
கடந்த நான்கு வருடங்களாக நடத்தி வந்த தொண்டு நிறுவனத்துக்குப் பயிற்சியாளர்களாக இருந்தவர்கள் மீது 90 லட்ச ரூபாயை ஏமாற்றியதாகச் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்தார் நடிகை குட்டி பத்மினி. அவரையும், அவரின் வழக்கறிஞர் ரவி ஜெயபாலையும் தொடர்புகொண்டு பேசினோம்.
``கிரிக்கெட் விளையாட்டுக்காக `கிரீடா' என்கிற தொண்டு நிறுவனத்தைக் கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கினேன். இந்த தொண்டு நிறுவனம் மூலமாக 7 முதல் 23 வயது வரையிலானவர்கள் கிரிக்கெட் பயிற்சியை மேற்கொள்ளலாம். இதன் மூலம் பல பேரை நேஷ்னல் லெவலுக்குக் கொண்டு சென்றிருக்கிறோம். இந்த நிறுவனம் ஆரம்பித்தவுடன் சந்தோஷ் கோபி, சண்முக குமார் ஆகியோரிடம் ஒப்படைத்தேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த நான்கு வருடமாக அவர்களே நடத்தி வந்தார்கள். ஒரு கட்டத்தில் தவறு நடப்பதைக் கடந்த மார்ச் மாதம் கண்டறிந்தேன். இங்கு பயிற்சி பெற வருபவர்களை மூளைச் சலவைச் செய்து வேறு சில கோச்சிங் சென்டர்களுக்கு பயிற்சிக்காக அனுப்பி வந்துள்ளனர். மேலும், இந்தத் தொண்டு நிறுவனத்துக்கு வரும் தொகையிலும் கை வைத்துள்ளனர். இதை அனைத்தையும் கண்டறியும்போது தப்பித்துவிட்டனர். அவர்களை விசாரிக்க வேண்டி தொடர்புகொண்டபோது அவர்களது மொபைல் எண்களையும் மாற்றிவிட்டு, தலைமறைவாகிவிட்டனர்.

இந்த நிலையில்தான் வேறு வழியில்லாமல் 90 லட்சத்துக்கும் மேல் ஏமாற்றியவர்களான, முன்னாள் CCL பயிற்சியாளர் மற்றும் தற்போது சைதாப்பேட்டை கார்ப்பரேஷன் பள்ளியில் பயிற்சியாளராக இருந்து வரும் சந்தோஷ் கோபி, அவரின் தாயார் அமுதா மீதும், சண்முக குமார் மற்றும் அவரின் மனைவி சவீதா மீதும் சென்னை, கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன்'' என்றார் குட்டி பத்மினி.

``அவர்களை அழைத்து விசாரிக்க எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தோம். ஆனால், அவர்களுடைய தொடர்பு எண்களை மாற்றிவிட்டனர். மேலும், `கிரீடா' தொண்டு நிறுவனத்தில் பயிற்சி பெற்று வந்த பலரையும் மூளைச் சலவை செய்து வேறு இடங்களுக்கு அனுப்பியிருக்கிறார்கள். மேலும், அவர்கள் ஏமாற்றியிருக்கும் 90 லட்சத்தையும் திருப்பி அளிக்கும்படி புகார் அளித்திருக்கிறோம். வழக்கைத் தொடரவும் இருக்கிறோம்'' என்றார் பத்மினி தரப்பு வழக்கறிஞர் ரவி ஜெயபால்.
இது குறித்து எதிர் தரப்பின் விளக்கத்தைக் கேட்க முயன்றோம். அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அவர்கள் கொடுக்கும் விளக்கத்தைப் பிரசுரிக்க தயாராக இருக்கிறோம்.