Published:Updated:

"கல்லிடைக்குறிச்சிக்கும் உங்களுக்கும் என்னதான் சம்பந்தம் ஷங்கர்?" - தமிழ் இயக்குநர்களின் சென்டிமென்ட் அலப்பறைகள்!

"கல்லிடைக்குறிச்சிக்கும் உங்களுக்கும் என்னதான் சம்பந்தம் ஷங்கர்?" - தமிழ் இயக்குநர்களின் சென்டிமென்ட் அலப்பறைகள்!
"கல்லிடைக்குறிச்சிக்கும் உங்களுக்கும் என்னதான் சம்பந்தம் ஷங்கர்?" - தமிழ் இயக்குநர்களின் சென்டிமென்ட் அலப்பறைகள்!

தமிழ் சினிமாவில் சென்டிமென்டுகளை உடைக்கவேண்டுமெனப் பல படைப்பாளிகள் முயற்சி செய்துகொண்டிருக்க, பல படைப்பாளிகள் புதிய சென்டிமென்டுகளை உருவாக்கியும் வருகின்றனர்.

சென்டிமென்டுகள் இல்லாத மனிதர்கள் சமூகத்தில் குறைவுதான். இங்கு இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஏதோவொரு வகை சென்டிமென்ட் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், சினிமாவில் சென்டிமென்ட் என்பது ஒரு படத்தின் ஸ்கிரிப்டில் இருக்கும் பிள்ளையார் சுழிக்கு அடுத்ததாக ஒரு டைரக்டர் எழுதும் அளவுக்கு உக்கிரமாக இருக்கும் மனநிலை. சிலருக்கு அது சென்டிமென்ட், சிலருக்கு அவர்களின் பாணி அல்லது ஸ்டைலாக இருக்கும்.

காக்கா வடை திருடும் கதையைக்கூட நான்-லீனியர் திரைக்கதையில்தான் சொல்வேன் என அடம்பிடிக்கும் ஹாலிவுட்டின் கிரிஸ்டோபர் நோலன் முதல், விசாகப்பட்டினத்தில் நடக்கும் கதையாக இருந்தாலும் சரி, விண்வெளியில் நடக்கும் கதையாக இருந்தாலும் சரி, இயக்குநரின் பெயர் வரும்போது கோயில் கோபுரத்தைக் காட்டி பின்னால் மணி அடித்துப் பெயர் போடுவேன் எனும் நம்மூர் ஹரி வரை... இங்கே ஸ்டைல் அல்லது சென்டிமென்ட் என்பது எல்லா இயக்குநர்களிடமும் உள்ள ஒன்று. ஆனால் நம் தமிழ் சினிமாவின் இயக்குநர்களில் சிலருக்கு இருக்கும் சென்டிமென்ட், கொஞ்சம் விசித்திரமானவையாகவே இருக்கின்றன. அவற்றில் சில.

கண்டிப்பா ஹீரோயினக் கொல்லணும் :

சினிமாவின் தலையாயக் கடமைகளில் ஒன்றாகப் பல்லாண்டு காலமாகப் பல படைப்பாளிகள் நம்பி வருவது, தங்கள் படம் பார்வையாளர்களின் உணர்ச்சியைத் தூண்ட வேண்டும் என்பதுதான். டைட்டானிக் கப்பல் மூழ்கிய விபத்தைக் குறித்து 13 முறை எடுக்கப்பட்ட சினிமாக்கள் தோற்ற பின்னும், ஜேம்ஸ் கேமரூன் எடுத்த படம் வெற்றியடைந்ததுக்குக் காரணம், அதிலிருந்த `காதல்' எனும் மனிதத்தின் பொது உணர்வு. ஆனால், தமிழ்த் திரையுலகில் ரசிகர்களின் உணர்வுகளைத் தூண்ட பல நேரங்களில் ஹீரோ பழிவாங்கவோ, அல்லது வலியில் தவிக்கவோ இயக்குநர்கள் கையில் எடுக்கும் முறை, கதாநாயகியைக் கொல்வது. அதிலும், இயக்குநர் அட்லீக்கும், கெளதம் மேனனுக்கும் அது கைவந்த கலை.

"கல்லிடைக்குறிச்சிக்கும் உங்களுக்கும் என்னதான் சம்பந்தம் ஷங்கர்?" - தமிழ் இயக்குநர்களின் சென்டிமென்ட் அலப்பறைகள்!

`ராஜா ராணி' நஸ்ரியா, `தெறி' சமந்தா, `மெர்சல்' நித்யா மேனன் என இதுவரை அட்லீ எடுத்த மூன்று படங்களிலும் தலா ஒரு கதாநாயகி கதாபாத்திரத்தைக் கொன்றிருக்கிறார். `ராஜா ராணி'யில் ஜெய்யின் பாத்திரம் முதலில் இறந்துவிட்டதாகச் சொல்லப்பட்டாலும், க்ளைமாக்ஸில் உயிரோடு இருப்பதாகத்தான் முடித்திருப்பார். என்ன ஓரவஞ்சனையோ!

நேரங்காலம் பார்த்துதான் கல்யாணம்... மன்னிக்கணும்... சினிமா எடுப்பேன் :

ஒரு படத்தின் பூஜை போடுவதில் தொடங்கி, ரிலீஸ் செய்வது வரை.. இங்கே பல சடங்குகள் இருக்கின்றன. அதிகளவில் பணம் போட்டுப் படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் இவ்வளவு பெரிய தொழிலில் சென்டிமென்ட் பார்ப்பது ஒருவகையில் ஏற்றுக்கொள்ளும்படியான ஒன்று. அது அவர்களின் நம்பிக்கையும்கூட. ஆனால், இங்கே சில தயாரிப்பு நிறுவனங்கள் நம்பிக்கையின் எல்லைக்கே செல்வார்கள்.

தன் பெயரின் இனிஷியலான ஆங்கில எழுத்து `ஆர் (R)' ஒரு பட நிறுவனத்துக்கு ஆகாத எழுத்து என்பதால், `ஆர்.மதுரவன்' என்பதற்குப் பதிலாக `மதுரவன்' என்றுதான் போட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாக, சில ஆண்டுகளுக்கு முன் சொன்னார், மறைந்த இயக்குநர் ராசு.மதுரவன். தன் தந்தை பெயரையே எடுத்துவிட வேண்டும் என்று சொன்னதால் அவர்கள் வாய்ப்பை நிராகரித்து, அந்தக் கடுப்பிலேயே தந்தையின் முழுப் பெயரையும் சேர்த்து `ராசு மதுரவன்' என டைட்டிலில் போட்டுக்கொண்டார். வேடிக்கை என்னவென்றால், வேறு ஒரு நிறுவனத்தின் பேனரில் அதே கதையை வைத்து ராசு மதுரவன் என்ற பெயரில் அவர் ஹிட் கொடுத்த படம்தான், `மாயாண்டி குடும்பத்தார்'. ஒரு படம் வெற்றிபெற எது தேவை என்பதற்கு சென்டிமென்டை உடைத்த ராசு மதுரவனே நல்ல உதாரணம்.

"கல்லிடைக்குறிச்சிக்கும் உங்களுக்கும் என்னதான் சம்பந்தம் ஷங்கர்?" - தமிழ் இயக்குநர்களின் சென்டிமென்ட் அலப்பறைகள்!

அப்படியே இன்றைய இயக்குநர்களைப் பார்த்தால், இங்கே தொட்டதற்கெல்லாம் சென்டிமென்ட்தான். முதல் படம் `சிறுத்தை'யாக இருந்தாலும், அஜீத்தை வைத்து சிவா இயக்கிய நான்கு படங்களின் பெயர்களும், ஆங்கில எழுத்துகள் `வி (V)'யில் தொடங்கி, `எம் (M)'மில் முடியும். அப்படி இருக்க வேண்டும் என்பது சென்டிமென்ட்டின் உச்சம். அப்படிப் பெயர் வைத்தால் படம் வெற்றியடையும் என்பது சிவாவின் நம்பிக்கையாக இருக்கலாம். ஆனால், அப்படிப் பெயர் வைத்த `விவேகம்', `வேதாளம்' திரைப்படங்கள் என்ன ஆனது எனக் கேள்வி கேட்டால், சிவாவுக்கே துக்கம் தொண்டையைக் கவ்வும். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் காம்போவில் வந்த எல்லாப் படங்களின் இடைவேளைக் காட்சியிலும் `ஐ அம் வெயிட்டிங்' வசனம் வருவது இதற்குச் சற்றும் சளைத்ததல்ல.

நான் பெண்களை மதிப்பவன் :

தமிழில் வெளியாகும் பெரும்பாலான கமர்ஷியல் படங்களில் பெண் பாத்திரங்களை, குறிப்பாக ஹீரோயின்களைக் கவர்ச்சிக்குத்தான் பயன்படுத்துகிறார்கள் என்பது பரவலான குற்றச்சாட்டு. அவர்கள் மேலும் மேற்கோளிட்டுக்காட்டுவது, மணிரத்னம் போன்ற ஒரு சில இயக்குநர்களே தங்கள் படத்தின் பெண் பாத்திரங்களை வலிமையானவர்களாகவும், சுதந்திரமானவர்களாகவும் சித்திரிக்கின்றனர். ஒருவகையில் அது சரிதான். `ரோஜா' படத்தில் வரும் மதுபாலா, `அலைபாயுதே' ஷாலினி என அவர் எழுதும் பாத்திரங்களைக் கண்ணியத்தோடுதான் நடத்துவார்.

"கல்லிடைக்குறிச்சிக்கும் உங்களுக்கும் என்னதான் சம்பந்தம் ஷங்கர்?" - தமிழ் இயக்குநர்களின் சென்டிமென்ட் அலப்பறைகள்!

என்றாலும், அதே மணிரத்னம்தான், 2000-ம் ஆண்டின் முற்பகுதி வரை, தனது எல்லாப் படங்களிலும், தவறாமல் அயிட்டம் சாங் ஒன்றாவது இருக்கும்படி பார்த்துக்கொண்டார். கதைக்கு எந்தத் தொடர்பும் இல்லையென்றாலும், அதுமாதிரியான பாடல்கள் கண்டிப்பாகப் படத்தில் இருந்தது. ஏன், குழந்தைகளை வைத்து எடுத்த `அஞ்சலி' படத்தில்கூட அப்படி ஒரு பாடலை அமைத்தவர், மணிரத்னம். நாமும், `நிலா அது வானத்துமேலே', `ராக்கம்மா கையத்தட்டு', `அரபிக் கடலோரம்', `செப்டம்பர் மாதம்', `மையா மையா' என எளிதில் ஹிட்டாகி விடும் அந்தப் பாடல்களில் கவர்ச்சிக்குப் பயன்பட்ட பெண்களைப் பற்றிக் கவலைப்படாமல், அவற்றை முணுமுணுத்துவிட்டு, `மணிரத்னத்தின் படத்தில் பெண்கள்' எனக் கட்டுரைகளும், மேடை உரைகளும் நிகழ்த்துவோம்.

உசிலம்பட்டி பெண்குட்டி... ஆனால் கல்லிடைக்குறிச்சியில் :

இந்தப் பட்டியலில் கடைசியாக வருபவர், இயக்குநர் ஷங்கர். இவரை எல்லோருக்கும் பிரமாண்ட இயக்குநர், ஃபாரின் சாங், மனிதனின் கால் தடம் படாத இடத்தில் படம்பிடிப்பவர் என்றுதானே தெரியும். ஆனால், இவருக்குள் இருப்பது ஒரு கிராமத்து சென்டிமென்ட். என்னதான் உலகத்தைச் சுற்றி ஒரு ரவுண்ட் அடித்துப் படம் எடுத்தாலும், தமிழகத்தின் தென்காசி, பொள்ளாச்சி போன்ற லொகேஷன்களின் வயல்வெளிக்கு நடுவே கேமராவை வைத்து ஒரு ஷாட்டாவது எடுக்கவில்லை என்றால், ஷங்கர் படம் நிறைவடையாது. குறிப்பாக, தென்காசிக்குப் பக்கத்தில் இருக்கும் கல்லிடைக்குறிச்சி கிராமம், அவர் ஃபேவரைட்.

"கல்லிடைக்குறிச்சிக்கும் உங்களுக்கும் என்னதான் சம்பந்தம் ஷங்கர்?" - தமிழ் இயக்குநர்களின் சென்டிமென்ட் அலப்பறைகள்!

`அந்நியன்' படத்தின் `அண்டங்காக்கா கொண்டக்காரி' பாடலில் ஒரு ஊருக்கே பெயின்ட் அடித்துப் படமாக்கினார்களே.. அது கல்லிடைக்குறிச்சிதான். அதுமட்டுமல்ல, `முதல்வன்' படத்தில் காட்டப்படும் மனிஷா கொய்ராலாவின் ஊர், `ஜென்டில்மேன்' படத்தில் இடம்பெற்ற `உசிலம்பட்டி பெண்குட்டி' பாடல், `ஜீன்ஸ்' படத்தில் நாசரின் ஃபிளாஷ்பேக் காட்சிகள், `இந்தியன்' படத்தின் `பச்சைக்கிளிகள் தோளோடு' பாடல்.. என இந்தக் கிராமங்களை `ஐ', `எந்திரன்', `2.0' வரை ஏதோவோர் இடத்தில் இந்த கிராமத்தைக் காட்டியே ஆகவேண்டும் என்ற முடிவில்தான் படமே எடுப்பாராம். ஏன் இப்படி ஒரு சென்டிமென்ட் என இதுவரை யாரிடமும் அவர் சொன்னதும் இல்லை. 

ஒரு முடிவு கட்டுங்க :

ராசு மதுரவன் முதல், ரஞ்சித் வரை.. தமிழ் சினிமாவில் சென்டிமென்டுகளை உடைக்கவேண்டும் எனப் பல படைப்பாளிகள் முயற்சி செய்துகொண்டிருக்கும்போதுதான், மற்ற சில படைப்பாளிகள் புதிய சென்டிமென்டுகளை உருவாக்கியும் வருகின்றனர். ஆனால், சினிமா என்பது இந்த சென்டிமென்டுகளுக்குள் அடங்கும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, அதைத் தாண்டி மக்களிடம் நிகழ்த்தவேண்டிய ஒரு பெரும் கலை என்பதையும் நம்ம ஊர் இயக்குநர்கள் புரிந்துகொள்வார்கள் என நம்புவோம்.

வீ ஆர் வெயிட்டிங்!

அடுத்த கட்டுரைக்கு