Published:Updated:

``அட்லி டீம் மிரட்டுனதுக்கு அப்புறம்தான் கேஸ் போட்டேன்..!'' - `விஜய் 63' கதை சர்ச்சையின் பின்னணி

``அட்லி டீம் மிரட்டுனதுக்கு அப்புறம்தான் கேஸ் போட்டேன்..!'' - `விஜய் 63' கதை சர்ச்சையின் பின்னணி
``அட்லி டீம் மிரட்டுனதுக்கு அப்புறம்தான் கேஸ் போட்டேன்..!'' - `விஜய் 63' கதை சர்ச்சையின் பின்னணி

விஜய்யை வைத்து அட்லி இயக்கும் படத்தின் கதை என்னுடையது என்று கூறுகிறார் உதவி இயக்குநர் செல்வா. அவரிடம் பேசியதிலிருந்து

`சர்கார்' படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் திரைப்படத்தை அட்லி இயக்கிக்கொண்டிருக்கிறார். நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில் கால்பந்து கோச்சாக விஜய் நடிக்கிறார் எனத் தகவல். இந்தப் படம் வரும் தீபாவளி ரிலீஸ் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் செல்வா என்ற குறும்பட இயக்குநர், `இந்தப் படத்தின் கதை என்னுடையது' என்று நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். இதுகுறித்து செல்வாவிடம் பேசினேன். 

``என் சொந்த ஊர் சென்னை. ஃபிலிம் மேக்கிங் படிச்சேன். குறும்படங்கள் இயக்கிட்டு இருந்தேன். `றெக்க' படத்தில் உதவி இயக்குநராக வேலை செய்தேன். இப்போ, விஷ்ணு விஷால் படத்திலும் உதவி இயக்குநர். இதற்கிடையில் தனியா படம் பண்ண கதை எழுதி முடிச்சிட்டு தயாரிப்பாளர் ஒருவரைப் பார்த்து பேசினேன். அவர் கதையில் சில மாற்றங்கள் சொன்னார். அதுக்காக வொர்க் பண்ணிட்டு இருந்தேன். இந்த இடைவெளியில் என்னோட கதையைப் பதிவு செய்யாமல் விட்டுவிட்டேன். இதுதான் நான் பண்ணுன தப்பு. பதிவு செய்திருந்தால் இது எனக்குப் பெரிய உதவியா இருந்திருக்கும்’’ என்றவர், தொடர்ந்தார். 

``அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் என்னுடைய கதைனு எனக்குத் தெரிய வந்துச்சு. இது தொடர்பா போன நவம்பர் 2-ம் தேதி அட்லியின் மேனேஜர் அஸ்வின் மற்றும் நிர்வாக தயாரிப்பாளரைச் சந்தித்துப் பேசினேன். `இது என் ஸ்க்ரிப்ட்னு தெரியுது. உங்க டீம்ல உள்ள ஒருத்தர் மூலமாகதான் இந்தத் தகவல் எனக்கு வந்தது. அந்த நபர் யார்னு உங்ககிட்ட சொல்ல விரும்பல. எங்கே சொல்லணுமோ அங்கே சொல்லிக்கிறேன். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளார் சங்கம் போய் நம்ம விவகாரத்துக்குத் தீர்வு பண்ணிக்கலாம்’னு சொன்னேன்.

`என் கதையை நீங்க பண்ணலைனா எனக்கு எந்தவொரு பிரச்னையும் இல்லை. ஒருவேளை என் கதைனா அதுக்கான க்ரெடிட் கொடுங்க’னு கேட்டேன். ஆனா, என்னோட இந்தக் கோரிக்கைக்கு அவங்க ஏத்துக்கல. இதுக்கு பதிலா, என்னோட வேறொரு கதைக்கு தயாரிப்பாளர் மற்றும் ஹீரோ ஏற்பாடு பண்ணி தரேன்னு சொன்னாங்க. தவிர, உங்ககிட்ட சொன்னது யாருனு எங்ககிட்ட சொல்லணும்னு சொன்னாங்க. ஆனா, அதுல எனக்கு உடன்பாடில்லை. 

அவங்களுடன் நேரில் பேசுறப்போ எந்த மாதிரி சமாளிச்சு பேசுறாங்கனு என்னால புரிஞ்சுக்க முடிந்தது. `இந்தக் கதையைப் படமாக்க எங்களாலதான் முடியும். உன்னால முடியாது. ஏன்னா, எங்க பின்னாடி பெரிய தயாரிப்பு நிறுவனம் இருக்கு'னு மிரட்டுனாங்க. பேசும்போது என் சம்மதத்தோட நாங்க பேசுனதை அவங்க ரெக்கார்டு பண்ணுனாங்க. இந்த ரெக்கார்டு காப்பியை எனக்கும் தருவதா சொன்னாங்க. அதனாலதான் நான் முதலில் சம்மதிச்சேன். ஆனா, பலமுறை அவங்க ஆபீஸுக்கு அலைஞ்சும் அந்த ரெக்கார்டு இதுவரைக்கும் என் கைக்கு வரவே இல்லை. 

எங்களுக்குள்ள நடந்த இந்தப் பேச்சு வார்த்தைக்குப் பிறகு, என் ஃபேஸ்புக் வலைதளத்தில் `நான் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமா வச்சு படம் பண்ண இருக்கேன். விருப்பம் இருக்குறவங்க மெயிலுக்கு போட்டோ அனுப்புங்க'னு குறிப்பிட்டிருந்தேன். இதைப் பார்த்த அஸ்வின் என்கிட்ட, `எப்படி நீ படம் பண்றனு பார்ப்போம்'னு சண்டை போட்டார். சொல்லப்போனா, நானொரு தீவிரமான விஜய் ரசிகன். இந்தப் பிரச்னைக்கு இடையிலும்கூட `சர்கார்' படத்தை முதல்நாள் முதல் ஷோ பார்த்தேன். விஜய் சார் இந்தப் பிரச்னையில் தலையிடணும்னு நான் சொல்லவே இல்லை. இது இயக்குநருடைய பிரச்னை. அட்லிதான் இதுக்கு பதில் சொல்லணும். 

நானொரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். என் குடும்பத்தைத் தாண்டி இந்தப் பிரச்னையில் எனக்கு சப்போர்ட் பண்ண யாரும் இல்லை. அதனால சட்டபூர்வமா போராடலாம்னு இருக்கேன். முதலில் 'ரைட்டர்ஸ் யூனியன்'ல இது சம்பந்தமா ஜனவரியில் புகார் கொடுத்தேன். முதலில் இந்தப் புகாரை வாங்க மாட்டேன்னு சொன்னாங்க. அப்புறம் மார்ச் மாதம் என்னைக் கூப்பிட்டு கடிதம் கொடுத்தாங்க, `நீங்க சேர்ந்து ஆறு மாசம் ஆகலை. குறைந்தது ஆறு மாசம் ஆகியிருந்தால்தான் இந்தப் புகாரை விசாரிக்க முடியும்'னு சொன்னாங்க. அதனால, நான் இப்போ கோர்ட்டுல வழக்கு பதிவு செய்திருக்கேன். ஸ்டே ஆர்டர் கேட்டிருக்கேன். வரும் 23-ம் தேதி அட்லி தரப்பிலிருந்து இதற்குப் பதில் சொல்லணும். அட்லிகிட்ட இது சம்பந்தமா பேசுறதுக்கு முயற்சி பண்ணினேன். ஆனா, முடியல. எனக்கு அவங்க கொடுக்கிற பணம் முக்கியம் இல்லை. க்ரெடிட்தான் முக்கியம்’’ என்று முடித்தார் செல்வா.

அடுத்த கட்டுரைக்கு