Published:Updated:

"கார்த்தி கல்யாணத்துக்கு கேட்டரிங், சூர்யா அண்ணனின் வாழ்த்து!" - 'மெஹந்தி சர்க்கஸ்' ரங்கராஜ்

"கார்த்தி கல்யாணத்துக்கு கேட்டரிங், சூர்யா அண்ணனின் வாழ்த்து!" - 'மெஹந்தி சர்க்கஸ்' ரங்கராஜ்
"கார்த்தி கல்யாணத்துக்கு கேட்டரிங், சூர்யா அண்ணனின் வாழ்த்து!" - 'மெஹந்தி சர்க்கஸ்' ரங்கராஜ்

'மெஹந்தி சர்க்கஸ்' படத்தின் ஹீரோ மாதம்பட்டி ரங்கராஜ் பேட்டி.

யக்குநர் ராஜுமுருகன் கதை, வசனத்தில் அவரின் அண்ணன் சரவண ராஜேந்திரன் இயக்கி வெளியான 'மெஹந்தி சர்க்கஸ்' படத்தில் நடித்தவர் மாதம்பட்டி ரங்கராஜ். கேட்டரிங் தொழில் செய்துகொண்டிருந்த இவர் எப்படி சினிமாவுக்குள் நுழைந்தார், 'மெஹந்தி சர்க்கஸ்' அனுபவம் எனப் பலவற்றை நம்மிடம் பகிந்துகொள்கிறார். 
 

"மாதம்பட்டி ரங்கராஜ் யார், சினிமா எண்ணம் எப்போ வந்தது?" 

"என் சொந்த ஊர் கோயம்புத்தூர் மாவட்டம், மாதம்பட்டி கிராமம். என் அப்பா தங்கவேல் 1985-லிருந்து கேட்டரிங் பிசினஸ் பண்ணிக்கிட்டு இருக்கார். நானும் காலேஜ் முடிச்சுட்டு, அப்பா கூட இருந்து பிசினஸைப் பார்த்துக்க ஆரம்பிச்சேன். 15 வருடமா எங்க குடும்பத் தொழிலான கேட்டரிங் பிசினஸ்தான் பண்ணிக்கிட்டு இருக்கேன். அடிக்கடி நான் சபரிமலைக்குப் போறது வழக்கம். அப்போ என் கூட முரளிதரன்னு நண்பர் ஒருவர் வருவார். அவருக்கு போட்டோகிராபியில ஆர்வம். ஒருமுறை யதார்த்தமா என்னை அவர் போன்ல போட்டோ எடுத்துப் பார்த்துட்டு, 'உங்களுக்கு போட்டோஜெனிக் முகம். ஒருநாள் போட்டோஷூட் பண்ணலாம்'னு சொன்னார். சரினு காஸ்ட்யூம் எல்லாம் ரெடி பண்ணிட்டு வெவ்வேற இடங்களுக்குப் போய் போட்டோஷூட் பண்ணோம். அந்தப் போட்டோக்களை ஆல்பமா பண்ணலாம்னு நினைச்சுட்டு இருந்தபோதுதான் தனுஷ் சார் கம்பெனியில இருந்து நடிக்க புதுமுகங்கள் தேவைனு ஒரு அறிவிப்பு வந்தது. அதுக்கு போட்டோ அனுப்பி வெச்சேன். இப்படி ஆரம்பிச்ச ஆசைதான், 'மெஹந்தி சர்க்கஸ்' மூலமா நிறைவேறியிருக்கு."

" 'மெஹந்தி சர்க்கஸ்' படத்துல எப்படி கமிட் ஆனீங்க?" 

"தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா எங்களுக்கு ஃபேமிலி ஃப்ரெண்ட். அவங்க குடும்பத்துல நானும் ஒருத்தன்னே சொல்லலாம். அவருக்கு அந்த போட்டோஷூட்ல எடுத்த போட்டோக்களை அனுப்பி வச்சேன். அவரும் அவர் அப்பாவும் பார்த்துட்டு, 'சூப்பரா இருக்குடா. ரொம்ப நாள் ஆசையா, என்கிட்ட சொல்லவேயில்லை'னு கேட்டார். சண்முகராஜன் சாரை கோயம்புத்தூர் வரவழைச்சு அவர்கிட்ட நடிப்புக்காக 15 நாள் வொர்க் ஷாப் போனேன். கடைசி நாள், 7 நிமிடத்துக்கு ஒரு பர்ஃபாமென்ஸ் பண்ணணும். அதுக்கு, நான் ஞானவேல்ராஜாவின் அப்பா ஈஸ்வரன் ஐயாவை அழைச்சிருந்தேன். என் நடிப்பைப் பார்த்துட்டு ஷாக் ஆனவர், 'வருடத்துக்கு ஒரு படம் நடி. ஆனா, பிசினஸை விட்டுடக் கூடாது'னு சொன்னார். ஸ்டூடியோ கிரீன் ரமேஷ் பாபு அண்ணன்தான் ராஜுமுருகன் சாரையும் சரவணன் சாரையும் ஆபீஸுக்குக் கூட்டிக்கிட்டு வந்தார். கதை கேட்டவுடனே ரொம்பப் பிடிச்சிருந்தது. ஆனா, அவங்களுக்கு நான் நடிக்கத்தான் கதை கேட்கிறோம்னு தெரியாது. 'இவர்தான் லீடு ரோல் பண்ணப்போறார். அவருக்கு இது சரியா இருக்குமா'னு கேட்டதுக்கு, கொஞ்சம்கூட யோசிக்காம ரெண்டுபேரும் ஓகே சொல்லிட்டாங்க. அப்படி ஆரம்பிச்சதுதான் 'மெஹந்தி சர்க்கஸ்'."   

"முதல்முறை ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போனபோது எப்படி இருந்தது, அதுக்கு எப்படி உங்களை செட் பண்ணிக்கிட்டீங்க?"

"என் கேட்டரிங் வேலைகளும் ஷூட்டிங் ஸ்பாட் மாதிரிதான் இருக்கும். பல பேர் இரவு பகல் பார்க்காம வேலை செஞ்சுக்கிட்டு இருப்பாங்க. அதே பரபரப்புதான் இங்கேயும் இருந்தது. அதனால, இது எனக்குப் புதுசா தெரியல. ஆனா, செட்ல இருந்த எல்லோரும் எனக்கு முழு சப்போர்டா இருந்தாங்க. புது நடிகன், முதல் படம்னு யாரும் என்னைப் பார்க்கலை. முதல்முறை கேமரா முன்னாடி நிற்கப்போறோம்னு பயம், பதற்றமெல்லாம் இல்லை. ரொம்பநாள் ஆசை நிறைவேறப்போகுதுனு உற்சாகமாதான் இருந்தேன். எனக்கு நடிப்புல சில தடைகள் இருந்தன. டயலாக் டெலிவரி, முக பாவனைகளுக்கு சரியா கொண்டுவர ரொம்பக் கஷ்டப்பட்டேன். அதையெல்லாம் இயக்குநர், சக நடிகர்கள் எல்லோரும்தான் சரி பண்ணாங்க."

"பாலிவுட் நடிகையுடன் நடிச்ச அனுபவம்?"

" 'மாசான்' படம் பார்த்துட்டுதான் ஸ்வேதாவை மெஹந்தி கேரக்டருக்கு செலக்ட் பண்ணாங்க. அவங்களுக்குத் தமிழ் தெரியாது; எனக்கு நடிப்பு தெரியாது. அதனால, எங்க ரெண்டு பேருக்கும் 10 நாள் வொர்க் ஷாப் இருந்தது. அதுல சூழலுக்கு தகுந்த மாதிரி எப்படி நடிக்கணும், முக பாவனைகளை எப்படி மாத்தணும்னு ஸ்வேதாதான் எனக்கு சொல்லிக்கொடுத்தாங்க. அவங்க தியேட்டர் ஆர்டிஸ்டா இருந்ததுனால, நுணுக்கமான நிறைய விஷயங்கள் சொல்லிக்கொடுத்தாங்க."   

"ஜீவா கேரக்டருக்காக என்ன மெனக்கெட்டீங்க?"

"ஜீவாவுடைய தாத்தா யார், அவங்க பின்னணி என்னனு ஆரம்பிச்சு, கடைசியா இப்படிப்பட்டவன்தான் ஜீவானு சொல்லி அந்தக் கேரக்டரைப் புரியவச்சார் சரவணன் சார். ஜீவாவுடைய தாத்தா படத்தில் வரமாட்டார். ஆனா, எனக்கு அந்தக் கேரக்டருடைய ஆழத்தைப் புரியவைக்க அவர் என்கிட்ட இதையெல்லாம் சொல்லி என்னைத் தயார் பண்ணார். இந்தப் படத்துல 'ராஜகீதம் மியூசிகல்ஸ்'னு கேசட் கடை வச்சிருப்பேன். அதேமாதிரி, திண்டுக்கல்ல தீவிர இளையராஜா ரசிகர் ஒருவர் ரொம்ப வருடமா 'பவதாரணி மியூசிகல்ஸ்'னு ஒரு கேசட் கடை வச்சிருக்கார். அவர்கிட்ட எனக்கு ஒருநாள் டிரெயினிங் கொடுத்தாங்க. கேசட் எப்படி ரெக்கார்ட் பண்றதுனு கத்துக்கிட்டேன். ஒரு சர்க்கஸ் டீமை வரவச்சு கத்தி வீசுறதுக்குப் பயிற்சி கொடுத்தாங்க. அது மட்டுமல்லாம, இந்தப் படத்துல எனக்கு ரெண்டு லுக் இருக்கும். 25 வயசு லுக்குக்காக அஞ்சு கிலோ குறைச்சு நடிச்சிருந்தேன். 45 வயசு லுக்குக்காக 10 கிலோ உடம்பை ஏத்தினேன். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நிறையவே மெனக்கெட்டேன்."

"கேட்டரிங் பிசினஸ், நடிப்பு. ரெண்டையும் எப்படிச் சமாளிக்கிறீங்க?"

"சினிமாவுக்காக அதை விட்டுடக் கூடாதுனு ரொம்பத் தெளிவா இருந்தேன். ஷூட்டிங் டைம்ல எனக்கு ரெண்டு மூணு கல்யாண ஆர்டர்கள் வந்திடுச்சு. எந்த ஊர்ல நம்ம டீம் வேலைக்குப் போயிருந்தாலும், நானும் அங்கே நிச்சயமா இருப்பேன். இந்த முறையும் டைரக்டர்கிட்ட சொல்லிட்டு ராத்திரி ஊருக்குப் போய் வேலையை முடிச்சுட்டு, காலையில கிளம்பி நடிக்க வந்துடுவேன். எங்க டீமும் அங்கே இருப்பாங்க. ஃபேமிலியில இருந்தும் வேலையைக் கவனிச்சுக்குவாங்க. இருந்தாலும், எனக்கு அங்கே போனால்தான் திருப்தியா இருக்கும்."

"படம் பார்த்துட்டு வீட்ல இருக்கிறவங்க ரியாக்‌ஷன் என்ன?" 

"வீட்டுல இருக்கிறவங்களுக்கும் என் நலன் விரும்பிகளுக்கும் நான் சினிமாவுக்கு வர்றதுல உடன்பாடு இல்லை. எல்லோருக்கும் ரொம்ப வருத்தம். அங்கே போனா, கேரக்டர் போயிடும், பணம் போயிடும்னு நினைச்சாங்க. ஃபர்ஸ்ட் லுக், பாட்டுனு ஒவ்வொன்னா வெளிவரும்போது, எல்லோருக்கும் பிடிச்சிருந்தது. சரியான வழியிலதான் போறேன்னு அவங்களுக்குப் புரிய ஆரம்பிச்சது. ரங்கராஜ் சினிமாவுக்குப் போனாலும், தொழிலையும் குறையில்லாம பண்றான்னு என் கஸ்டமர்ஸ்கிட்ட இருந்து கமென்ட் வந்தது. நான் கேட்டரிங் பண்ண ஒரு கல்யாணத்துல 'மெஹந்தி சர்க்கஸ்' படத்தின் டீசர், பாடலைப் போட்டு என்னைக் கல்யாணத்துக்கு வந்திருந்த எல்லோருக்கும் அடையாளப்படுத்தினாங்க. 15 வருடமா தியேட்டருக்கு வராம இருந்தவங்கெல்லாம் எனக்காகத் தியேட்டருக்கு வந்தது ரொம்பவே சந்தோஷம்." 

"நடிகர் கார்த்தி கல்யாணத்துக்கு நீங்கதான் கேட்டரிங் பண்ணீங்களாமே! படம் பார்த்துட்டு அவங்க வீட்டுல இருந்து என்ன ரெஸ்பான்ஸ்?"

" 'மெஹந்தி சர்க்கஸ்'ல கமிட் ஆனதும் சிவகுமார் சாரையும் அம்மாவையும் சந்திச்சேன். 'சினிமா யார் அப்பன் வீட்டுச் சொத்தும் இல்லை. நீ தைரியமா பண்ணு'னு சொன்னார் சிவக்குமார் சார். அம்மாவும் ஆசீர்வாதம் பண்ணி வாழ்த்தினாங்க. பட பூஜைக்கு முதல் நாள் சூர்யா அண்ணா என்கிட்ட, 'நம்பிக்கையா பண்ணுய்யா. கண்டிப்பா ஜெயிப்ப'னு ஊக்கப்படுத்தினார். சூர்யா, கார்த்தி ரெண்டு அண்ணன்களும் பிசியா இருக்கிறதுனால, இன்னும் படம் பார்க்கலை. அவங்களுடைய கமென்ட்ஸ்காக வெயிட்டிங்" 

"கார்த்தி கல்யாணத்துல மறக்க முடியாத சம்பவம் என்ன?" 

"கார்த்தி அண்ணன் கல்யாணத்துல சூர்யா அண்ணனும் ஜோதிகா அக்காவும்தான் முழுப் பொறுப்பு. கேட்டரிங்ல சர்வீஸ் எப்படி இருக்கணும், என்ன மெனுனு எல்லாமே அவங்கதான் முடிவு பண்ணாங்க. 25,000 பேர் வருவாங்கன்னு எதிர்பார்த்தோம். ஆனா, 35,000 பேருக்குமேல வந்துட்டாங்க. எதிர்பார்த்ததைவிட அதிக கூட்டம் வந்தாலும், ஈஸியா சமாளிச்சுட்டோம். வந்தவங்க எல்லோருக்கும் சாப்பாடு ரொம்பப் பிடிச்சிருந்தது. அம்மா என்கிட்ட வந்து, 'ஆரம்பத்துல இருந்து உன்னைக் கவனிச்சுக்கிட்டுதான் இருக்கேன். நீ எல்லா வேலையும் இழுத்துப்போட்டு செய்றதைப் பார்த்தா சரவணன் (சூர்யா) மாதிரியே இருக்கு'னு பாராட்டினாங்க. அது என் வாழ்க்கையில மறக்கவே முடியாது."    

அடுத்த கட்டுரைக்கு