Published:Updated:

''சொந்தக்காரங்க என் சொத்தை அபகரிச்சுகிட்டதா அந்தப் பேப்பர்ல வந்த செய்தி தவறு'' - நடிகை ஜெயசுதா

கு.ஆனந்தராஜ்

`` `படம் தயாரிச்சு நஷ்டப்படாம இருந்திருந்தால், இன்னிக்கு 100 கோடிக்கு மேல உங்களுக்குச் சொத்து இருந்திருக்கும்'னு சினிமா பிரபலங்கள் எங்ககிட்ட சொல்லுவாங்க. அதனால அவருக்கு ரொம்பவே வருத்தம் இருந்துச்சு."

''சொந்தக்காரங்க என் சொத்தை அபகரிச்சுகிட்டதா அந்தப் பேப்பர்ல வந்த செய்தி தவறு'' - நடிகை ஜெயசுதா
''சொந்தக்காரங்க என் சொத்தை அபகரிச்சுகிட்டதா அந்தப் பேப்பர்ல வந்த செய்தி தவறு'' - நடிகை ஜெயசுதா

டிகை ஜெயசுதாவின் சொத்துக்களை அவரின் குடும்பத்தார், உறவினர்கள் அனுபவித்ததாகவும், அதனால் அவர் வருத்தப்பட்டதாகவும் சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின. இது குறித்து, ஜெயசுதாவிடம் பேசினோம். `அப்படியெல்லாம் நடக்கலைங்க' எனச் சிரித்தபடியே பேசியவர், பொருளாதார ரீதியாகத் தான் எதிர்கொண்ட கஷ்டங்கள் மற்றும் அதிலிருந்து மீண்ட விதம் பற்றி விரிவாகப் பேசினார்.

``எனக்கு ரெண்டு அண்ணன்கள், ஒரு தங்கை. நான் நடிக்க ஆரம்பித்த பிறகு என் குடும்பத்தினரின் தேவைகளை நான் பார்த்துகிட்டேன். பிறகு கல்யாணமாகி, எல்லோருக்கும் தனித்தனி குடும்பங்கள் உண்டாச்சு. 1980 - 1990-களில் தெலுங்கில் முன்னணி நடிகையா நிறைய சம்பாதிச்சேன். அப்போ எனக்கு எதிர்காலத்தைப் பத்தின சிந்தனையெல்லாம் அதிகமா இல்லை. அப்போ புத்திசாலித்தனமா யோசிச்சிருந்தால், சம்பாதிச்ச பணத்தை எதிர்காலத் தேவைக்கு உதவுற வகையில சேமிச்சிருக்க முடியும். ஆனா, நான் அப்படிச் செய்யலை. ஆனாலும், ஓரளவுக்குச் சொத்துகளை வாங்கினோம். நல்ல நிலையில்தான் இருந்தோம். எனக்கும் என் கணவருக்கும் சினிமா தொழில்தான் தெரியும். அதனால், கணவர் சினிமா தயாரிப்பாளரானார். அந்த முடிவு சரியா, தவறாங்கிற நிலைப்பாட்டுக்குள் நாங்க போக விரும்பலை. ஒரு புது முயற்சியைத் தொடங்கினோம். 

என் கணவர் மூணு தெலுங்குப் படங்கள் எடுத்தார். அவை ஹிட்டாகி, எங்களுக்கு லாபமும் கிடைச்சுது. அடுத்து இந்தியில ஒரு படம் எடுத்து, அது சுமாராதான் ஓடுச்சு. அந்தப் படத்தால் கொஞ்சம் நஷ்டம் ஏற்பட்டுச்சு. பிறகு கடன் வாங்கி, மீண்டும் தெலுங்குப் படங்களைத் தயாரிச்சார். அடுத்து எடுத்த மூணு தெலுங்குப் படங்களும் பெரிய தோல்விகளைத் தழுவுச்சு. இதனால் எங்களுக்குப் பெரிய அளவுல நஷ்டம் உண்டாச்சு. கடன், வட்டிச்சுமை, மன உளைச்சல்னு எங்க இருவருக்கும் தினந்தோறும் மனக்கஷ்டங்கள்தான். அதன் பிறகு பயத்தில், மீண்டும் படம் எடுக்கத் தயங்கினார் என் கணவர். அதையே நினைச்சுகிட்டு இருந்ததால்தான், என் கணவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டுச்சு. கடன் கேட்டு மத்தவங்க அடிக்கடி போன் பண்றது, வீட்டு வாசல்ல வந்து நிற்கிறது, நாலு பேர் நாலு விதமா பேசுறதெல்லாம் எங்க இருவருக்கும் சுத்தமா பிடிக்காது.

அதனாலதான் கடன் சுமை தீர்ந்தா போதும்னு முடிவெடுத்து, எங்க சொத்துகளை வித்தோம். எல்லாக் கடன்களையும் அடைச்சுட்ட பிறகு, ரொம்ப நார்மலான வாழ்க்கைச் சூழல்லதான் இருந்தோம். `படம் தயாரிச்சு நஷ்டப்படாம இருந்திருந்தால், இன்னிக்கு 100 கோடிக்கு மேல உங்களுக்குச் சொத்து இருந்திருக்கும்'னு 2000-ம் ஆண்டுகளிலேயே சினிமா பிரபலங்கள் எங்ககிட்ட சொல்லுவாங்க. அதனால அவருக்கு ரொம்பவே வருத்தம் இருந்துச்சு. ஆனா, இதெல்லாம் வாழ்க்கையில ரொம்பவே இயல்பானது. நாம எடுத்த முடிவு தப்புங்கிறபோது, அதனால் வரும் விளைவுகளையும் எதிர்கொண்டுதானே ஆகணும்?" என்கிற ஜெயசுதா, சினிமாவில் ரீ-என்ட்ரியைத் தொடங்கி, கடன்களை அடைத்திருக்கிறார். 

``அப்போ பொருளாதார ரீதியா எங்களுக்கு உதவுற அளவுக்கு என் குடும்பத்தார் யாரும் வசதியா இல்லை. அதனால, சினிமாவுல மீண்டும் நடிக்க ஆரம்பிச்சேன். ரீ-என்ட்ரியில முதல் முறையா அம்மா ரோல்ல, `அம்மா நானா ஓ தமிழ அம்மாயி' தெலுங்குப் படத்துல (அப்படத்தின் தமிழ் ரீமேக்தான், `எம்.குமரன் S/O மகாலட்சுமி') நடிச்சேன். பணத்தேவைக்காக வந்த வாய்ப்புகளிலெல்லாம் நடிக்காம, நடிப்புக்கும் என் வயசுக்கும் ஏத்த பொறுப்புள்ள கேரக்டர்கள்லதான் இப்போவரை நடிச்சுகிட்டு இருக்கேன். இதுக்கிடையே நடிச்சு சம்பாதிச்ச பணத்தில், கடன் சுமைகளையெல்லாம் முழுமையா சரிப்படுத்தினேன். பசங்களை படிக்கவச்சு, வாழ்க்கைத் தேவையைப் பூர்த்திசெய்துகிட்டேன். இப்போ சில சொத்துகள் மட்டும் இருக்கு. ஆனா, எந்தக் கடன் சுமையும் இல்லைங்கிற நிறைவும் சந்தோஷமும் அதிகமாவே இருக்கு.

எங்களுக்குக் கஷ்ட நிலை ஏற்பட்டபோதும், இப்போதும் என் கூடப் பிறந்தவங்க மற்றும் குடும்பத்தினர் எனக்கு ஆதரவாதான் இருக்காங்க. சொத்துகளை இழந்ததெல்லாம், சினிமா தயாரிப்பு பணிகளால்தான். இந்நிலையில் என் கணவர் இறந்துட்டார். பிறகு, என் பசங்களுக்கு அடுத்து, என் குடும்பத்தினர்தான் எனக்குப் பக்கபலமா இருக்காங்க. அவங்க யாரும் என் சொத்துகளை அபகரிக்கலை. உண்மைநிலை இதுதான். யாரும் தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம்" என வேண்டுகோள் விடுக்கிறார் ஜெயசுதா.