Published:Updated:

```அன்பே சிவம்' கமல் கதாபாத்திரம் என்னுடையதுதான்..!'' - `பூ' ராமு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
```அன்பே சிவம்' கமல் கதாபாத்திரம் என்னுடையதுதான்..!'' - `பூ' ராமு
```அன்பே சிவம்' கமல் கதாபாத்திரம் என்னுடையதுதான்..!'' - `பூ' ராமு

அண்மையில் வெளியான 'நெடுநல்வாடை' படத்தில் கருவாத்தேவர் பாத்திரத்தில் நடித்திருந்த ராமுவைத் தொடர்பு கொண்டு உங்களைச் சந்திக்க வேண்டுமே என்றபோது, "இன்னிக்கு சாயங்காலம், சேப்பாக்கத்துல ஒரு மனிதச்சங்கிலி போராட்டம் இருக்கு, அங்க வந்திடுங்க பேசுவோம்," என என்னையும் போராட்டக் களத்துக்கு அழைத்தார்.

'பூ' - பேனாக்காரர், 'பரியேரும் பெருமாள்' - சட்டக் கல்லூரி முதல்வர் என நடிகர் ராமுவுக்குத் தமிழ் சினிமா தந்த அடையாளங்கள் ஏராளம். 'பூ' ராமு என்று பிரபலமாக அறியப்பட்டாலும் கோடம்பாக்கத்தில், அவர் தோழர் ராமுதான். "போராட்டம், களப்பணி, வீதி நாடகம், இப்படித்தான் முதன்முதலா எல்லாருக்கும் என்னைத் தெரியும். அதனாலேயே என்னோட அடையாளமாயிடுச்சு" என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார்.

அண்மையில் வெளியான 'நெடுநல்வாடை' படத்தில் கருவாத்தேவர் பாத்திரத்தில் நடித்திருந்த ராமுவைத் தொடர்புகொண்டு உங்களைச் சந்திக்க வேண்டுமே என்றபோது, "இன்னிக்கு சாயங்காலம், சேப்பாக்கத்துல ஒரு மனிதச்சங்கிலி போராட்டம் இருக்கு, அங்க வந்திடுங்க பேசுவோம்" என என்னையும் போராட்டக் களத்துக்கு அழைத்தார்.

மாலை அங்கு சென்று அவரைச் சந்தித்தபோது, போராட்டத்தின் இடையே என்னிடம் பேசினார்.

"எப்பவுமே போராட்டக் களத்துலதான் இருப்பீங்கபோல?"

"தப்பு நடந்திருக்கு, போராட வந்துதான ஆகணும். ஆனா நான் முன்ன மாதிரியில்ல. மார்க்ஸிய இயக்கத்துல இருந்த காலத்துல, போராட்டம், வீதி நாடகம்னு இன்னும் பரபரப்பா இருப்பேன். இப்போ நான் 'இண்டிவிஜுவல் மார்க்சிஸ்ட்.' அதாவது தனிமனித இயக்கம்னு சொல்லலாம். மார்க்ஸியம் ஒரு தத்துவம். இயக்கமா செயல்படலைனாலும், கருத்தியலை என்கிட்ட இருந்து பிரிக்க முடியாதில்லையா. ஆனா, இயக்கம் எப்போ எல்லாம் என்னை அழைக்குதோ அப்போ எல்லாம் நான் கண்டிப்பா போராட வருவேன்."

"வீதி நாடகத்துல இருந்து சினிமாவுக்குள்ள எப்படி வந்தீங்க?"

"நான் சினிமாவோட பல காலமா தொடர்புலதான் இருக்கேன். 'பூ' என்னுடைய முதல் படமா இருந்தாலும் ’அன்பே சிவம்’ படத்துலதான் என்னுடைய சினிமா பயணம் தொடங்கியதுனு சொல்லலாம். அந்தப் படத்துல முதல்ல கமல் கதாபாத்திரம் ஓவியரா மட்டும்தான் இருந்தது. பிறகு, வசனகர்த்தா மதன் சொல்லி கமல், ஒரு நாள் நாங்க போட்ட 'பயணம்'ங்கற வீதி நாடகத்தப் பார்த்தார். அதைப் பார்த்துட்டு தான் அந்தப் படத்துல அந்தக் கதாபாத்திரத்த ஒரு வீதி நாடகக் கலைஞனாவும் மாற்றினாங்க. அதுல கமல் போடுறதா காட்டும் நாடகமே எங்கப் 'பயணம்' நாடகத்தைத் தழுவி எழுதப்பட்டதுதான். நான்தான் அவருக்குப் பயிற்சியாளராவும் இருந்தேன்.  அதுக்குப் பிறகு 'பூ' படத்தோட 'சிவகாசி ரதியே' பாடல் ரிக்கார்டிங்குக்காக ஒரு பாடகரைக் கூட்டிக்கிட்டு ஸ்டூடியோவுக்குப் போகும்போது இயக்குநர் சசி என்னைப் பார்த்து பேனாக்காரர் கேரக்டர் பற்றி சொன்னார். எனக்கு வருமா வராதான்னு ஒரு குழப்பம். ஆனா அவர், நான் கண்டிப்பா நடிக்கணும்னு சொல்லி போட்டோ ஷூட்டெல்லாம் எடுத்து அடுத்த நாள் அவர் உதவியாளர்கள்கிட்ட எல்லாம் ஆலோசனை பண்ணிட்டு நான்தான் நடிக்கிறேன்னு சொல்லிட்டார். அப்படிதான் அந்த வாய்ப்பு வந்தது."

"நீங்க எத்தனை வீதி நாடகங்களை இயக்கியிருக்கீங்க?"

"நாடகத்துல, முதல்ல நான் பாடகன் மற்றும் நடிகனாத்தான் இருந்தேன். பள்ளிக்காலத்துல ஏ.எம்.ராஜா உட்பட அந்தக் காலத்துப் பாடகர்களின் குரலில் பாடுவேன். அதன் பிறகு, பள்ளியில் சில அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்துக்காகப் போராடத் தொடங்கி, பிறகு பொதுவுடமை இயக்கத்தோட மாணவர் அமைப்புல சேர்ந்து, தொடர்ந்து அவங்க கலைக்குழுவுல இணைந்து நடிக்கத் தொடங்கினேன். பிறகு ஒருங்கிணைப்பாளரா நீண்ட நாள்கள் இருந்திருக்கேன். இயக்கம்னு சொன்னா இதுவரை மூன்று வீதி நாடகங்களை எழுதி இயக்கியிருக்கேன்."

"ஒரு நிகழ்த்துக்கலை அரசியல் தளத்தில் மட்டுமே பிரபலமா இருக்கிறது சரியா?"

"அதை அப்படிப் பார்க்க வேண்டியதில்லை. நாடகக் கலைஞர் சஃப்தர் ஹஷ்மியை அவங்க போட்ட ஒரு அரசியல் நாடகத்துக்காக கொன்னாங்க. அதுதான் வீதி நாடகத்தை இந்தியா முழுக்க ஒரு பெரும் நிகழ்த்துக்கலையா ஆக்கியது. அதற்கு முன்பும் இடதுசாரி இயக்கங்கள் வீதி நாடகங்கள் போட்டுக்கிட்டுதான் இருந்தது. ஆனா, இந்தக் கொலையின் எதிரொலி அதைப் பரவலாக்கியது. என்னைப் போன்று பலரை இந்தக் கலைக்குள் ஈர்த்ததும், கருத்துச் சுதந்திரத்தை நசுக்கி நடத்தப்பட்ட அந்தக் கொலைதான். அதுதான் இந்த நாடகக் கலையின் முகத்தையே மாற்றியமைத்தது. இப்போவரை இருக்கு. ஏன்னா, கலகம் செய்வது கலையின் வேலை. அதான் அது அரசியல் தளத்துல இவ்வளவு வீரியமா இருக்கு."

"ஆனா, இப்போது வரை கெளரி லங்கேஷ், கல்புர்க்கின்னு கருத்துரிமைக் கொலைகள் நடக்கின்றன. முன்பு இருந்த அளவுக்கு வீதி நாடகங்கள் இப்போ நடக்கிறதில்லையே?"

"அதற்குக் காரணமும் அரசியல்தான். இடதுசாரி அமைப்புகள் தேர்தலையொட்டிதான் இப்போ அதிகமா நாடகம் போடுறாங்க. அதைப் பிரசார வடிவமா ஆக்கிட்டாங்க. அதே போலத்தான் திராவிட இயக்கங்களும். முன்னாடியெல்லாம் தி.மு.க தலைவர் கருணாநிதி பிரசாரக் கூட்டத்துக்கு வரும்போது, நம்ம நாடகம் எங்க நடக்குதுனு கேட்டு அந்த நேரத்துக்கு அங்க வந்து எங்க நாடகத்தையும் பார்த்துட்டு அங்கே திரண்டிருக்கும் கூட்டத்துல பேசிட்டுப் போவார். அங்கே இருப்பதெல்லாம் சாமானியர்கள். அப்போ உள்ள மக்களுக்கு வீதி நாடகத்தைப் பார்த்து அரசியல் புரிதல் வரும், ஊழல், அடிமைத்தனம் என எல்லாவற்றையும் பற்றி அவங்களிடம் கொண்டு சேர்க்க முடிந்தது. ஆனா, இப்போ உள்ள திராவிடக் கட்சிகள் சினிமா பாடல்களுக்கு ஆடுறவங்களை வைத்து கூட்டத்தைச் சேர்த்து, அதன் பின் பேசுறாங்க. ஒருவேள மக்களுக்கு அரசியல் புரிதல் வேண்டாம்னு நினைச்சுட்டாங்கபோல. ஒருகாலத்துல தமிழகம் முழுக்க 100 வீதி நாடகக் குழுக்கள் இருந்தன. சென்னையில் மட்டுமே பத்துக்கும் அதிகமா இருந்திச்சு. ஆனா, இப்போ அந்த அளவுக்கு இல்ல. அதான் நாடக எண்ணிக்கையும் குறைஞ்சு போச்சு."

"கருத்துச் சுதந்திரம் பற்றி பேசுறீங்க. ஆனா நீங்க இப்போ நடிச்சிருக்கும் 'நெடுநல்வாடை' படத்துலகூட சில சாதாரண வட்டார வழக்குச் சொற்களைக்கூட மியூட் பண்ணியிருக்காங்களே. அதை எப்படிப் பார்க்குறீங்க?"

"கெட்ட வார்த்தைகள் எல்லா வழக்குலையும் இருக்கும். ஆனா சென்சார் போர்டுல யார் இருக்காங்க? அந்தக் கேள்வி இருக்குல. அந்த ஊரப் பற்றி தெரியாம, சினிமான்னா என்னனு தெரியாதவங்கெல்லாம் வந்து தணிக்கைக் குழுவுல இருந்தா இப்படித்தான் ஆகும். வட்டார வழக்குதான் இது போன்ற படங்களுக்கு அடித்தளமே. அதைச் சிதைப்பதுதான் இவங்க வேலை. 'வடசென்னை' படத்துல எத்தனை கெட்ட வார்த்தைகள் வந்தன. அதை மட்டும் எப்படி அனுமதிச்சாங்க? பணம்தான்... ஆதிக்கம், அதிகாரம், பணம்... இவ்வளவுதான் சென்சார் போர்டு. இவங்க கிட்ட நீங்க எங்க கருத்துரிமை எதிர்பார்க்க முடியும். 'நெடுநல்வாடை' படத்தோட டிரெய்லர டிவி-யில போடக் கூடாதுனு சொன்னதுதான் நம்ம சென்சார் போர்டு. சரின்னு அந்தப் படக்குழு அதை எடிட் பண்ணிட்டுப் போய் கேட்டா, போர்டு நாலு நாள் லீவுனு காரணம் சொன்னாங்க. ஆனா மூணு நாள்ல படம் ரிலீஸ் ஆகுது. அதுக்கப்புறம் நான் அவங்ககிட்ட சொல்லி தயாரிப்பாளர் கவுன்சில்கிட்ட பேசி பர்மிஷன் வாங்கி ரெண்டு நாள் விளம்பரம் போட்டாங்க."

"கலையும் அரசியலும் ஒண்ணுதான்னு சொல்றீங்க. அப்போ சினிமா அந்த வேலையை ஒழுங்கா செய்யுதா?"

"அரைகுறையாத்தான் செய்யுது. எம்.ஜி.ஆர் நடிச்ச `ஆயிரத்தில் ஒருவன்’, விஜய் நடிச்ச `கத்தி’, ரஜினி நடிச்ச `காலா’ இவையெல்லாமே அரசியல் படம்தான். ஆனா, எல்லாமே ஒரு ஹீரோயிசத்துக்குள்ள அடங்கிடுமில்லையா. 'அதோ அந்தப் பறவைபோலே', 'ஏன் என்ற கேள்வி'... இப்படியெல்லாம் பாடிட்டு எம்.ஜி.ஆர் என்ன செய்யுறார்? கடைசியில் தனியா நம்பியார் கூட சண்டைபோட்டு ஜெயிச்சு தலைவனாகிறார். அதேதான் `கத்தி’, `காலா’வுக்கும். இயக்கமா, கூட்டமா செய்வதற்குப் பேருதான் போராட்டம். அதைத் தனிமனித ஹீரோயிசத்துக்குள் அடக்குவது சினிமா. இப்போ சில இயக்குநர்கள் வராங்க, அரசியல் புரிதலோட, சமூக மாற்றத்தை எதிர்பார்த்து. வெற்றிமாறன், சீனு ராமசாமி, லெனின் பாரதி, மாரி செல்வராஜ்... இப்படி கொஞ்ச பேரு வந்திருக்காங்க. பார்ப்போம்."

"ஆனா, இரஞ்சித், மாரி, வெற்றிமாறன்னு இப்படி அரசியல் புரிதல் இருக்கும் இயக்குநர்களும் ரஜினியையும் தனுஷையும் வைத்துப் படம் எடுத்து கடைசியில் நீங்க சொல்லும் ஹீரோயிசத்துக்குள் அடங்கிடுறாங்கல்ல?"

"அது சர்வைவல். சினிமாவைப் புரிஞ்சுக்கிட்டு அதற்கு ஏற்ற மாதிரி இருக்காங்க. ஏன்னா, நம்ம ஊர்ல உள்ள மக்களுக்கு சினிமான்னா, அஞ்சு பாட்டு, நாலு ஃபைட்டு, இதுதான்னு நம்ப வச்சிருக்காங்க. அதுக்கு ஏற்ற மாதிரி சில வளைவு நெளிவுகள் இருக்கத்தான் செய்யும். ஹாலிவுட்டில் படம் எடுக்கும்போது, காதல்ன்னா காதல் மட்டும்தான் இருக்கும், ஆக்‌ஷன்னா ஆக்‌ஷன் மட்டும்தான் இருக்கும். இங்க அப்படியா. ஆனா இது மாறிடும்."

"பரியேறும் பெருமாள், பேரன்பு, பூ. இந்த எல்லாப் படங்களிலும் உங்களுடைய பாத்திரம் முன்னணியில் இல்லைனாலும், உங்களோட வசனம்தான் அந்தப் படங்களோட அடித்தளமாவே இருக்கும். இது உங்களுக்குனு அமையுதா?"

"அது அந்த இயக்குநர்களோட எழுத்துல இருக்கு. பூ படத்துல என் கேரக்டரைச் சுற்றிதான் மொத்தக் கதையுமே நடக்கும். பரியேறும் பெருமாள் படத்துல ரெண்டு காட்சிதான். ஆனா, நான் பேசும் வசனம்தான் படத்தோட மொத்தக் கருத்தோட சாரம்சமே. அது மாரியினுடைய திறமை. இதுக்கெல்லாம் அந்தப் படங்களுடைய தன்மையும் ஒரு காரணம். ஆனா நான் 'வீரம்', 'ஜில்லா' படங்கள்லையும் நடிச்சிருக்கேன்னு நானா சொன்னாதான் உங்களுக்குத் தெரியும். அதுதான் கருத்தைச் சுமந்து வரும் படத்துக்கும், ஹீரோ புகழ் பேசும் படங்களுக்கும் உள்ள வித்தியாசம்."

"பத்து வருஷமா சினிமாவுல இருக்கீங்க. பல வகையான கதாபாத்திரங்கள் பண்ணீட்டிங்க. அதில் எது உங்களுடைய நிஜ வாழ்க்கையோட ஒன்றிப்போகும் கதாபாத்திரம்?"

"அப்படி ஒண்ணும் இதுவரை இல்ல. கதாபாத்திரங்கள் பற்றி முடிவெடுக்க வேண்டியது இயக்குநர்கள். ஆனா, என் கருத்தியலோட நெருங்கி வரும் பாத்திரம்னா அது ’பரியேறும் பெருமாள்’ ப்ரின்சிபால்தான். அந்த வசனமே அவ்வளவு ஆழமானது."

"சினிமா, வீதி நாடகம்னு ரெண்டு துறைகளிலும் அதிக அனுபவம் இருக்கு. ஆரம்ப காலத்துலயிருந்து இப்போ நடந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வரை, பல பிரச்னைகளுக்குக் குரல் கொடுக்குறீங்க. ஆனா, இது எதையுமே ஒரு நாடகமாவோ, சினிமாவாகவோ இயக்க ஆசையில்லையா?"

"இப்படி ஒரு பாசிச ஆட்சியில, வீதி நாடகம் போடணும்னு ஆசை இருக்கத்தான் செய்யுது. ஆனா, போடச்சொல்லி கேட்கலையே. ஒரு குழுவை வச்சுருக்காங்க. கண்டிப்பா நாடகம் நடத்தலாம். ஆனா, தேர்தலுக்கு மட்டும்தான் போடுறாங்க. என்ன செய்ய? அதே போல சமூகமும் முன்ன மாதிரியில்ல. முன்னாடி ராயப்பேட்டை, சைதாப்பேட்டைன்னு ஊரு பேரச் சொன்னா, அங்க யாரால பிரச்னை வரும்னு தெரியும். ஆனா இப்போ, ராயப்பேட்டையே சிக்கலா இருக்கே. பெரும்பான்மையான மக்கள் தொகையே தப்பா இருக்கு. படமும் அதே மாதிரிதான். ஒரு ஸ்கிர்ப்ட் எழுதினேன் முன்னாடி. அதன் பிறகு அதைப் படமாக்கத் தோணல. எப்போ தோணுதோ அப்போ எடுக்கலாம். திணிச்சுக்க வேண்டாம்னு விட்டுட்டேன்."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு