Published:Updated:

`தளபதி 63 ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன?’ - அட்லி மீது புகார் கொடுத்த கிருஷ்ணதேவி விளக்கம்

சனா
`தளபதி 63 ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன?’ - அட்லி மீது புகார் கொடுத்த கிருஷ்ணதேவி விளக்கம்
`தளபதி 63 ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன?’ - அட்லி மீது புகார் கொடுத்த கிருஷ்ணதேவி விளக்கம்

விஜய்யுடன் மூன்றாவது முறையாக கைகோத்துள்ளார் இயக்குநர் அட்லி. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னையில் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் தன்னை தரக்குறைவாக பேசியதாக ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் கிருஷ்ணதேவி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவரிடம் பேசினோம். 

`சினிமாவில் ஜூனியர் ஆர்டிஸ்ட் மற்றும் டப்பிங் ஆர்டிஸ்டா கிட்டதட்ட முப்பது வருடங்களுக்கு மேலே இருக்கிறேன். சட்டபூர்வமா கார்டும் எடுத்திருக்கேன். பல படங்களில் நடிச்சிருக்கேன். எனக்குனு யாரும் இல்லை. வயசு 51 ஆச்சு. சினிமாவில் கிடைக்குற சம்பளத்தை வைத்துதான் என்னோட பொழப்பு ஓடிட்டு இருக்கு. அட்லியுடைய படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஜூனியர் ஆர்டிஸ்டா போனேன். ஒரு நாளைக்கு சம்பளம் 300 ரூபாய். சென்னை ஈ.வி.பி செட்டில் ஷூட்டிங் நடந்தது. மூணு நாளால அங்கே ஷூட்டிங் போனேன். வெயிலில் அங்கே போ, இங்கே உட்கார்னு அதட்டுவாங்க. கொஞ்ச நேரம்கூட நிழலில் உட்கார முடியாது. பாத்ரூம் வசதிகூட இல்லை.

இப்படிப்பட்ட சூழலில் மதியம் சாப்பாட்டுக்கு வரிசையில் நின்னுட்டு இருக்குறப்போ, பெரிய இயக்குநர்கள், நடிகர்கள் சாப்பிட்ட எச்சில் கறித் துண்டை எங்க சாப்பாட்டோ கலந்து கொடுத்தாங்க. இது எனக்கு அருவருப்பா இருந்தது. இதை எதிர்த்துக் கேள்வி கேட்டேன். இதற்காக என்னை அதட்டி திட்டுனாங்க. கெட்ட வார்த்தையெல்லாம் பேசுனாங்க. அட்லியோட உதவி இயக்குநர்கள் சிலர் அடிக்க வந்தாங்க. அவங்களுடைய பேர்கூட எனக்குத் தெரியாது. எனக்கு ரொம்ப கோபமும் அழுகையும் வந்தது. அங்கே அருகில் இருந்த அட்லி இதையெல்லாம் பார்த்தும் பார்க்காத மாதிரி இருந்தார். உதவி இயக்குநர்களைக் கூப்பிட்டு கண்டிக்ககூட இல்லை.

இதனால், உடனே போலீஸுக்கு (100) போனில் அழைத்து நடந்தைச் சொன்னேன். உடனே ரவுண்ட்ஸில் இருந்த போலீஸ் வேன் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விசாரிச்சாங்க. போலீஸ் வந்தவுடனே அட்லி அங்கே இருந்து கிளம்பி காரில் போயிட்டார். போகும்போது, `காசைத் தூக்கி எறி' எடுத்துட்டு போயிருவாங்கனு என்னைப் பார்த்துச் சொல்லிவிட்டே போனார். 

இதுபற்றி போலீஸுக்கு கம்பளைன்ட் கொடுத்திருக்கேன். நாங்க தினம் கூலிக்கு கஷ்டப்படுறவங்க. எங்க வயித்துல அடிக்க வேண்டாம். விஜய் தம்பி இது சம்பந்தமா எங்கே கூப்பிட்டுப் பேசினாலும் வர்றதுக்கு தயாரா இருக்கேன். எனக்கு நியாயம் கிடைக்கணும். இல்லைன்னா தற்கொலை செஞ்சிக்குவேன்' என்றார் கிருஷ்ணதேவி. 

இந்த விவகாரம் சம்பந்தமாக இயக்குநர் அட்லி தரப்பில் தொடர்புகொண்டோம். ஆனால், அவர்கள் தரப்பில் பதில் எதுவும் கூறவில்லை. அட்லி தரப்பினர் கருத்துகூற விருப்பப்பட்டால் அதையும் பதிவு செய்வோம்.