக்னிக்ஸ் வரை.. அப்பு கமலுக்காக எடுத்துக்கொண்ட மெனக்கெடல் ஏராளம். தற்போது சினிமாவில் இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஒருவரை படம் முழுக்கக் குள்ளமாகக் காட்டுவதென்பது எளிது. ஆனால், எந்தவொரு தொழில்நுட்ப வளர்ச்சியும் இல்லாத காலத்தில் நிஜ ஜெமினி சர்க்கஸிற்கே சென்று படமாக்கப்பட்டன காட்சிகள். இப்படம் வெளியான பின்பு சர்க்கஸில் இருக்கும் ஜோக்கர்களுக்கு, `அபூர்வ சகோதரர்கள் அப்பு' என்ற டிரேட் மாா்க்கையும் அள்ளிக் கொடுத்தது.

படம் வெளியாகிப் பல வருடங்களாக அப்பு கமலை எப்படிப் படமாக்கினாா்கள் என்பதை அறிய ஒரு கூட்டமே சுற்றி வந்தது. ஆனால், அந்தக் கதாபாத்திரத்தை படமாக்கிய விதம் குறித்து எவரிடமும் தெரிவிக்கக்கூடாதென்று படக்குழுவினரிடம் சத்தியம் வாங்கப்பட்டதாம். ஆகவே, பல ஆண்டுகளாக வாய்திறக்காமல் இருந்தனர். சில வருடங்களுக்கு முன்புதான், அப்பு கமலைப் படமாக்குவதற்குத் தான் கையாண்ட டெக்னிக் ரகசியத்தைப் பகிர்ந்தார், பி.சி.ஸ்ரீராம்.

அபூர்வ சகோதரர்கள்

இப்படத்தின் சில ஹைலைட்ஸ் :

* அப்பு கமல் இடம்பெறும் காட்சிகளைப் படமாக்குவதற்கு மட்டும் ஒரு வருடம் எடுத்துக்கொண்டாா்களாம்.

* கமல் தன்னைக் குள்ளமாகக் காட்டிக்கொள்வதற்கு கோட் சூட், ஃபுல் ஹேண்ட் உடைகளை மட்டுமே அணிந்து வருவாா்.

* அப்பு இடம்பெறும் ஃப்ரேம்களில் வரும் கலர்கள் கவர்ச்சிகரமாக வைக்கப்பட்டதாம். ஏனெனில், அப்படி வைக்கும்போது மக்களின் பார்வை கதாபாத்திரத்தின்மேல் விழுவதைவிட அதைச் சுற்றி இருக்கும் பொருள்களின் மீது அதிகமாக இருக்கும். 

* சில காட்சிகளில் காலைக் கட்டியும், சில காட்சிகளில் குழிகளைப் பறித்தும், சில காட்சிகளில் செயற்கைக் கால்களைப் பயன்படுத்தியும் படமாக்கியிருக்கிறார்கள்.  

* படத்திற்கு மற்றொரு பலமாக இருந்தது, இளையராஜாவின் இளமையும், துள்ளலும் கலந்த பாடல்களும், பின்னணி இசையும்தான். `புது மாப்பிள்ளைக்கு' பாடலுக்காக ராஜாவிடம் டியூன் கேட்டு வந்த கமல்ஹாசனிடம், ஒவ்வொரு டியூனாகப் போட்டுக்காட்ட... இன்னும் வேறு மாதிரி என்றே கேட்டுக்கொண்டிருந்தாராம், கமல். `உங்களுக்கு எப்படித்தான் வேண்டும்' என ராஜா கேட்க, ``எம்.ஜி.ஆரின் `நான் பார்த்ததிலே..' பாட்டு மாதிரி" என்றிருக்கிறார், கமல். இப்படிப் படத்தில் ராஜா கை வைத்த ஒவ்வொரு பாடலும் ராங்கா போகவில்லை.

அபூர்வ சகோதரர்கள்

* படத்தின் மற்றொரு பிளஸ் கமல்ஹாசன் - கிரேஸி மோகன் கூட்டணியின் வசனங்கள். கான்ஸ்டபிள் சம்பந்தம் (ஆர்.எஸ்.சிவாஜி) பேசும் ``சார், நீங்க எங்கயோ போய்டீங்க" என்ற வசனம் இன்று வரை பலரது ஆல்டைம் ஃபேவரைட். 1989-ம் ஆண்டு சித்திரை 1- ம் தேதி அன்று வெளிவந்த இத்திரைப்படம், சுமாா் இரண்டரை கோடி டிக்கெட்டுகளுக்குமேல் விற்பனையாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்றது.

கதாநாயகனுக்கு நிகரான வில்லன், இரட்டை வேடங்கள், பழிவாங்கும் படலம், கச்சிதமான கதாபாத்திரங்கள், தரமான இசை... என இன்றுவரை ஒரு கமர்ஷியல் திரைப்படம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது, 'அபூர்வ சகோதரர்கள்'.

 


டிரெண்டிங் @ விகடன்