Published:Updated:

``அம்மா பிறந்தநாளை நான் கொண்டாடலை... ஆனா, என் மருமகள்...'' - பூர்ணிமா பாக்யராஜ்

''அம்மாவோட பிறந்த நாளை என் மருமகள் செலிபிரேட் செஞ்சது எனக்கு டபுள் சந்தோஷம்.''

``அம்மா பிறந்தநாளை நான் கொண்டாடலை... ஆனா, என் மருமகள்...'' - பூர்ணிமா பாக்யராஜ்
``அம்மா பிறந்தநாளை நான் கொண்டாடலை... ஆனா, என் மருமகள்...'' - பூர்ணிமா பாக்யராஜ்

ரு தாய் உயிரோடு இருக்கிற காலம் வரை, அவருடைய பிள்ளைகள் குழந்தைகள்தான் என்பார்கள். அந்தளவுக்கு, உறவுகளில் அம்மா எப்போதுமே ஸ்பெஷல்தான். அப்படிப்பட்ட அம்மாவுக்கும் வயதாகும்; தள்ளாமை வரும். அப்போது அம்மா நமக்குக் குழந்தையாக மாறியிருப்பார். சில தினங்களுக்கு முன்னால் நடிகை பூர்ணிமா பாக்யராஜின் இன்ஸ்டாகிராமில் அவருடைய அம்மாவின் புகைப்படத்தைப் பார்க்கையில் நம் மனதுக்கும் அப்படித்தான் தோன்றியது. 80-களில் இருக்கிற தன் அம்மாவுடன் தானும் தன் கணவரும் இருக்கிற புகைப்படத்தை போஸ்ட் செய்து அம்மாவுக்குத் தான் அம்மாவாக மாறி 'பிறந்த நாள் வாழ்த்துகள்' சொல்லியிருந்தார் பூர்ணிமா பாக்யராஜ். அவருடன் பேசினேன். 

''எங்க ரெண்டு பேருகூட அம்மா இருக்கிற அந்த போட்டோ, எங்களுடைய ஒரு கல்யாண நாள் அப்போ எடுத்தது. நேத்திக்கு முந்தைய நாள் என் அம்மாவோட பிறந்த நாள் அப்படிங்கிறதால், அந்த போட்டோவை என் இன்ஸ்டாவில் ஷேர் செஞ்சேன். எனக்கு எங்கம்மாவோட போட்டோவைப் பார்த்தாலே பிளெஸ்ஸிங் கிடைச்ச மாதிரி ஃபீல் பண்ணுவேன். எங்கம்மா எனக்கு அவ்வளவு ஸ்பெஷல். இன்ஃபேக்ட் நான் சினிமாவுல நடிக்க வந்ததுக்குக்கூட அவங்கதான் காரணம். அம்மா, ரொம்ப நல்ல டான்ஸர். சினிமாங்கிறது அவங்களுடைய கனவுதான். அதே கனவு எனக்கு வந்தப்போ, அதை நிறைவேத்தி வைச்சது அம்மாதான்'' என்பவரின் குரலில் அம்மாவின் மீதான அன்பும் மரியாதையும் வார்த்தைக்கு வார்த்தைத் தொனிக்கிறது. 

"உங்களுடைய சின்ன வயது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ஞாபகம் இருக்கிறதா?" என்று கேட்டதற்கு,

''எப்பவுமே மறக்க முடியாதபடிக்கு என் பிறந்த நாள் சம்திங் ஸ்பெஷல். ஏன்னா, எனக்கும் என் தம்பிக்கும் ஒரே டேட் ஆஃப் பர்த். வருஷம் மட்டும்தான் வேற வேற. அதனால, நாங்க சின்னப் பிள்ளைகளா இருக்கிறப்போ எங்க பிறந்த நாளை செலிபிரேட் செய்யாம அம்மா இருந்ததே இல்லை. எங்க ரெண்டு பேரோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் வீட்டுக்கு இன்வைட் பண்ணுவாங்க. கேக் கட் பண்ண வைப்பாங்க. நானும் என் தம்பியும் எங்க ஃப்ரெண்ட்ஸோட என்ஜாய் பண்றதையெல்லாம் வருஷம் தவறாம போட்டோ எடுத்து ஆல்பமாகவும் வைச்சிருக்காங்க அம்மா. எங்க வீட்டைப் பொறுத்தவரை பர்த்டேவுக்கு கேக் வெட்டறதுகூட ஒரு பாரம்பர்யமாகிடுச்சு.  அந்த நாள்களையெல்லாம் என்னால மறக்கவே முடியாதுங்க" என்கிற பூர்ணிமா பாக்யராஜின் குரல் நெகிழ்ந்து ஒலிக்கிறது. 

குஷ்புவோட நீங்களும் அம்மாவும் இருக்கிற போட்டோ பற்றி...?

''அந்த போட்டோ, குஷ்புவோட ஷோவுல எடுத்தது. அன்னிக்கு என்னை இன்டர்வியூ பண்ணாங்க. அம்மாவை சர்ப்ரைஸ் கெஸ்ட்டாக கூட்டிக்கிட்டு வந்திருந்தாங்க. அம்மா நடக்க முடியாம ரொம்ப கஷ்டப்பட்டுக்கிட்டிருந்த நேரம் அது. கால்வலியெல்லாம் பொறுத்துக்கிட்டு எனக்காக அந்த ஷோவுக்கு வந்திருந்தாங்க. அது ரொம்ப எமோஷனல் மூவ்மென்ட்டாகிடுச்சு. அதனாலதான், அந்த போட்டோவையும் ஷேர் பண்ணி அம்மாவுக்கு விஷ் பண்ணியிருந்தேன். அம்மாக்கள் நமக்கு பர்த்டே செலிபிரேட் செஞ்சது சந்தோஷம்னா, அந்த அம்மாவுக்கு நாம பெரியவங்களாகி பர்த்டே விஷ் பண்றது அதைவிடப் பெரிய சந்தோஷமில்லையா?'' என்றவரிடம்,

"இந்த வருட அம்மாவின் பிறந்த நாளை எப்படிக் கொண்டாடினீர்கள்?" என்றோம்.

"அச்சோ, அம்மாவோட பர்த்டே அன்னிக்கு எனக்குக் காலையிலேயே ஷூட்டிங் இருந்துச்சு. ஸோ, நான் அம்மாவுக்கு விஷ் பண்ணிட்டு, பிளெஸ்ஸிங் வாங்கிட்டுக் கிளம்பிட்டேன். விடியற்காலை அப்படிங்கிறதால அப்போ கேக் கட் பண்ண முடியலை. அதுக்கப்புறம் என் மருமகள்தான் பர்த்டே ஃபங்ஷனை பார்த்துப் பார்த்து செஞ்சிருக்காங்க. அம்மாவோட பிறந்த நாளை என் மருமகள் செலிபிரேட் செஞ்சது எனக்கு டபுள் சந்தோஷம்'' என்று உற்சாகமாகச் சிரிக்கிறார் இந்த அம்மா பொண்ணு.