Published:Updated:

"ஜனநாதனின் 'லாபம்', ஐஸ்வர்யாவுக்காக கெஸ்ட் ரோல், பிறமொழிப் படங்கள்!" - 'பேக் டு பேக்' விஜய் சேதுபதி

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 'லாபம்' படத்தின் படப்பிடிப்பு, விஜய் சேதுபதியின் சொந்த ஊரான இராஜபாளையத்தில் தொடங்குகிறது.

"ஜனநாதனின் 'லாபம்', ஐஸ்வர்யாவுக்காக கெஸ்ட் ரோல், பிறமொழிப் படங்கள்!" - 'பேக் டு பேக்' விஜய் சேதுபதி
"ஜனநாதனின் 'லாபம்', ஐஸ்வர்யாவுக்காக கெஸ்ட் ரோல், பிறமொழிப் படங்கள்!" - 'பேக் டு பேக்' விஜய் சேதுபதி

பொதுவாக ஒரு நடிகன் என்றால் நல்லவன், கெட்டவன் எனக் கதாபாத்திரத்தைப் பிரித்துப் பார்த்து நடிப்பது தவறானது. எந்த வேடம் கொடுத்தாலும் நடிப்பில் ஜொலிக்க வேண்டும் என்பதுதான் நடிப்புக்கான இலக்கணம். முதல் முதலாக ஹீரோவாக அறிமுகமான 'பராசக்தி' படத்தில் அப்பாவித்தனமான கதாபாத்திரம், அடுத்து வெளிவந்த 'திரும்பிப்பார்' படத்தில் நாட்டைக் காட்டிக்கொடுக்கும் நாசக்கார கேரக்டர். இரண்டுவிதமான நடிப்பிலும் வெளுத்துக்கட்டினார், சிவாஜி என்ற அபூர்வ கலைஞன். இப்போதெல்லாம் இரண்டு படங்கள் தொடர்ந்து வெற்றிபெற்றாலே 'எனக்கு ஓப்பனிங்ல சோலோ சாங் வைங்க' எனப் புதுமுக நடிகர்கள் சிலர் செய்யும் அலப்பறைகள் வேற லெவல். இந்த ஃபார்மேட்டில் அடங்காமல் விதிவிலக்காக இருக்கிறார், விஜய் சேதுபதி. 

தன் சினிமா கரியரில் கதாநாயகனாக நடித்த படங்கள் வெற்றி பெற்றிருந்தாலும், தொடர்ந்து சோலோ ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல், 'விக்ரம் வேதா', 'பேட்ட' ஆகிய படங்களில் வில்லனாக, 'சூப்பர் டீலக்ஸ்', 'செக்கச் சிவந்த வானம்' படங்களில் பல நடிகர்களில் தானும் ஒருவனாக நடிக்கிறார், விஜய் சேதுபதி. சசிகுமார் ஹீரோவாக நடித்த 'சுந்தர பாண்டியன்' படத்தில் சிறு கேரக்டரில் நடித்தவர்தான், இப்போது அசுரபலம் கொண்ட ஹீரோவாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். 

தான் நடித்த முதல் படம் ரிலீஸாகும் முன்பே, ரசிகர் மன்றங்கள் அமைத்து போஸ்டர்கள் ஒட்டிக்கொள்ளும் ஹீரோக்களுக்கு மத்தியில், விஜய் சேதுபதியின் நடிப்பு தாகம் வித்தியாசமாகத்தான் இருக்கிறது. தெலுங்கு திரையுலகில் சிரஞ்சீவியுடன் ஒரு படம், மலையாளத்தில் ஜெயராம் நடிக்கும் ஒரு படம், திலீப் நடிக்கும் ஒரு படம் என ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். யதார்த்த சினிமா கேரளாவில் இருப்பதாலோ என்னவோ, மலையாளப் படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டிவருகிறார், விஜய் சேதுபதி. 'சூப்பர் டீலக்ஸ்' படத்துக்குப் பிறகு, 'சிந்துபாத்' ரிலீஸாகவிருக்கிறது. தவிர, தமிழில் மணிகண்டன் இயக்கத்தில் ஒரு படம், சீனு ராமசாமியின் 'மாமனிதன்' ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். 

நயன்தாரா நடித்த 'அறம்' படத்தைப்போல கோட்டப்பாடி ராஜேஷ் தயாரிக்கவிருக்கும் மற்றொரு ஹீரோயின் கதையில் ஹீரோயினாக நடிக்கிறார், ஐஸ்வர்யா ராஜேஷ். இந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க இயக்குநர் பல மாதம் அலைந்து திரிந்து விஜய் சேதுபதியிடம் கதையைச் சொல்லி கால்ஷீட் கேட்டிருக்கிறார். அப்போது, 'ஸாரி... ரெண்டு வருடத்துல ஒருநாள்கூட கால்ஷீட் இல்லை. எல்லாப் படத்தின் டேட்ஸும் அவ்ளோ நெருக்கடியா இருக்கு' என மறுத்தியிருக்கிறார். 'எனக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுக்கிற மாதிரி ஒரு கேரக்டர் கிடைச்சிருக்கு; பத்து நாள் கால்ஷீட் கொடுத்து, கெஸ்ட் ரோல்ல நடிச்சுக் கொடுத்தா நல்லா இருக்கும்' என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவரிடம் பேச, சரியென சம்மதித்திருக்கிறார், விஜய் சேதுபதி. ஏற்கெனவே ஒப்புக்கொண்ட தயாரிப்பு நிறுவனங்களிடமும், இயக்குநர்களிடமும் பேசிய விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷின் படத்திற்காக அக்டோபர் மாதத்தில் எட்டு நாள்கள் கால்ஷீட் கொடுத்து உதவியிருக்கிறார். 

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 'லாபம்' படத்தின் படப்பிடிப்பு, விஜய் சேதுபதியின் சொந்த ஊரான இராஜபாளையத்தில் தொடங்குகிறது. இப்படத்தில் முதல் முறையாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார், ஸ்ருதி ஹாசன். வில்லனாகப் பிரபல தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு நடிக்கிறார். இராஜபாளையத்தில் மூன்று நாள்கள், தென்காசி, குற்றாலம் மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய பகுதிகளில் பதினேழு நாள்கள் என 20 நாள்கள் நடக்கவிருக்கும் இந்த முதல்கட்டப் படப்பிடிப்பில் விஜய் சேதுபதி - ஸ்ருதி ஹாசன் ஆகியோர் பங்குபெறும் காட்சிகளைப் படமாக்கவிருக்கிறார், இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்.