Published:Updated:

`` `ஹாஸ்டலில் சேர்க்கவா குழந்தையைப் பெற்றுக்கொள்கிறோம்'னு கேட்பார்!'' - `அம்மா' ரோஜா

`` `ஹாஸ்டலில் சேர்க்கவா குழந்தையைப் பெற்றுக்கொள்கிறோம்'னு கேட்பார்!'' - `அம்மா' ரோஜா
`` `ஹாஸ்டலில் சேர்க்கவா குழந்தையைப் பெற்றுக்கொள்கிறோம்'னு கேட்பார்!'' - `அம்மா' ரோஜா

``அரசியலுக்கு வந்த பிறகே, தைரியமாக வாழக் கற்றுக்கொண்டேன். அதனால், எதற்குமே நான் பெரிதாக கலங்க மாட்டேன். ஆனால், `மிஸ் யூ மம்மி' என்று என் பிள்ளைகள் சொன்னால் மட்டும் உடனே கண்கலங்கிவிடுவேன்."

டிகை ரோஜா, தற்போது முழு நேர அரசியலில் பிஸியாக இருக்கிறார். ஆனாலும், குழந்தை வளர்ப்புக்கான நேரத்துக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்கிறார். குழந்தைகள், குடும்பம், சினிமா நண்பர்கள் உள்ளிட்ட பர்சனல் விஷயங்களைப் பகிர்கிறார், ரோஜா.

``உங்கள் குழந்தைகளுடன் நீங்கள் செலவிடும் நேரம் பற்றி..." 

```குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதே மகிழ்ச்சியாக வளர்க்கத்தான். பராமரிப்பாளர் வைத்து வளர்க்கவோ அல்லது ஹாஸ்டலில் சேர்க்கவோ கிடையாது. அப்படிச் செய்வதால், நாம் எவ்வளவு சம்பாதித்தும், புகழ் பெற்றும் பயனில்லை' என்று என் கணவர் செல்வமணி உறுதியாகக் கூறுவார். அதனால் இருவரில் ஒருவர் எப்போதும் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவோம். மகள் அனுஷூமாலிகா, மகன் கிருஷ்ண கெளசிக் மீது நானும் என் கணவரும் அளவுகடந்த பாசம் வைத்திருக்கிறோம். நானோ அல்லது என் கணவரோ எங்கள் வேலை விஷயமாக வெளியூரில் இருந்தாலும், தவறாமல் எங்கள் குழந்தைகளிடம் அவர்களின் படிப்பு, தேவைகள் உள்ளிட்ட விஷயங்களைப் பேசிவிடுவோம்.

குழந்தைகளின் நலனில் நாங்கள் கவனம் செலுத்துவதைப் பாதிக்காதவாறு எங்கள் பணிச்சூழலைப் பார்த்துக்கொள்கிறோம். அவர்களும் தங்கள் மகிழ்ச்சி, கவலை உள்ளிட்ட எல்லா விஷயங்களையும் உடனே எங்களிடம் சொல்லிவிடுவார்கள். என் மாமியார் எப்போதும் குழந்தைகளுடன் இருப்பார். அதனால் குழந்தைகளுக்குத் தனிமைச்சூழல் எப்போதுமே ஏற்படாது. அரசியலுக்கு வந்த பிறகே, தைரியமாக வாழக் கற்றுக்கொண்டேன். எதற்குமே நான் பெரிதாக கலங்க மாட்டேன். ஆனால், `மிஸ் யூ மம்மி' என்று என் பிள்ளைகள் சொன்னால் மட்டும் உடனே கண்கலங்கிவிடுவேன். ஓய்வு நேரத்தில் குழந்தைகளுடன் அவுட்டிங் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறோம்."

``உங்கள் அரசியல் பணியில் கணவரின் ஆதரவு எப்படி இருக்கிறது?"

``என் அரசியல் பயணத்துக்கு அவர்தான் காரணம். அவர் என் வாழ்க்கையில் இணைந்த பிறகுதான், குடும்ப வாழ்க்கை முழுமையடைந்ததுபோன்ற உணர்வு ஏற்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இயக்குநர் சங்க நிகழ்ச்சியில், `வாழ்க்கையில் வெற்றி பெறணும்னா, பொண்டாட்டிகிட்ட தோற்றுப்போ' என்று எங்கள் இல்லற வாழ்வில் நடக்கும் நிகழ்வை செல்வமணி வெளிப்படையாகப் பேசினார். அதற்கு ரஜினிகாந்த் சார் கைத்தட்டி ஆதரவு தெரிவித்தார். என் கணவரின் விட்டுக்கொடுத்துப்போகும் குணத்தால்தான், எங்கள் இல்லற வாழ்க்கை இன்றுவரை சிறப்பாகச் செல்கிறது. என் அரசியல் பயணம் குறித்து, தொடர்ந்து கேட்டறிவார். எம்.எல்.ஏ-வாக என் தொகுதி மக்களுக்கு நான் செய்யும் முக்கியமான நலத்திட்ட நிகழ்வுகளில் என் கணவரும் கலந்துகொள்வார்."

``உங்கள் சினிமா நண்பர்கள் பற்றி..."

``ராதிகா, ரம்யா கிருஷ்ணன், மீனா,  சீதா ஆகியோர் என் சினிமா தோழிகள். முக்கிய சினிமா நிகழ்ச்சிகளில் அவர்களை நேரில் சந்தித்தோ அல்லது அவ்வப்போது போனிலோ பேசுவேன். என் மனதிலுள்ள விஷயங்களை அவர்களிடம் பகிர்ந்துகொள்வேன். என் ஆரம்பக்கால சினிமா பயணத்தில், பிரபுதேவாதான் எனக்கு நடனம் சொல்லிக்கொடுத்தார். அதனால் நடனமாடத் தெரியாத என்னையும் சிறந்த டான்ஸராக மாற்றியதில் அவரின் பங்கு முக்கியமானது. அப்போதிலிருந்து எங்கள் நட்பு தொடர்கிறது. என் சிறந்த சினிமா நண்பர்களில் பிரபுதேவாவும் ஒருவர். அவர், என் குடும்ப உறுப்பினர்கள் பற்றியும் அடிக்கடி நலம் விசாரிப்பார். இப்போதுகூட தேர்தலில் வெற்றிபெற எனக்கு வாழ்த்துக் கூறினார். சமீபத்தில் அவர் பத்மஸ்ரீ விருது பெறப்போகும் செய்தியைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தேன். உடனடியாக பிரபுதேவாவுக்கு வாழ்த்துக்கூறினேன்."

``மீண்டும் நடிப்பீர்களா?"

``அரசியலில்தான் அதிக ஆர்வம் செலுத்துகிறேன். முன்பு, ஓய்வுநேரங்களில் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகக் கலந்துகொண்டேன். அதற்குக்கூட தற்போதைய தேர்தல் முடிவுக்குப் பிறகு நேரம் இருக்குமா எனத் தெரியவில்லை."

அடுத்த கட்டுரைக்கு