Published:Updated:

"ஜீவா, அன்புக்கரசு, பக்கடா... சாக்பீஸ் வாசனையுடன் பள்ளிக்கு அழைத்துச் சென்ற 'பசங்க' " - #10YearsOfPasanga

"ஜீவா, அன்புக்கரசு, பக்கடா... சாக்பீஸ் வாசனையுடன் பள்ளிக்கு அழைத்துச் சென்ற 'பசங்க' " - #10YearsOfPasanga
"ஜீவா, அன்புக்கரசு, பக்கடா... சாக்பீஸ் வாசனையுடன் பள்ளிக்கு அழைத்துச் சென்ற 'பசங்க' " - #10YearsOfPasanga

'ஏன்பா இங்கிலீஷ் மீடியம் புக்ல இருக்கிறதுக்கும் இதுல இருக்கிறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு' என அன்பு விதைக்கும் கேள்வியிலும், 'நல்லா படிக்கிறவங்க முகத்தைப் பார்த்துதான் வாத்தியார் பாடமெடுப்பாங்க' என குட்டிமணி உதிர்த்த வார்த்தைகளிலும் அத்தனை ஆழம். பெற்றோர்கள், ஆசிரியர்களின் செயல்கள் எந்தளவுக்குக் குழந்தைகளைப் பாதிக்கும் என்பதை மிக நுட்பமாகக் காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குநர்.

பள்ளிப் பருவத்தைப் படம் பிடித்துக் காட்டிய படங்களை எடுத்துக்கொண்டால், பெரும்பாலும் ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ காலகட்டம்தான் அதிகம் காட்டப்பட்டிருக்கும். அதிலும் பெரும்பாலும் காதலைத்தான் மையப்படுத்திச் சொல்லியிருப்பார்கள். சமீபத்தில் வெளியான '96' படம்கூட அந்த வரிசையில்தான் அடங்கும். '96' படத்தைப் பார்த்து பலர் தங்கள் பள்ளிக்கால காதலை நினைத்து நாஸ்டால்ஜியா கடலில் மூழ்கிப்போயினர். பள்ளிப் பருவத்தில் காட்டப்படும் காதல் மட்டும்தான் நம்மை நாஸ்டால்ஜியா கடலில் மூழ்கடிக்கச் செய்யுமா என்ன... நிச்சயம் இல்லை. ‘காதல்’ என்ற சொல் அறிமுகமாகும் முன்பான பதின்மத்தில் நுழையும் தருணத்தில் பள்ளியில் நாம் செய்த குறும்புத்தனங்கள், சக மாணவரிடம் அற்ப விஷயத்துக்காகச் சண்டையிட்ட நாள்கள், ஆசிரியரிடம் வாங்கிய திட்டு.. இவையெல்லாம்தான் அந்தக் கள்ளம் கபடமற்ற பருவத்தை அழகாக்குகின்றன. அப்படிப் பதின்மத்தில் நுழையும் 'பசங்க' உலகத்தையும் அவர்களின் சேட்டையையும் மிகவும் யதார்த்தமாகப் பதிவு செய்த படம் 'பசங்க.' அந்தப் படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.

"ஜீவா, அன்புக்கரசு, பக்கடா... சாக்பீஸ் வாசனையுடன் பள்ளிக்கு அழைத்துச் சென்ற 'பசங்க' " - #10YearsOfPasanga

‘லொசுக்கு’ என எவருக்கும் அடங்காத ஜீவா, ‘முதல் பென்ச்’ மாணவனான அன்புக்கரசு... இவர்களுக்கு இடையே நடக்கும் சம்பவங்கள்தான் கதை. 'கதை முடியிற வரைக்கும் நாங்க வளர மாட்டோம்' எனப் படத்தின் தொடக்கத்தில் அன்பு சொல்வான். அவன் சொன்னதுபோலவே, அவர்கள் வளரவில்லை. மாறாக, பார்வையாளர்களான நம்மை அவர்களின் உலகத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அவர்கள் மூலமாக நம்முடைய பதின்பருவ நினைவுகள் சாக்பீஸ் வாசனையுடன் மீண்டும் மலர்ந்தன.

பேப்பரில் கேமரா செய்து போட்டோ எடுப்பது, அட்லஸில் இருக்கும் நாடுகளைப் பார்த்து, 'நான் இங்கே போவேன்' எனச் சொல்லி ஆனந்தம் கொள்வது, புது மாதம் பிறந்ததும் காலண்டரில் எத்தனை நாள்கள் விடுமுறை என எண்ணுவது... எனப் பசங்களின் யதார்த்த செயல்களை அப்படியே திரையில் கொண்டு வந்ததுதான், படத்தின் மிகப்பெரிய பலம்.

"ஜீவா, அன்புக்கரசு, பக்கடா... சாக்பீஸ் வாசனையுடன் பள்ளிக்கு அழைத்துச் சென்ற 'பசங்க' " - #10YearsOfPasanga

படத்தில் ஆகச்சிறந்த காட்சிகள் பல இருந்தாலும், ஜீவா, பக்கடா, குட்டிமணி மூன்றுபேரும் சைக்கிளில் சென்றுகொண்டே உரையாடும் காட்சியில் அத்தனை யதார்த்தம்; அத்தனை அழகு. 'நீ நாக்கால மூக்கைத் தொடுவ, விசில் அடிப்ப, ரெண்டு கையைவிட்டு சைக்கிள் ஓட்டுவ…' என ஜீவாவின் திறமைகளைக் குட்டிமணி எடுத்துக்கூற, இறுதியில் 'நாமும் நல்லா படிக்கணும்டா' எனத் தங்களை நிரூபிக்க மூன்றுபேரும் படிக்க சபதம் எடுப்பதாக முடியும் அந்தக் காட்சி. காட்சியை ஒளிப்பதிவாளர் படம்பிடித்த விதம், நாமும் அவர்களோடு சைக்கிளில் பயணப்படும் உணர்வைத் தரும்.

வகுப்பறையில் லீடரைத் தேர்ந்தெடுப்பது, 'உன்னால நான் கெட்டேன்; என்னால நீ கெட்ட' எனக் காதுகளைப் பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போடுவது, பேசுறவங்க பெயரைக் கரும்பலகையில் எழுதிவைப்பது, நாணயத்தை வைத்து காகிதத்தில் டிரேஸ் செய்வது,  பிராக்ரஸ் கார்டு கொடுக்கும் நேரத்தில் திடீரென பக்திமயமாக மாறுவது, வீட்டுப் பாடத்தை சத்தமாகப் படிப்பது... என அடுக்கடுக்கான காட்சிகளால் அந்தப் பருவத்துக்கு மீண்டும் ஒருமுறை நம்மையும் அழைத்துச் சென்றார்கள்.

"ஜீவா, அன்புக்கரசு, பக்கடா... சாக்பீஸ் வாசனையுடன் பள்ளிக்கு அழைத்துச் சென்ற 'பசங்க' " - #10YearsOfPasanga

'அன்புக்கரசு IAS' என ஆறாம் வகுப்பு படிக்கும்போதே போட்டுக்கொள்ளும் அன்புக்கரசுவின் பாசிட்டிவிட்டி படம் முழுக்க விரிந்து கிடக்கும். அன்புவின் தாய், தன் குடும்பத்தின் இயலாமையை, வருத்தத்தை வார்த்தைகளால் தெரிவிப்பார். அன்புவோ, தன்னிடம் ஒரு மிதிவண்டி இல்லை என்ற ஏக்கம் இருந்தாலும், அந்தக் கவலையைத் துடைப்பதற்குக் கண்ணீரைப் பயன்படுத்தாமல், தன் கற்பனையால் பைக்கையே ஓட்டுவான், சந்தோஷப்படுவான். அவனின் இந்த நேர்மறை சிந்தனைகளால், படம் பார்ப்பவர்களிடம் அத்தனை நெருக்கமாகச் சென்றடைந்தான். நிஜத்தில் சிலர் தங்கள் குழந்தைக்கு அன்புக்கரசு எனப் பெயர் சூட்டும் அளவுக்கு நேசிக்கப்பட்டான், அன்பு. இந்தப் படத்தின் இயக்குநர் பாண்டிராஜும் தன் மகனுக்கு ‘அன்புக்கரசு’ எனப் பெயர் சூட்டினார்.

அசட்டுச் சிரிப்போடு இருக்கும் விமல், புருவத்தை வைத்தே பல கதைகள் சொல்லும் வேகா... இவர்களுக்கிடையேயான காதல் காட்சிகள் ஹைக்கூ கவிதை. படத்தில் எல்லோருடைய பாத்திரப் படைப்புமே அருமையாக இருந்தாலும், ஜீவாவின் தந்தையாக வரும் சொக்கலிங்கம் (ஜெயப்பிரகாஷ்) என்ற வாத்தியாரின் பாத்திரப் படைப்பு மிக அருமை. சண்டை போட்டவரிடமே திரும்பச் சென்று பிரச்னையைத் தீர்க்க முயற்சி செய்வது, அன்புவை ஊக்கப்படுத்துவது, தன் பையனாக இருந்தாலும் வகுப்பறையில் சமமாக நடத்துவது... என இவரது பாத்திரப் படைப்பு மனதை அள்ளும். 'வீட்டுப் பாடம் செய்யாத கிழவி புருஷன், கிழவன் பொண்டாட்டிங்க' என அவர் திட்டும்போது, நமக்குப் பாடம் எடுத்த வாத்தியாராகவே கண்முன் நின்றார் அவர்.

"ஜீவா, அன்புக்கரசு, பக்கடா... சாக்பீஸ் வாசனையுடன் பள்ளிக்கு அழைத்துச் சென்ற 'பசங்க' " - #10YearsOfPasanga

'சாம்பிராணி போட்டது போதும்', 'சாப்பிடல் கேட்குது' என வட்டார வார்த்தைகளால் வசனம் அமைத்துப் படத்துடன் ஒன்றச் செய்திருப்பார், பாண்டிராஜ். 'ஏன்பா இங்கிலீஷ் மீடியம் புக்ல இருக்கிறதுக்கும் இதுல இருக்கிறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு' என அன்பு விதைக்கும் கேள்வியிலும், 'நல்லா படிக்கிறவங்க முகத்தைப் பார்த்துதான் வாத்தியார் பாடமெடுப்பாங்க' என குட்டிமணி உதிர்த்த வார்த்தைகளிலும் அத்தனை ஆழம். பெற்றோர்கள், ஆசிரியர்களின் செயல்கள் எந்தளவுக்குக் குழந்தைகளைப் பாதிக்கும் என்பதை மிக நுட்பமாகக் காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குநர்.

ஜேம்ஸ் வசந்தனின் இசையில் 'ஒரு வெட்கம் வருதே வருதே', 'அன்பாலே அழகாகும் வீடு' இரண்டு பாடலும் காதுகளுக்குள் நுழைந்து, நெஞ்சுக்கு விருந்து படைக்கும். இந்தப் படம் இயக்குநர் பாண்டிராஜுக்கு முதல் படம் என்றால் நம்ப முடியாது. முதல் படத்திலேயே தேசிய விருதை வென்றார். இவருக்கு மட்டுமல்ல, நடித்த பசங்க கைகளிலும் தேசிய விருது தவழ்ந்தது. இன்றும் மக்கள் மனதில் அவர்கள் நிஜப் பெயரைவிட ஜீவா, அன்புக்கரசு, பக்கடா, குட்டிமணி எனப் பாத்திரப் பெயர்களால் மக்கள் அவர்களை நினைவுகூர்கிறார்கள். அதுதான், இயக்குநர் பாண்டிராஜுக்கும் அந்தப் பசங்களுக்கும் கிடைத்த நிஜ விருது.

"ஜீவா, அன்புக்கரசு, பக்கடா... சாக்பீஸ் வாசனையுடன் பள்ளிக்கு அழைத்துச் சென்ற 'பசங்க' " - #10YearsOfPasanga

ஆம், 'பசங்க' படம் மாணவர்களுக்குத் தங்களையே திரையில் காண, இளைஞர்களுக்குத் தன் மாணவப் பருவத்தைத் திரும்பிப் பார்க்க, பெரியவர்களுக்குத் தங்கள் குழந்தைகளின் உலகைப் புரிந்துகொள்ள, சமூகத்துக்கு முரண்பாடுகளைக் கொஞ்சம் தெரிந்துகொள்ள உதவும் உன்னதமான படைப்பு. படத்தை இயக்கிய பாண்டிராஜ், தயாரித்த சசிகுமார், நடித்த நடிகர்கள், பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள்... என அத்தனைபேருக்கும் 10 வருடங்களுக்குப் பிறகும் வாழ்த்தும் நன்றியும்!

Vikatan
அடுத்த கட்டுரைக்கு