Published:Updated:

``மாநாடு, சிம்புதேவன் படம், பெரிய பட்ஜெட்ல வெப் சிரீஸ்..!"- இது வெங்கட் பிரபு 2.0

``மாநாடு, சிம்புதேவன் படம், பெரிய பட்ஜெட்ல வெப் சிரீஸ்..!"- இது வெங்கட் பிரபு 2.0
``மாநாடு, சிம்புதேவன் படம், பெரிய பட்ஜெட்ல வெப் சிரீஸ்..!"- இது வெங்கட் பிரபு 2.0

``மாநாடு, சிம்புதேவன் படம், பெரிய பட்ஜெட்ல வெப் சிரீஸ்..!"- இது வெங்கட் பிரபு 2.0

``வெங்கட்பிரபு டீம்னாலே பார்ட்டி பாய்ஸ் இமேஜ் இருந்துச்சு. ஆனா இப்ப உங்களை எங்கேயும் வெளியில பார்க்க முடியறது இல்லையே?” - முதல் கேள்வியைக் கேட்டதுமே சிரிக்கிறார். ``பார்ட்டிக்கு போனா, `இதே வேலையானு கேக்குறாங்க. போகாம இருந்தா, `எங்க ஆளையே காணோம்’னு சொல்றீங்க. ஆனா அந்த இமேஜ்ல இருந்து வெளியில வரணும்ங்கிறதுக்காக பார்ட்டிகளை தவிர்க்கிறது கிடையாது. ‘ரொம்ப நல்லா என்ஜாய் பண்ணிட்டோம், போதும்’னு தோணுது, அவ்வளவுதான். இதோ இப்ப என் படம் `பார்ட்டி’ங்கிற டைட்டிலோடயே வரப்போகுது. அப்ப என்ன சொல்லுவீங்கனு தெரியலை. ஆனா, `மாநாடு’ படத்துக்குப்பிறகு நீங்க நிச்சயம் இந்தக் கேள்வியே கேட்க மாட்டீங்க.” இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் அப்படியொரு உற்சாகம். பழைய `சென்னை-28’ டீம், இயக்கம், நடிப்பு, தயாரிப்பு, ஃபேமிலி... என்று அவர் பேசிய அந்த ஞாயிறு சந்திப்பிலிருந்து...

``நான் கொஞ்சம் ஃப்ரெண்ட்லியான ஆள். அதனாலேயே நண்பர்கள் அதிகம். செயின்ட் பீட்ஸ் பள்ளியில படிக்கும்போது கார்த்திக் ராஜா, சூர்யா, கார்த்தி, விஷ்ணுவர்தன், கிருஷ்ணா, வைபவ், மகேஷ்பாபு இவங்கலாம் என் ஸ்கூல் மெட்ஸ். இப்படி சினிமாவுலயும் வெளியிலயும் எனக்கு நிறைய நண்பர்கள். ஆனா எஸ்பிபி அங்கிள் பையன் சரணும் மலேசியா வாசுதேவன் அங்கிள் பையன் யுகேந்திரனும் நெருங்கிய நண்பர்கள். பிறகு சரண் படிக்கிறதுக்காக அமெரிக்கா போனார். எஸ்பிபி அங்கிள் சொல்லித்தான் என்னையும் எங்க அப்பா படிக்க ஃபாரினுக்கு அனுப்பினார். முதல்ல அமெரிக்கா போனேன். பிறகு லண்டன்லதான் ஹைஸ்கூல், காலேஜ் எல்லாம். அடுத்து என் தம்பி பிரேமும் அங்க மியூசிக் படிக்க வந்தான். அந்தச் சமயத்தில் அப்பாவுக்கு இங்க பொருளாதார நெருக்கடி. படிக்கும்போதே, சினிமா தியேட்டரில் வேலை, அக்கவுன்டன்ட் வேலை, ஒரு சூப்பர் மார்க்கெட்ல நைட் ஷிப்ட், சாலைகள்ல ஃபிளையர்ஸ் கொடுக்குறதுனு நிறைய வேலைகள் பார்த்துதான் சமாளிச்சேன். தம்பியையும் அப்படித்தான் படிக்கவெச்சேன். 

``மாநாடு, சிம்புதேவன் படம், பெரிய பட்ஜெட்ல வெப் சிரீஸ்..!"- இது வெங்கட் பிரபு 2.0

பிறகு சென்னை வந்து யுகேந்திரன், சரணுடன் சேர்ந்து ஆர்க்கெஸ்ட்ரா ஆரம்பிச்சு கச்சேரிகள் பண்ணினோம். கூடவே ‘டேக் 2’னு ஒரு ஆங்கில சினிமா மாத இதழ் ஆரம்பிச்சோம். அப்ப அது ரொம்ப புது கான்செப்ட். நான்தான் அதோட எடிட்டர். என் கசின் வாசுகி பாஸ்கர், சரண்னு நல்ல டீம் உதவி பண்ணினாங்க. பிறகு நடிக்க முயற்சி பண்ணினேன். ‘ஏப்ரல் மாதத்தில்’, ‘ஜீ’, ‘சிவகாசி’னு சில படங்கள் நடிச்சேன். அந்த சமயத்தில் விஜய் டிவியில் பாலசந்தர் சார் புரொடக்ஷன்ல ‘ஊஞ்சல்’னு ஒரு சீரியல். அதன் டைரக்டர் சுந்தர் கே.விஜயன் சார். அவரோட கோ-டைரக்டர்தான் சமுத்திரக்கனி. அந்த டிவி சீரியலின் ஹீரோ சரண். அப்படித்தான் சமுத்திரக்கனி நட்பு கிடைச்சது. பிறகு அவர் டைரக்ஷன்ல ராஜ் டிவியில் மைக்ரோ தொடர்கள் மேக்ரோ சிந்தனைகள்னு ஒரு தொடர். அதாவது வாரம் ஒரு கதைதான் அதோட கான்செப்ட். அதில், `பூபாலம்’னு ஒரு கதை. மலேசியா வாசுதேவன் அங்கிள் ஹீரோ. அதில் நான், சரண், யுகேந்திரன் மூணு பேரும் நடிச்சோம். அதுல கனி அண்ணனுக்கு என்னைப் பிடிச்சுப்போய், ‘உன்கிட்ட ஏதோ இருக்கு. நாம சேர்ந்து நிறைய ஒர்க் பண்ணுவோம்’னு சொன்னார். பிறகு இன்னொரு கதை. அதில் நான் ஹீரோ, லட்சுமி மேடம் பொண்ணு ஐஸ்வர்யா ஹீரோயின். 

அந்தச் சமயத்துல சரணுக்கு ஒரு புரொடக்ஷன் கம்பெனி ஆரம்பிக்கலாம்னு யோசனை. கேபிடல் ஃபிலிம் ஒர்க்ஸ்’னு கம்பெனி ஆரம்பிச்சு கனி டைரக்ஷன்ல முதல் படம் ‘உன்னைச் சரணடைந்தேன்’. நான் ஹீரோ, சரண் வில்லன். இனி கனி ஆஸ்கரே வாங்கினாலும் அவரோட முதல் படத்துல நான்தான் ஹீரோங்கிறதை யாராலயும் மாத்த முடியாது. (சிரிக்கிறார்) அந்தப் படத்தில் சரணுக்கு நிறைய லாஸ். ‘இல்லடா நாம பெருசா பண்ணுவோம்’னு சொன்ன சரண், தெலுங்குல வர்ஷம் பட ரீமேக் ரைட்ஸ் வாங்கி ஜெயம் ரவியை வெச்சு ‘மழை’ படம் பண்ணினார். அதில் நான்  வில்லன். அதிலும் சரணுக்கு லாஸ். இதுக்கிடையில எங்க டீம்ல முதல்ல நடிகனான யுகேந்திரன் கல்யாணம் ஆகி சிங்கப்பூர் போயிட்டான். 

இதுக்கு முன்னதா, சிங்கப்பூர்ல ஜேகே சரவணன்னு ஒரு ஃப்ரெண்ட். அவங்க அப்பாதான் இளையராஜா-கங்கைஅமரன் நிகழ்ச்சிகளை சிங்கப்பூர்-மலேசியாவுல முதன்முதல்ல நடத்தினவர். அந்த சரவணன் சிங்கப்பூர் சேனல் ஒண்ணுல ‘பிளானெட் கலாட்டா’னு ஒரு மணிநேரம் வெரைட்டி புரோகிராம் பண்ணிட்டு இருந்தார். அதுல, ‘ஒவ்வெரு எபிசோடுக்கும் ஒரு புது பாடல். மியூசிக் வீடியோ டிரெண்ட் கொண்டுவருவோம்’னு பேசினோம். நான்தான் பாடல்கள் எழுதிக்கொடுத்தேன். ‘இந்தப்பாட்டை இப்படி எடுக்கலாம், அப்படி எடுக்கலாம்’னு சொல்லிட்டு இருப்பேன். ‘பாட்டுக்கான சிச்சுவேஷன்லாம் நல்லா சொல்ற. நீயே ஷூட் பண்ணியும் கொடுத்துடு’னு சொன்னார். அப்படி ஆறேழு பாடல்கள் ஷூட் பண்ணிக்கொடுத்தேன். அதுல ‘அலை அலையாய்’ என்ற ஒரு பாடல் அவங்களோட தயாரிப்பு நிறுவனத்துக்கு அந்த நாட்டு அரசின் தேசிய விருதை வாங்கித்தந்துச்சு. 

இந்த சமயத்துலதான் நான் சரண்ட்ட ஒரு கதையோட ஒன்லைன் மட்டும் சொன்னேன். ‘நல்லாயிருக்குடா பண்ணலாம். நீயே டைரக்டராகிடு’னான். ‘கனியை வெச்சு பண்ணலாம்’னு சொன்னேன். ‘இது உன்னோட ஐடியா. நீ பண்ணினாதான் நல்லா இருக்கும்’னு சரண் சொன்னார். அந்த சிங்கப்பூர் சரவணனும் ‘டேய், பிரபு சொல்றதை அழகா எடுத்துக்கொடுத்துடுறான். நல்லா பண்ணிடுவான். நீ இதை புரடியூஸ் பண்றதா இருந்தா நானும் வர்றேன்’னு அவரும் புரொடக்ஷன்ல சேர்ந்தார். பிறகு யுவனும், ‘பிரபுவுக்கு டைரக்ஷன் சான்ஸ். சரணும் சரவணனும் புரொடியூஸ் பண்றாங்கன், நானும் வர்றேன்’னு வந்தார். இவங்களுக்கெல்லாம் என்ன நம்பிக்கைனு தெரியலை. 

ராஜேஷ் யாதவ், யுவன்னு அப்ப சேர்ந்ததுதான் இந்த டீம். அந்த ப்ராஜெக்ட் சூப்பரா செட் ஆச்சு. ஆபிஸ் போட்டு டிஸ்கஸ் பண்ணினா, மூன்றரை கோடி பட்ஜெட் வந்துச்சு. ஏற்கெனவே பண்ணின படங்கள்னால பெரிய லாஸ்ல இருந்த சரண், ‘உடனடியா இவ்வளவு செலவு பண்ண எனக்கு சக்தி இல்லடா. இதை ஓரமா வெச்சுட்டு சின்னதா ஏதாவது ஒரு படம் பண்ணலாம்’னு சொன்னார். பிறகு சொன்ன லைன்தான் சென்னை-28. எல்லாருமே புதுசு. டயலாக்கோட முழு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டு ஸ்கிரிப்ட் ரீடிங்கோட இரண்டு மாசம் ரிகர்சல் பண்ணினோம். சீன் நம்பர் சொன்னா போதும், பசங்க விறுவிறுனு டயலாக் சொல்ற அளவுக்குவுக்கு தெளிவா இருந்தோம். அதனாலதான் கேமராவை ஒளிச்சு வெச்சு ஷூட் பண்ணினமாதிரி படம் நிஜமான பதிவா இருந்துச்சு. பிறகு எல்லாமே மாறிடுச்சு. சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாஸ், சென்னை-28 பார்ட் 2, இப்ப ‘பார்ட்டி’ ரெடி. கூடவே ‘ஆர்.கே.நகர்’ படத்தின் தயாரிப்பு, ஹாட் ஸ்டாருக்காக ஒரு வெப் சீரீஸ் டைரக்ஷன்னு வேலைகள் பரபரப்பா போயிட்டு இருக்கு.””

``மாநாடு, சிம்புதேவன் படம், பெரிய பட்ஜெட்ல வெப் சிரீஸ்..!"- இது வெங்கட் பிரபு 2.0


‘பார்ட்டி’யில் என்ன எதிர்பார்க்கலாம்?”


“எனக்கு ஒரே ஜானர் படங்கள் பண்றதுல விருப்பம் கிடையாது. நான் சினிமா தியேட்டர்ல வேலை செஞ்சு நிறைய இங்கிலீஷ் படங்கள், ஃபாரின் படங்கள் பார்த்து வளர்ந்தவன். சினிமா பார்த்துதான் சினிமா கத்துகிட்டேன். யார்ட்டயும் உதவியாளரா இருந்தது இல்லை. ஒரே நாள் இரவில் நடக்கும் கதை, பல கதைகள் ஒண்ணு சேர்வதுனு ‘சரோஜா’வை டார்க்கா  பண்ணினேன். அமெரிக்கன் பை, ரோட் ட்ரிப், கலர்ஃபுல்லா ‘கோவா’ பண்ணினேன். இந்த வகைப் படங்களை ‘புரோமான்ஸ்’னு சொல்லுவாங்க. ஃபாரின் ஜானர்தான். ஹிந்தியில் இப்படி ‘ஜில் சாதா ஹை’ பண்ணியிருந்தாங்க. அடுத்து ஆக்ஷன் அட்வென்சர். ‘ரிசர்வாயர் டாக்ஸ்’தான் இன்ஸ்பிரேஷன். இந்தமாதிரிப் படங்கள்ல கொள்ளையடிக்கிறதைத்தான் கதையா வெச்சிருப்பாங்க. கொள்ளைக்குப்பிறகு என்ன ஆகிறது, யார் யாரை ஏமாத்துறாங்கனு பண்ணினதுதான் ‘மங்காத்தா’.அடுத்து ஒரு க்ரைம் நாவல் மாதிரி பண்ணணும்னு ஆசைப்பட்டு பண்ணின மர்டர் மிஸ்ட்ரி படம்தான் ‘பிரியாணி’. ‘கல்யாணராமன்’ படத்தை இன்ஸ்பிரேஷனா வெச்சுகிட்டு அப்பா புள்ளைக்கு நடுவுல நடக்குற இமோஷனலான ஹாரர் படம்தான் ‘மாஸ்’. நம்ம ஊர் படங்கள்ல ஒரு பேய்தான் கண்ணுக்கத் தெரியும், ஏன் எல்லா பேயும் கண்ணுக்குத் தெரியுறமாதிரி பண்ணினா என்னனு தோணுச்சு ‘மாஸ்’ பண்ணினோம். அந்தப்படம் சரியா ஓடாததால அடுத்து எனக்கு சான்ஸ் கிடைக்கலை. அதாவது யாரும் தரலை. நம்மளே வாய்பை உருவாக்கிக்குவோம்னு ‘சென்னை-28’ன் அடுத்த பார்ட்டை நானே தயாரிச்சேன். அது நல்லா போச்சு. பிறகு அம்மா கிரியேஷன்ஸ் சிவா சாரின் தயாரிப்பில் ‘பார்ட்டி’ முடிச்சிருக்கேன். பணமதிப்பிழப்புக்குப் பிறகு நடந்த விஷயங்களை மனசுலவெச்சுகிட்டு இதை ஒரேநாளில் நடக்கும் கதையா ஃப்ரேம் பண்ணியிருக்கேன்.   அடுத்து ‘மாநாடு’க்கு தயாராகிட்டே இருக்கோம்.”


“திடீர்னு தயாரிப்பாளராயிட்டீங்க. என்ன ஸ்பெஷல்?”

“சென்னை-28ல் இருந்த அத்தனை உதவி இயக்குநர்களும் இயக்குநர்களாயிட்டாங்க. ‘கனிமொழி’ படம் பண்ணின ஸ்ரீபதி இப்ப தெலுங்குல ஒரு படம் பண்ணிட்டு இருக்கார். ‘பிளானட் கலாட்டடாவுக்காக ஸ்டோரி போர்ட் போட வந்தவர்தான் பா.இரஞ்சித். பிலிப்னு ஒரு ஆர்ட்டிஸ்ட்தான் ஃபைன் ஆர்ட்ஸ் ஸ்டூடன்ட்டான ரஞ்சித்தை கூட்டிட்டு வந்தார். பிறகு நான் படம் பண்றேன்னதும் ‘சென்னை 28’க்கு ஸ்டோரி போர்ட் பண்ணிக்கொடுத்தார். பிறகு டிஸ்கஷன்லயும் கலந்துகிட்டு ‘சென்னை-28’, ‘சரோஜா’, ‘கோவா’னு மூணு படங்கள்லயும் வேலை செஞ்சார். சந்துரு 'நவீன சரஸ்வதி சபதம்' பண்ணார். ஷக்தி, ‘டிக் டிக் டிக்’ பண்ணினார். ‘கோவா’வில் என்கிட்ட சேர்ந்த சரவணராஜன்தான் நான் தயாரிக்கிற ‘ஆர்கே நகர்’ படத்தின் இயக்குநர். ‘நளனும் நந்தினியும்’ ராமகிருஷ்ணன், ‘ஜருகண்டி’ பிச்சுமணி, இப்ப பா.இரஞ்சித் தயாரிப்பில் படம் பண்ணப்போற சுரேஷ் மாரினு கிட்டத்தட்ட என் உதவி இயக்குநர்கள் எல்லாருமே இயக்குநர்களாயிட்டாங்க. நாங்க அத்தனை பேரும் ‘டைரக்டர்ஸ்‘ என்ற பெயர்ல ஒரு வாட்ஸ்அப் குரூப் வெச்சிருக்கோம். தங்களோட படத்துக்கான காட்சியை டிஸ்கஸ் பண்றது, பாயின்ட்ஸ் எடுத்து கொடுக்குறதுனு அதுலயே உரையாடல் போகும். சமயங்கள்ல யாராவது சிக்குனா ஃபுல் கலாயா போகும். என்னை கலாய்க்க மாட்டாங்க. குரூப்புக்கு வெளியில கலாய்ப்பாங்கனு நினைக்கிறேன். என் அசிஸ்டென்ட் மட்டுமில்லாம நல்ல ஸ்கிரிப்ட் வெச்சிருக்கிற திறமையான இளைஞர்களை வெச்சு படம் புரொடியூஸ் பண்ணணும்னுதான் ‘பிளாக் டிக்கெட்’னு கம்பெனியே ஆரம்பிச்சேன். ‘ஆர்.கே.நகர்’ படத்தைத் தொடர்ந்து சிம்புதேவன் சார் டைரக்ஷன்ல ஒரு படம் முடிச்சிருக்கோம். அது என்ன மாதிரியான படம்னு விரைவில் அறிவிப்பு வெளிவரும்.”


“ஆர்.கேநகர்’ பட ரிலீஸ்லகூட நிறைய சிக்கல்கள். தயாரிப்புல என்னமாதிரியான சவால்களை எதிர்கொண்டீங்க.?”

“படம் தயாரிக்கிறது ரொம்ப எளிது. ஆனா, அதை ரிலீஸ் பண்றதுதான் பெரிய சவால். ‘ஆர்.கே.நகர்’ படத்தை இன்டஸ்ட்ரில மரியாதை உள்ள ஒரு நல்ல தயாரிப்பாளர் வாங்கி ரிலீஸ் பண்றேன்னு சொல்லி ஒரு அட்வான்ஸ் கொடுத்தார். ஆனால் அவருக்கு இப்ப பண நெருக்கடி. இதில் கிடைக்கிறதை விநியோகஸ்தர்களுக்கு அவர் தரவேண்டிய கடனில் கழிச்சுக்கலாம் என்பது ஐடியா. ஆனா, அட்வான்ஸ் போக மீதி அமவுண்டை அவரால் எங்களுக்குத் தர முடியலை. ‘இந்தப் படத்தை தனியா பிசினஸ் பண்ணி நீங்க தந்த அட்வான்ஸ் தொகையை கொடுத்துடுறோம்’னு சொன்னோம். ‘அந்தத் தயாரிப்பாளர் தரவேண்டிய பாக்கிக்காக அவர் தந்த அட்வான்ஸ் தொகையை என்கிட்ட கொடுங்க’னு நிறைய பேர் வரிசையில் நிக்கிறாங்க. ‘அவர் தந்த அமவுண்டை விநியோகஸ்தர்கள் சம்மேளனத்துல தந்துடுறேன், நீங்க தடையை நீக்குங்க. அந்தத் தயாரிப்பாளரின் பெரிய கடனுக்கு இந்த சின்னப்படத்தை பகடைக்காயா வைக்கிறது எந்தவகையில் நியாயம்’ என்பதுதான் என் கேள்வி. கூடிய சீக்கிரம் ரிலீஸ் பண்ணிடுவோம்.”

“நீங்க டைரக்ட் பண்ற அந்த வெப் சீரிஸ் எப்படி இருக்கும்?”

“ ‘இதுதான் நம்ம முதல் படம்’னு அன்னைக்கு நான் சரணுக்கு சொன்ன அந்தக் கதையைதான் இப்ப ஹாட் ஸ்டாருக்கு பண்றேன். அப்ப கொடுத்த பட்ஜெட்டைவிட பெரிய பட்ஜெட்ல பண்றோம். ஆனா அதுக்கு 12 வருஷம் காத்திருக்க வேண்டியதாப்போச்சு. கிரிக்கெட் கமென்ட்ரி மாதிரிதான் தமிழ்ல பண்ணிட்டு மற்ற மூணு தென்னிந்திய மொழிகள்லயும் டப் பண்றோம்.”

``மாநாடு, சிம்புதேவன் படம், பெரிய பட்ஜெட்ல வெப் சிரீஸ்..!"- இது வெங்கட் பிரபு 2.0

“வீட்ல உங்க மனைவி என்ன சொல்றாங்க?”

“மனைவி, ராஜலட்சுமி. என் 25-வது வயசுலயே எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு. அவங்க பரதநாட்டியம் டீச்சர் கே.ஜே.சரசாவின் மகள். மூத்தவ ஷிவானி, சின்னவ விக்ருதினு எங்களுக்கு ரெண்டு பொண்ணுங்க. இவங்களை பார்த்துக்கிறது, பெரியவங்களை கவனிச்சுக்கிறதுனு அவங்க பொறுப்பான குடும்பத்தலைவி. பத்து வருஷம் கூட்டுக் குடும்பம். பிறகு தனிக்குடித்தனம். அதன்பிறகு ஒரு சொந்த வீடு. அதைத்தொடர்ந்து புதுசா கட்டின வீடுனு... இந்த 18 வருஷத்துல பெரிய டிராவல் போன மாதிரி இருக்கு. ‘நான் நடிக்கிறேமா’னு சொன்னா, ‘ஓகே பண்ணுங்க’ம்பாங்க. ‘டைரக்ட் பண்ணப்போறோன்’னு சொன்னாலும். ‘சூப்பர் பண்ணுங்க’ம்பாங்க. அவங்க என்னை நம்பலைனா இன்னைக்கு நான் இல்லை.”

“மற்ற ஃப்ரெண்ட்ஸ் ஓகே. சரண், யுகேந்திரனுடனான நட்பு எப்படி இருக்கு? அவங்க இப்ப என்ன பண்றாங்க?”

“ஒண்ணா கச்சேரி பண்ணிட்டு, ஒண்ணா சுத்திட்டு கிரிக்கெட் ஆடிட்டு இருந்த பசங்க நாங்க. நான் ஆர்.ஏ.புரம், சரண் மகாலிங்கபுரம். யுகேன் சாலிகிராமம். முக்கால்வாசி நேரம் ஆர்.ஏ.புரம்தான் கிரவுண்ட்லதான் இருப்போம். இல்லைனா சரண் வீட்ல இருப்போம். ஏரியாவிட்டு எரியா போய் கிரிக்கெட் ஆடுவோம். இப்ப ஸ்ட்ரீட் கிரிக்கெட் கிடையாது. அப்ப ரோட்லயேதான் விளையாடுவோம். பந்து வீட்டுக்குள்ள போனா அவுட்னு சொல்லுவோம். கார்ப்பரேஷன் கிரவுண்ட்ல நைட் ஃப்ளட் நைட் மேட்ச்சுக்கெல்லாம் போவோம். கொஞ்சநாள் கழிச்சு எங்க ரெஸ்பான்சிபிளிட்டி எங்களை வெவ்வேறு இடங்களுக்கு அழைச்சிட்டு போச்சுனுதான் சொல்லணும். யுகே, சிங்கப்பூர் போயிட்டான். நடிப்புல வரமுடியலைனு அவனுக்கு வருத்தம். அப்ப நான் டைரக்டர் ஆகலை. ‘ஏதாவது படத்துல சான்ஸ் கொடுடா’னு எப்பயாவது கேட்பான். ‘டேய், உனக்கு ஒழுங்கா அங்க லைஃப் நல்லா போயிட்டு இருக்கு. அங்கயே இருடா’ம்பேன். ‘ரம்பூட்டான்’னு ஒரு தயாரிப்பு நிறுவனம். சிங்கபுர்ல ஷோஸ். நியூசிலாந்துல செட்டில்ட்னு அவன் லைஃப் நல்லா இருக்கு. அவன் மனைவி ஹேமமாலினி. பசவங்க அங்கயே படிக்கிறாங்க. ‘நியூசிலாந்து தமிழ்ச்சங்கத்துல வெச்ச குறும்படப்போட்டி கன்டென்டை உனக்கு அனுப்பிவிடுறேன். நீதான் ஜட்ஜ் பண்ணி அனுப்பநும். அதை ட்வீட் பண்ணு’னு சொல்லுவான். சமீபத்தில் ஒரு டெலிவிஷன் ஃபிலிம் காம்படிஷன். அதுக்கு ஓப்பனிங் வாய்ஸ் நரேஷனை போன்லயே பேசி அனுப்பினேன். 

``மாநாடு, சிம்புதேவன் படம், பெரிய பட்ஜெட்ல வெப் சிரீஸ்..!"- இது வெங்கட் பிரபு 2.0

சரண், புரொடக்ஷனை விட்டுட்டார். அவர் சென்னை-28க்குப்பிறகு பண்ணின ‘நாணயம்’, ‘ஆரண்யகாண்டம்’ உள்பட எல்லாமே நல்லப் படங்கள். ஆனால் அவை எதுவும் பணம் தரலை. அதுலயே கொஞ்சம் விரக்தியாயிட்டார். ஃபோர்ஸ் பண்ணிதான் சென்னை-28 பார்ட் டூ பண்ணவெச்சோம். இப்ப டெலிவிஷன் நிகழ்ச்சிகள், பாட்டு, கச்சேரினு மியூசிக் சைடுல திரும்ப டிராவல் பண்ண ஆரம்பிச்சிருக்கார். நாங்க எங்க எப்படி இருந்தாலும் மனசளவில் எப்பவும் ஸ்ட்ரீட் கிரிக்கெட் ஆடுற அதே ஃப்ரெண்ட்ஸ்தான்.”


இவை தவிர

“ •சமீபத்தில் அஜித்தை சந்தித்தித்துள்ளீர்கள். நீங்கள் மறுபடியும் சேர்ந்தால், அது ‘மங்காத்தா’வின் அடுத்த பார்ட்டா அல்லது வேறு கதையா?”

• சிம்புவை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரவைப்பதே பெரிய சவால் என்கிறார்கள். அவரை நீங்கள் எப்படி மாநாடாக அழைத்து வரப்போகிறீர்கள்?,

• ‘பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குநர், டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பல கலைகளில் திறமையாளரான உங்கள் அப்பா, சரிவரக் கொண்டாடப்படாததற்கு அவர் மேல உள்ள அந்த ஃபன் இமேஜ்தான் காரணம் எ நினைக்கிறீர்களா?”

• இளையராஜா-75 நிகழ்ச்சியில் அப்பா உட்பட உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரையும் அங்கு  பார்க்க முடியவில்லையே. ஏன்?” போன்ற பல கேள்விகளுக்கான இயக்குநர் வெங்கட் பிரபுவின் விரிவான  பதில்களை நாளை வரும் ஆனந்த விகடனில் படியுங்கள்.

அடுத்த கட்டுரைக்கு