Published:Updated:

``இரட்டை அர்த்த வசனத்தோட இசையா..? குழந்தைகளை சீரழிக்காதீங்க!'' - அனிதா குப்புசாமி

கு.ஆனந்தராஜ்

`` `மக்கள் இசை'யில் ஆட்டம் தேவையேயில்லை. கோயில் நிகழ்ச்சிகளில்கூட, ஆபாச நடனத்துடன் ரெக்கார்டு டான்ஸ்தான் அதிகம் இடம்பெறுது. அதை, `மக்கள் இசை'னு சொல்றது மிகப்பெரிய முட்டாள்தனம்."

``இரட்டை அர்த்த வசனத்தோட இசையா..? குழந்தைகளை சீரழிக்காதீங்க!'' - அனிதா குப்புசாமி
``இரட்டை அர்த்த வசனத்தோட இசையா..? குழந்தைகளை சீரழிக்காதீங்க!'' - அனிதா குப்புசாமி

நாட்டுப்புற இசையின் தற்போதைய நிலை குறித்து கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள், இந்த இசையில் புகழ்பெற்ற பாடகர்களான, புஷ்பவனம் குப்புசாமி - அனிதா புஷ்பவனம் குப்புசாமி தம்பதி. "நாங்கள் உயர்ந்தநிலைக்கு கொண்டுசென்ற `மக்கள் இசை'யை, சிலர் தவறான வழியில் கொண்டுசெல்கிறார்கள்" என்பது இவர்களின் பிரதான குற்றச்சாட்டு. இதுகுறித்து விரிவாகப் பேசினார், அனிதா புஷ்பவனம் குப்புசாமி. 

``சங்க இலக்கியக் காலம் முதல் தற்போதுவரை, 'மக்கள் இசை'யைப் பிரபலப்படுத்தியதில் பலருக்கும் பங்கு உண்டு. கிராமியப் பாடல் என்பது, நாட்டுப்புறப் பாடலானது. இதுக்கு `மக்கள் இசை'ங்கிற பெயர்தான் பொருத்தமானதுனு என் கணவரிடம் சொன்னேன். பிறகு மக்கள் இசைங்கிற பெயரையும் இந்த இசையையும் (folk) உலகம் முழுக்கக் கொண்டுசென்றதில் என் கணவருக்குப் பெரும் பங்குண்டு. வயதில் மூத்தவர்களாக இருந்தாலும், என் கணவருக்குப் பிறகுதான் நவநீதகிருஷ்ணன் - விஜயலட்சுமி தம்பதி இத்துறைக்கு வந்தாங்க. அதை அவர்களே பலமுறை பெருந்தன்மையுடன் ஒப்புக்கொண்டிருக்காங்க.  

``இரட்டை அர்த்த வசனத்தோட இசையா..? குழந்தைகளை சீரழிக்காதீங்க!'' - அனிதா குப்புசாமி

இந்நிலையில, `மக்கள் இசை'யைத் தவறா பயன்படுத்தி சிலர் பிரபலமாகியிருக்காங்க. இந்த இசையைச் சீரழிச்சு மேலும் பிரபலமாகணும்னு சிலர் நினைக்கிறாங்க. அவங்க, `மக்கள் இசை'யையே நாங்கள்தான் பிரபலப்படுத்தினோம்'ங்கிறதுபோல தற்பெருமை பேசிக்கிறாங்க. அதையெல்லாம் நாங்க பெரிசா எடுத்துக்கலை. ஆனா, `மக்கள் இசை'யை மிகத் தவறான பாதைக்கு கொண்டுபோறதைத்தான் நாங்க எதிர்க்கிறோம். கர்னாடக சங்கீதம்போல, `மக்கள் இசை'யையும் உட்கார்ந்தபடி பாடணும்னுதான் இலக்கணம் வகுக்கப்பட்டிருக்கு. அதை மீறாமல்தான், நாங்க இப்போவரை பாடிக்கிட்டிருக்கிறோம். அனைத்துத் தரப்பு மக்களும் ரசிக்கும்படியாகத்தான் கண்ணியமுடன் நாங்க இந்தத் துறையில் பணியாற்றிகிட்டிருக்கிறோம். ஆனால், இன்னைக்கு குத்துப்பாட்டுபோல `மக்கள் இசை'யை மாற்றுவதும், மக்கள் இசையில் ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்களைச் சேர்ப்பதெல்லாம் மிகத் தவறானது. 

`மக்கள் இசை'யில் ஆட்டம் தேவையே இல்லை. கோயில் நிகழ்ச்சிகளில்கூட, ஆபாச நடனத்துடன் ரெக்கார்டு டான்ஸ்தான் அதிகம் இடம்பெறுது. அதை, `மக்கள் இசை'னு சொல்றது மிகப்பெரிய முட்டாள்தனம். இதையெல்லாம் ஆதரித்தால், நம்ம கலாசாரம் என்னவாகும்? `மக்கள் இசை'ங்கிறது நம்ம பாரம்பர்யம் மற்றும் கலாசார அடையாளம். இன்னைக்கு `மக்கள் இசை'யில் நடக்கிற கேவலமான விஷயங்களையெல்லாம் இளைய தலைமுறையினர் ரசிக்கிறாங்க. அவங்க மனதில், இதுதான் உண்மையான மக்கள் இசைங்கிற புரிதல் ஆழமா பதிவாகிட்டால் இத்தனை காலம் எங்களைப்போன்ற பலரும் பாடுபட்டதற்கு அர்த்தமே இல்லாமப் போயிடுமே" என்று ஆதங்கப்படுகிறார், அனிதா. 

``இரட்டை அர்த்த வசனத்தோட இசையா..? குழந்தைகளை சீரழிக்காதீங்க!'' - அனிதா குப்புசாமி

தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் `மக்கள் இசை'யைத் திட்டமிட்டே தவறாகக் கொண்டுசெல்வதாகக் குற்றம் சாட்டுகிறார், அனிதா. இதுகுறித்துப் பேசுபவர், ``தொலைக்காட்சி இசை ரியாலிட்டி நிகழ்ச்சியில `மக்கள் இசை'யைத் தவறான புரிதலுடன் பிரபலப்படுத்துறாங்க. இதுக்கு டி.ஆர்.பி உள்ளிட்ட காரணங்கள்தான் முக்கியமானது. இதுகுறித்து சேனல் தரப்பிலேயே நாங்க வெளிப்படையா பேசியிருக்கோம். ஆனா, எங்க பேச்சுக்கு மதிப்பு கிடைப்பதில்லை. சொல்லப்போனால், எங்களை ஒழிக்கணும்னு திட்டமிட்டே இப்படியான செயல்களைச் செய்றாங்க. `மக்கள் இசை'ங்கிற எங்க குழந்தையை நல்லா வளர்த்து, பெருமைப்படுத்திவெச்சிருக்கிறோம். இந்த இசைப் பெயரைச் சொல்லி இப்போ பிரபலம் தேடிக்கிறவங்க, எங்க குழந்தையைச் சீரழிப்பதைப் பார்த்து நாங்க சும்மா இருக்க மாட்டோம். `மக்கள் இசை'யில், கமர்ஷியல் தேவையில்லை. கைகள் மற்றும் கால்களை ஆட்டிக்கிட்டு, இரட்டை அர்த்த வசனங்களைச் சேர்த்துகிட்டு, ஆபாசங்களை புகுத்திக்கிட்டு யாரும் `மக்கள் இசை'யைச் சீரழிக்கவேண்டாம். இதற்காக என் கணவரும் நானும் பலமா குரல் கொடுப்போம். இதற்காக, எங்களுடன் யார் இணைந்து செயல்பட்டாலும் வரவேற்போம்.

என் கணவரும் நானும் நீண்டகாலமா `மக்கள் இசை'யைப் பாடிகிட்டிருக்கிறோம். ஆனாலும், எங்களுக்கும் தனிப்பட்ட பொருளாதாரச் சிக்கல்களும், கடன் சுமையும் இருக்குது. இந்நிலையில `மக்கள் இசை'யைத் தவறான பாதைக்குக் கொண்டுபோகிறதுபோல வெளியூர் கச்சேரிகளும், சேனல் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் எங்களுக்கு வாய்ப்புகள் வருது. ஒரு முன்னணி சேனல்ல, இசை அல்லாத பிரபலமான ஒரு நிகழ்ச்சியில கலந்துக்கச்சொல்லி வாய்ப்பு வந்துச்சு. அதுக்குப் பெரும் தொகை கொடுப்பதாகவும் சொன்னாங்க. எங்களுக்கு நடிப்பு வாய்ப்புகளும் வருது. ஆனா, எங்க கொள்கைக்கு ஒத்துவராத இதுபோன்ற வாய்ப்புகளை நாங்க ஒருபோதும் ஏத்துக்கமாட்டோம். எங்க `மக்கள் இசை'யைத் தெய்வமா நினைக்கிறோம். அதனால் கண்ணியமான இசைக் கச்சேரிகளில் மட்டும் பாடிகிட்டிருக்கிறோம். பணம் மட்டுமே வாழ்க்கையில்லை. பணத்துக்காக நாங்க தவறான பாதையில் போகமாட்டோம். எங்களுக்கு யார் மீது காழ்ப்புணர்ச்சியெல்லாம் இல்லை. 

``இரட்டை அர்த்த வசனத்தோட இசையா..? குழந்தைகளை சீரழிக்காதீங்க!'' - அனிதா குப்புசாமி

சங்க இலக்கிய பாடல்கள் உட்பட மற்ற கலைஞர்கள் பாடிய பாடல்களையும் நாங்க பாடுவதுண்டு. ஆனால், அத்தகைய பாடல்களைப் பாடுறப்போ, மறக்காம அந்தப் பாடலுக்கு உரிமையுள்ளவரின் பெயரைச் சொல்லிட்டுத்தான் பாடுவோம். ஆனா, இன்னைக்கு சிலர் நாங்க உருவாக்கிய பாடல்களை அதிகம் பாடுறாங்க. ஆனால், என் கணவர் பெயரைக்கூடச் சொல்லாமல் பாடுறாங்க. என் கணவருக்கு, `மக்கள் இசை மன்னர்'ங்கிற பட்டம் எப்போதோ கிடைச்சுடுச்சு. இப்போ பிரபலமானவங்களுக்கு எங்க உழைப்பும், இசை வரலாறும் தெரியலை. அவங்க, `மக்கள் இசை'யை நாங்கதான் பிரபலப்படுத்தினோம்ங்கிற மாதிரி நடந்துக்கிறதெல்லாம் ரொம்பத் தவறான வரலாறாகிடும். கலாசாரத்தைக் காப்பாற்றுவதில் மீடியாக்களுக்கு முக்கியப் பங்குண்டு. சேனல் இசை நிகழ்ச்சி உட்பட மக்கள் அதிகம் கவனம் செலுத்தும் மீடியாக்களில், `மக்கள் இசை'யை ஆரோக்கியமான முறையில் வரவேற்கவேண்டும். அதை நாங்க ஊக்குவிப்போம். இப்படி, `மக்கள் இசை'யை நல்ல முறையில் பிரபலப்படுத்த பலரும் முன்வரட்டும். வரவேற்கிறோம்" என்கிறார், அனிதா புஷ்பவனம் குப்புசாமி.

Vikatan