Published:Updated:

ஆஸ்தான ஜோதிடரின் ஆணைக்காகக் காத்திருக்கும் நயன்தாரா... ஏன்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆஸ்தான ஜோதிடரின் ஆணைக்காகக் காத்திருக்கும் நயன்தாரா... ஏன்?
ஆஸ்தான ஜோதிடரின் ஆணைக்காகக் காத்திருக்கும் நயன்தாரா... ஏன்?

ஆஸ்தான ஜோதிடரின் ஆணைக்காகக் காத்திருக்கும் நயன்தாரா... ஏன்?

தமிழில் ஒரு படத்திலாவது தலை காட்டிவிட வேண்டும் என்று ஆசை ஆசையாகக் கேரளாவிலிருந்து கிளம்பி சென்னைக்கு வந்தார் டயானா (நயன்தாராவின் இயற்பெயர்). சிம்பு நடித்த `தொட்டி ஜெயா' படத்துக்கு மேக்கப் டெஸ்ட் எடுக்கப்பட்டது. அப்போது, `ஆட்டோகிராப்'  திரைப்படம் ஹிட்டானதால், அதில் நடித்த கோபிகாவை ஒப்பந்தம் செய்துவிட்டு, டயானாவுக்கு டாட்டா  காட்டினார்கள். `எப்போது ஷூட்டிங்?' என்று ஏக்கத்தோடு காத்திருந்த டயானா, ஏமாற்றத்தோடு கேரளாவுக்குத் திரும்பிப் போனார். `தேடி அலைந்தால் கிடைக்காது; பிறகு உன்னையே தேடிவரும்' இதுதான் கோடம்பாக்க சினிமா அகராதி. சென்னைக்கு வந்து அலைந்தபோது டயானாவுக்குக் கிடைக்காத வாய்ப்பு, திருவனந்தபுரத்தில் இருந்தபோது தேடிவந்தது. மோகன்லால் நடிக்கும் படப்பிடிப்பில் சந்தித்தார் டைரக்டர் ஹரி. 

டயானா தமிழில் பேசப் பேச டைரக்டர் முகத்தில் பிரகாசம். பிறகு, `ஐயா' படத்தில் நயன்தாரா என்ற பெயரில் அவரை அறிமுகம் செய்து தமிழ் சினிமாவுக்குத் தாரை வார்த்தார். 2005-ம் ஆண்டு செப்டம்பரில் `தொட்டி ஜெயா' ரிலீஸாகிறது. அதே ஆண்டு `ஐயா' படம் வெளியாகி பெரும் வெற்றி பெற, `ஒரு வார்த்தை பேச...' பாடலில் பாவாடை - தாவணியில் ஆடிப் பாடிய நயன்தாராவை கோடம்பாக்கம் கொண்டாட ஆரம்பித்தது. அடுத்து ரஜினியுடன் நடித்து வெளிவந்த `சந்திரமுகி' வெள்ளிவிழா காண, `ராசிக்கார நடிகை' என்ற முத்திரை இவர்மீது அழுத்தமாகப் பதிந்தது.  

ஆஸ்தான ஜோதிடரின் ஆணைக்காகக் காத்திருக்கும் நயன்தாரா... ஏன்?

முதன்முதலாக ஒரு கோடி ரூபாய் சம்பளம் என்கிற பீடிகையோடு `பையா' படத்துக்கு நயன்தாராவை ஒப்பந்தம் செய்தபோது தமிழ்சினிமாவே அவரை அதிசயமாகப் பார்த்தது. பிறகு, `பையா' படத்தின் தயாரிப்பாளருக்கும் நயன்தாராவுக்கும் கருத்து வேறுபாடு எழ, அந்தப் படத்திலிருந்து நீக்கப்பட்டார். நயன்தாரா நடிக்கவிருந்த கேரக்டருக்கு தமன்னா ஒப்பந்தமாகி நடித்து முடித்தார். அப்போது ஒரு கோடி சம்பளத்தை மிஸ் செய்த நயன்தாராவின் இப்போதைய சம்பளம் 5 கோடி ரூபாய். தென்னிந்தியாவிலேயே முன்னணி கதாநாயகியாகத் திகழ்பவர், தமிழ் சினிமா ஹீரோக்களிடம் வெறுமனே டூயட் பாடிவிட்டுப் போகும் வழக்கமான ஹீரோயினாக இல்லை இவர். விஜயசாந்தி ஸ்டைலில் அவ்வப்போது `அறம்', `டோரா', `மாயா', `ஐரா', `கொலையுதிர் காலம்' எனப் பெண்களுக்கு முக்கியத்துவமுள்ள படங்களில் பர்ஃபாமன்ஸ் காட்டி தனித்துவத்தை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார்.

நயன்தாராவுக்கு இரண்டு முகம் உண்டு. ஒன்று, உச்சபட்சமாகக் கோபம் கொள்ளும் குணம். `இது நம்ம ஆளு' படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடிக்காமல் இழுத்தடித்துக் கொண்டிருந்தார் நயன்தாரா. `நடிக்கலைன்னா, அவருக்குத் தரவேண்டிய சம்பள பாக்கி 35 லட்சத்தைத் தரமாட்டோம்' என்று தயாரிப்பு தரப்பில் கொந்தளிக்க, ஆவேசமான நயன்தாரா `இந்தப் படத்தில் இனி நடிக்க மாட்டேன். தர வேண்டிய 35  லட்சம் வேண்டவே வேண்டாம்' என்று கறாராகச் சொல்லிவிட்டார். இன்னொன்று, இரக்கம் கொண்ட இதயம். `ஐயா' படத்திலிருந்து இப்போதுவரை தனக்கு உதவியாளராக இருந்துவரும் ஒருவருக்கு சென்னைக் கோயம்பேடு அருகே அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஃபிளாட் வாங்கிக் கொடுத்து சந்தோஷப்படுத்தியிருக்கிறார். சமீபகாலமாக, தனது படத்தின் படப்பிடிப்பு முடிந்து பூசணிக்காய் உடைக்கும் சமயத்தில் யூனிட்டில் பணிபுரிந்த அனைவருக்கும் புத்தாடை வழங்கி வருகிறார் நயன்தாரா.

ஆஸ்தான ஜோதிடரின் ஆணைக்காகக் காத்திருக்கும் நயன்தாரா... ஏன்?

சினிமா மற்றும் தனி வாழ்வில் மாற்றங்கள் ஏற்படும்போதெல்லாம் காஞ்சிபுரத்தில் உள்ள பிரபல ஜோதிடர் ஒருவரிடம் கலந்து ஆலோசித்த பிறகே, அடுத்தகட்ட முடிவை எடுக்கிறார் நயன்தாரா. ஏற்கெனவே அந்த ஜோதிடர் கணித்துச் சொன்ன பல விஷயங்கள் கண்கூடாகப் பலிக்கவே, ஒவ்வொரு முறையும் தவறாமல் அவரது ஆலோசனையைப் பெற்று வருகிறார்.   

முதலில் நயன்தாராவுக்கு அரசியல் ஆர்வம் லேசாகப் படர்ந்தது. மக்கள் பிரச்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட `அறம்' படத்தின் மூலம் `நயன்தாரா சமூக அக்கறை கொண்ட நடிகை' என்று பொதுமக்கள் மத்தியிலிருந்து பாராட்டுகள் குவிந்தபோது, அரசியல் ஆசை இன்னும் அதிகமானது. இந்தப் படத்துக்குப் பிறகு காஞ்சிபுரம் ஜோதிடரைச் சந்தித்து, `அரசியலில் இறங்கினால் எதிர்காலம் எப்படியிருக்கும்?' எனத் தனது ஜாதகத்தைக் கொடுத்து ஆலோசனை நடத்தியிருக்கிறார் நயன்தாரா. ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்த ஜோதிடர், `அரசியலில் பிரமாதமான எதிர்காலம் இருக்கிறது' என்றிருக்கிறார். 

நயன்தாரா பற்றிய ராதா ரவியின் சர்ச்சை பேச்சுக்குப் பிறகு, காஞ்சிபுரம் சென்று மீண்டும் ஜோதிடரைச் சந்தித்திருக்கிறார் நயன்தாரா. `இப்போதைக்கு அவசரப்பட வேண்டாம். அரசியலில் இறங்குவதற்கான கால நேரம் பார்த்து கணித்துச் சொல்கிறேன். அப்போது தீவிர அரசியலில் இறங்கலாம்' எனச் சொல்லியிருக்கிறார் ஜோதிடர். ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநர் எப்போது `ரெடி டேக் ஆக்‌ஷன்' சொல்வார், நடிக்கலாம்... எனக் காத்திருந்த நயன்தாரா, ஜோதிடர் எப்போது 'ரெடி' சொல்வார், அரசியலில் இறங்கலாம் எனக் காத்திருக்கிறார்!

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு