Published:Updated:

``இயக்குநரான நான் மீண்டும் ஏன் தெருக்கூத்து பண்றேன்னா...'' - சங்ககிரி ராச்குமார்

``இயக்குநரான நான் மீண்டும் ஏன் தெருக்கூத்து பண்றேன்னா...'' - சங்ககிரி ராச்குமார்
``இயக்குநரான நான் மீண்டும் ஏன் தெருக்கூத்து பண்றேன்னா...'' - சங்ககிரி ராச்குமார்

"`அடுத்து நீங்க எங்க தெருக்கூத்து நடத்தினாலும் எனக்கும், ராதிகாவுக்கும் ஒரு கேரக்டர் கொடுங்க. இந்த வடிவத்துல நடிக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு'னு சரத்குமார் சார் கேட்டார்."

``அப்பா, தாத்தான்னு எங்க குடும்பமே தெருக்கூத்து ஆடிக்கிட்டு இருந்தவங்கதான். அதனால இது எனக்குப் புதுசு இல்லை. சின்ன வயசுல இருந்தே `தெருக்கூத்து' சார்ந்த விஷயங்களைக் கவனிச்சுக்கிட்டு வந்தேன். அந்த ஆர்வம்தான் என்னை `வெங்காயம்' படத்துல தெருக்கூத்து கலைஞனின் வாழ்வியலை யதார்த்தமா பதிவு பண்ண காரணமா இருந்தது. நான் நினைச்சதைவிட அந்தக் காட்சிகள் எல்லோராலும் பாராட்டப்பட்டன." எனப் பேசத்தொடங்குகிறார், சங்ககிரி ராச்குமார். 

``சினிமா இயக்குநரான நீங்க, மீண்டும் தெருக்கூத்துல கவனம் செலுத்த என்ன காரணம்?"

``எந்தக் கலையும் காலத்துக்குத் தகுந்த மாதிரி தன்னை மாத்திக்கும்; மாத்திக்கணும். அப்படி மாத்திக்காம இருக்கும் கலைகள் காலப்போக்கில் அழிஞ்சுபோயிடுது. அதனால, இப்போ இருக்கிற சூழலுக்குத் தகுந்த மாதிரி நான் `தெருக்கூத்து' வடிவத்தை மாத்தியிருக்கேன். கிராமங்கள்ல தெருக்கூத்து நடக்கும்போது வீட்டுல இருந்து பாய் எல்லாம் எடுத்துக்கிட்டு வந்து விடிய விடிய பார்க்கிற வயசான ஆடியன்ஸ்தான் இப்போவரைக்கும் இருக்காங்க. இப்போ இருக்கிற தலைமுறையினர், பெரிய பட்ஜெட் சினிமாவே இரண்டரை மணி நேரத்துக்குமேல போச்சுன்னா, போர் அடிக்குதுனு சொல்றாங்க. அவங்க ரசனைக்கு ஏத்தமாதிரி அப்டேட் பண்ணியிருக்கோம். காரணம், மக்களுக்கு நம்ம கலைகளைப் பற்றி முழுமையா தெரியப்படுத்தணும். இந்தத் தலைமுறைக்கு தெருக்கூத்தைக் கொண்டு சேர்க்கணும். அந்த வரலாற்றைச் சொல்லிக் கொடுக்கணும். அதுக்கான முயற்சிதான் நான் மறுபடியும் தெருக்கூத்துக்குப் போன காரணம்."

``அப்படி என்னென்ன விஷயங்களையெல்லாம் மாத்தியிருக்கீங்க?" 

``தெருக்கூத்துன்னாலே ரொம்ப மெதுவா நடக்கும்னு இன்றைய மக்கள் நினைக்கிறாங்க. கதையின் தன்மை குறைஞ்சுடாம, கொஞ்சம் விறுவிறுப்பான பாணியில தயார் பண்ணியிருக்கோம். ஊருக்குள்ள தெருக்கூத்து பண்ணும்போது, நகைச்சுவைக்காக சில கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவாங்க. அதைத் தவிர்த்திருக்கோம். கம்ப ராமாயணம், மகாபாரதம்னு புராணங்களை மட்டுமே தெருக்கூத்தா பண்ணிக்கிட்டு இருந்ததை மாற்றி, நம் தமிழ் மன்னர்களுடைய மறந்துபோன, மறைக்கப்பட்ட வரலாறுகளைத் தெரிஞ்சுக்கிட்டு, அதைத் தெருக்கூத்தா பண்றோம். கூடவே, சமகாலப் பிரச்னைகள், அரசியல்னு இன்னைக்கு நடக்கிற விஷயங்களும் இருக்கும்."
 

`` `நந்திக் கலம்பகம்' தெருக்கூத்துல என்ன ஸ்பெஷல்?"

``கி.பி 856-ல் வாழ்ந்த இரண்டாம் நந்திவர்மனுடைய வரலாறுதான் 'நந்திக் கலம்பகம்'. அதைத் தெருக்கூத்து வடிவத்துல பண்ணப்போறோம். தமிழ் மொழிக்காக எத்தனையோ பேர் உயிரைத் தியாகம் பண்ணியிருக்காங்க. அதுல இவர்தான் முதல் ஆள். இந்தக் கதையை கம்போடியாவுல பத்து மாசத்துக்கு முன்னாடி பண்ணோம். ஏன்னா, கம்போடியாதான் நந்திவர்மனின் பூர்வீகம். காஞ்சியை ஆட்சி செய்த பல்லவ மன்னர்கள், கடல் கடந்துபோய் மற்ற இடங்கள்ல சிற்றரசர்களா இருந்தாங்க. இந்த நந்திவர்மனுடைய பெரியப்பா தலைமுறையில வர்ற பசங்களுக்கே முடிசூடி மன்னனாக்கிட்டு வந்தாங்க. ஒருகட்டத்துல இரண்டாம் பரமேஸ்வர வர்மன் அப்படிங்கிறவர் போர்ல இறந்துடுறார். அவருக்கு அடுத்து அவர் பையனை முடிசூட வைக்கலாம்னு பார்த்தா, ரொம்பச் சின்னப் பையனா இருக்கான். சரி, நம்ம வம்சாவளியில வேற யாராவது மிச்சம் இருக்காங்களானு தேடிப்பார்த்து, கம்போடியாவுல இருக்கிற முதலாம் நந்திவர்மனை மன்னர் ஆக்குறாங்க. அவருடைய பேரன்தான், இரண்டாம் நந்திவர்மன். இவருடைய வரலாறு எங்க தெருக்கூத்து கான்செப்ட்." 

``இப்போ மக்கள் தெருக்கூத்து பத்தி என்ன நினைக்கிறாங்க?"

``இந்தத் தலைமுறையினருக்குத் தமிழ் மரபுமேல கவனம் திரும்பியிருக்கு. அந்தச் சமயத்துல இதைப் பண்ணும்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. கிராமங்கள்ல தெருக்கூத்து பற்றி எல்லோருக்கும் தெரியும். ஆனா, சென்னையில குடிபெயர்ந்தவங்களுக்கு இதைப் பார்த்திருக்க வாய்ப்பு கிடைச்சிருக்காது. அதனால, ஆர்வமா விசாரிக்கிறாங்க. சிட்டி மக்களுக்கு இது அறிமுகமாகிடுச்சுன்னா, அடுத்தடுத்த இடங்களுக்கு அவங்க வர ஆரம்பிச்சுடுவாங்க. அதுக்கான வேலைகள் போயிட்டு இருக்கு."

``கம்போடியாவுல தெருக்கூத்து பண்ணும்போது, ரெஸ்பான்ஸ் எப்படி இருந்தது?"  

``கம்போடியாவுல தெருக்கூத்து பண்ணும்போது, பல நாடுகள்ல இருந்து தமிழர்கள் வந்தாங்க. அதுல பலர் முதல் முறையா தெருக்கூத்தைப் பார்த்தாங்க. அதனால, ரொம்பவே சிலாகிச்சுப் பேசுனாங்க. அங்கே சரத்குமார் சார், தங்கர்பச்சான் சார்னு சினிமாக்காரர்களும் வந்திருந்தாங்க. `அடுத்து நீங்க எங்க தெருக்கூத்து நடத்தினாலும் எனக்கும், ராதிகாவுக்கும் ஒரு கேரக்டர் கொடுங்க. இந்த வடிவத்துல நடிக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு'னு சரத்குமார் சார் கேட்டார்."

``தெருக்கூத்து பண்றதுல இருக்கிற சவால்கள் என்னென்ன?"

``படம் எடுக்கும்போது, ஒரு சீன் சரியா வரலைன்னா ரீடேக் போகலாம். நமக்கு ஏத்தமாதிரி முன்னப்பின்ன மாத்திக்கலாம். தெருக்கூத்துல அதுக்கான வாய்ப்பு இல்லை. மேக்கப்மேன், காஸ்ட்யூம் டிசைனர், சிங்கர்னு ஒவ்வொண்ணுக்கும் தனி ஆள் இருப்பாங்க. ஆனா, கூத்துல நாமதான் மேக்கப்மேன், காஸ்ட்யூம் டிசைனர், பாடகர், நடிகர் எல்லாம். தெருக்கூத்து நடிகரை சினிமாவுல நடிக்கவெச்சா பிரமாதமா நடிப்பார். ஆனா, சினிமா நடிகரைத் தெருக்கூத்துல நடிக்கச் சொன்னா, கஷ்டம்தான். மரபுக்கலை சார்ந்து மக்கள் பார்வை திரும்பியிருக்கு. மறைக்கப்பட்ட கலைகளை நோக்கி மக்களுடைய தேடல் இருக்கு. அதனாலதான் கூட்டம் வருது. அதுக்குத் தகுந்த மாதிரி நம்ம கலையை அப்டேட் பண்ணிக்கணும். அதுவே பெரிய சவால்தான்."  

`` `ஒன்' படம் எந்தளவுல இருக்கு?"

``படத்தின் எல்லா வேலைகளும் முடிஞ்சு, தயார் நிலையில் இருக்கு. சேரன் சார் வெளியிடுறதா சொல்லிருக்கார். ஓரிரு மாதத்தில் படம் வெளியாகும்."

அடுத்த கட்டுரைக்கு