Published:Updated:

``அந்தப் புத்தகத்துக்கு `தங்கதுரையின் தற்கொலை ஜோக்குகள்'னு டைட்டில்!" - தங்கதுரை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``அந்தப் புத்தகத்துக்கு `தங்கதுரையின் தற்கொலை ஜோக்குகள்'னு டைட்டில்!" - தங்கதுரை
``அந்தப் புத்தகத்துக்கு `தங்கதுரையின் தற்கொலை ஜோக்குகள்'னு டைட்டில்!" - தங்கதுரை

சின்னத்திரை பிரபலம் 'டைகர் கார்டன்' தங்கதுரை பேட்டி.

விஜய் டி.வியின் `கலக்கப்போவது யாரு' ஷோவை மட்டுமல்ல, அதில் பர்ஃபார்ம் செய்யும் தங்கதுரையையும் மறக்க முடியாது. இவர் சொல்லும் சில ஜோக்ஸுக்கு ஆக்ஸ்ஃபோர்டு டிக்‌ஸ்னரியில்கூட அர்த்தம் இல்லை. விஜய் டிவி-யில் ஜாலியாக வலம் வந்துகொண்டிருந்த இவரை திடீரென கலைஞர் டிவி நிகழ்ச்சியில் பார்த்தேன். இவருடன் உரையாடியதிலிருந்து... 

``அந்தப் புத்தகத்துக்கு `தங்கதுரையின் தற்கொலை ஜோக்குகள்'னு டைட்டில்!" - தங்கதுரை

``விஜய் டிவியில இருந்து கலைஞர் டிவி-க்குப் போயிட்டீங்களா?" 

``ஐய்யயோ தலைவா... ஏன் நீங்க வேற! ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என் ஃப்ரெண்ட் ஒரு ஷோ பண்ணித் தரச் சொல்லி கேட்டான். `டேய் அந்த ஷோவைப் பண்ணா, இந்த வேலையில இருந்து என்னைத் தூக்கிடுவாங்க'னு சொன்னேன். அதுக்கு அவன், `டேய் நீ இதைப் பண்ணிக் கொடுத்தாதான் எனக்கு இந்த வேலையே'னு பாவமா கேட்டான். சரி, நண்பன் கேட்டா எப்படிப் பண்ணாம இருக்க முடியும்னு பண்ணதுதான், அந்த ஷோ. அது இப்போ வந்திருக்கு; அவ்வளோதான். மத்தபடி, விஜய் டிவி-யில நான் நிகழ்ச்சிகள் பண்ணிக்கிட்டுதான் இருக்கேன். இப்போகூட எனக்கு விருது கொடுத்தாங்க. தவிர, 'Mr & Mrs. சின்னத்திரை'ன்னு ஒரு ஷோ பண்ணினேன். அதுல என்னை எலிமினேட் பண்ணிட்டாங்க. மணிமேகலை இதுக்குத் தேம்பித் தேம்பி அழுதாங்க, `அறந்தாங்கி' நிஷா அக்கா ரொம்ப ஃபீல் பண்ணாங்க. சரின்னு என்னை அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராப் போட்டாங்க. கொஞ்சநாள்ல ஃபைனல் நடக்கப்போகுது. அதுக்கும் நான் சிறப்பு விருந்தினரா போவேன். அதனால, இப்படியெல்லாம் கேட்காதீங்க. பதற்றமா இருக்கு. இப்போதான் படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சிருக்கேன். இப்போ சந்தானம் சார்கூட நடிச்சுக்கிட்டு இருக்கேன். ஷூட்டிங்ல ரொம்ப வெயிலா இருக்கேன்னு கொஞ்சம் ஓரமா வந்தா, நீங்க போனைப் போட்டு இப்படிக் கேட்டுட்டீங்க!" 

``என்னென்ன படங்கள்ல நடிக்கிறீங்க?" 

``சந்தானம் சார்கூட `A1' படம். அவர் அக்யூஸ்ட் நம்பர் ஒண்ணு; நான் அக்யூஸ்ட் நம்பர் ரெண்டு. `இந்த இடத்துல இந்த கவுன்டரைப் போடு வொர்க் அவுட் ஆகும்'னு எனக்கு நிறைய டிப்ஸ் கொடுப்பார், சந்தானம். ஜோதிகா மேடம் நடிக்கிற `ஜாக்பாட்' படத்துல நடிச்சிருக்கேன். படமும் ரொம்ப நல்லா வந்திருக்கு. `என் அடுத்த படத்திலேயும் உன்னை நடிக்க வைக்கிறேன்'னு சொல்லியிருக்கார், இயக்குநர் கல்யாண். ஹன்சிகா, ரம்யா கிருஷ்ணனை வைத்து அவர் எடுக்கப்போற பேய் படத்திலும் நான் நடிப்பேன். `கிருமி' படத்தின் இயக்குநர் இப்போ `பன்னிக்குட்டி'னு ஒரு படம் பண்றார். கருணாகரன், யோகி பாபு லீடு ரோல்ல நடிக்கிறாங்க. அதுல எனக்கு ஒரு முக்கியக் கதாபாத்திரம். `இந்த இடத்துல என்னை இந்த மாதிரி கலாய்ச்சு விடு'ன்னு யோகி பாபு அண்ணனும் நிறைய டிப்ஸ் சொல்வார்."

``அந்தப் புத்தகத்துக்கு `தங்கதுரையின் தற்கொலை ஜோக்குகள்'னு டைட்டில்!" - தங்கதுரை

``சின்னத்திரையில இருந்து வெள்ளித்திரையில நடிக்கிறது எப்படி இருக்கு?" 

``வெள்ளித்திரை ரொம்பப் புது அனுபவமா இருக்கு. டிவி-யில ஒரு ஷோ பண்ணும்போது, சுத்தி எட்டு கேமரா இருக்கும். நம்ம பண்றதுதான் அங்கே காமெடி. ஸ்கிரிப்டே இல்லாமகூட காமெடி பண்ணலாம். கட்டியிருக்கிற வேட்டி கழன்று விழுந்தாக்கூட அதைவெச்சு காமெடியைத் தேத்திடலாம். ஆனா, வெள்ளித்திரை அப்படியில்லை. ராமர் போடுற சில டைமிங் காமெடியெல்லாம் அங்கே வேலைக்கு ஆகாது. எல்லாமே திட்டமிட்டு நடக்கணும். மூஞ்சில லைட் இல்லைன்னாகூட கண்டுபிடிச்சிடுவாங்க. அதனால, சினிமாவுல நடிக்கிறது புது அனுபவம்தான். அதேசமயம், ஷூட்டிங்ல என்னை அடையாளம் கண்டுக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. 'பன்னிக்குட்டி' படத்துக்காக ஒரு கிராமத்துக்கு ஷூட்டிங் போயிருந்தோம். 'அங்கே பாரு 'பழைய ஜோக்' தங்கதுரை'னு பேசுனாங்க. இந்தளவுக்கு எனக்கு ரீச் கொடுத்தது விஜய் டிவி-தான்." 

``ஜோக்ஸ் எல்லாம் எங்கிருந்து பிடிக்கிறீங்க?" 

``சிலதுதான் நான் பழைய ஜோக்கா சொல்வேன். மத்தபடி, நிறைய மாத்திதான் சொல்வேன். இப்போ நீங்களே சொல்லுங்க. ஒருத்தர் நடந்துபோகும்போது பூனை குறுக்கே போனா என்ன நினைப்பாங்க... சிலர் அப்படியே போவாங்க. சிலர் அபசகுணம்னு நினைச்சு, கொஞ்சம் நேரம் உட்கார்ந்துட்டு போவாங்க. அதுக்கு எதுக்குங்க உட்காரணும்?! பூனைக்கெல்லாம் வேலையே இருக்காது. அது வேலையை அது பண்ணட்டும். நம்ம வேலையை நம்ம பார்ப்போம் (காமெடி). ஏன் இதைச் சொல்றேன்னா, இந்த மாதிரி விஷயங்கள்ல இருந்துதான் என்னுடைய ஜோக்குகளை எடுப்பேன். இப்போ, இன்னொரு கேள்வி... கிளி ஏன் பச்சையா இருக்கு?! ஏன்னா, அதை வேகவைக்க முடியாது (கடுப்பாகாதீங்க!). இப்படி சில ஜோக்ஸ்தான் என் இன்ஸ்பிரேஷன். தலைவா... இப்போ என் ஜோக்ஸையெல்லாம் புத்தகமா போடுற வேலைதான் போய்க்கிட்டிருக்கு. 'தங்கதுரையின் தற்கொலை ஜோக்குகள்'னு டைட்டில் வெச்சிருக்கேன். விரைவில் புத்தகமா வெளிவரும்." 

``அந்தப் புத்தகத்துக்கு `தங்கதுரையின் தற்கொலை ஜோக்குகள்'னு டைட்டில்!" - தங்கதுரை

``உங்களுடைய ஃபேமிலி பத்திச் சொல்லுங்க?''

`` `சமுத்திரம்' படத்துல வர்றமாதிரி, எங்க ஃபேமிலி ரொம்பப் பெருசு. ரொம்ப அழகான மனைவி. எல்லாத்துக்கும் அட்ஜஸ்ட் பண்ணிப் போவாங்க. நைட்டு எத்தனை மணிக்கு வந்தாலும், சாப்பிடாம எனக்காக வெயிட் பண்ணுவாங்க. ஏன்னா, போயிட்டு நான்தான் சமைக்கணும். ஏழு மாசத்துக்கு முன்னாடி மகன் பிறந்தான். பெயர், லிஜு கிருஷ்ணன். எங்க அம்மா சமீபத்துலதான் இறந்தாங்க. அவங்களுடைய பெயர், கிருஷ்ணம்மா. அவங்க நினைவாகத்தான் பையனுக்கு கிருஷ்ணன்னு பெயர் வெச்சேன். நான் கஷ்டப்படும்போது கூட இருந்து எனக்குத் தைரியம் சொன்னாங்க. இப்போ ஓரளவுக்கு வாழ்க்கையில ஜெயிக்க ஆரம்பிச்சிருக்கேன். அவங்க என் பக்கத்துல இல்லைன்னாலும், எங்கிருந்தாவது பார்த்துக்கிட்டிருப்பாங்க." காமெடியாகத் தொடங்கி, நெகிழ்ச்சியாக முடிக்கிறார், தங்கதுரை. 

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு