Published:Updated:

``நானும் சிவாவும் அஜித் சார் ஷூட்டிங்கை ஓரமா நின்னு வேடிக்கை பார்த்தவங்க!'' - ஒளிப்பதிவாளர் வெற்றி

``நானும் சிவாவும் அஜித் சார் ஷூட்டிங்கை ஓரமா நின்னு வேடிக்கை பார்த்தவங்க!'' - ஒளிப்பதிவாளர் வெற்றி
``நானும் சிவாவும் அஜித் சார் ஷூட்டிங்கை ஓரமா நின்னு வேடிக்கை பார்த்தவங்க!'' - ஒளிப்பதிவாளர் வெற்றி

"அஜித் சார் படங்கள் சூப்பர் ஹிட்டாகி, அவர்மேல எதிர்பார்ப்பு அதிகமா இருந்த காலம் அது. ஷூட்டிங்ல நானும், சிவாவும் அஜித் சார் நடிக்கிறதை ஓரமா நின்னு வேடிக்கை பார்ப்போம்."

மிழ் சினிமாவில் தொடர்ந்து நான்கு அஜித் படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தவர் வெற்றி. தற்போது ராகவா லாரன்ஸ் இந்தியில் ரீமேக் செய்யும் `காஞ்சனா' படத்துக்கு ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்தவரிடம் பேசினேன்.  

``அஜித் கூட தொடர்ந்து நான்கு படங்கள்ல வேலை பார்ப்பீங்கனு நினைச்சீங்களா?"

``அஜித் சார் கூட வேலை பார்த்தது சந்தோஷமான விஷயம். என் வாழ்க்கையில நான் என்ன சாதிச்சேன்னு நினைக்கிறப்போ, எனக்குத் திருப்தியா இருக்கிற ஒரு விஷயம் இது. ஒருகாலத்துல அஜித் சார்கூட வேலை பார்க்கணும்ங்கிறது எனக்கும், டைரக்டர் சிவா சாருக்கும் பெரிய கனவா இருந்தது. இன்ஸ்டிட்யூட்ல நானும் சிவாவும் ஒளிப்பதிவு படிச்சோம். அப்போ எங்க காலேஜ்ல அஜித் சார் நடிச்ச `காதல் கோட்டை', `ஆசை', `வாலி' படங்களின் ஷூட்டிங் நடந்தது. அவர் படங்கள் சூப்பர் ஹிட்டாகி, அவர்மேல எதிர்பார்ப்பு அதிகமா இருந்த காலம் அது. ஷூட்டிங்ல நானும், சிவாவும் அஜித் சார் நடிக்கிறதை ஓரமா நின்னு வேடிக்கை பார்ப்போம். `நாமளும் அஜித் சார் படத்துல வொர்க் பண்ணுவோமா'னு நினைச்ச சமயம் அது. பிறகு, அவர்கூட வரிசையா படங்கள் பண்ணும்போது, இதை அவர்கிட்ட சொன்னோம். அவர் ரொம்ப சந்தோஷப்பட்டார். `வீரம்' படத்துக்குப் பிறகு தொடர்ந்து அவர்கூட வொர்க் பண்ணுவோம்னு நினைக்கவே இல்லை."

``உங்களுக்கும் சிவாவுக்குமான நட்பு பற்றி?"

``நானும், அவரும் ஒண்ணா படிச்ச காலத்துல இருந்தே நண்பர்கள். சிவாவுக்கு இயக்குநர் ஆகணும்னு ஆசை. சினிமா சம்பந்தமா ஏதாச்சும் ஒரு டிகிரி கையில இருக்கணும்னு ஒளிப்பதிவு படிச்சார். சினிமாவுக்கு வந்த புதுசுல நான் நிறைய தோல்விகளைத்தான் பார்த்தேன். மனசளவுல துவண்டு போயிருந்த சமயம். நானும், சிவாவும் தெலுங்கு படமான `சவுரியம்' ஷுட்டிங்காக ஆந்திரா போயிருந்தோம். தயாரிப்பு நிறுவனத்திடம் பேசி, சிவா எனக்கு வாய்ப்பு கொடுத்தார். நாங்க தங்கியிருந்த ஹோட்டல் பக்கத்துல ஒரு சாய்பாபா கோயில் இருந்தது. சிவா என்கிட்ட சாய்பாபா பற்றிச் சொல்லிட்டு, `இவரைக் கும்பிட்டுக்கோ. கண்டிப்பா வாழ்க்கையில் நல்லது நடக்கும்'னு சொன்னார். அதுக்குப் பிறகு என் வாழ்க்கையில பல நல்லது நடந்தது. மத வேறுபாடு இல்லாம எல்லோரும் சாய்பாபாவைக் கும்பிடுவாங்க. நானும் அப்படிதான்."  

``அஜித் சார் கூட தொடர்பில் இருக்கீங்களா?"

``அவருக்கு ஏதாவது கேட்கணும்னா, அவரே போன் பண்ணிப் பேசுவார். நான் ஏதாவது சொல்லணும்னா அவருக்கு போன் பண்ணிப் பேசுவேன். புதுப் படத்துல கமிட் ஆகிறப்போ அவருக்குச் சொல்லுவேன். மத்தபடி, அவரை தொந்தரவு பண்ணமாட்டேன். டெக்னிக்கலா ஸ்ட்ராங்கான ஆள். அவரும் கேமராவை நல்லா கையாள்பவர். லைட்டிங் பற்றி ஏதாச்சும் சந்தேகம் கேட்பார்." 

``சிவாவுக்குப் பிறகு, ராகவா லாரன்ஸ் கூட அதிகமான படங்களில் வேலை பார்த்திருக்கீங்க. இது பற்றி?"

`` `காஞ்சனா' படத்துலதான் நானும் அவரும் முதல்முறையா சேர்ந்து வொர்க் பண்ணோம். சில கதைகளைக் கேட்கும்போது, கண்டிப்பா இந்தப் படம் ஹிட் ஆகும்னு தெரியும். `காஞ்சனா' அப்படித்தான். தவிர, எந்தப் படத்தோட கதையைக் கேட்டாலும் சிவாகிட்ட, `இந்தக் கதை எனக்கு இப்படி ஃபீல் ஆச்சு'னு சொல்வேன். `காஞ்சனா' ப்ளாக் பஸ்டர் ஹிட் அடிக்கும்னு அப்பவே ஆணித்தரமா சொன்னேன். ஏன்னா, லாரன்ஸ் மாஸ்டர் சொன்ன கதை அப்படி இருந்தது. வழக்கமான பேய் படமா இல்லாம, அதுல காமெடியை மிக்ஸ் பண்ணியிருந்தார். பேய் படங்களில் வித்தியாசமான ஜானரை இந்தப் படம்தான் ஆரம்பிச்சு வச்சதுனு சொல்லலாம். `காஞ்சனா 2' படத்தின்போது `வீரம்' படத்துல கமிட்டாகியிருந்தேன். அதனால இடையிடையே ஒளிப்பதிவு செய்தேன். `காஞ்சனா 3' முழுக்க வொர்க் பண்ணினேன்."

`` `காஞ்சனா' இந்தி ரீமேக்ல வொர்க் பண்ற அனுபவம்?"

``ஷூட்டிங் ஆரம்பிச்சுட்டோம். அக்‌ஷய் குமார் சார்கூட என் நண்பர்கள் பலரும் வொர்க் பண்ணியிருக்காங்க. நான் இப்போதான் முதல் முறையா அவர்கூட வொர்க் பண்றேன். சரியான நேரத்துக்கு வந்திடுவார். ரொம்ப கம்ஃபர்ட்டா, ஃப்ரெண்ட்லியா இருக்கார். இதுவரை ஒரு பாட்டும், சில காட்சிகளும் ஷூட் பண்ணியிருக்கோம். அவருக்கு இந்தக் கதைமேல பெரிய நம்பிக்கை இருக்கு. இந்திக்காக கதையில சில மாற்றங்கள் பண்ணியிருக்கோம். சரத்குமார் ரோல்ல நடிக்க அமிதாப் பச்சன், சஞ்சய் தத் சார்கிட்ட பேசிட்டிருக்கோம். இன்னும் முடிவாகலை. தமிழ்நாட்டுல இருந்து நானும், லாரன்ஸ் மட்டும்தான். படத்துல மற்ற எல்லோரும் பாலிவுட் ஆள்கள்தான். லாரன்ஸ் சார் ஒளிப்பதிவுக்கு பாலிவுட் கேமராமேனை கமிட் பண்ணாம, என்னைக் கூப்பிட்டது சந்தோஷம். இதுக்காக அவருக்குத்தான் நன்றி சொல்லணும். சிறுத்தை சிவாகிட்ட இந்த வாய்ப்பு பற்றிச் சொன்னப்போ, `மிகப் பெரிய வாய்ப்பு, தொழில்ரீதியா அடுத்த அடி எடுத்து வைக்கிற... வாய்ப்பை மிஸ் பண்ணிடாதே'னு சொன்னார்." 

``அஜித்கிட்ட `காஞ்சனா' இந்தி ரீமேக் பற்றிப் பேசுனீங்களா?"

``அஜித் சார் பிறந்தநாளுக்கு போன் பண்ணும்போது இதைச் சொல்லலாம்னு இருக்கேன். அவரைச் சுத்தியிருக்கிறவங்க நல்லாயிருந்தா, அஜித் சார் ரொம்ப சந்தோஷப்படுவார். குறிப்பா, `விவேகம்' படத்தோட ஒளிப்பதிவு அஜித் சாருக்குப் பிடிக்கும். நாங்க மெனக்கெட்டதைப் பக்கத்துல இருந்து பார்த்தவர். `இந்தப் படத்துக்கு நிறைய உழைச்சிருக்கீங்க. ஹாலிவுட்டுக்கு நீங்க போகணும்'னு சொன்னார்."

அடுத்த கட்டுரைக்கு