Published:Updated:

"படத்துக்காக செலவு பண்ணதை, எப்படி தரணும்னு எனக்குத் தெரியும்!" - 'அலாவுதீனின் அற்புத கேமரா' நவீன்

"படத்துக்காக செலவு பண்ணதை, எப்படி தரணும்னு எனக்குத் தெரியும்!" - 'அலாவுதீனின் அற்புத கேமரா' நவீன்

'அலாவுதீனின் அற்புத கேமரா' படத்துக்குத் தடை வாங்கியிருக்கிறார், தயாரிப்பாளர். அப்படத்துக்கு என்ன பிரச்னை?

"படத்துக்காக செலவு பண்ணதை, எப்படி தரணும்னு எனக்குத் தெரியும்!" - 'அலாவுதீனின் அற்புத கேமரா' நவீன்

'அலாவுதீனின் அற்புத கேமரா' படத்துக்குத் தடை வாங்கியிருக்கிறார், தயாரிப்பாளர். அப்படத்துக்கு என்ன பிரச்னை?

Published:Updated:
"படத்துக்காக செலவு பண்ணதை, எப்படி தரணும்னு எனக்குத் தெரியும்!" - 'அலாவுதீனின் அற்புத கேமரா' நவீன்

யக்குநர் 'மூடர்கூடம்' நவீன் நடித்து, தயாரித்து இயக்கியுள்ள படம், 'அலாவுதீனின் அற்புத கேமரா.' இந்தப் படத்துக்குத் தடை என்ற செய்தி வந்திருக்கிறது.

தடை விதிக்கச் சொல்லி கேட்டிருப்பவர், ஃப்ளாஷ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் சொர்ணா சேதுராமன். அவரைத் தொடர்புகொண்டு பேசினோம். "செளந்தர்யா ரஜினிகாந்த்தின் கணவர் விசாகனை ஹீரோவா வச்சு, நவீனிடம் எங்க நிறுவனத்துக்கு ஒரு படம் இயக்கித்தர கேட்டிருந்தோம். அவரும் ஓகே சொல்லி, ஒரு கதையைச் சொன்னார். சீக்கிரமே பவுண்டு ஸ்கிரிப்ட் தருவதாகச் சொல்லி, ஐந்து லட்சம் ரூபாய் அட்வான்ஸ் வாங்கினார். பிறகு, 50 லட்சம் கணக்கிட்டு முன்பணமாகக் கொடுத்து ஒப்பந்தம் செய்தோம்.

எங்க ஆபீஸைத்தான் கதை விவாதத்துக்காகப் பயன்படுத்திக்கிட்டார். ஒன்றரை மாசத்துல ஸ்கிரிப்ட் தருவதாகச் சொல்லிட்டுப்போன நவீன், அதுக்குப் பிறகு அந்த ஸ்கிரிப்ட்டைத் தரவே இல்லை. அதனால், அந்தப் படத்தை சரியான நேரத்துல ஆரம்பிக்க முடியல. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஒரு புகாரும் இது குறித்துக் கொடுத்தேன். அதற்கு நவீன்கிட்ட இருந்து எந்த ரெஸ்பான்ஸும் இல்லை. இந்த சமயத்துலதான், 'அலாவுதீனின் அற்புத கேமரா' படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகளில் மும்முரமா இருந்தார் நவீன். எங்க நிறுவனத்துக்குத் தர வேண்டிய 50 லட்சம் ரூபாய்க்குப் பதில் சொல்லிட்டுத்தான், இந்தப் படத்தை ரிலீஸ் பண்ணணும்னு தடை வாங்கியிருக்கோம். நவீன் வளரும் கலைஞர். அதனால, எதையும் கண்டிப்புடன் கேட்கல. எனக்குப் படம் பண்றேன்னு சொல்லிட்டு, வேற படம் பண்ணப் போயிட்டார். ஒரு மரியாதை நிமித்தமாகூட என்னை வந்து பார்க்கல. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நவீன் மட்டும்தான்  இந்தமாதிரி பண்றார். 'கொளஞ்சி' படத்துக்கும் தங்கவேலு என்பவரிடம் ஒரு கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு மாத்தியிருக்கார். அதனாலதான், அந்தப் படமும் இன்னும் ரிலீஸ் ஆகாம பிரச்னையில இருக்கு" என்கிறார் சொர்ணா சேதுராமன். 

இந்தப் பிரச்னை குறித்து இயக்குநர் நவீனைத் தொடர்புகொண்டு பேசினோம். "எனது நிர்வாகத் தயாரிப்பாளர் வாசு, அவர் நண்பர் ராகுலன் இவங்க மூலமாகத்தான் சொர்ணா சார் எனக்கு அறிமுகம் ஆனார். விசாகனின் தாய்மாமாவான இவர், விசாகனை வச்சுப் படம் பண்ண எனக்கு 5 லட்சம் அட்வான்ஸ் கொடுத்தார். ஒரு நடிகரை முன்கூட்டியே ஃபிக்ஸ் பண்ணிட்டு, அவருக்காகப் படம் பண்ண என்னால முடியலைனு வாங்குன 5 லட்சத்தைத் திருப்பிக் கொடுக்கப்போனேன். ஆனா, என்னைக் கன்வின்ஸ் பண்ணி கதையை ரெடி பண்ணச் சொன்னாங்க. கடந்த ஆகஸ்ட் மாதம் அக்ரிமென்ட்ல கையெழுத்துப்போட்டு, அக்டோபர் மாதம் விசாகன், ராகுலன், வாசு ஆகிய மூணுபேருக்கும் கதையைச் சொன்னேன். விசாகனுக்குக் கதை ரொம்பப் பிடிச்சுப்போச்சு. அடுத்தகட்ட வேலைகளுக்குத் தயாரானோம்.  

நவம்பர் மாதம் பட வேலைகளுக்காக அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளுக்கு டிராவல் பண்ணி ப்ரீ-புரொடக்‌ஷன் வேலைகளை முடிச்சுட்டு வந்தோம். படத்துல வொர்க் பண்ணப்போற ஒளிப்பதிவாளர், எடிட்டர், இசையமைப்பாளர் எல்லோருக்கும் அட்வான்ஸ் கொடுத்திருந்தேன். மியூசிக் கம்போஸிங் வேலைகளும் போய்க்கிட்டிருந்தது. இவற்றுக்கெல்லாம் நான் செலவு பண்ணது சொர்ணா சார் கொடுத்த 50 லட்சம் ரூபாய் பணத்துல இருந்துதான். எல்லாம் ரெடி பண்ணிட்டு, ஷூட்டிங் போகலாம்னு சொன்னப்போ, 'கொஞ்சநாள்ல ஸ்டார்ட் பண்ணிடலாம் இருங்க'னு சொன்னாங்க. எட்டு மாசமா இப்போ அப்போனு ஷூட்டிங்காகக் காத்திருந்தோம். பிறகு, 'எதிர்பாராத பிரச்னை வந்திடுச்சு. இப்போதைக்குப் படம் பண்ண முடியாது'னு சொன்னாங்க. நானும் புரிஞ்சுக்கிட்டு சரினு அமைதியா இருந்தேன். இந்தப் படத்தின் வேலைகள்ல நான் இரண்டு படங்களை இயக்கும் வாய்ப்பையும் இழந்திருக்கேன்" என்றவர், தொடர்ந்தார்.

"தவிர, நான் அவர் தயாரிப்பில் இயக்குநராக வேலை செய்கிறேன் என ஒப்பந்தம் கையெழுத்திடவில்லை. நான் அவங்க நிறுவனத்துக்காக என்னுடைய 'ஒயிட் ஷேடோஸ்' நிறுவனம் சார்பில் 'ஃபர்ஸ்ட் காபி' முறையில்தான் படத்தைத் தயாரித்து தர்றேன்னு ஒப்பந்தம் போட்டிருந்தேன். இந்தப் படத்துல எனக்கு மட்டும்தான் முழு சுதந்திரமும் இருக்கும்னு சொன்னதாலதான் படம் பண்ண சம்மதிச்சேன்.  எட்டு மாசம் இந்தப் படத்தை நம்பிக் காத்திருந்த என் நேரத்துக்கு என்ன மதிப்பு இருக்கு. இப்போ, சொர்ணா சார் நான் கதை பண்ணலைனு சொல்றார்.   

இந்தப் படம் இப்படி இருந்தப்போதான், நான் 'அலாவுதீனின் அற்புத கேமரா' படத்தை நண்பர்களுடன் சேர்ந்து தொடங்கினேன். இதுக்காகத் தமிழ் சினிமாவிலுள்ள முக்கியமான ஃபைனான்ஸியரிடம் கடன் வாங்கியிருக்கேன். இந்தப் படத்தின் கதைக்கும் நான் விசாகனுக்குச் சொன்ன கதைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது அவருக்கும் தெரியும். நான் விசாகனிடம் முழுக் கதையையும் சொன்ன பிறகுதான் படப்பிடிப்புக்கான வேலைகளும் தொடங்கியது. ஆனா, நான் பவுண்ட் ஸ்கிரிப்ட் தராததுனாலதான் படம் தள்ளிப்போச்சுனு சொல்றது நியாயமான குற்றச்சாட்டு இல்லை. ஏற்கெனவே அவங்க தயாரிக்கிறதா இருந்து இரண்டு படங்கள் கைவிடப்பட்டிருக்கு. அதுக்குப் பிறகுதான் என்னைக் கூப்பிட்டுப் படம் பண்ணச் சொன்னாங்க. இந்தப் படம் எதுக்கு டிராப் ஆச்சுன்னு, படத்துல சம்பந்தப்பட்டிருக்கிற எல்லோருக்கும் தெரியும். தயாரிப்பு தரப்புல எந்தப் பிரச்னையும் நடக்காம இருந்திருந்தா, நிச்சயம் சொன்ன டைம்ல இந்தப் படம் தொடங்கியிருக்கும். தவிர, நான் படத்துக்குனு செலவு பண்ண பணத்தைப் படமாகத்தான் தர முடியும். ஏன்னா, தொழில்நுட்பக் கலைஞர்களுக்குக் கொடுத்த பணத்தை அவங்க செலவு பண்ணியிருப்பாங்க. அதை அவங்ககிட்டயிருந்து உழைப்பாகத்தான் என்னால திருப்பிக் கேட்க முடியும். மத்தபடி அவர் சொல்ற, 'கொளஞ்சி' பிரச்னை முற்றிலும் வேற! சொர்ணா சார் சொல்ற குற்றச்சாட்டுக்கும் என்னுடைய வேறெந்தப் படங்களுக்கும் சம்பந்தம் கிடையாது" என்கிறார் நவீன்.

நவீன் சொன்ன விஷயங்களைத் தயாரிப்பாளர் சொர்ணா சேதுராமனிடம் சொன்னோம். "நீதிமன்றத்தை நாடியிருக்கிறேன். நவீன் அங்கே பதில் சொல்லட்டும்" என்று முடித்துக்கொண்டார். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism