Published:Updated:

``சினிமா பார்ப்பது பண்பாட்டு நிகழ்வாகிப்போன சமூகத்தில் அஜித் படங்கள் என்னென்ன செய்தன?!" - #HBDAjith

``சினிமா பார்ப்பது பண்பாட்டு நிகழ்வாகிப்போன சமூகத்தில் அஜித் படங்கள் என்னென்ன செய்தன?!" - #HBDAjith
``சினிமா பார்ப்பது பண்பாட்டு நிகழ்வாகிப்போன சமூகத்தில் அஜித் படங்கள் என்னென்ன செய்தன?!" - #HBDAjith

நடிகர் அஜித் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை.

டின உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு தனக்கான சாதனை சாம்ராஜ்யத்தை உருவாக்கிய கதை அவருடையது.  90-களின் தொடக்கம். தமிழ்த் திரைப்படம் ஒன்றின் பாடல் காட்சியில், 30-க்கும் குறைவான நொடிகள் பள்ளி மாணவனாகத் திரையில் தோன்றிய ஒரு சிறுவனைப் பலருக்கும் நினைவில் நிற்காமல் போயிருக்கலாம். பின்னாள்களில் அந்த இளைஞன் தன் கடும் உழைப்பினால்,  தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் நினைவில் நிற்கும் வண்ணம் தன் இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். அவரில்லாத அரங்குகளில், அவரது பெயர் உச்சரிக்கப்படுகையில் அரங்கத்தின் ஆர்ப்பரிப்பு அடங்கவே சில மணித்துளிகளாகின்றன. படத்தின் முதல் நாள் முதல் காட்சி திரையரங்கங்கள் திருவிழாக்கோலம் கொள்கின்றன. இத்தனை மக்களின் அன்பைப் பெறுவது அவ்வளவு சுலபம் அல்ல. இந்த அன்பைத் திட்டமிட்டு பெறவும் முடியாது. அவர்தான், அஜித்குமார்!  

திரைப்படத்துறையில் வாய்ப்பு கிடைப்பது மட்டுமல்ல, நுழைவதற்கான வாய்ப்பு என்பதும்கூட அரிதினும் அரிதான ஒன்று. இன்றைய வைரல் காலகட்டத்தில் தனிப்பட்ட திறமைகளைப் பிறர் அறியச் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால், அந்த இளைஞன் நடிகராக சினிமாவில் அறிமுகமான காலகட்டம் அத்தனை எளிதாக சிவப்புக் கம்பளங்கள் விரித்துப் புதியவர்களை வரவேற்ற காலமல்ல. ஏற்கெனவே சினிமாவில் இருப்பவர்களுக்குத் தெரிந்தவர்களாகவோ, உறவினராகவோ இருப்பவர்களுக்கு சினிமாவில் நுழைவதற்காவது வாய்ப்புகள் இருந்தன. பல சிரமங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் `அமராவதி' திரைப்படம் மூலம் அறிமுகமாகிறார், அஜித்.

முதல் படத்திலேயே பலரது கவனத்தையும் தன்பக்கம் பதிய வைக்கிறார். பலரும் இவரது நடிப்பைப் பாராட்ட சிலரோ `டப்பிங் வாய்ஸ்' அந்தப் பையனுக்குக் கொடுத்திருக்கிறார்கள் எனக் குற்றம் சாட்டினர். பிறகு, அடுத்த இரண்டு வருடங்களில் ஒரு தெலுங்குப் படம் உட்பட 5 படங்களில் நடிக்கிறார். 1995-ல் வெளியான `ஆசை' திரைப்படம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்துகிறது. பிறகு நடித்த அத்தனை படங்களிலும் தன்னை மெருகேற்றிக்கொண்ட, அஜித் தன் படங்களில் எல்லாம் தனக்கான அடையாளத்தைக் கட்டமைக்கிறார். 

முகம் பார்க்காமலே காதலித்துக்கொண்டிருக்கும் தமிழ் சினிமா அதுவரை கண்டிராத கதைக்களத்தில் தன் கமலிக்காக `நலம் நலமறிய விரும்பிய' சூர்யாவைத் தமிழ் சினிமா தாலாட்டத் தொடங்கியது. மேன்ஷன் அறையில் சுவரில் பிரித்து மாட்டப்பட்டிருக்கும் பைக் ஸ்பேர் பார்ட்ஸைப் பார்த்துக்கொண்டும், பைக் பார்க்கிங்கில் மல்லாந்து படுத்து `உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே' என திலோத்தமாவை நினைத்து 'சிவா'வாக அவர் உருக, தமிழ் சினிமாவின் நம்பிக்கையான முகங்களில் இடம் பெறுகிறார், அஜித்.

`காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா' எனத் தவித்த ஜீவாவை தமிழ்க் குடும்பங்கள் ஏற்றுக்கொண்டன. காது கேட்காத, வாய் பேசாத மாற்றுத்திறனாளி இளைஞனாக கண்களால் அத்தனை உணர்வுகளையும் வெளிப்படுத்தும் `தேவா' கதாபாத்திரத்தில் நடித்தபோது, அஜித்தின் வயது 28. இரட்டை வேடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அஜித்துக்கு ஃபிலிம்பேர் விருது கிடைக்கிறது. மறுபுறம், அதே படத்தில் தனக்கு `சோனா' என்ற காதலி இருந்தார் என `ரீல் சுற்றி' ப்ரியாவை காதலித்து திருமணம் செய்யும் குறும்புக்கார சிவாவை ரசிகர்கள் கொண்டாடினர்.`அமர்க்களம்' படத்தில் ஸ்ரீனிவாசா தியேட்டரின் ஸ்கிரீனுக்குப் பின்புறம் தூங்கிக் கிடந்த `அறமற்ற' வாசு, மோகனாவிடம் மனம்திருந்தி சட்டை பட்டன்களை மாட்டிக்கொண்டு, குழந்தைபோல நிற்பான். இறுதிக்காட்சியில், அதே மோகனாவிற்காகத் தன் கழுத்துச் செயினை, கைகளில் சுற்றி அடி வெளுப்பதைப் பார்த்து அவரது ரசிகரானவர்கள் ஏராளம்.

தன் குடும்பத்தையும், கனவையும் ஒரு சேர நேசித்த `முகவரி' ஸ்ரீதரின் நடிப்பு குடும்பங்களால் கொண்டாடப்பட்டது. தன் இயக்குநர் கனவு நிறைவேறியவுடன், `பரீட்சையில பாஸ் பண்ணின மாதிரி இருக்கு செளமியா' எனத் தன் காதலியிடம் தவிக்கும் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' மனோகர் எவ்வளவு ரம்மியமானவர். 'கதவைத் தொற செளமியா' எனப் படத்தின் இறுதிக்காட்சிகளில் தன் காதலியிடம் கெஞ்சித் தவித்துவிட்டு, வாசலுக்கு அருகில் நின்று 'என்ன சொல்லப்போகிறாய்' என்பதாய் கைகள் விரித்து நிற்கும் மனோகர், தமிழ் சினிமாவில் தனது அடுத்தகட்ட வளர்ச்சியை அடைந்திருந்தார். `உங்களுக்கு சண்டை பிடிக்குமா' எனத் தன் காதலியிடம் கேட்டுவிட்டு தனது உடலில் உள்ள `மெட்டல்' பிராப்பர்டீசையும் கழற்றி வைக்கும் `தீனா' படத்தின் காட்சி இப்போதும் பல ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட். அந்தப் படம் பார்த்து காதில் கடுக்கன் மாட்டியவர்கள் பலர். காலமாற்றத்தில் `அமராவதி'யில் அறிமுகமான அஜித், `தீனா' படத்துக்குப் பின் `தல' என மாஸ் ஹீரோவாக உருவெடுத்தார். வித்தியாசமான வேடமிட்டு எதிரிகளைப் பழிதீர்க்கும் `சிட்டிசன்', இரட்டை வேடத்தில் நடித்த `வில்லன்', குடும்பங்கள் கொண்டாடிய `பூவெல்லாம் உன் வாசம்' என அஜித்தின் வளர்ச்சி அதிகரித்த காலகட்டத்தில் சறுக்கல்களும் ஏற்பட்டன. 

சினிமா கனவுகளின் தேசம். ஆச்சர்யங்கள் நிறைந்த இத்துறையில்தான் கடுமையான சவால்களும் நிறைந்தது. மற்ற துறைகளில் எல்லாம் அனுபவம்தான் பிரதானம். சினிமாவில் வெற்றி... தொடர் வெற்றி... இமாலய வெற்றி... இவைதான் பிரதானம். சிறு தோல்வி பலரின் இருப்பை இரக்கமின்றி நிராகரித்துள்ளது. அப்படிப் பல பெரிய தோல்விகளிலிருந்தும் மீண்டார் அஜித். நடிக்க ஆரம்பித்த தொடக்கத்திலேயே ஒரு பைக் ரேஸில் விபத்து காரணமாக மூன்று அறுவை சிகிச்சைகள்; ஒன்றரை ஆண்டுகள் ஓய்வெடுக்க வேண்டிய நிலை. அதைக் கடந்து இன்று வரை 19 ஆபரேஷன்கள் செய்தபோதும், அசராது தனது கடின உழைப்பினால் தனக்கென ஓர் இடத்தை நிறுவியிருக்கிறார். தந்தையின் கனவைச் சுமக்கும் `கிரீட'மாக இருந்தாலும் சரி, இரக்கமற்ற, அறமற்ற `பில்லா', 'மங்காத்தா' விநாயக்காக இருந்தாலும் சரி ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்கு தன்னை ஒப்புக்கொடுத்திருக்கிறார். நேர்மையான காவல்துறை அதிகாரி, மகளை அளவுகடந்து நேசிக்கும் தகப்பன் என `என்னை அறிந்தால்' படத்தில் வெர்சடைல் ஆக்டிங்கைக் கொடுத்தவர். `வீரம்', 'விஸ்வாசம்' என கிராமத்து மசாலாக்களிலும் 'வசூல் வேட்டை' நடத்துகிறது இவரது படங்கள்.

30 நொடிகள் தமிழ் சினிமாவில் முகம் காட்டிய அஜித், 20 வருடங்களைக் கடந்து வந்துள்ளார். ஆம், அஜித்குமார் என்ற தனிமனிதனின் வளர்ச்சி தன்னம்பிக்கை நிறைந்ததுதான். சினிமா தமிழர்களின் வாழ்வில் ஓர் அங்கம். சினிமா பார்ப்பதென்பதே பண்பாட்டு நிகழ்வாகிப்போன சமூகத்தில்  அஜித் படங்கள் பலரின் பால்ய காலத்தின் மறக்கமுடியாத இடம் பிடித்துள்ளன. ஆம், ரசிகர்களின் வார்த்தைகளில் சொல்வதானால் அது ஒரு 'அல்டிமேட்' காலம்.

அஜித்தின் புகைப்படத்தை அட்டையாகக்கொண்ட `லாங் சைஸ் `நோட் புக்கை வாங்கிக் கொடுத்து தன் காதலை நிறைவேற்றி, இன்று அந்தக் காதல் ஜோடி தன் குழந்தைக்கு `தீனா' எனப் பெயர் வைத்தது வரை பல பதிவுகளை நம்மால் கவனிக்க முடிகிறது. `சிட்டிசன்' படத்தில் குடிநீரின்றித் தவிக்கும் கடற்கரை கிராம மக்கள் படகில் புறப்பட, பின்னணியில் ஒலிக்கும் பாடல் வரிகள் 90-களின் தொடக்கத்தில் வந்த அஜித்துக்காகவே எழுதப்பட்டவைதாம் போல!.

``ரெக்கை கட்டி ரெக்கை கட்டி வாடா 
வானம் உண்டு வெல்ல 
வண்ணச்சிறகின் முன்னே வானம் பெரிதல்ல 
இதயம் துணிந்து எழுந்த பின்னாலே 
இமயமலை உந்தன் இடுப்புக்குக் கீழே 
நரம்புகள் வரம்புகள் மீறித் துடிக்கட்டும்!"

அந்த இளைஞன் அஜித், இன்று பலரும் கொண்டாடும் ஒரு நடிகனாக வளர்ந்துவிட்டார். எப்போதாவது டிவி-யில் 'உன்னைப் பார்த்த பின்பு நான்' என திலோத்தமாவிற்காகப் பாடும் அஜித்தை ஒருகணம் நின்று ரசிக்காதவர் இருக்க முடியுமா என்ன... பிறந்தநாள் வாழ்த்துகள் அஜித்! 

அடுத்த கட்டுரைக்கு