Published:Updated:

"வீடியோ கேம் விளையாடி அஜித் ஃப்ரெண்ட் ஆனேன்!" - கல்யாண் மாஸ்டர்

வே.கிருஷ்ணவேணி

டான்ஸ் மாஸ்டர் கல்யாண் தனது சின்னத்திரை, சினிமா அனுபவங்களையும் ரஜினி, அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடனான நட்பு குறித்தும் பேசியிருக்கிறார்.

"வீடியோ கேம் விளையாடி அஜித் ஃப்ரெண்ட் ஆனேன்!" - கல்யாண் மாஸ்டர்
"வீடியோ கேம் விளையாடி அஜித் ஃப்ரெண்ட் ஆனேன்!" - கல்யாண் மாஸ்டர்

அஜித் நடிக்கும் 'நேர்கொண்ட பார்வை', விஜய் ஆண்டனியின் 'கொலைகாரன்'. ஹரீஷ் கல்யாண் நடிக்கும் 'தனுசு ராசி நேரயர்களே', ஆரவ் நடிக்கும் 'மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் எனப் படங்களில் பிஸியாக இருக்கும் கல்யாண் மாஸ்டருடன் ஒரு சின்ன ஃபிளாஷ்பேக் உரையாடல்.

"வீடியோ கேம் விளையாடி அஜித் ஃப்ரெண்ட் ஆனேன்!" - கல்யாண் மாஸ்டர்

''சினிமாவைத் தாண்டி டிவி வாயிலாக நல்ல ரீச் கிடைக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இரண்டு நாள்கள் ஷூட்டை சரியாக முடித்துவிட்டால், அடுத்தடுத்த வேலைகளுக்கான நேரமும் நமக்குக் கிடைக்கும். எனக்குப் பிடித்த மாதிரியான நிகழ்ச்சியாக இருந்தால் கண்டிப்பாக மீண்டும் டிவி பக்கம் வருவேன்'' என்றவரிடம், 'டான்ஸ் மாஸ்டர் ஆக வேண்டும் என்பதுதான் உங்களுடைய கனவாக இருந்ததா?' என்றேன்.

''அப்படியெல்லாம் இல்லைங்க. வேறு வழியில்லாமத்தான் இந்தத் துறைக்கு வந்தேன். என் அண்ணன் டாக்டருக்குப் படிச்சிட்டிருந்தார். வீட்டு வருமானம் அவருடைய படிப்பு செலவுக்கே சரியா இருக்கும். நான் 80% மார்க் எடுத்த ஆவரேஜ் ஸ்டூடண்ட். அப்பா திட்டியதால, வீட்டைவிட்டு ஓடி வந்துட்டேன். அடுத்து என்ன பண்றதுனு யோசிப்போ, எங்க பாட்டி புலியூர் சரோஜா ஞாபகம் வந்தது. எனக்குக் கொஞ்சம் கொஞ்சம் டான்ஸ் ஆடத்தெரியும். அதனால, புலியூர் சரோஜாகூட சேர்ந்தேன். என்மேல அக்கறை எடுத்துக்கிட்டாங்க. டான்ஸ் சம்பந்தமான நிறைய விஷயங்களை அவங்ககிட்ட இருந்துதான் கத்துக்கிட்டேன்'' என்றவரிடம், 'முன்னணி நடிகர்களுக்கு டான்ஸ் சொல்லிக் கொடுக்கிறீர்கள். உங்களுடைய டான்ஸ் ஸ்டைலைத்தான் அவர்களுக்குக் கொடுப்பீர்களா?'' எனக் கேட்டேன்.

"வீடியோ கேம் விளையாடி அஜித் ஃப்ரெண்ட் ஆனேன்!" - கல்யாண் மாஸ்டர்

''நிச்சயமாக இல்லை. 'பாட்ஷா' படத்தில் ரஜினியுடன் 'ஆட்டோக்காரன்' பாடலுக்கு ஆடியிருக்கிறேன். இப்படிப் பல படங்களுக்கு ஆடியதோடு, படிப்படியாகக் கோரியோகிராபியும் பண்ணியிருக்கேன். ரஜினி முதல் அஜித் வரை பல பிரபலங்களுக்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்திருக்கேன். அவர்களின் இமேஜுக்குத் தகுந்த மாதிரிதான் நடனம் அமைப்பேன். ரஜினி சாருக்கு ஸ்பீடு டான்ஸ் கொடுக்க முடியாது. அவருடைய டான்ஸ்ல ஸ்டைலை சேர்க்கணும். அதேமாதிரி அஜித்துக்கு நிறைய ஆபரேஷன் நடந்திருக்கிறதால, ஃபார்ஸ்ட் மூவ்மென்ட்ஸ் இல்லாம பார்த்துப்பேன். ஆனா, இப்பெல்லாம் ஸ்லோ ஸ்டெப்ஸை அவர் விரும்ப மாட்டேங்கிறார். 

'ஆலுமா டோலுமா', 'அடிச்சுத் தூக்கு' பாடலில் ஆடும்போது அவரோட எனர்ஜியைப் பார்த்து மிரண்டுட்டேன். 'அடிச்சுத் தூக்கு' பாட்ல ஒரு ஸ்டெப்பை 'ஒரே டேக்ல ஆடுறேன்'னு சொல்லி, அதை நல்லாவும் ஆடினார். மொத்த யூனிட்டும் கிளாப்ஸ் கொடுத்துச்சு. அஜித் சாரை எனக்கு 24 வருடமா தெரியும். அவர்கூட இருந்தாலே எனக்குப் பாசிட்டிவ் எனர்ஜி வந்துடும்" என்றவரிடம், 'அஜித்தை ஏன் பொதுநிகழ்ச்சிகளில் பார்க்க முடிவதில்லை' என்று கேட்டேன்.

''சிலர் பொதுவெளியில் இருக்க விரும்புவார்கள். சிலர் தனக்கென தனி உலகத்தை அமைச்சுக்கிட்டு அதில் சந்தோஷமா இருப்பாங்க. அஜித்துக்குனு ஒரு வாழ்க்கை இருக்கு. அதுல அவர் சந்தோஷமா இருக்கார். இது எனக்கு தவறுனு படல" என்றதோடு, அஜித்துக்கும் அவருக்குமான நட்பு குறித்தும் மேலும் பல விஷயங்களைச் சொன்னார்.  

" 'கல்லூரி வாசல்' படத்தில்தான் முதலில் அவரை சந்தித்தேன். எனக்கு கேம்ல ஆர்வம் அதிகம். அவருக்கும் கேம்ல ஆர்வம் அதிகம். அப்படித்தான் ஷூட்டிங் ஸ்பாட்ல நாங்க ஃப்ரெண்ட்ஸ் ஆனோம். கேட்ஜெட்ஸ், கேம்ஸ்... இதைப் பற்றி நிறைய பேசிக்குவோம். பிறகு, அவர் எங்க வீட்டுக்கு வருவார், நான் அவங்க வீட்டுக்குப் போவேன். என் அம்மா சமையல் அவருக்குப் பிடிக்கும். ரசிச்சு சாப்பிடுவார். 'கல்லூரி வாசல்' தொடங்கி, 'விஸ்வாசம்' வரை... என் ஃப்ரெண்ட் அஜித் அப்படியேதான் இருக்கார்."  

"ரஜினி குடும்பத்தினரும் நீங்களும்கூட நெருங்கிய நண்பர்களாமே?''

"ஆமாம். 'பாட்ஷா' படத்துக்கு முன்பே, லதா ரஜினிகாந்த் அவர்கள் வெளிநாடுகளில் ரஜினி சாரின் ஹிட் பாடல்களை வைத்து மியூசிகல் ஷோ ஒண்ணு பண்ணாங்க. அந்த நிகழ்ச்சிகளுக்கு நான்தான் கோரியோகிராபர். ஒரு அம்மா ஸ்தானத்தில் இருந்து எனக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் சொல்லிக்கொடுத்தாங்க. அப்படித்தான் அவருடைய குடும்பத்தினருடனும் நெருக்கமானேன். இப்போவரை லதா அம்மாவுக்கும் எனக்கும் அம்மா - மகன் போன்ற உறவுதான். இத்தனை வருடங்கள் டான்ஸ் மாஸ்டராக சினிமாவில் இருக்கிறேன். எப்படியும் ஒரு வருடத்துக்குள் ஏதாவது ஒரு காரணத்தால் பிரபலங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். அப்போ எனக்கு அவங்க சினிமா ஆள்களாகத் தெரிவதில்லை. என் குடும்பத்தில் ஒருவராகத்தான் அவர்களைப் பார்க்கிறேன்."