Published:Updated:

`என் இயல்பே தவறுகளைத் தட்டிக் கேட்கிறதுதான்!' - உள்புகார் கமிட்டிக் குழு உறுப்பினர் லலிதா குமாரி

ஆ.சாந்தி கணேஷ்
`என் இயல்பே தவறுகளைத் தட்டிக் கேட்கிறதுதான்!' - உள்புகார் கமிட்டிக் குழு உறுப்பினர் லலிதா குமாரி
`என் இயல்பே தவறுகளைத் தட்டிக் கேட்கிறதுதான்!' - உள்புகார் கமிட்டிக் குழு உறுப்பினர் லலிதா குமாரி

சினிமாத்துறையில் பணியாற்றும் பெண்களைப் பாதுகாக்கும் உள் புகார் கமிட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் நடிகைகள் குட்டி பத்மினி, சுஹாசினி,  ரோகிணி, குஷ்பு, லலிதா குமாரி ஆகியோர் மெம்பர்களாக இருக்கிறார்கள். இதுபற்றி நடிகையும் தயாரிப்பாளருமான லலிதா குமாரியிடம் பேசினோம். 

``இந்த கமிட்டியால, பாலியல் தொல்லைகள் நிச்சயம் குறையும்கிறதுதான் என் நம்பிக்கை. எங்கள் துறையில் இருக்கிற பெண்கள் தங்கள் பிரச்னைகளை சோஷியல் மீடியாக்களில் மட்டுமே அதிகமா சொல்றாங்க. இதையே எங்கள் கமிட்டியில புகாராகச் சொன்னீங்கன்னா, தவறு செஞ்சவங்களை நேரிடையாக ரைட் ராயலாக எங்களால விசாரிக்க முடியும். அதுக்காக எங்ககிட்டே புகார் தெரிவிக்காதவங்களோட பிரச்னையை நாங்க கண்டுக்க மாட்டோம்னு நினைச்சுக்காதீங்க'' என்றவர், தனக்கு இந்தப் பொறுப்பை தந்ததற்காக நடிகர் சங்கத்துக்கும், நடிகர் கார்த்தி மற்றும் நடிகை ரோகிணிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். 

தொடர்ந்து பேசுகையில், ``சில நாள்களுக்கு முன்னாடி ஆர்.ஏ.புரம் ஏரியாவில் ஒரு பொண்ணை ஒரு பையன் அடிச்சிக்கிட்டிருந்தான். எல்லோரும் அதைப் பார்த்தும் பார்க்காத மாதிரியே போய்க்கிட்டிருந்தாங்க. நான் காரை ஓரம்கட்டி நிறுத்திட்டு, `ஏன்டா அடிக்கிறே'ன்னு அதட்டி, போலீஸில் கம்ப்ளெயின்ட் கொடுத்துடுவேன்னு அந்தப் பையனை விரட்டி விட்டேன். அந்தப் பையன் போனதுக்கு அப்புறம்தான் அந்தப் பொண்ணை அனுப்பி வெச்சேன். அந்தப் பொண்ணு `எங்க பர்சனல் விஷயம்'னு சொல்லுச்சு. `பர்சனல் எல்லாத்தையும் வீட்டில் வெச்சுக்கோ. ரோட்டில் ஒருத்தன் தன் பொண்டாட்டியை அடிச்சான்னா, அதைப் பார்த்து நாலு ஆம்பளைக்கு தன் பொண்டாட்டியை அடிக்கிறதுக்கு தைரியம் வரும். அதுக்கு பொண்ணுங்க நாம இடம் கொடுக்கக் கூடாது'ன்னு சொன்னேன். இதை எதுக்கு சொல்றேன்னா,  இந்தக் கமிட்டியில் ஒரு மெம்பரா இருக்கிறதால மட்டுமல்ல, ஒரு பெண்ணாகவே எனக்கு தவறுகளைத் தட்டிக் கேட்கிற இயல்பு உண்டு'' என அழுத்தமாகப் பேசுகிறார் லலித குமாரி.