Published:Updated:

`நான் ஓட்டு போட்டேன்; தற்போது ஓட்டுபோடல என்கிறார்கள்!'-ஏப்ரல்18-ல் நடந்ததை விளக்கும் ஶ்ரீகாந்த்

சனா
`நான் ஓட்டு போட்டேன்; தற்போது ஓட்டுபோடல என்கிறார்கள்!'-ஏப்ரல்18-ல் நடந்ததை விளக்கும் ஶ்ரீகாந்த்
`நான் ஓட்டு போட்டேன்; தற்போது ஓட்டுபோடல என்கிறார்கள்!'-ஏப்ரல்18-ல் நடந்ததை விளக்கும் ஶ்ரீகாந்த்

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமலே நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் ஶ்ரீகாந்த் வாக்களித்த சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வாக்குப் பதிவு மையத்தில் நடந்த அனுபவம் குறித்து நடிகர் ஸ்ரீகாந்த்திடம் கேட்டோம்! 

``வாக்காளர் அடையாள அட்டை எனக்குக் கொடுத்த காலத்திலிருந்து சென்னை சாலிகிராமத்தில் இருக்கக்கூடிய காவேரி பள்ளிக் கூடத்தில்தான் என் வாக்கைச் செலுத்திட்டு வர்றேன். நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கையும் செலுத்த காலை 7 மணிக்கெல்லாம் காவேரி பள்ளிக்கூடத்துக்குப் போயிட்டேன். வரிசையில் ஒரு மணிநேரமா நின்னுட்டு உள்ளே போனேன். தேர்தல் பணியில் இருந்தவங்க, `உங்க பேர் வாக்காளர் லிஸ்ட்டில் இல்லை'னு சொன்னாங்க. `இது எப்போ உங்களுக்குத் தெரியும்னு கேட்டேன். இப்போதான் தெரியும்னு சொன்னாங்க. இது எனக்கு வருத்தமாக இருந்தது. 

அப்போ அங்கே இருந்த தேர்தல் அதிகாரிகளிடம் இதைப் பற்றிக் கேட்டேன், `உங்க பேர் கண்டிப்பா வாக்காளர் லிஸ்ட்டில் இருக்கும். ஆனா, மாறுதலாக வேறு எங்கேயாவது போயிருக்கும்'னு சொன்னாங்க. அதை எப்படி கண்டுபிடிக்கிறதுனு கேட்டேன். யாருக்கும் தெரியல. அப்போ அங்கே இருந்த வாக்குச்சாவடி அதிகாரிகள், `ஶ்ரீகாந்த் இங்கே ஓட்டு போடுறதுல எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை. அவர் வழக்கமா இங்கேதான் ஓட்டு போடுவார். அதனால அவருடைய வாக்கை செலுத்தட்டும்'னு சொன்னாங்க. என்னோட அடையாள அட்டைகள் எல்லாம் என்கிட்ட இருந்தது. எல்லாத்தையும் செக் பண்ணிட்டு கையொப்பம் வாங்கிட்டு, என்னை சுயமா ஓட்டு போட அனுமதிச்சாங்க. அதனால, ஓட்டு போட்டுட்டேன். 

ஆனா, இதற்குத் தீர்வு இருக்கு. அது எனக்கு தாமதமாகதான் தெரியவந்தது. ஆன்லைனில் `வோட்டர்ஸ் ஆப்' இருக்கு. அந்த ஆப்-யை டவுன்லோட் பண்ணிட்டு நம்முடைய நம்பரை போட்டா, `யாருக்கு எங்கே ஓட்டு இருக்கு'னு ஆப்பில் தெரிந்திருக்கும். ஆனா, இதுபற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இல்லை. தேர்தல் ஆணையமும் இதைப் பற்றி மக்களிடம் விளம்பரப்படுத்தவில்லை. நான் இந்த ஆப்பில் செக் பண்ணிப் பார்த்தபோது எனக்கான வாக்குச் சாவடியாக லேக் ஏரியாவைக் காட்டியது. என்னோட ஆதார் கார்டு முகவரி என் வீட்டின் புதிய முகவரிக்கு மாற்றப்பட்டிருந்ததால என்னுடைய வாக்குச் சாவடி லேக் ஏரியாவுக்கு மாறியிருக்கு. இது முன்னாலே தெரிந்திருந்தால் அங்கே சென்று என் வாக்கைச் செலுத்தியிருப்பேன். ஆனால், எந்த அதிகாரிகளும் இதைப் பற்றி சரியாக சொல்லவில்லை. அடுத்த தேர்தலின்போது இதுமாதிரியான எந்தக் குறைகளும் இல்லாமல் நடக்கணும். நானொரு நடிகன் என்பதால் என்னை ஓட்டு செலுத்த அனுமதித்து விட்டார்கள். சாதாரண குடிமகன்கள் என்ன செய்வார்கள். குறிப்பாக அடுத்த தேர்தல்போது வயதானவர்களுக்கு தனியான வரிசையும் கொண்டு வர வேண்டும்'' என்று ஆதங்கத்துடன் முடித்தார் ஶ்ரீகாந்த்.

இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 23) தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, நடிகர் ஸ்ரீகாந்த் வாக்குப்பதிவு செய்திருக்கிறாரே... அவருக்கு மட்டும் எப்படி சலுகை காட்டப்பட்டது என்று கேட்டபோது, ``இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டது. ஸ்ரீகாந்த் ஓட்டு போடவில்லை. சும்மா நின்று போஸ்தான் கொடுத்தார் என்று ரிப்போர்ட் வந்திருக்கிறது'' என்றார். 

தேர்தல் அதிகாரியின் இந்தக் கூற்று குறித்து ஶ்ரீகாந்திடம் பேசியபோது,  ``நான் ஓட்டு போட்டதை அங்கே இருந்த அனைவரும் பார்த்தார்கள். முக்கியமாக பத்திரிகையாளர்கள் அனைவரும் போட்டோகூட எடுத்தார்கள். என்னிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு, என்னுடைய கைரேகையும் எடுத்துக்கொண்டுதான் அதிகாரிகள் ஓட்டு போட அனுமதித்தார்கள். நான் ஓட்டு போடவில்லை வெறும் மை மட்டும்தான் வைத்துக்கொண்டேன் என்று தேர்தல் அதிகாரி சொல்வது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. குறிப்பாக, தேர்தல் அதிகாரி கூறியதாக வந்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன். தேர்தல் அதிகாரி இப்படிச் சொல்லியிருப்பது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது'' என்று சொல்லி முடித்தார் ஶ்ரீகாந்த். 

சனா

Make others happy by being happy ! “ Its my favorite quote. And I live towards it. I want to talk talk talk even if..