Published:Updated:

கறார் வசூல், ரஜினி மீது வழக்கு, சிறையில் சித்ரவதை... யார் இந்த போத்ரா?

கறார் வசூல், ரஜினி மீது வழக்கு, சிறையில் சித்ரவதை... யார் இந்த போத்ரா?
கறார் வசூல், ரஜினி மீது வழக்கு, சிறையில் சித்ரவதை... யார் இந்த போத்ரா?

`ரஜினிகாந்த் மீது மோசடி வழக்கு’ என்ற செய்தியால் தமிழ் சினிமாவின் சர்ச்சைக்குரிய நபராக பிரபலமானவர் ஃபைனான்ஸியர் போத்ரா. சென்னை, சௌகார்பேட்டையில் ஃபைனான்ஸ் நிறுவனம் நடத்திய போத்ரா, மயிலாடுதுறையில் பிறந்து வளர்ந்தவர். வைர வியாபாரியின் மகன் என்பதால், அதையே தொழிலாகத் தொடர்ந்தார். ரியல் எஸ்டேட், இறக்குமதி-ஏற்றுமதி, `குளோபல் அமெரிக்கன்' என்ற பெயரில் ஒரு நிறுவனம் என வளர்ந்தார். 1980-களில் தயாரிப்பாளர் சங்கம், ஃபிலிம் சேம்பர் உள்ளிட்ட சினிமா சங்கங்களில் முக்கியப் பொறுப்புகளில் இருந்தார். 

சில தினங்களுக்கு முன் பத்திரிகையாளர்களைச் சந்தித்த போத்ரா அடுத்த நாளே திடீரெனக் காலமானார். `நேற்று நன்றாகப் பேசிக்கொண்டிருந்தவர் இப்படி திடீரென இறந்துவிட்டாரே’ என்று இவரது மரணம் சினிமாத்துறையினரால் பரபரப்பாகப் பேசப்பட்டது. 
இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் அவரின் சென்னை தி.நகர் வீட்டில் கிடத்தப்பட்டிருந்தது. ஆனால், வாசலில் கிடந்த சில ஜோடி செருப்புகளில் கோடம்பாக்கத்தில் தேய்ந்த செருப்புகள் ஏதுமில்லை. கால் நூற்றாண்டுக்கும் மேலாக சினிமா தயாரிப்புக்கு ஃபைனான்ஸ் தந்து பல படங்களுக்கு உறுதுணையாக இருந்தவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சினிமா பிரபலங்கள் யாரும் வரவில்லை. கொடுத்த கடனை வசூலிக்க அவர் கையாலும் முறைகள்தான் இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. அதற்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம். 

சினிமா ஃபைனான்ஸியர் போத்ரா குறித்து சில சினிமா புள்ளிகளிடம் பேசினோம். மூத்த தயாரிப்பாளர் ஒருவர் கூறுகையில், ``போத்ரா கறாரான பேர்வழி. அதிக வட்டியை எதிர்பார்ப்பார். யாருக்குக் கடன் தருகிறோம் என்பதைவிட யாருடன் இருப்பவர்களுக்குக் கடன் கொடுக்கலாம் என யோசித்துக் கொடுப்பவர். அப்படித்தான் `மொட்ட சிவா கெட்ட சிவா' படத்துடன் ஆர்.பி.சௌத்ரி சம்பந்தப்பட்டுள்ளார் என்பதாலேயே அந்தப் படத்துக்கு ஃபைனான்ஸ் செய்தார். போத்ரா காசு வாங்குவதில் கறாராகச் செயல்படுவார். கோர்ட் கேஸ் என்று அலையவிடுவார். இதனாலேயே அவருடன் டீசன்ட்டான புரொடியூசர்ஸ் பிஸினஸ் செய்யமாட்டார்கள்" என்கிறார்.

போத்ராவின் சினிமா நண்பர் ஒருவர் கூறுகையில், ``போத்ரா கறார் பேர்வழிதான். ‘காசு கொடுத்துவிட்டு திரும்பக் கேட்டால் நம்மைக் கெட்டவன் என்பார்கள். மனக்கசப்பு வரும். இதெல்லாம் சினிமாவில் சகஜம்' என்று அவரே என்னிடம் சொல்லியிருக்கிறார். தவிர, அவர் வட்டிக்காகத்தான் கடன் தருகிறார். அதைத் தராமல் வருடக் கணக்கில் இழுத்தடித்தால் அவர் கோர்ட்டுக்குச் செல்வார். 

போத்ராவுக்கு எந்த ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் பக்கத்தில் உள்ள ஆளுக்குக் காபி வாங்கித் தருவதில்கூட கணக்கு பார்ப்பார். அவ்வளவு சிக்கனமான ஆள். தன்னோட பணம் போகுதுனா அவ்வளவு கணக்கு பார்ப்பார். கஸ்தூரிராஜா, பாண்டியராஜன், நடிகை ரோஜா, ஜே.சதிஷ்குமார் என இவரிடம் கடன் வாங்கியவர்களுக்கு எதிராக நீதிமன்றம் போனார். அதிக வட்டி கேட்கிறார் என்ற அவர்களின் புகாரால் இவரை நீதி மன்றங்களும் கண்டித்துள்ளன.

கந்து வட்டி வழக்கில் சிறைக்குப்போகும்போது அவரை போலீஸ் சூடு வைத்து சித்ரவதை செய்ததாகவும் என்னிடம் சொல்லியிருக்கிறார். இங்கே இருக்கும் பிரச்னைகள் இரண்டு தரப்புக்குமானது. சினிமாவுக்குப் பின் நின்று பணம் கொடுக்கும் யாரையும் மக்களுக்குத் தெரியப்போவதுமில்லை. அவர்கள் குரல் கேட்கப்போவதுமில்லை. தனக்கு நேர்ந்த விஷயங்களை தன் சுயசரிதையில் தெளிவாக எழுதியுள்ளார்" என்கிறார். 

``கஸ்தூரி ராஜாவுக்குக் கொடுத்த பணத்துக்கு ரஜினி எப்படிப் பொறுப்பாவார்? ஆனால், இவர் ரஜினி மீது வழக்கு போட்டார். இந்த மாதிரி அவர் போட்ட வழக்குகள் நிறைய உள்ளன. இதையெல்லாம் மனதில் வைத்துதான் தமிழ்நாடு சினிமா ஃபைனான்ஸியர்கள் சங்கத்தில் அவரை உறுப்பினராகச் சேர்க்கவில்லை" என்கிறார் அந்தச் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன்.   

போத்ராவின் மகன் ககன் போத்ரா கூறுகையில், ``அப்பாவை சினிமாவில் உள்ள பலர் ஏமாற்ற முயற்சி செய்தார்கள். அதனாலதான் அவர் கோர்ட் கேஸ் என்று சென்றார். சினிமாக்காரர்களிடம் கொடுத்த பணத்தை வாங்குவது ரொம்பக் கடினம். அப்படிப் பணம் கொடுத்துவிட்டு வாங்கும்போது நிறைய மிரட்டல்களைச் சந்தித்து இருக்கிறார். சினிமாவில் அப்பாவிடம் பணம் வாங்காதவர்கள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு பலர் வாங்கியிருக்கிறார்கள்.

அதில் சிலர் சரியாகத் திருப்பிக் கொடுத்தனர். மற்றவர்கள் கோர்ட்டில் கேஸ் போட்டால்தான் கொடுப்பார்கள். அப்படி கஸ்தூரி ராஜா சார் 2012-ல் வாங்குன பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. அப்பாவிடம் அவர் தந்த பாண்ட் பத்திரத்தில், ‘நான் கொடுக்கலைனா ரஜினி கொடுப்பார்’ என்று எழுதியிருந்தார். அதனால் ஐந்து வழக்குகளைப் போட்டோம். அதில் மூன்று தள்ளுபடி செய்யப்பட்டது. அவற்றை மேல் முறையீடு செய்யலாம் என இருக்கிறோம். 

அப்பாவின் இறுதி அஞ்சலிக்குக்கூட எந்தவொரு சினிமாக்காரர்களும் வரவில்லை; அது பரவாயில்லை. இன்னும் முடிக்க வேண்டிய வழக்குகளும் வரவேண்டிய கணக்குகளும் நிறையவே இருக்கின்றன" என முடித்தார். 

எந்தவொரு சினிமாவும் முழுமையான படைப்பு கிடையாது என்பார்கள், மனிதர்களும் அப்படித்தானே!