Published:Updated:

``கதையெல்லாம் கண்டுக்கலை... அந்த ஒரு டைட்டிலுக்கு, கோடி ரூபா அட்வான்ஸ்னு சொன்னாங்க!'' - இயக்குநர் சசி #GuessTheTitle

``கதையெல்லாம் கண்டுக்கலை... அந்த ஒரு டைட்டிலுக்கு, கோடி ரூபா அட்வான்ஸ்னு சொன்னாங்க!'' - இயக்குநர் சசி #GuessTheTitle
``கதையெல்லாம் கண்டுக்கலை... அந்த ஒரு டைட்டிலுக்கு, கோடி ரூபா அட்வான்ஸ்னு சொன்னாங்க!'' - இயக்குநர் சசி #GuessTheTitle

"பிச்சைக்காரன் படத்திற்குப் பிறகு, சித்தார்த் - ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தை இயக்கியிருக்கிறார், சசி. படம் குறித்தும், தனது சினிமா பயணம் குறித்தும் பகிர்கிறார்.

"என்னை நம்பிப் பணம் போடுற தயாரிப்பாளர் திருப்தியா இருக்கணும், படம் பார்க்கிற ரசிகர்கள் திருப்தியா இருக்கணும், என் படங்கள் எனக்கான பெயரை டேமேஜ் பண்ணிடக் கூடாது"- ஒவ்வொரு படத்துக்கும் பெரிய இடைவெளி எடுத்துக்கொள்ளும் இயக்குநர் சசி, அதற்கான காரணம் இதுவெனச் சொல்கிறார். 'பிச்சைக்காரன்' வெற்றிக்குப் பிறகு சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் நடிக்க 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தை இயக்கி முடித்து, ரிலீஸ் வேலைகளில் பிஸியா இருந்தவரை சந்தித்தோம்.

"உங்களுடைய ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ரகம். உங்களுக்குனு ஒரு ஜானரை ஃபிக்ஸ் பண்ணிக்காததும் இடைவெளிக்கு ஒரு காரணமா?" 

"நான் இப்படித்தான் இருக்க விரும்புறேன். இதுவரை நான் இயக்கிய எல்லாப் படங்களும் நல்ல படைப்புகளாகவே இருந்திருக்கு. ஒரு படம் தவிர! ஆனா, 'பிச்சைக்காரன்' கொடுத்த பெரிய வெற்றிக்குப் பிறகும் இவ்ளோ டைம் எடுத்துக்கிட்டதுக்குக் காரணம், 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தின் கதைதான். இந்தப் படம் என்னைப் படுத்தி எடுத்திடுச்சு. இந்த மாதிரி ஜானர்ல இந்தியாவுல எந்தப் படமும் வரலை. சிலபேர் இந்த ஜானரை டச் பண்ணியிருக்காங்க. ஆனா, இவ்ளோ டீட்டெயிலா பண்ணல." 

"20 வருடத்துக்கும்மேல சினிமாவுல இருக்கீங்க. பெரிய நடிகர்களும் நீங்களும் இணையாம போனதுக்கு என்ன காரணம்?" 

"பெரிய நடிகர்களுக்குப் படம் பண்ணக் கூடாதுனு எதுவும் இல்லை. என் கதை யாரை டிமாண்ட் பண்ணுதோ, அவங்களை வச்சுப் படமெடுக்கிறேன். ஆனா, 'சாருக்கு உங்க டைரக்‌ஷன்ல படம் பண்ணணும்'னு சில பெரிய ஹீரோக்கள்கிட்ட இருந்து அழைப்பு வந்திருக்கு. அவங்களுக்காக ஒரு கதையை எழுதி, என்னால படம் பண்ண முடியாதுங்கிறதால அதைப் பண்ணலை. சமீபகாலமா, நான் விஜய் சேதுபதியின் நடிப்பை அதிகமா ரசிக்கிறேன். என் கதைக்கும் அவர் தேவைப்படுறார். சீக்கிரமா அதுக்கான வாய்ப்பு அமையும்."

"பார்ட் 2 சீஸன் இது. 'பிச்சைக்காரன் 2' வரப்போறதா ஒரு பேச்சு இருக்கே?"

"பெயரை மட்டும் வச்சுக்கிட்டு பார்ட் 2 எடுக்கிறதுல எனக்கு உடன்பாடு இல்லை. 'நீங்க, விஜய் ஆண்டனி, பிச்சைக்காரன் 2 டைட்டில்' இந்த மூணு விஷயம் இருந்தா போதும். கோடியில அட்வான்ஸ் தர்றோம்'னு சிலர் சொன்னாங்க. 'வேற நல்ல கதை இருக்கு, அதைப் பண்ணலாம்'னு சொன்னேன், கேட்கல. ஆனா, ஒரு வருடம் முன்னாடி என்ன நடந்ததுன்னா, 'என்ன டைட்டில் இது; மாத்துங்க பாஸ்'னு சொன்னாங்க. இங்கே சக்ஸஸ்தான் மேட்டர். தமிழ் சினிமாவுல நல்ல படம் கொடுக்கிறதுல பிரச்னை இல்லை, சக்ஸஸ் படம் கொடுக்கிறதுல பிரச்னை இல்லை. நல்ல படத்தை சக்ஸஸ்ஃபுல்லா கொடுக்கிறதுதான் பெரும் பிரச்னை."

''இந்த 20 வருடத்துல ஒரு இயக்குநரா மறக்க முடியாத தருணங்களைச் சொல்லுங்களேன்?"

"நிறைய இருக்கு. பாலு மகேந்திரா, பாரதிராஜா, மகேந்திரன்... இவங்க படங்களைப் பார்த்துதான், சினிமா எடுக்கணும்னு சேலத்துல இருந்து சென்னைக்கு வந்தேன். நான் ரசிச்ச படங்களின் இயக்குநர்களே பின்னாளில் என் படத்தைப் பாராட்டினாங்க. அவங்க கூட நிறைய உரையாடியிருக்கேன். இதைவிடப் பெரிய சந்தோஷம் ஒரு படைப்பாளிக்கு என்னவா இருக்கும்? 'பூ' படத்துக்கான ஒரு நிகழ்ச்சி. இளைஞர் ஒருத்தர், 'எப்போவும் டைட்டில் கார்டு முடியிற வரைக்கும் படம் பார்த்துட்டு, கடைசியா தியேட்டரைவிட்டு எழுந்துபோற ஆள் நான். ஆனா, 'பூ' படத்துல ஒரு அம்மாவும் பொண்ணும் கடைசி வரை இருந்தாங்க. அவங்களைக் கடந்துபோறப்போ கவனிச்சேன். 'மம்மி... இட்ஸ் எ ஜஸ்ட் மூவி மம்மி'னு அழுதுகிட்டு இருந்த அவங்க அம்மாவை சமாதானப்படுத்திக்கிட்டு இருந்துச்சு அந்தப் பொண்ணு'னு சொன்னார், கலங்கிட்டேன். இன்னொருத்தர், "ஒவ்வொரு வருட தீபாவளிக்கும் எங்க அக்காவுக்கு நான் சேலை வாங்கிட்டுப் போவேன். இப்போவும் வாங்கிட்டுப் போறேன். ஆனா, 'என்ன கலர் பிடிக்கும்'னு கேட்டு வாங்கிக்கொடுக்கிறேன். உங்க 'பூ' படம் அதைத்தான் பண்ணியிருக்கு'னு சொன்னார். ஆடியன்ஸுக்காக நான் நாலு படி கீழே இறங்குறேன். அவங்க எனக்காக நாலு படி மேலே வரட்டும். இப்படித்தான் இருக்கணும் என் சினிமாக்கள்."

"மிஷ்கின், ராம், வெற்றி மாறன்... உங்களுக்குப் பிறகு வந்த படைப்பாளிகளையெல்லாம் கவனிக்கிறீங்களா?"

"லேட்டஸ்ட்டா வந்த 'டு லெட்' வரைக்கும் பார்த்துட்டுப் பாராட்டுற ஆள் நான். மிஷ்கின், ராம், வெற்றி மாறன் எல்லோரும் கிரேட் டைரக்டர்ஸ். எந்த சமரசமும் இல்லாம படம் பண்ணிக்கிட்டு இருக்காங்க. மிஷ்கின் மாதிரி கேமராவைக் கையாளக்கூடிய இயக்குநர் இங்கே கிடையாது. வெற்றி மாறன் படைப்பின் தரத்தை டச் பண்ண ஆளில்லை. ராமின் ஐடியாலஜி அவ்ளோ புதுசா இருக்கு. இவங்கெல்லாம் சினிமாவுல இருக்கிற போராளிகள்."

"இத்தனை வருடமா கண்ணாடிக்கு ஃபிரேம் மாறியிருக்கே தவிர, ஆள் அப்படியேதான் இருக்கீங்க. என்ன சீக்ரெட்?"

"இளமையாவே தெரியிறேன்னு சொல்றீங்க... சந்தோஷம். எங்க அப்பா ரொம்ப ஒல்லியா இருப்பார். நானும் அப்படியே இருக்கேன். இயக்குநர் கதிர் சார்கிட்ட நான் உதவியாளரா இருந்தப்போ, 'குஞ்சுமோன் சார் நிறைய புது இயக்குநர்களுக்கு வாய்ப்பு தர்றார்'னு பேசிப்பாங்க. கதிர் சார் குஞ்சுமோன் சார் தயாரிப்புல 'காதல் தேசம்' பண்ணும்போது கொஞ்சம் பெரிய ஆளா தெரியணும்னு, பவர் இல்லாத கண்ணாடியைப் போட்டுக்கிட்டேன். பிறகு, அந்தக் கண்ணாடிக்குப் பவர் வந்து அதுவும் எனக்கான ஒரு அடையாளம் ஆகிடுச்சு. இந்த லுக்ல என்னைப் பார்க்கிற ஆட்டோக்காரங்ககூட, சின்னப் பையனாதான் ட்ரீட் பண்ணுவாங்க. நல்லதுதான், இப்படி உடம்பு அமையிறது வரம். மத்தபடி, கண்ணாடி போடுறதுக்கும், வாய்ப்பு கிடைக்கிறதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைனு அப்புறமாதான் தெரிஞ்சுக்கிட்டேன்."

இவை தவிர, 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தின் அப்டேட்ஸ், சித்தார்த் - ஜி.வி.பிரகாஷை இயக்கிய அனுபவம், படமாக்க ரைட்ஸ் வாங்கி வைத்திருக்கும் சிறுகதை, 500, 1000 ரூபாய் நோட்டுகளை ஒழித்தால் பணம் பதுக்குவது குறையும் என 'பிச்சைக்காரன்' படத்தில் இடம்பெற்ற வசனம் நிஜத்தில் நடந்தபோது சசியின் மனநிலை, தன் சசியின் அரசியல் நிலைப்பாடு... எனப் பல்வேறு கேள்விகளுக்கு நாளை வெளியாகவிருக்கும் 'ஆனந்த விகடன்' இதழில் விரிவாகப் பதில் அளித்திருக்கிறார். 

ஆனந்த விகடன் இதழை ஆன்லைனில் சப்ஸ்கிரைப் செய்து படிக்க இந்த இணைப்பைக் க்ளிக் செய்யவும்!

அடுத்த கட்டுரைக்கு