Published:Updated:

"ராமராஜன் பேரை பச்சை குத்திட்டு வர்றவங்களை விஜய் பார்ப்பார்!" - நளினி

"ராமராஜன் பேரை பச்சை குத்திட்டு வர்றவங்களை விஜய் பார்ப்பார்!" - நளினி
"ராமராஜன் பேரை பச்சை குத்திட்டு வர்றவங்களை விஜய் பார்ப்பார்!" - நளினி

கணவர் ராமராஜன், குழந்தைகள், பட வாய்ப்பு, சீரியல் அனுபவம்... எனப் பல விஷயங்களைப் பகிர்கிறார் நடிகை நளினி.

சன் டிவி-யில் ஒளிபரப்பாகிவரும் 'சந்திரலேகா' சீரியலில் பெண்ணைத் தொலைத்துவிட்டு தேடும் கதாபாத்திரங்களாக நளினியும் சித்ரா லட்சுமணும் நடித்திருப்பார்கள். இப்போது, நளினியை அந்த சீரியலில் பார்க்க முடியவில்லை. என்னவென்று விசாரித்தால், 'கதைப்படி இப்போது ஊருக்குப் போயிருக்காங்க நளினி. கண்டிப்பாக மீண்டும் ரீஎன்ட்ரி கொடுப்பாங்க' என்கிறது 'சந்திரலேகா' யூனிட். 

''இரண்டு பசங்களும் செட்டில் ஆகிட்டாங்க. பேரப்பிள்ளைகளைப் பார்த்துக்கிறது, ஷூட்டிங்னு டெல்லி, ஹைதராபாத், சென்னைக்கு டிராவலாகிட்டு இருக்கேன். எனக்கு முழுமையான சந்தோஷம், குடும்பத்தோடு இருக்கிறதுதான். என்னைப் பொறுத்தவரை ஆடம்பரம், அது தரும் சந்தோஷம் என எல்லாத்தையும் பார்த்தாச்சு. அதில், எனக்குப் புரிந்த விஷயம் குடும்பம், உறவுகளோடு இருப்பதுதான் உண்மையான சந்தோஷம்ங்கிறது. ஒருமுறை ராதிகா, 'எப்படி உங்களால மட்டும் இப்படி சந்தோஷமா இருக்க முடியுது. நான் பாருங்க இத்தனை பிரஷரில் மாட்டிக்கிட்டு இருக்கேன்'னு சொன்னாங்க. அவங்களைப் பார்க்கும்போது பாவமா இருக்கும். எதுக்கு இப்படி ஓடுறோம்னு அவங்களுக்கே தெரியல. மொத்தத்தில் 'போதும்'ங்கிற மனசு இருந்தா போதும்'' எனச் சிரித்தவரிடம், 'இத்தனை புகழைத் தாண்டி வந்திருக்கீங்க. அரசியலிலும் இருந்தீங்க. ஏன் அதைத் தொடரல?' என்றேன்.  

"ராமராஜன் பேரை பச்சை குத்திட்டு வர்றவங்களை விஜய் பார்ப்பார்!" - நளினி

''சமூக நலனுக்காகப் பண்ணலாம். ஆனா, இப்போ இறங்கிச் செய்ய எனக்கு விருப்பமில்லை. இந்த சந்தோஷம் போதும்னு நினைக்கிறேன். என் பேரப் பசங்க 'அப்புச்சி'னு என்னைக் கூப்பிடும்போது, அத்தனை கவலையும் பறந்துபோயிடுது. எனக்குக் கல்யாணம் ஆனப்போவே லைனா இருக்கிற வீடுகள்ல எனக்கும் ஒரு வீடு, அந்த வீட்டுல கீரை வாங்கிச் சமைக்கணும்... இப்படிச் சின்னச் சின்ன ஆசைகள் இருந்திருக்கு. ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்குப் போகணும், கார்ல ஆடம்பரமா போகணும்னு நினைச்சதில்லை. ராமராஜனுடன் கல்யாணம் பண்ணிக்கிட்ட பிறகு, தினமும் சாமிகிட்ட 'கடவுளே... இவருக்குப் பட வாய்ப்பு வரக்கூடாது'ன்னுதான் வேண்டுவேன். நானும் நடிக்கக் கூடாது. காசு வரக்கூடாதுன்னு எல்லாம் வேண்டியிருக்கேன். என் அம்மா வீட்டார் பணக்காரங்க. சின்ன வயசுல இருந்தே அதைப் பார்த்து வளர்ந்ததால, எனக்குக் காசு, பணம் ஆடம்பரம்... இவையெல்லாம் பிடிக்காம போயிடுச்சு'' என்றவர், தனது சினிமா பயணம் குறித்துப் பேசினார். 

''1983-ல் சிரஞ்சீவிகூட 'Sangharshana' படத்துல நடிச்சதுகூட அம்மாவின் ஆசைக்காகத்தான். அவங்க ஆசையை என்மேல திணிச்சாங்கன்னுகூட சொல்லலாம். ஆனா, நான் அப்படி இல்லை. என் பிள்ளைங்க எக்காரணம் கொண்டும் படிப்பை விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். 'படிப்பு முடிச்சு நல்ல நிலைக்கு வந்த பிறகு, நீ நடிக்க ஆசைப்பட்டா போ'ன்னு சொன்னேன். என் பிள்ளைகளும் என் வார்த்தைக்குக் கட்டுப்பட்டுப் படிச்சு, இப்போ நல்ல நிலையில இருக்காங்க. அவங்க படிச்சு முடிக்கிற வரைக்கும் எங்க வீட்டுல டிவி கிடையாது தெரியுமா? 

"ராமராஜன் பேரை பச்சை குத்திட்டு வர்றவங்களை விஜய் பார்ப்பார்!" - நளினி

இப்போகூட 'எதுக்குடா அம்மா இன்னும் நடிச்சுக்கிட்டு இருக்கா'ன்னு என் கணவர், பசங்ககிட்ட கேட்டிருக்கார். இந்த வயசுல வீட்டுல சும்மா உட்கார்ந்திருக்கப் பிடிக்கல. அதனாலதான் நடிக்கிறேன்" என்றவரிடம், 'ராமராஜன் ஏன் தொடர்ந்து நடிக்கவில்லை?' என்றேன்.  

'' 'ஹீரோவாதான் நடிப்பேன். இல்லைனா, இப்படியே இருந்துட்டுப் போறேன்'ங்கிறதுதான் அவரோட முடிவா இருந்தது. இப்போகூட ஹீரோ வாய்ப்பு கிடைச்சா நடிச்சிடுவார். இன்னொரு விஷயம் சொல்லணும், அவர் உண்மையிலேயே வெள்ளந்தியான ஆள். மத்தவங்களுக்கு நிறைய உதவி பண்ணுவார், 'உனக்கும் வரும்ம்மா. உன்னை விட்டுடமாட்டேன்'னு சொல்வார். நான் வெகுளின்னா, அவர் வெள்ளந்தி.

ஒரு மலையாளப் பட ஷூட்டிங்கிங்ல 'இந்த டிரெஸ் நல்லாயிருக்கு'னு இயக்குநர் சொன்னார். என்னை ஏற்கெனவே ராமராஜனுக்குப் பிடிச்சிருக்குனு எனக்குத் தெரியல. அவருக்கும் அந்த டிரெஸ்ல என்னை ரொம்பப் பிடிச்சிருந்ததுபோல! அன்னைக்கு விழுந்தவர்தான். பொதுவா என்னை ஷூட்டிங் ஸ்பாட்டுக்குக் கூட்டிக்கிட்டு போக ரொம்பக் கஷ்டப்படணும். ராமராஜன் எனக்கு சாக்லேட் கொடுத்துதான் காம்ப்ரமைஸ் பண்ணுவார். ஒருகட்டத்துல எனக்கும் அவரைப் பிடிச்சுப்போக, ஷூட்டிங் பிரேக்ல ஒருநாள் அவர்கூட ஓடிப்போனேன். ஒரு கோயில்லதான் தாலி கட்டிக்கிட்டோம். தாலியை எடுத்துக்கொடுத்த புரோகிதர் என் வீட்டுக்குத் தெரிஞ்ச ஆள். அவர் என்னைப் பார்த்து பதறுனது இன்னும் என் கண்லயே இருக்கு. அதுக்கப்புறம் வீட்டுல விஷயம் தெரிஞ்சு என்னைத் தேட ஆரம்பிச்சுட்டாங்க. என்னை என் கணவர் வீட்டுக்குக் கூட்டுக்கிட்டு போனப்போதான், 'நீங்க என்ன ஆளுங்க'னு கேட்டேன். அந்தளவுக்கு என்ன, ஏதுன்னே தெரியாம நடந்த கல்யாணம் என் கல்யாணம்!" என்பவர், ஷூட்டிங்குக்காகப் பயணம் செய்யும்போது பாடும் பாடல்கள், சம்பந்தப்பட்ட படத்தில் ஹிட் ஆகும் விஷயத்தைச் சொன்னார்.  

"ராமராஜன் பேரை பச்சை குத்திட்டு வர்றவங்களை விஜய் பார்ப்பார்!" - நளினி

''அது என்ன ராசியோ தெரியாது. படத்தோட ஷூட்டிங்குக்காக டிரெயின்ல போகும்போது, அந்தப் படத்துல வர்ற பாட்டைப் பாடச் சொல்வாங்க. எப்படியும் ஊர் போய்ச் சேர்றதுக்குள்ள பாடிடுவேன். அந்தப் பாட்டு கண்டிப்பாக ஹிட் ஆகிடும். 'மல்லி மல்லி', 'விழியிலே' இப்படிப் பல பாடல்களைச் சொல்லலாம். சில சமயம் என் பசங்ககிட்ட, 'உங்க அம்மாகிட்ட இந்தப் பாட்டைப் பாடச் சொல்லுடா'னு என் கணவரே சொல்லியிருக்கார்" என்றவரிடம், 'ராமராஜனைப் பார்த்துதான் விஜய் நடிக்க ஆசைப்பட்டதா சொல்றாங்களே?' என்றேன். 

"உண்மைதான். சாலிகிராமத்தில்தான் எங்க வீடு. விஜய் வீட்டுக் காம்பவுண்டும் எங்க வீட்டுக் காம்பவுண்டும் பக்கத்து பக்கத்துல இருக்கும். வீட்டை விட்டு வெளியே வர முடியாது. அந்தளவுக்கு ரசிகர்கள் கூட்டம் வரும். விடுமுறை நாள்களில் வெளியூர்ல இருந்து வண்டி கட்டிக்கிட்டெல்லாம் வருவாங்க. பலரும் என் கணவர் பெயரைப் பச்சை குத்தியிருப்பதைக் காட்டுவாங்க. அதையெல்லாம் பார்த்துதான் விஜய்க்கும் சினிமா மீது ஈர்ப்பு வந்திருக்கும்னு நினைக்கிறேன். 

எனக்குக் சினிமாமேல அவ்வளவு ஈர்ப்பு கிடையாது. 'கரகாட்டக்காரன்' படத்துல ஒண்ணுமே இல்லைனு என் கணவர்கிட்ட சொல்லியிருக்கேன்னா பார்த்துக்கோங்க. ஆனா, அவருக்கு சினிமான்னா உயிர். பத்து நிமிடம் பேசினா, அதுல ஐந்து நிமிடம் சினிமாதான் இருக்கும். அவருக்கும் எனக்கும் கிட்டத்தட்ட ஏழாம் பொருத்தம்னே சொல்லலாம்!'' எனச் சிரிக்கிறார் நளினி. 

அடுத்த கட்டுரைக்கு