Published:Updated:

அனிமேஷன் எம்.ஜி.ஆர், அஞ்சலியின் ஹாரர்... தமிழில் 3டி அட்டகாசம்!

'2.0' படத்தைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவில் வெளியாகவிருக்கும் 3டி படங்களின் லிஸ்ட் இது.

அனிமேஷன் எம்.ஜி.ஆர், அஞ்சலியின் ஹாரர்... தமிழில் 3டி அட்டகாசம்!
அனிமேஷன் எம்.ஜி.ஆர், அஞ்சலியின் ஹாரர்... தமிழில் 3டி அட்டகாசம்!

ழக்கமான படங்களைவிட 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் படங்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவும். அந்தப் படம் எப்படி இருக்கிறது என்பதைக் காட்டிலும், 3டி கிளாஸ் அணிந்து அந்த அனுபவத்தை உணர்வதற்காகவே தியேட்டருக்குச் செல்வோம். ஹாலிவுட்டில் பல 3டி படங்கள் வந்தாலும், நம்ம ஊரில் உருவாகும் திரைப்படங்களில் 3டி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருந்தால், அந்தப் படங்கள் கோலிவுட் ரசிகர்களுக்கு சம்திங் ஸ்பெஷல்தான். சமீபத்தில் '2.0' படம் 3டி-யில் வெளியானது. இதைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவில் வெளியாகவிருக்கும் 3டி படங்கள் என்னென்ன... பார்ப்போம்! 

லிசா :
 

அறிமுக இயக்குநர் ராஜு விஸ்வநாத் இயக்கத்தில் அஞ்சலி நடித்திருக்கும் படம், 'லிசா'. ஹீரோயின் சென்ட்ரிக் ஹாரர் படமான இதில் பிரம்மானந்தம், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தன் அம்மாவுக்கு இரண்டாவது திருமணம் செய்துவைக்க நினைக்கும் லிசா, அதற்கு அனுமதி கேட்க தாத்தா வீட்டுக்குச் செல்கிறார். அந்த வீட்டில் இருக்கும் பேயால் ஒரு பிரச்னை. அதிலிருந்து எப்படி எல்லோரும் வெளியே வருகிறார்கள் என்பதே 'லிசா'வின் கதை. இப்படத்தை 3டி ஸ்டிரீயோஸ்கோப் ஃபார்மேட்டில் எடுத்திருக்கிறார்கள். பொதுவாக, 4K ஃபார்மேட்டில் படத்தை எடுத்து, 2K-வுக்கு மாற்றுவார்கள். ஆனால், இதில் 8K ஃபார்மேட்டில் எடுத்து 2K-வுக்கு மாற்றியிருக்கிறார்கள். ’2.0’ படத்தில் பணியாற்றிய 3டி தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்தப் படத்திலும் பணிபுரிந்துள்ளார்கள். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படம் வெளியாகிறது. 

காதலைத் தேடி நித்யா நந்தா :
 

'த்ரிஷா இல்லைனா நயன்தாரா', 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் படம், 'காதலைத் தேடி நித்யா நந்தா'. ஃபேன்டஸி ஹாரர் ஜானர் - 3டி ஃபார்மெட்டில் தயாராகிவரும் இப்படத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கிறார். அமைரா தஸ்துர், சஞ்சிதா ஷெட்டி, சோனியா அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சென்னை, ஊட்டி உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். இதற்கிடையில், பிரபுதேவாவை வைத்து ஒரு படத்தை இயக்கி வரும் ஆதிக் ரவிச்சந்திரன், 'நேர்கொண்ட பார்வை', 'K 13' உள்ளிட்ட படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். அதனால், இப்படம் கொஞ்சம் தாமதமாகிறது.

கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு :
 

'உலகம் சுற்றும் வாலிபன்' படம், "எம்.ஜி.ஆரின் அடுத்த படைப்பு 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு' " என்ற அறிவிப்போடு முடியும். ஆனால், எம்.ஜி.ஆரின் அரசியல் பிரவேசத்தல் அவருடைய இந்த எண்ணம் நிறைவேறாமலேயே போய்விட்டது. எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா காலத்தில் அவர் கனவை நனவாக்கும் வகையில், இந்தப் படத்தை 3டி அனிமேஷன் தொழில்நுட்பத்தில் எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா ஆகியோரை உருவாக்கி படத்தை வெளியிடவிருக்கிறார்கள். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனமும் பிரபுதேவா ஸ்டூடியோஸ் நிறுவனமும் தயாரிக்க அருள் மூர்த்தி என்பவர் இப்படத்தை இயக்குகிறார். இமான் இசையமைக்கிறார். அனிமேஷன் என்றாலும் படம் 3டி கண்ணாடி அணிந்து பார்ப்பதுபோல் வெளியாகுமா என்பது இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

கால பைரவா :
 

ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் 'காஞ்சனா' சீரிஸுக்கு மக்கள் மத்தியில் செம ரெஸ்பான்ஸ். இருந்தாலும், 'காஞ்சனா எண்டு கேம்' எப்போது வரும் என்ற கமென்ட்டும் வருகிறது. சமீபத்தில் வெளியான 'காஞ்சனா 3' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், அதைத் தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் லாரன்ஸிடம் வேறொரு கதையைக் கேட்டிருக்கிறது. அப்போது, பாம்பு கதை ஒன்றை லாரன்ஸ் சொல்ல அதை 3டி-யில் உருவாக்கலாம் என முடிவெடுத்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் இப்படத்துக்கு 'கால பைரவா' எனப் பெயரிட்டுள்ளனர்.   

இவை தவிர, நடிகர் ப்ரித்விராஜ் இயக்குநர் அவதாரம் எடுத்த 'லூசிஃபர்' படத்தில் நடித்திருந்தார், மோகன்லால். ஸ்டீஃபன் நெரும்பாலி என்ற இவரது கேரக்டர் பலரால் பாராட்டப்பட்டது. அவரைத் தொடர்ந்து, நடிகர் மோகன்லாலும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். 3டி-யில் உருவாகும் இப்படத்துக்கு 'Barroz – Guardian of D'Gama's Treasure' எனப் பெயர் வைத்துள்ளனர். இதற்கான ஆரம்பகட்ட பணிகளில் பிஸியாக இருக்கிறார் மோகன்லால்.