Published:Updated:

பொதுக்குழு நடத்த வழிவகை இல்லை! - விஷால் மனுவும் தனி அலுவலர் பதிலும்

பொதுக்குழு நடத்த வழிவகை இல்லை! - விஷால் மனுவும் தனி அலுவலர் பதிலும்
பொதுக்குழு நடத்த வழிவகை இல்லை! - விஷால் மனுவும் தனி அலுவலர் பதிலும்

'சங்கங்களின் பதிவாளர், அலுவலக சட்ட’த்தின் கீழ் (சொசைட்டீஸ் ரிஜிஸ்ட்ரேஷன் ஆக்ட்) பதிவு செய்யப்பட்டு இயங்கிவரும் ’தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க’த்தின் மீது ’விதிமுறைகளை முறையாகக் கடைபிடிக்காதது’, ’கணக்குவழக்குகளை முறையாகக் கையாளாதது’ உள்ளிட்ட புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்தது தமிழக அரசு.

மாவட்டப் பதிவாளர் அந்தஸ்திலான இந்த அதிகாரியின் பதவிக்காலம் ஓராண்டு என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சங்கத்துக்கு தேர்தல் நடத்துவதற்கான பணிகள் உள்ளிட்ட சங்கத்தின் அத்தனை செயல்பாடுகளும் இந்த சிறப்பு அதிகாரி மேற்பார்வையிலேயே நடைபெற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த நியமனத்தை எதிர்த்து, சங்கத்தின் தலைவர், நடிகர் விஷால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.


மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுவுக்கு விளக்கம் கேட்டு மே 7-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு இன்று நோட்டிஸ் அனுப்பியுள்ளது. இதனிடையே, சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட மாவட்டப் பதிவாளர் என்.சேகர், தன்னுடைய பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.  

விஷால் மனுவை அடுத்து, தனி அலுவலர் சேகர் பெயரில் தயாரிப்பாளர் சங்கத்தின் அண்ணா சாலை அலுவலகத்தில் நோட்டீஸ் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. அதில், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க தனி அலுவலர் பொறுப்பேற்றுள்ள நிலையில், முன்னாள் நிர்வாகிகளால் 01.05.2019 அன்று நடத்த உத்தேசிக்கப்பட்டிருந்த சங்கப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுவதற்கு வழிவகையில்லை என்ற விவரம், இதன்மூலம் அனைத்து உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்படுகிறது'' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.