Published:Updated:

``எஸ்.ஜானகி நன்றாக டான்ஸ் ஆடுவார் என்பது பலருக்கும் தெரியாது!" - `ஊர்வசி' சாரதா #HBDSJanaki

``எஸ்.ஜானகி நன்றாக டான்ஸ் ஆடுவார் என்பது பலருக்கும் தெரியாது!" - `ஊர்வசி' சாரதா #HBDSJanaki
``எஸ்.ஜானகி நன்றாக டான்ஸ் ஆடுவார் என்பது பலருக்கும் தெரியாது!" - `ஊர்வசி' சாரதா #HBDSJanaki

``நானும் ஜானகியின் கணவர் ராமமூர்த்தியும் பாடுவோம். ஜானகி, நன்றாக நடனமாடுவார். அதை நேரில் பார்க்க வேண்டுமே... மிகவும் மகிழ்ச்சியான தருணம் அது."

மூத்த பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியின் பிறந்த தினம் இன்று. திரையுலகிலிருந்து ஓய்வுபெற்றவர், ஹைதராபாத்தில் வசித்துவருகிறார். எஸ்.ஜானகியும் நடிகை `ஊர்வசி' சாரதாவும் நீண்டகால நெருங்கிய தோழிகள். எஸ்.ஜானகியின் பிறந்த நாளையொட்டி, அவருடனான நட்பு குறித்து சாரதாவிடம் பேசினோம்.

``எங்கள் நட்பு ஒருசில வார்த்தைகளில் சொல்லக்கூடியது இல்லை. சென்னையில் என் வீட்டுக்கு அருகில்தான், அப்போது டி.சலபதி ராவ் என்ற தெலுங்கு இசையமைப்பாளர் வீடும் இருந்தது. பாடல் ரெக்கார்டிங் விஷயமாக அவரைச் சந்திக்க, ஜானகி வருவார். அப்படித்தான், என் 15 வயதில் ஜானகியுடனான நட்பு தொடங்கியது. அந்தக் காலகட்டத்தில்தான் நான் சினிமாவில் நடிக்கத் தொடங்கினேன். அவர் பல மொழிகளிலும் மிகப் பிரபலமான பாடகியாக உயர்ந்தார். நான் நடித்த மற்ற மொழிப் படங்களைவிடவும் என் மலையாளப் படங்களில் மிக அருமையான பாடல்களைப் பாடியிருக்கிறார். என் நடிப்பைத் தாண்டி, அவரது பாடல்களாலும் எனக்குப் புகழ் கிடைத்தது. தமிழில் `குங்குமம்' படத்தில் `சின்னஞ்சிறிய வண்ணப்பறவை' பாடல் உட்பட நான் நடித்த பல படங்களில்  பாடியிருக்கிறார்.

அப்போது பல மொழிப் படங்களுக்கான ஷூட்டிங் மற்றும் பாடல் ரெக்கார்டிங் சென்னையில்தான் நடக்கும். எனக்கு ஷூட்டிங் இல்லையென்றால், அவருடன் ரெக்கார்டிங் தியேட்டருக்குச் செல்வேன். அவர் பாடுவதை நேரில் கேட்டு ரசிப்பேன். அவர் பாடும்போது எந்த உணர்வுகளும் அவரின் முகத்திலும், உடல் அசைவுகளிலும் தெரியாது. எல்லா உணர்வுகளும் அவரது குரலில் மட்டுமே தெரியும். இந்தியாவில் வேறு எந்தப் பிரபல பாடகர்களும் அப்படிப் பாடமாட்டார்கள். அதனால் தொடக்கக் காலத்தில் வியந்தேன். பிறகு, என் தோழி அபூர்வமான பாடகி எனப் பெருமைப்பட்டேன். அடிக்கடி ஜானகியின் வீட்டுக்குச் சென்றுவிடுவேன். இருவரும் எல்லா விஷயங்கள் குறித்தும் நேரம்போவதே தெரியாமல் அரட்டையடிப்போம். அந்தக் காலங்களெல்லாம் பொன்னான தருணங்கள். பொதுவாக ஜானகி அதிகம் பேசமாட்டார் எனச் சொல்வார்கள். அது உண்மையில்லை. அவர் தனக்குப் பிடித்தவர்களிடம் மிக நெருக்கமாகப் பேசுவார்; பழகுவார். பயங்கரமாக காமெடி செய்வார்" என்கிற சாரதா, எஸ்.ஜானகி குறித்த ஆச்சர்யத் தகவல் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்.

``நான் இளம் வயது முதலே சைவ உணவுகளைத்தான் விரும்பிச் சாப்பிடுவேன். அதனால், நான் அவர் வீட்டுக்குப் போகும்போதெல்லாம் சிறப்பாகச் சமைத்து எனக்குப் பரிமாறுவார். அவரின் வீடு மற்றும் சமையலறையில் நெருக்கமானவர்கள் மட்டுமே செல்ல முடியும். அப்படி நான் அடிக்கடி அவர் வீட்டுக்குச் செல்வேன். என் வீட்டுக்கும் அடிக்கடி வருவார்; சாப்பிடுவார். அத்தகைய தருணத்தில், நானும் ஜானகியின் கணவர் ராமமூர்த்தியும் பாடுவோம். ஜானகி, நன்றாக நடனமாடுவார். அதை நேரில் பார்க்க வேண்டுமே... மிகவும் மகிழ்ச்சியான தருணம் அது. அவர் நடனமாடுவார் என்பதே பெரும்பாலானோருக்குத் தெரியாது. இளம் வயதில் கொஞ்சம் இசைக் கற்றுக்கொண்டேன். தவிர, சிறப்பாகவெல்லாம் பாடமாட்டேன். ஆனாலும், என் பாடல் நன்றாக இருக்கிறது என்றுதான் ஜானகி சொல்வார். நான் நடித்த படங்களை விரும்பிப் பார்ப்பார்; பாராட்டுவார். அவர் கிருஷ்ணப் பக்தை. கடவுள் நம்பிக்கையில் அதிக ஆர்வம் கொண்டவர். யாருக்கும் கெடுதல் நினைக்காதவர். எல்லோரிடத்திலும் அன்பு செலுத்துவது என நிறைய நல்ல குணங்கள் அவருக்கு உண்டு.  

எங்கள் இருவர் தவிர, மணிமாலா உட்பட இன்னும் மூவர் என நாங்கள் ஐந்து பேர் நெருங்கிய தோழிகள். அடிக்கடிச் சந்தித்துக்கொள்வோம். ஜானகி, அந்தக் காலத்தில் மிகவும் பிஸியாகப் பாடிக்கொண்டிருந்தார். அதனால் அவர் அதிகம் வெளியூர்களுக்குச் சென்றதில்லை. ஆனால், எங்களுடன் அடிக்கடி மகாபலிபுரம் வருவார். அங்கு அரட்டை, பாடல், நடனம், குறும்புத்தனம் என மிகவும் சந்தோஷமாக நேரத்தைச் செலவிடுவோம். அவர் என்னைவிட எட்டு வயது மூத்தவர். அவரைவிட நான் வயதிலும் புகழிலும் சிறியவள்தான். ஆனால், அவர் என் மீது அளவுகடந்த அன்பைக் காட்டினார். நானும் அப்படித்தான். அவரை, பெயர் சொல்லித்தான் அழைப்பேன். சாதாரண நட்பு என்ற பந்தத்தையெல்லாம் மீறிய அன்பு எங்களுக்குள் இருக்கிறது. எங்கள் நட்பு, போன ஜென்மத்துப் பந்தம் என அடிக்கடி நினைத்துக்கொள்வேன். தற்போது வாய்ப்புக் கிடைக்கும்போது சந்தித்துக்கொள்வது, அடிக்கடி போனில் பேசிக்கொள்வது என, 58 ஆண்டுகளாக எங்கள் நட்பைத் தொடர்கிறோம். இன்று காலையில் ஜானகிக்குப் பிறந்த நாள் வாழ்த்துக் கூறினேன். அவர் மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்" எனத் தன் தோழியை மனதார வாழ்த்துகிறார் `ஊர்வசி' சாரதா.

அடுத்த கட்டுரைக்கு