Published:Updated:

'' 'எனக்குக் கோபம் வரும்போது காலை உதைப்பேன், அதே மாதிரி நீயும் பண்ணு’னு சிவாஜி சொன்னார்..!’’ - 'ராமு' ராஜ்குமார்

'' 'எனக்குக் கோபம் வரும்போது காலை உதைப்பேன், அதே மாதிரி நீயும் பண்ணு’னு சிவாஜி சொன்னார்..!’’ -  'ராமு' ராஜ்குமார்
'' 'எனக்குக் கோபம் வரும்போது காலை உதைப்பேன், அதே மாதிரி நீயும் பண்ணு’னு சிவாஜி சொன்னார்..!’’ - 'ராமு' ராஜ்குமார்

1962 ம் ஆண்டு வெளியான 'காத்திருந்த கண்கள்' படத்தில் வெளியான  'வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா' பாடல் கேட்காதவர்கள் இருந்திக்க முடியாது. கணவன், மனைவி இருவருக்குள்ளும் இருக்கும் காதலை அவ்வளவு அழகாகப் பிரதிபலித்திருப்பார்கள். அதில் ஜெமினி கணேசன், சாவித்திரி நடித்திருக்க, அவர்களின் மகனாக நடித்திருப்பார் ஒருவர். அவர் பெயர் ராஜ்குமார்.

'ராமு', 'சபாஷ் தம்பி', 'பெற்றால் தான் பிள்ளையா' என 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் தற்போது,  ராம் சரண், சமந்தா நடித்த 'ரங்குஸ்தலம்', மகேஷ் பாபு, பூஜா ஹெக்டே நடித்திருக்கும் 'மகரிஷி' போன்ற படங்களில் இவருடைய மியூசிக்கும் ஒரு பார்ட். அவரிடம் பேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியவில்லை. 

'' ‘பெற்றால்தான் பிள்ளையா' படத்தில் எம்.ஜி.ஆர் -ஐ நேரில் பார்த்தபோது திகைச்சுப் போய் நின்னேன். என்கூடப் படிக்கிற பசங்க எல்லாம் எம்.ஜி.ஆர்கூட நடிக்கிறியா என ஆர்வமா விசாரிப்பாங்க. அந்த படத்தில் நடிக்கும்போதுதான் எம்.ஜி.ஆர் முழு மூச்சாக அரசியலில் இறங்குகிறார்'' என்பவர், தனது பருவ வயதை தொடுவதற்குள் ஏழு வருடத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என 50 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ஜெமினி கணேசன், என்.டி.ராமா ராவ், ராஜ் குமார் என பலருடன் நடித்தப் பெருமையை உடையவர்.

நான் அப்போ ஐந்தாம் வகுப்புக்கூட தாண்டல. ஒரு முறை அப்பாவுடன், 'காக்கும் கரங்கள்' படத்தின் எடிட்டிங் ரூமிற்கு போனேன். அங்கிருப்பவர்தான் 'ராமு' என்கிற படம் எடுக்கிறோம். அதில் நடிக்க ஒரு பையன் வேணும்னு சொன்னாங்க. டெஸ்ட் எடுக்கலாமானு கேட்டாங்க. என் அப்பா ஓ.கே சொன்னதும், சில நாட்கள் கழித்து டெஸ்ட் எடுத்தாங்க. அதற்கு முன்பு நூறு பசங்களை பார்த்தும் திருப்தி ஆகாமல், ரிஜக்ட் பண்ணியிருந்தாராம் இயக்குநர்.  1966 ல் வெளிவந்த 'ராமு'  படத்தின் 'கண்ணன் வந்தான்..' பாடல் செம்ம ஹிட் அடித்தது. 

அப்போவும் எம்.ஜி.ஆர் டிரீம்தான் எனக்கெல்லாம். 'நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி' பாடலுக்கான மெயின் சீனே நானாகத்தான் இருப்பேன். அந்த படத்தில் நடிக்கும்போது அவருடன் பேசுவது குறைவாகவே இருந்தது. அப்படி நேரம் கிடைக்கும் போதெல்லாம், 'நல்லாப் படிக்கணும், எக்காரணத்தைக் கொண்டும் படிப்பை மட்டும் விட்டுடாதே'னு சொல்லிட்டே இருப்பார்.  அந்த படத்தில் நடித்த நேரத்தில் அரசியலிலும் பிஸியாக இருந்தார். அவர் ஷூட் முடிப்பதற்காக வெளியில் கிட்டத்தட்ட இருபது, முப்பது பேருக்கும் மேல் காத்திருப்பாங்க. அவ்வளவு எலக்‌ஷன் வேலைகளையும் பார்த்துட்டு கொஞ்சம் டயர்ட் ஆகாமல் கேமரா முன்னாடி நிற்பார். கிட்டத்தட்ட நான்கு மாதத்திற்கும் மேல் தூக்கமில்லாமல் நடிப்பு, அரசியல் என தன்னை பிஸியாக வைத்திருந்தார்.

'தெய்வமகன்' ஷூட்டிங் நடந்திட்டு இருந்தப்போ, 'சுமதி என் சுந்தரி'; ஷூட்டிங்கும் நடந்து, இந்த படங்களில் நடிக்கிற வாய்ப்பு எனக்குக் கிடைச்சது. 'தங்கை' படத்தில், அவருடைய சின்ன வயதில் நடித்திருப்பேன். ஒரு முறை என்னை கவனித்தவர், 'எனக்கு கோபம் வரும்போது காலை உதைப்பேன், அதே மாதிரி நீயும் பண்ணா, இந்த படத்திற்கான  கனக்டிவிட்டி சரியாக இருக்கும் என்றார். இயக்குநரே தவறிய விஷயத்தை சரியாக கவனித்து சொன்ன சிவாஜி அப்படியொரு கலைஞன்.

ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும் ஹீரோவாக நடிக்கணும் என்கிற எண்ணம் இருந்தது. 1970 ல் 'சிங்கமும் சிறுவனும்' என்கிற படம் எடுக்க வேண்டியிருந்தது. அதற்காக சிங்கத்தை வரவழைத்து, அதோடு பழக எனக்கு மாச கணக்கில் ட்ரெயினிங் கொடுத்தாங்க. இந்த படத்தில் ஜெயசங்கர், நாகேஷ், லட்சுமி, சங்கர் கணேஷ் மியூசிக் என பெரிய பட்டாளமே ஒப்பந்தமாகியிருந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், தெலுங்கு நான்கு மொழிகளில் தயாரிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஹிந்திக்கு சங்கர் ஜெயகிருஷ்ணன் மியூசிக் என்கிற செய்தி கேட்டபோது சந்தோஷப்பட்டேன். எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் அவர். பூஜை வாகிணி ஸ்டோடியோவில்தான் நடந்தது. 15 நாட்களில் படப்பிடிப்பு நடக்க வேண்டியிருந்தது. ஆனால், எங்கள் துரதிஷ்டம் அதுக்குள்ள அந்த சிங்கம் செத்துப் போச்சு. எல்லாருமே செம்ம அப்செட். அடுத்த சிங்கம் கொண்டு வந்து ட்ரெயின் பண்ணனும். அதற்கு இன்னும் சில மாதங்கள் டைம் எடுக்கும் என்பதால், அந்த படம் அப்படியே நின்றுவிட்டது. 1970-களில் வெளியான பிரார்த்தனைதான் நான் நடித்த கடைசி படம். சிங்கம் செத்ததிலிருந்து என்னால் அடுத்த வாய்ப்புத் தேட மனமே வரவில்லை’' என்றவரிடம்  மறக்க முடியாத ஷூட்டிங் ஸ்பாட் அனுபவம் உண்டா என்றதற்கு,

''ராமு' படத்தின் கிளைமேக்ஸ் சீன்.. நெருப்பு சீன். ஐந்து நாட்களுக்கும் மேல் அந்த சீன் எடுக்கப்பட்டது. முதல் இரண்டு நாட்கள் கெரோசின் வைத்து நெருப்புப் பத்த வச்சாங்க. அது பிடிக்க நேரம் ஆகிட்டே இருந்தது. ஒரு கட்டத்தில் நான்காம் நாள் அந்த ஊழியர் பெட்ரோல் ஊத்திட்டார். 'ஷூட்டிங் ஸ்பாட் 'குப்' என நெருப்புப் பிடிச்சிடுச்சு. கே.ஆர்.விஜயா, ஜெமினி கணேசன் எல்லாம் செட்டிலிருந்து தப்பிச்சு வெளிய வந்துட்டாங்க.  என்னை உரலில் கட்டி வச்சதால,வெளிய வரமுடியல. 'குழந்தையை காப்பாற்றுங்க' எல்லோரும் கத்துறாங்க. அப்போ திருலோகசந்தர் கத்தின கத்தில் எல்லோருமே பயந்துட்டாங்க. அவர் பொதுவாகவே மெதுவாகத்தான் நடந்து வருவார். ஆனால், அன்று வேகமாக ஓடி வந்து என்னை உரலோடு தூக்கி வந்து காப்பாற்றினார். அன்றைக்கு அவர் இல்லை என்றால் நான் இன்று உயிரோடு இல்லை. இந்த சம்பவத்தைப் பார்த்த பிறகு, அம்மா என்னை நடிக்க வைக்க மாட்டேன்னு பிடிவாதமா இருந்தாங்க. டைரக்டர்தான் சமாதானப்படுத்தி தெலுங்கிலும் நடிக்க வச்சார்'' என்பவர், அதற்குப் பிறகு முழுக்க இசைத்துறையில் இறங்கிவிட்டார்.

''அப்பா பியானோ, ஹார்மோனியம் என கீ போர்ட் செக்‌ஷன் எல்லாத்தையும் வாசிப்பார். அதனால் எனக்கு இசை பழக்கமாகிடுச்சு. ஒரு முறை அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் நான் மேடையில் வாசிக்க வேண்டிய சூழல். வாசித்தேன். வாசித்து முடித்ததும் ஒரு பைசா, மூன்று பைசா, என மேடையில் காசு விழ ஆரம்பிச்சது. ஒன்ஸ் மோர் கேட்டாங்க. அங்கே கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரும் இருந்தார். அவர் தொடர்ந்து என் வாசிப்பை கேட்டுட்டே இருந்தார். ஐந்து நிமிஷம் மட்டுமே கொடுக்கப்படும் என்கிற நிபந்தனை விலகி அரை மணி நேரம் வாசித்தோம்'' என்பவர் எம்.எஸ்.வி, இளையராஜா, வித்யாசாகர், ஷங்கர் கணேஷ், ஹாரிஷ் ஜெயராஜ், தேவிஶ்ரீ பிரசாத் என பல இசையமைப்பாளர்களுக்கு ஆர்மோனியம், அக்கார்டியன் (accordion instrument) போன்றவற்றை வாசித்திருக்கிறார். 

''சிங்கப்பூரில் நடந்த ஷோவில் ஏ.வி.எம்.ரமணன் வாய்ப்பு கொடுத்தார். அக்கார்டியன் வாசித்தேன். அதன் பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தது.  ஆயிரம் கண்கள், நிழல் நிஜமாகிறது ('இலக்கணம் மாறுதோ..'), இளையராஜாவின் 'என் கண்மணி' பாடல்,ஜேசுதாஸ் & வாணிஜெயராம் பாடிய  'எச்சில் இரவுகள்' - ('பூ மேலே வீசும் பூங்காற்றே..'), சிட்டுக்குருவி, ('அடடடா மாமரக் கிளியே..') கவரிமான் ('பூ போலே உன் புன்னகையில்..'), 'இளமை ஊஞ்சலாடுது', 'குரு', ஹாரிஷ் ஜெயராஜ் 'மாற்றான்' (கால் முளைத்த பூவே), 'நெஞ்சிருக்கும் வரை 'ஒரு முறை பிறந்தேன்' பாடல்.  பண்ணையாரும் பத்மினியும், 'எனக்காக பிறந்தாயே எனதழகா', அஜீத்தின் 'அசல்'.'காதல் மன்னன்' ('மெட்டு..), 'என்றென்றும் புன்னகை' தோஸ்துடா பாடல். தேவி ஶ்ரீபிரசாத் 'வேங்கை' காலங்காத்தாலே' இப்படி தமிழில் நிறைய பாடல்களுக்கு வாசிதிருக்கிறேன். இப்படி, தெலுங்கு 'ரங்கஸ்தலம்' டைட்டில் ரங்கம்மா ரங்கம்மா' பாடல்'' என லிஸ்டை அடுக்குகிறார். அவர் நடித்துக் கொண்டிருந்தபோதுதான் எம்.ஜி.ஆரை, எம்.ஆர்.ராதா சுட்டாராம். அந்த சுவாரஸ்ய தகவலையும் பகிர்ந்தார், 

''பெற்றால்தான் பிள்ளையா' படம் முடிந்தப் பிறகுதான் அந்த பிரச்னை வந்தது. தேவர் பிலிம்சின் எல்லாப் படங்களிலும் எம்.ஆர்.ராதா இருப்பார். 'பெற்றால்தான் பிள்ளை' படத்திற்குப் பிறகு ஒரு படத்தில் எம்.ஆர்.ராதா நடிக்கக்கூடாது என்றாராம் எம்.ஜி.ஆர். இதைக் கேள்விப்பட்டு, எம்.ஜி.ஆர் வீட்டுக்குப் போய், 'ஏன் தம்பி இதிலெல்லாம் தலையிடுறீங்க'னு கேட்டிருக்கிறார். அந்த பேச்சுவார்த்தை முற்றி, கன் எடுத்து எம்.ஜி.ஆரை கழுத்துப் பகுதியில் சுட்டுவிட்டாராம் எம்.ஆர்.ராதா. அதன் பிறகுதான் எம்.ஜி.ஆரும் கன் வைக்க ஆரம்பித்தார் என்று சொல்வார்கள். 'பறக்கும் பாவை' ஷூட்டிங் டைம்ல படத்தில் நடித்தப் புலி மிரண்டுவிட்டது எனக் கேட்டதும், எல்லோரும் ஓடிவிட இவர் மட்டும் நிற்கிறார். அப்போதான் தெரிந்தது ஷூவுக்குள் கன் வச்சிருந்தார் எம்.ஜி.ஆர் என்பது'' என்றார் ராஜ்குமார் சுவாரஸ்யம் விலகாமல்!