ஒவ்வொரு காலத்திலும் தன் இருப்பை அழியாது தக்கவைத்துள்ளது கலை. ஒரு வார்த்தையில் பொதுமைப்படுத்தினால், கலை ஒரு கருவி. அதைப் பயன்படுத்தும் கலைஞனைப் பொறுத்தே அதன் வெளிப்பாடு அமைகிறது. தனிமனித உணர்ச்சிக்காகத் தொடங்கியது முதல், இன்று தத்துவப் பிரசாரங்கள் வரை... கலைகளின் தேவை தவிர்க்க முடியாதது. குறிப்பாக, வெகுஜனத்தின் மத்தியில் ஈர்ப்பைப் பெற்றது சினிமா. 'கலைகளில் மக்களுக்கு அருகில் இருப்பது சினிமா' என்று கூறிய லெனின் புரட்சிக்குப் பிறகு, அரசின் சார்பில் திரைப்படக் கழகத்தைத் தோற்றுவித்தார். தமிழ் சினிமாவில் திராவிட இயக்க சினிமாவுக்குப் பிறகு ஒரு தத்துவார்த்த அரசியல் நிலைப்பெறவில்லை. இடதுசாரிய வாதங்கள் ஆங்காங்கே பட்டும் படாமல் இடம்பெற்றாலும், முழுமை பெறவில்லை. 90-களுக்குப் பிறகு தேசியவாதத்தை மையப்படுத்திய சினிமாக்கள் ஒருபுறம் என்றால், அரசியல் என்றால் சாக்கடை, அரசியல்வாதி எல்லோரும் கெட்டவர்கள், நாடே நாசமாகிவிட்டது என்ற வகையில் படங்கள் வரத்தொடங்கின. இவையனைத்தும் எந்த சித்தாந்தப் பின்புலமும் இல்லாமல், முறையான தீர்வும் சொல்லாமல் பொதுப்புத்தியில் அமைந்த சினிமாவாகவே இருந்தது. தவிர, இந்த சினிமாக்களில் சமூக யதார்த்தவியலை மீறிய கற்பிதங்கள் நிறுவப்பட்டன. இந்தச் சூழலில் தன்னை ஒரு முழுமையான இடதுசாரியாக அறிமுகப்படுத்திக் கொள்கிறார் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்.

காதல் இல்லையேல் உயிரில்லை என்று காதலை அதீத உணர்ச்சிக்குள்ளாக்கியபோது, 'காதலிக்காமலும் சாகக்கூடாது, காதலுக்காகவும் சாகக்கூடாது' என்ற டாக்லைனில் வெளிவந்தது 'இயற்கை'. உலகம் முழுவதும் சுற்றும் கப்பல் தொழிலாளி, தன் தாய்நாடான தமிழ்நாட்டுக்கு வருகிறான். தாய்நாட்டின் முகமாக முதலில் பார்ப்பது கரையோரக் குடிசைகளைத்தான். அந்த வாழ்வியலோடும் கொண்டாட்டங்களோடும் பயணிக்கும் கதையில் காதலையும் அதன் நினைவுகளையும் எடுத்துச் செல்வதாக முடிகிறது படம். உலகில் காணும் நினைவுகளில் ஒன்றே காதல் என்ற சுருக்கமாக ஓர் யதார்த்தவியலைப் படமாகச் சொன்னது 'இயற்கை.'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அடுத்து, ஒரு முழு இடதுசாரி படமாக ஜீவாவின் நடிப்பில் வெளிவந்தது 'ஈ'. லோக்கல் ஏமாற்றுக்காரனாக (இறுதி வரை) நாயகன் ஈ, மாவோயிஸ்ட் தீவிரவாதி நெல்லை மணி, வில்லன் ஒரு டாக்டர். நவீன பெண்கள் என்றால் மோசமானவர்கள் என்று சித்திரித்த வேளையில், நாயகி நயன்தாரா ஏற்றிருக்கும் பாத்திரம் பார் டான்ஸர். இப்படிப் புதுமையான களத்தில் தமிழ் சினிமாவில் கட்டமைத்த பல பிம்பங்களை உடைத்தார் இயக்குநர். மருத்துவப் பரிசோதனைகளுக்கான மனித உடல்களை, மூன்றாம் உலக நாடுகளிடம் பெறும் உலக வணிக வக்கிரங்களை, சாமானிய மக்களின் வழியே காட்டிய படம். இதை எதிர்க்கும் ஒருவனைத் தீவிரவாதி என்று அதிகார வர்க்கம் எப்படி ஒடுக்குகிறது என்றும், குறிப்பாக என்கவுன்டர் போன்ற அரச வன்முறைக்குப் பின் உள்ள அரசியல் சூழ்ச்சிகளையும் விளக்கியிருப்பார்.

போலீஸ் என்றால் புனிதமானவர்கள், என்கவுன்டர் ஹீரோயிசத்தின் அடையாளம் என்று ஹீரோயிசத்துக்காகச் சித்திரிக்கப்பட்ட சூழலில், வெளிவந்தது 'ஈ'. 'அரசுகளிடம் ஒத்துழைப்பைப் பெறும் நிறுவனங்கள் நாட்டின் மூலப்பொருள் வளங்களுக்கு அரசுகளின் ஓரவஞ்சகச் செயல்பாடுகளை நாடுகின்றன' என்ற ஜனநாதனின் மார்க்சியப் பார்வை குறிப்பிட வேண்டியது. ஏனெனில், வழக்கம்போல் போலீஸ் - தீவிரவாதி என்று முடித்துவிடாமல், அதன் பின்னுள்ள அரசியலுக்கு எதிரான குரலை நியாயமாகப் பதிவு செய்தார்.
ஜெயம் ரவியின் விருப்பப் பட்டியலிலும் ஜெயம் ரவியின் படங்களில் பலரது விருப்பப் பட்டியலிலும் இடம்பெற்றுள்ள படம் 'பேராண்மை'. நாடு ஏவும் ராக்கெட்டை அழிக்க நடக்கும் பன்னாட்டுச் சதியை நாயகனும் 5 நாயகிகளும் சேர்ந்து எப்படி முறியடிக்கிறார்கள் என்பது கதை. ஆனால், அதற்குள் இடம்பெற்ற உள் அரசியல் கவனிக்க வேண்டியவை. ஒரு பழங்குடி நபரை ஆதிக்கச் சாதி உயரதிகாரிகள் அவமதிப்பது, இட ஒதுக்கீட்டில் படித்து வந்தவர் என்று மாணவிகள் தாழ்வாக நினைப்பது போன்ற சாதிய மற்றும் வர்க்க பாகுபாட்டின் கொடுமைகள் நேரடியாக விளக்கப்பட்டிருக்கும்.

அதில், உயர் வகுப்பு மாணவிகள் நாயகன் துருவனை அலட்சியமாக எண்ணும்போது, ஒரு டெய்லரின் மகள் அஜிதா கரிசனப்படும் வர்க்க கண்ணோட்டம், மார்க்சியக் கல்வி, அரசியல் பொருளாதாரம் என்று கிடைக்கும் இடங்களில் எல்லாம் தன் அணுகுமுறையைக் கையாண்டிருப்பார் ஜனநாதன்.
ஆனால், தம் மக்களை ஒடுக்கும், தன்னைச் சாதிரீதியாக இழிவுபடுத்தும் அதிகார வர்க்கம் எதையும் கேள்வி கேட்காது, வெளிநாட்டினரிடம் மட்டும் சண்டைபோடுவது, பசுமைப் புரட்சி முதல் வேளாண்மையைப் பன்னாட்டுச் சந்தையாக்கிய இந்தியத் தேசியம், இயற்கை விவசாயத்துக்காக சாட்டிலைட் அனுப்புவது... போன்ற குழப்பங்கள் படத்தை விமர்சனத்துக்குள்ளாக்கியது. இறுதியில், உயரதிகாரி பெரும் விருதைப்போல், படத்தின் சாரத்தை விட்டுவிட்டு படத்துக்குள்ளான அரசியல் கற்க வேண்டியவை.

'புறம்போக்கு என்னும் பொதுவுடைமை' பெயரில் இருக்கும் முரணைப்போலவே இச்சமூகத்தை நாம் முரணாக அணுகுகிறோம் என்கிறார் எஸ்.பி.ஜனநாதன். நக்சல்களைத் தீவிரவாதிகள் என்ற கட்டமைப்பிலிருந்து, புறம்போக்கு நிலம்போல் மக்களுக்கானவர்கள் என்று நிறுவ முயன்றிருப்பார் இயக்குநர். ஆர்யாவின் வேடம் அப்படியே பகத்சிங்கின் தழுவல். தன்னைத் தூக்கில் போடாமல் சுட்டுக்கொள்ளுங்கள் என்று முறையிடுவது, தனது கைது அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்துவது, தனது இறுதிக் காலங்களை சிறைக் குறிப்புகளில் முடிப்பது என்று பகத்சிங் செய்ததை இவரும் செய்கிறார். நியாயம் என்று தெரிந்தும் தேச வடிவமைப்பில் சிக்குண்ட ஆளும் அமைப்பின் பணியாளர் ஷாம்.
இப்படத்தில் அவரின் பெயர், மெக்காலே. தூக்குக்கு எதிரான சாமானியனாக, விஜய் சேதுபதி. தூக்குத்தண்டனை மோசமானது என்று இறுதிவரை நகரும் காட்சிகளில் நம் மனசாட்சியின் வழியே விஜய் சேதுபதியின் பாத்திரம் அமைகிறது. சிறையில் கைதிகளிடையேயான அணுகுமுறைகள் முதல் உலக நடப்புகள் வரை பேசியிருந்தாலும், வசனங்களாக மட்டுமே அவை இடம்பெற்றதால், இப்படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.

எஸ்.பி.ஜனநாதனின் சமூகப் பொறுப்புணர்வு குறிப்பிட வேண்டிய ஒன்று. இஸ்லாமியர்களை அடர்த்தியாகக் காட்டும் சினிமாவில், இஸ்லாம் மற்றும் இந்து நபர்கள் ஒரே குடும்பமாக வாழ்வதாக 'ஈ' படத்தில் காட்டியிருப்பார். மேலும், இஸ்லாமியர்களைத் தேசத்திலிருந்து அந்நியப்படுத்தும் சூழலில் 'பேராண்மை' படத்தில் அஜிதா என்ற இஸ்லாமியப் பெண் தேசத்தைக் காக்கும் முயற்சியில் இறப்பதும், அதை அவள் குடும்பம் பெருமையாக நினைப்பதுமாகக் காட்சியாக்கப்பட்டிருக்கும். ஆதிக்க மனோபாவங்கள் சூழ்ந்துள்ள வெளியில் துருவன் மீது பெண் பாதிரியார் காட்டும் பரிவு... போன்றவை இந்திய நடைமுறையியலில் பொருந்தியிருக்கும். உலகமயமான கார்ப்பரேட் அரசியல் தேசம், பண்பாடு என்ற உணர்வைத் தூண்டி சாமானியன் வாழ்வைப் பயன்படுத்தும் முறையைத் தன் வசனங்களில் சாட்டை சுழற்றிய படம் 'பூலோகம்'. திரைப்படம் மட்டும் அல்லாது பேரறிவாளனைச் சந்தித்துப் பேசுவது, பொதுப் பிரச்னைகளுக்குத் தன் கருத்தைப் பதிவு செய்வது போன்ற எஸ்.பி.ஜனநாதனின் சமூகப் பார்வை பாராட்ட வேண்டியது.
தனது அடுத்த படத்தின் தலைப்பிலேயே (லாபம்) மீண்டும் இடதுசாரி அரசியலைப் பேசப்போகிறேன் என்று குறிப்பிட்டுவிட்டார் எஸ்.பி.ஜனநாதன். மேற்கின் புவி அரசியல் ஹாலிவுட்டில் சில விஷயங்களைப் படமாக்குவதில் கட்டுப்பாட்டை வைத்துள்ளது. இந்தியாவின் தேசிய மற்றும் திராவிடம் போன்ற மாகாண அரசியல் முன்பு இடதுசாரி அரசியல் பொதுஜனப் பார்வையில் கவனம் பெறவில்லை என்று சொல்லலாம். அப்படிப்பட்ட புவியியல் அரசியலைக் கடந்து பலதரப்பட்ட கொள்கை மற்றும் பார்வையை மக்களுக்கு வழங்க வேண்டும். அப்படி ஒற்றைப் பார்வையை மறுத்து சினிமாவில் ஜனநாயகப் பார்வையை வழங்குவதில் எஸ்.பி.ஜனநாதன் முக்கியப் பங்கு வகிக்கிறார்.