Published:Updated:

''கைதட்டல்களுக்காக இனி நடிகைகளை யாரும் தரக்குறைவாகப் பேச முடியாது'' நடிகை ரோகிணி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
''கைதட்டல்களுக்காக இனி நடிகைகளை யாரும் தரக்குறைவாகப் பேச முடியாது'' நடிகை ரோகிணி
''கைதட்டல்களுக்காக இனி நடிகைகளை யாரும் தரக்குறைவாகப் பேச முடியாது'' நடிகை ரோகிணி

``சினிமாவில் இருக்கிற பெண்களை, இனிமேல் அவர்கள் வேலை பார்க்கிற இடங்களில், யாரும் அவதூறாகப் பேசவும் முடியாது; தவறாக நடந்துகொள்ளவும் முடியாது.''

ஹாலிவுட்டில் ஆரம்பித்து தென்னிந்திய திரைத்துறை வரைக்கும் கடந்த சில மாதங்களாக `மீ டூ' என்கிற பெண்களின் குரல்கள் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கின்றன. பட வாய்ப்புத் தருகிறோம் என்று பாலியல் சீண்டல்களுக்கு உள்ளான தங்களுடைய அனுபவங்களை பல நடிகைகள் சமூகவலைதளங்களில் வெளிப்படையாக உலகுக்குக் காட்டிக் கொடுத்தார்கள். அதனுடைய தொடர்ச்சியாகத்தான், நடிகை நயன்தாராவை பொதுவெளியில் மரியாதைகுறைவாகப் பேசிய நடிகர் ராதாரவியை மன்னிப்புக் கேட்க வைத்த சம்பவமும் நடந்தது. இதைத் தொடர்ந்து, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் பொன்வண்ணன், `திரைத்துறையிலும் உள் புகார் கமிட்டி அமைக்க வேண்டுமென்று முடிவெடுத்து லட்சுமி, ஶ்ரீப்ரியா, சுஹாசினி, ரோகிணி போன்றவர்களிடம் பேசியிருக்கிறோம். உள் புகார் கமிட்டி விதிப்படி திட்டமிடப்படவில்லையே தவிர, அது செயல்பாட்டில்தான் இருக்கிறது. பாதிக்கப்பட்ட சினிமாத்துறைப் பெண்கள் தாராளமாக எங்களை அணுகலாம்' என்று விகடன் டாட் காமுக்கு அளித்த பேட்டியொன்றில் கூறியிருந்தார். இந்த நிலையில், சினிமாவில் பாலியல் தொல்லைகள் நிகழாமல் தடுக்க 9 பேர் கொண்ட உள் புகார் கமிட்டி அமைக்கப்பட உள்ளதாகச் செய்திகள் வெளிவந்ததையொட்டி, நடிகை ரோகிணியிடம் பேசினேன். 

``ஆமாம், முறைப்படி உள் புகார் கமிட்டி ஆரம்பிச்சுட்டோம். இப்போதைக்கு சினிமா இண்டஸ்ட்ரியில் இருக்கிற 6 பேர், ஒரு வழக்கறிஞர், ஒரு மனநல நிபுணர் இதுல மெம்பரா இருக்கோம். சினிமாத்துறை சார்பா நான், சுஹாசினி, குட்டிபத்மினி, குஷ்பு, லலிதகுமாரி ஆகியோர் இந்த கமிட்டியில் மெம்பரா இருக்கோம். 

சினிமாத்துறையில் வேலை பார்க்கும் பெண்களின் பாதுகாப்பு, அத்துறையில் இருக்கும் எல்லோருடைய பொறுப்பு. இதை எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டும். இங்கு புரொடக்‌ஷனில், அதாவது பாத்திரம் கழுவுகிற பெண்களில் ஆரம்பிச்சு ஹேர் டிரஸ்ஸர், அசிஸ்டென்ட்ஸ், துணை நடிகைகள், நடிகைகள் வரைக்கும்... யாருக்கு பாலியல் தொல்லை நிகழ்ந்தாலும், எங்களிடம் முறைப்படி புகார் கொடுக்கலாம். பாதிக்கப்பட்ட பெண்கள் எங்களிடம் புகார் கொடுக்கிறபட்சத்தில், கமிட்டியில இருக்கிற மூணு பேர், `அந்தப் புகார் உண்மைதானா' என்று கண்டறிந்து அதன் மேல் நடவடிக்கை எடுப்போம். அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரை எந்தக் காரணத்தைக் கொண்டும் வெளியே சொல்ல மாட்டோம். 

சினிமாவில் இருக்கிற பெண்களை, இனிமேல் அவர்கள் வேலை பார்க்கிற இடங்களில், யாரும் அவதூறாகப் பேசவும் முடியாது; அவர்களிடம் தவறாக நடந்துகொள்ளவும் முடியாது. மீறி யாராவது அப்படி நடந்துகொண்டால், அதற்கான விளக்கத்தையும் வருத்தத்தையும் அவர்கள் தெரிவித்தே ஆக வேண்டும். இனிமேல் யாரும், கைதட்டலுக்காக சினிமாவில் வேலை பார்க்கும் பெண்களை, மேடைகளில் கீழ்த்தரமாகப் பேச முடியாது'' என்று அழுத்தந்திருத்தமாகப் பேசியவர் தொடர்ந்தார்.

``உள் புகார் கமிட்டியில் பொறுப்பில் இருப்பவர்கள் வெளிநாடுகளுக்கு ஷூட்டிங் சென்றுவிட்டால் என்ன செய்வது என்று யோசிக்க வேண்டாம். அந்த நேரத்தில் யார் இங்கு இருக்கிறோமோ, அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்களின் புகார் மீது உரிய நடவடிக்கை எடுப்போம்'' என்று தன் துறை சார்ந்த பெண்களுக்கு தைரியம் கொடுத்தவர், ``சமீபத்தில் தயாரிப்பாளர் கே.ராஜன், சின்மயிக்கு ஒரு மிரட்டல் விடுத்திருந்தார். அது தொடர்பாகவும் இன்னும் சில நாள்களில் எங்கள் கமிட்டி சார்பாக கண்டன அறிக்கை வெளியிடப்படும்'' என்றார். 

சினிமாவில் வேலை பார்க்கிற பெண்களின் மரியாதையை இந்த உள் புகார் கமிட்டி இனி சட்டப்படி காப்பாற்றும் என்று நம்புவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு