Published:Updated:

``அந்த வலி எனக்கும் தெரியும்!’’- தங்க மங்கை கோமதி மாரிமுத்துக்கு ரோபோ ஷங்கரின் அன்புப் பரிசு

அலாவுதின் ஹுசைன்
``அந்த வலி எனக்கும் தெரியும்!’’- தங்க மங்கை கோமதி மாரிமுத்துக்கு ரோபோ ஷங்கரின் அன்புப் பரிசு
``அந்த வலி எனக்கும் தெரியும்!’’- தங்க மங்கை கோமதி மாரிமுத்துக்கு ரோபோ ஷங்கரின் அன்புப் பரிசு

தோஹா ஆசிய தடகளப் போட்டியில், தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து, 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார். அவருக்கு, அன்பளிப்பாக ஒரு லட்சம் ரூபாய் அளிப்பதாக, நடிகர் ரோபோ ஷங்கர் அறிவித்திருக்கிறார்.

இந்தத் தொடரில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை இவர்தான். ஏற்கெனவே, தேசிய சாதனைக்கு சொந்தக்காரரான இவர், 2.02.70 நிமிடங்களில் இலக்கை எட்டி சாதனை படைத்தார்.

இவரின்  இந்தச் சாதனையை அரசியல் தலைவர்கள் முதல், சினிமா மற்றும் பல்வேறு துறைசார்ந்த பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், தனது பங்காக நடிகர் ரோபோ சங்கர், தமிழக தடகள வீராங்கனை கோமதிக்கு ஒரு லட்சம் ரூபாய் அன்பளிப்பாகத் தருவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக வீ டியோ ஒன்றைப் பதிவிட்டுள்ள ரோபோ சங்கர்,    

 ``நம்மை காக்கக்கூடிய எல்லைச் சாமிகளான இந்திய இராணுவ வீரர்கள் இறப்புக்கு மிகுந்த வருத்தத்தில் தமிழகத்தைச் சார்ந்த வீரர்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில் தலா ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தேன். இம்முறை, ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்றுள்ள எனது சகோதரி கோமதி மாரிமுத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் அன்பளிப்பாக, மிகுந்த பெருமையுடன் தருகிறேன். தனது தந்தை மற்றும் கோச் இறப்பிற்குப் பிறகும்,  உடல் நலம் பாதிக்கப்பட்டும் விடாமுயற்சியால் விஸ்வரூப வெற்றிபெற்ற தங்க மங்கை கோமதிக்காக மிகுந்த சந்தோஷப்படுகிறேன். ஏனெனில், நானும் கஷ்டப்பட்ட குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவன்தான். கஷ்டப்படும் குடும்பத்தோட வலி என்னன்னு எனக்குத் தெரியும். அதைத் தாண்டி, இந்தச் சாதனையைச் செஞ்சதுக்கு தலைவணங்குறேன். இது பெண்களுக்கு பெரிய நம்பிக்கை கொடுக்கக்கூடிய விஷயம். என்னால் முடிந்த சிறிய தொகையைக் கொடுப்பதுக்கு நான் பெருமைப்படுறேன்" என்றார்   

திருச்சியைச் சேர்ந்த கோமதி, சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவர், 20 வயது முதல் தடகளத்தில் பங்கேற்றுவருகிறார். இவரின்  10 வருட கால உழைப்புக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. பெங்களூருவில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் கோமதி பணிபுரிந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.