Published:Updated:

``அஜித்தும் நானும் பார்த்த விஜய் படம்!" - இயக்குநர் சரண் #HBDAjith

எம்.குணா

இன்று நடிகர் அஜித் பிறந்தநாள். அவருடனான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார் இயக்குநர் சரண்.

``அஜித்தும் நானும் பார்த்த விஜய் படம்!" - இயக்குநர் சரண் #HBDAjith
``அஜித்தும் நானும் பார்த்த விஜய் படம்!" - இயக்குநர் சரண் #HBDAjith

மே - 1. நடிகர் அஜித் பிறந்தநாள். அவருக்கு ஆக்‌ஷன் நடிகர் என்ற முகவரியைக் கொடுத்தவர் இயக்குநர் சரண். `அமர்க்களம்' படத்தில் அஜித் - ஷாலினியை ஜோடியாக நடிக்க வைத்தவர். அஜித்தின் மறுபக்கம் குறித்துப் பகிர்ந்துகொள்கிறார் சரண். 

* `காதல் மன்னன்' எடுத்தபோது சினிமா ஸ்டிரைக் வந்தது. அதனால், படப்பிடிப்பு தடைபட்டது. நான் படம்பிடித்தவரை எடிட்டிங் செய்து, அதற்கு டப்பிங் பேச அஜித்தை அழைத்தேன். முதன்முதலாக `எனக்கு ஜெயிக்கிறதுதான் முக்கியம்' வசனத்தைப் பேசினார் அவர். 

* `காதலுக்கு மரியாதை' படத்துக்குப் பிறகு கவிஞர் வைரமுத்து வற்புறுத்தியும் சினிமாவில் நடிக்க மறுத்த ஷாலினி, `காதல் மன்னன்' படத்தில் அஜித்தைப் பார்த்தவுடனே `அமர்க்களம்' படத்தில் நடிப்பதற்கு ஓகே சொன்னார். 

* கே.பாலசந்தரின் `டூயட்' படத்துக்காக `அஞ்சலி... அஞ்சலி' பாடலை ரெக்கார்டிங் செய்துகொண்டிருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான். அப்போது பாடலைக் கேட்டு ரசித்த கவிஞர் வாலி, `அமர்க்களம்' என்று பாராட்டினார். அந்த வார்த்தை பிடித்துப்போக, அப்போதே 'அமர்க்களம்' டைட்டிலை ரிஜிஸ்டர் செய்தேன். 

* சினிமாவில் எனக்குத் தெரிந்து அஜித் படத்தைத் தயாரித்தவர்கள் யாரும் கஷ்டப்பட்டதும் இல்லை; நஷ்டப்பட்டதும் இல்லை. `அமர்க்களம்' படத்தில் நான்தான் முதன்முதலாக `லக்கி ஸ்டார்' அஜித், `லவ் ஸ்டார்' ஷாலினி என டைட்டில் கார்டில் பதிவு செய்தேன். 

* ஏற்கெனவே போனில் அஜித் குரலைக் கேட்டிருந்தாலும், முதன்முறையாக ஷாலினி வீட்டுக்கு அஜித்தை அழைத்துகொண்டு போனேன். அப்போது மாடியிலிருந்து இறங்கிய ஷாலினி, இவரைப் பார்த்ததும் நெர்வஸாகிப் படிக்கட்டில் இடறி விழுந்தார். அப்போதே இருவருக்கும் காதல் அலாரம் அடிக்க ஆரம்பித்துவிட்டது. 

* சினிமாவில் சுயம்பாக வளர்ந்தவர் அஜித். `நான் தண்ணி ஊத்தி வளர்த்த வீட்டு மரம் இல்லை; தானா வளர்ந்த காட்டு மரம்... கொத்தணும்னு நினைச்சா, கோடரி சிக்கிக்கும்' என `அமர்க்களம்' படத்தில் இடம்பெற்ற பன்ச் பெரிதாகப் பேசப்பட்டது. 

* `அமர்க்களம்' படத்தில் இடம்பெற்ற `உன்னோடு வாழாத...' பாடல் காட்சியை அமைத்த விதம் எல்லோராலும் ரசிக்கப்பட்டது. உண்மையிலேயே அந்தப் பாடலை வெளிப்புறத்தில் படமாக்க பணமில்லாமல்தான், வீட்டிலேயே படமாக்கினோம். 

* ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித், ஷாலினி, நான் மூவரும் இருந்தோம். அஜித், `நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்' என ஆரம்பிக்க, `நானும்தான்' என்று ஷாலினி ஆமோதித்தார். நானும் அவர்களோடு சேரவே, மூவரும் சேர்ந்து `கல்யாணம் பண்ணாதவர் கிளப்' ஆரம்பித்தோம். ஒரேநாளில் அந்த கிளப்பை பிரேக் அப் பண்ணியது அஜித்தான்.

* நடிகராக அல்லாத அஜித்தின் கேரக்டர் அலாதியானது. பலர் நினைப்பதுபோல அவர் எமோஷனல் மனிதர் அல்ல. நகைச்சுவை உணர்வு அவருக்கு அதிகம். எப்போதும் தானும் சிரித்து, சுற்றி இருப்பவர்களையும் சிரிக்கவைக்க நினைப்பார். `அட்டகாசம்' படத்தில் இடம்பெற்ற ஆட்டோ காமெடியை அடிக்கடி செல்போனில் பார்த்து ரசித்துச் சிரிப்பார்.  

* `அமர்க்களம்' படத்துக்குப் பிறகு `ஏறுமுகம்' என்றொரு படம் அஜித்தை வைத்து எடுக்க ஆரம்பித்தோம். ஒரு மாதம் படப்பிடிப்பு நடந்தது. ஒரு பாடலும் படமானது. ஆனால், சில காரணங்களால் அப்படத்தைத் தொடரமுடியவில்லை. 

* இன்றைக்கு வார கலெக்‌ஷனை வைத்தே புதுப் படங்களின் ரிசல்ட் கணிக்கப்படுகிறது. முதன்முதலில் இதற்குப் பிள்ளையார் சுழி போட்டதே `அட்டகாசம்' திரைப்படம்தான். அப்போது சென்னை போன்ற நகரங்களில் நான்கு தியேட்டர்களில் மட்டுமே ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடு இருந்தது. தமிழகத்தில் உள்ள எல்லா இடங்களிலும் 2 கி.மீ இடைவெளியில் ஒரு தியேட்டர் என்ற கணக்கில் `அட்டகாசம்' வெளியாகி ரெக்கார்டு ஆனது.   

* விஜய் நடிக்கும் படத்தை கவிதாலயா நிறுவனத்துக்காக இயக்க என்னை அழைத்தனர். மும்பை தாதாவுக்கு நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து `அட்டகாசம்' படக் கதையை உருவாக்கினேன். தவிர்க்க முடியாத சூழலால் விஜய் நடிக்க முடியாமல்போக, அஜித்துக்காக மாற்றினேன். மும்பையை, தூத்துக்குடியாக மாற்றி அமைத்து எடுத்ததுதான், `அட்டகாசம்' படம். 

* இதுவரை அஜித்தின் போட்டியாளர் என்று சொல்லப்படுகிற ஹீரோ ஒருநாளும் அஜித்துக்குத் தொந்தரவு கொடுத்ததில்லை. அந்த ஹீரோவுக்கு அஜித்தும் தொந்தரவு கொடுத்ததில்லை. வேறு சில ஹீரோக்கள் பலமுறை தொல்லை கொடுத்ததை நானறிவேன். 

* நாங்கள் இருவரும் அடிக்கடி சினிமா தியேட்டரில் மக்களோடு மக்களாக அமர்ந்து பல திரைப்படங்களைப் பார்த்து ரசித்திருக்கிறோம். பெரும்பாலும் அஜித் மாறுவேடத்தில் வருவார். நானும் அவரும் தியேட்டரில் சேர்ந்து பார்த்த விஜய் படம் `வில்லு'.

* இசை உலகின் ஜாம்பவான் எம்.எஸ்.வி மீது மிகுந்த மதிப்பு கொண்டவர் அஜித். `காதல் மன்னன்' படத்தில் நடித்தபோது இருவருக்கும் மிகுந்த அன்பு இருந்தது. பின்னாளில் எம்.எஸ்.வி மறைந்தபோது, மனைவி ஷாலினியுடன் சென்று அஞ்சலி செலுத்தினார்.