Published:Updated:

"படம் ஹிட்டானாலும் சரி, பிறந்தநாளானாலும் சரி... கொண்டாட்டம் பிடிக்காது!" - 'மைக்' மோகன் #HBDMohan

"படம் ஹிட்டானாலும் சரி, பிறந்தநாளானாலும் சரி... கொண்டாட்டம் பிடிக்காது!" - 'மைக்' மோகன் #HBDMohan
"படம் ஹிட்டானாலும் சரி, பிறந்தநாளானாலும் சரி... கொண்டாட்டம் பிடிக்காது!" - 'மைக்' மோகன் #HBDMohan

"நான் நடித்த எத்தனையோ படங்கள் சில்வர் ஜூப்ளி விழா கொண்டாடியிருக்கின்றன. அப்போதுகூட நான் தனிப்பட்ட முறையில் பெரிதாகக் கொண்டாடியதில்லை. என் பிறந்தநாளையும் கொண்டாட்டமாக நடத்தியதில்லை" - மைக் மோகன்

'திருவிளையாடல்' படத்தில் 'பிரிக்க முடியாதது என்ன?' என்று புலவர் நாகேஷ் கேள்வி கேட்க, 'தமிழும் சுவையும்' என்று சிவாஜி பதில் அளிக்கும் வசனம் பிரசித்திபெற்றது. அதுபோல தமிழ்கூறும் நல்லுலகின் சினிமா ரசிகர்களிடம் 'பிரிக்க முடியாதது என்ன' என்று கேட்டால், 'மைக்கும் மோகனும்' எனப் படாரென்று பதில் சொல்வார்கள். அந்தளவுக்கு கர்ணனுக்குக் கவசகுண்டலம் மாதிரி மோகனுக்கும் மைக்குக்கும் நெருக்கம். மைக் மோகன் பிறந்தநாள் இன்று! அவரைப் பற்றிய சுவாரஸ்யமான சில தகவல்களைப் பார்ப்போம்.

'ஹீரோவாகத்தான் நடிப்பேன்' என்று அடம்பிடிக்காமல், வில்லனாகவும் நடித்து 'நூறாவது நாள்' படத்தில் தனது திறமையை நிரூபித்தார். இப்போதுகூட அர்ஜூன், விஜய் ஆண்டனி நடித்த 'கொலைகாரன்' படத்தில் மோகன் நடித்த 'நூறாவது நாள்' திரைப்படத்தின் விளம்பரத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.  

"படம் ஹிட்டானாலும் சரி, பிறந்தநாளானாலும் சரி... கொண்டாட்டம் பிடிக்காது!" - 'மைக்' மோகன் #HBDMohan

இளையராஜா இசையமைத்த தமிழ்ப் பாடல்களில் நடிக்கும்போது கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பி-யையும் மறந்து ஏதோ மோகனே சொந்தக் குரலில் பாடியதுபோல பாடல் வரிகளுக்கேற்ப திறமையாக உதடு அசைப்பது மோகனின் ஸ்பெஷாலிட்டி. சினிமா பாடல்களை சிவாஜிக்குப் பிறகு, சிறப்பாக உதடசைத்துப் பாடியவர் என்ற பாராட்டைப் பெற்றார். 

'குங்குமச் சிமிழ்' படத்தில் 'நிலவு தூங்கும் நேரம்...', 'பாடு நிலாவே' படத்தில் 'மலையோரம் வீசும்', 'உதயகீதம்' படத்தில் 'சங்கீத மேகம்', 'இளமைக் காலங்கள்' படத்தில் 'ஈரமான ரோஜாவே', 'பயணங்கள் முடிவதில்லை' படத்தில் 'இளைய நிலா', 'மெல்லத் திறந்தது கதவு' படத்தில் 'வா வெண்ணிலா' என்று மோகன் பர்ஃபாமன்ஸில் ஸ்கோர் செய்த பாடல்கள் ஏராளம்.     

தமிழ் சினிமாவில், ஹீரோவுக்கு இரண்டு மனைவிகள் கொண்ட கதைகள் ரொம்பவே பிரபலம். சிவாஜிக்கு 'உயர்ந்த மனிதன்', ஜெமினிக்கு 'புன்னகை', ரஜினிக்கு 'வீரா', கமலுக்கு 'மீண்டும் கோகிலா' என்று வெளிவந்த அத்தனை படங்களும் வெற்றி பெற்றன. அதுபோல, மோகன் இரண்டு மனைவியுடன் நடித்த 'கோபுரங்கள் சாய்வதில்லை', 'ரெட்டைவால் குருவி' படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்.

'கோகிலா' கன்னடப் படத்தில் அறிமுகமான மோகன், தமிழில் 'மூடுபனி', 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' படங்களில் நடித்தார். தற்போது 63-வது பிறந்தநாள் கொண்டாடும் மோகன், இதுவரை நூறு திரைப்படங்களுக்கும்மேல் நடித்திருக்கிறார். தமிழில் ஹீரோவாகப் புகழின் உச்சியில் இருந்தபோதும் ஈகோ பார்க்காமல்  ரஜினி நடித்த 'ஶ்ரீராகவேந்திரா' படத்தில் சிறு வேடத்தில் நடித்துக் கொடுத்தார்.

ஏற்கெனவே மோகன் நடித்த 'இளமைக் காலங்கள்' படத்தில் அறிமுகமான சசிகலாவும், 'தென்றலே என்னைத் தொடு' படத்தில் அறிமுகமான ஜெயஶ்ரீயும் ஒரே படத்தில் புகழ் பெற்றனர். ஆகவே, முதல் படத்தில் மோகனுக்கு ஜோடியாக அறிமுகமானால் சினிமாவில் உச்சத்துக்குப் போகலாம் என்றொரு சென்டிமென்ட் அப்போது இருந்தது.   

1980-களில் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த ஹீரோ, ஹீரோயின்கள் ஆண்டுக்கு ஒருமுறை சந்தித்து, பழைய நினைவுகளைப் பேசி, விருந்து உண்டு மகிழ்ந்து வருகின்றனர். லிஸி, ராதிகா, சுஹாசினி... எனப் பலரும் இந்தச் சந்திப்பை ஒருங்கிணைக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் இந்த கெட் டு கெதர் நிகழ்வில் தவறாமல் பங்கேற்கிறார் மைக் மோகன். 

"படம் ஹிட்டானாலும் சரி, பிறந்தநாளானாலும் சரி... கொண்டாட்டம் பிடிக்காது!" - 'மைக்' மோகன் #HBDMohan

உச்ச நடிகராக வலம் வரும் விஜய்யின் தாய்மாமா சுரேந்தர்தான், மோகன் நடித்த அத்தனை படங்களுக்கும் அவருக்குப் பின்னணிக் குரல் கொடுத்தார். சுரேந்தர், தனது திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுத்து எதிர்பார்த்துக் காத்திருக்க... மோகன் திருமணத்துக்கு வரவில்லை. அப்போது, 'மெல்லத் திறந்தது கதவு' படத்துக்கு மோகனுக்கு டப்பிங் கொடுத்துக்கொண்டிருந்த சுரேந்தர், பாதியிலேயே டப்பிங் பேச மறுத்து வெளியேறிவிட்டார். 

1990-களில் கல்லூரிப் பெண்கள் மத்தியில் மோகனுக்கு செம கிரேஸ் இருந்தது. அப்போது, மோகனுக்கும், சினிமா உலகில் உள்ள சிலருக்கும் மனக்கசப்பு. அதனால், 'மோகனுக்கு எய்ட்ஸ்' என்ற செய்தியைப் பரப்பிவிட்டனர். யாரோ கிளப்பிவிட்ட இந்த வதந்தியால் மோகன் மிகுந்த மனவருத்தம் அடைந்தார். அதன் காரணமாகவே தனது குடும்பம், மனைவி, குழந்தைகள் குறித்த செய்தியை யாருக்கும் பகிராமல் பாதுகாத்து வருகிறார். 

இன்று மோகனை அழைத்து பிறந்தநாள் வாழ்த்துகள் சொன்னேன். அப்போது, "நான் நடித்த எத்தனையோ படங்கள் சில்வர் ஜூப்ளி விழா கொண்டாடியிருக்கிறது. அப்போதுகூட நான் தனிப்பட்ட முறையில் பெரிதாகக் கொண்டாடியதில்லை. என் பிறந்தநாளையும் கொண்டாட்டமாக நடத்தியதில்லை. எனக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு. இந்தக் கடவுள்தான் எனக் குறிப்பிட்டு எதையும் சொல்ல மாட்டேன். என் அம்மா, அப்பாதான் எனக்குக் கடவுள். உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வதைத்தான் ஒவ்வொரு பிறந்தநாளிலும் சபதமாக எடுத்துக்கொள்வேன். இந்த முறையும் அதுதான்" என்றார் மோகன்.

பிறந்தநாள் வாழ்த்துகள் 'மைக்' மோகன்!

Vikatan
அடுத்த கட்டுரைக்கு