Published:Updated:

``பேராசை, பஞ்சாயத்து, திட்டமின்மை..." - தலைசுற்ற வைக்கும் தமிழ்சினிமா ரிலீஸ் சிக்கல்கள்

``பேராசை, பஞ்சாயத்து, திட்டமின்மை..." - தலைசுற்ற வைக்கும் தமிழ்சினிமா ரிலீஸ் சிக்கல்கள்
``பேராசை, பஞ்சாயத்து, திட்டமின்மை..." - தலைசுற்ற வைக்கும் தமிழ்சினிமா ரிலீஸ் சிக்கல்கள்

சிறந்த கதை, தேர்ந்த படக்குழு...  என அனைத்தும் இருந்தும், தயாரிப்பாளர்கள் தங்கள் படத்தை ரிலீஸ் செய்வது ஒரு பெரும் தவமாகவே இருக்கிறது.

வெள்ளிக்கிழமைகளில் படம் ரிலீஸ் என்பது கொஞ்சம் கொஞ்சமாக மாறி, வியாழக்கிழமையாக நிற்கிறது. 10 மணி என்றிருந்த காலைக் காட்சி, அதிகாலைக் காட்சிகளாக மாறியிருக்கிறது. நாளையும், நேரத்தையும் மாற்றிய தயாரிப்பாளர்களால், ஒரு படத்தை ரிலீஸ் செய்வதில் இருக்கும் பிரச்னை, பஞ்சாயத்துகளை மாற்ற முடியவில்லை.

சமீபத்தில் வெளியான, `100' மற்றும் `கீ’ இரண்டு படங்களுக்கும் ரிலீஸ் சமயத்தில் இடியாப்பச் சிக்கல் குளறுபடிகள். `கீ' படத்தின் தயாரிப்பாளருக்கு `அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தின் நஷ்டங்களால் ஏற்பட்ட கடன்கள் `கீ’ படம் மீது விழுந்தது. கடந்த ஒரு வருட காலமாகப் ஒவ்வொரு பிரச்னையாகத் தீர்க்கப்பட்டுக்கொண்டிருந்தது. தேர்தலில் போட்டியிட்ட படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும், மீண்டும் தன் பணிகளில் இறங்கிப் படத்தை ரிலீஸுக்குக் கொண்டு வந்தார். இறுதியாக இருந்த சின்னச் சின்ன சிக்கல்களையும் அண்மையில் உருவாக்கப்பட்ட சினிமா ஃபைனான்ஸியர்கள் சங்கம் தலையிட்டு தீர்த்து வைத்துள்ளது. 

``பேராசை, பஞ்சாயத்து, திட்டமின்மை..." - தலைசுற்ற வைக்கும் தமிழ்சினிமா ரிலீஸ் சிக்கல்கள்

ஆரா சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ள `100' படத்திற்கு ஃபைனான்ஸ் செய்த பதம் சந்த் ஜெயின், அப்படத்தை வாங்கி வெளியிடவும்  முடிவு எடுத்தார். ஆனால், முன்னதாக 70 எம்.எம் நிறுவனம் தயாரித்த `பலூன்' படத்தின் நெகட்டிவ் ரைட்ஸை வாங்கியதில் ஆரா சினிமாஸ் நிறுவனம் ஒரு கோடியே பன்னிரண்டு லட்சம் ரூபாய் பாக்கி வைத்துள்ளனர். இந்தத் தொகையை `பலூன்' படத்தின் தெலுங்குப் பதிப்பு வெளியீட்டின்போது தருவதாகக் கூறவே, `பலூன்' படம் தமிழில் வெளியானது. ஆனால், படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால், 70 எம்.எம் நிறுவனத்திற்குக் கொடுக்க வேண்டிய பாக்கிக்காக, ஆரா சினிமாஸ் தயாரித்திருந்த மற்றொரு படமான `அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா' படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையைக் கொடுத்துள்ளது. `அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா' படம் தாமதாகும் நிலையில்தான், `100' படத்தின் வெளியீட்டு வேலைகளில் இறங்கியது ஆரா சினிமாஸ். தங்களது பணத்தைப் பெறும் ஒரே வழியாக முடிவு செய்து, வாங்கிய பணத்தைத் திரும்பத் தரும் வரை `100' பட வெளியீட்டுக்குத் தடை வாங்கியது, 70 எம்.எம் நிறுவனம்.

``பேராசை, பஞ்சாயத்து, திட்டமின்மை..." - தலைசுற்ற வைக்கும் தமிழ்சினிமா ரிலீஸ் சிக்கல்கள்

தடையை எதிர்த்துத் தொடர்ந்த வழக்கின் முடிவில், ஆரா சினிமாஸ் நிறுவனம் பாக்கியைத் தரும் வரையில் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்ற விஷயமும், `பலூன்' படத்தின் பாக்கிக்கு `100' படத்தின் உரிமத்தைத் தரவேண்டும் என்ற விஷயமும் இரு தரப்புக்குமான ஒப்பந்தத்தில் இல்லை எனக் கூறி, `100' படத்திற்கு இருந்த தடையை விலக்கி உத்தரவிட்டது, நீதிமன்றம். மே 9-ம் தேதி வெளியாகவிருந்த படம், அதற்கு அடுத்த நாள் வெளியாகும் என எதிர்பார்த்திருந்த படக்குழுவுக்கு, மற்றொரு ஃபைனான்ஸியர் ஜஸ்வந்த் பண்டாரி மூலமாக பிரச்னை. ஆரா சினிமாஸ் நிறுவனம் முந்தைய படம் ஒன்றுக்கு தன்னிடம் வாங்கிய கடனைத் தரவேண்டும் என்பது, அவருடைய கோரிக்கை. இதனால், இந்தப் பஞ்சாயத்து முடிவுக்கு வர ஒருநாள் ஆனது. ஒருவழியாக, மே 11-ம் தேதி அன்று வெளியானது, `100' திரைப்படம். அதர்வாவின் முந்தைய இரண்டு படங்களும் இதேபோல் ரிலீஸ் பிரச்னைகளைச் சந்தித்ததும், அதன் தொடர்ச்சியாக, `மரகத நாணயம்' சரவணன் இயக்கத்தில் அதர்வா நடிக்கவிருந்த படம் ஒன்று டிராப் ஆனதும் குறிப்பிடத்தக்கது.  

பிரச்னையைச் சந்தித்த மற்றொரு படம், விஷாலின் `அயோக்யா'. 2015-ல் தெலுங்கில் வெளியான `டெம்பர்' படத்தின் ரீமேக் இது. ஆந்திராவில் ஹிட் அடித்த இப்படம், பாலிவுட்டிலும் பட்டையைக் கிளப்பியது. முதலில் தமிழில் ரீமேக் ஆவதாக இருந்த `டெம்பர்' படம், தாமதம் ஆனதுக்குக் காரணம், விஷால். `ஸ்பைடர்' படத்தைத் தயாரித்த தாகூர் மதுதான், `அயோக்யா' படத்தின் தயாரிப்பாளர். இப்படத்திற்காக தாகூர் மது, விஷாலை அணுகியபோது அவருடைய சம்பளம் 5 கோடி ரூபாய். பிறகு, படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. 

60 நாள்கள் படப்பிடிப்பு, இயக்குநராக ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் வெங்கட் மோகன் என முடிவெடுத்தார்கள். ஆனால், படத்தின் படப்பிடிப்பு 107 நாள்கள் வரை நீண்டது. இதற்கிடையில், 27 நாள்கள் விஷால் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை எனத் தயாரிப்பு தரப்பு சொன்னது. தவிர, இயக்குநர் வெங்கட் மோகனுக்கு அனுபவமில்லை எனக் கூறி, படத்தின் சில காட்சிகளை விஷாலே இயக்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். தவிர, படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் சமயத்தில், தனது சம்பளமாக 6 கோடி ரூபாய் எனவும் கேட்டிருக்கிறார், விஷால். 

``பேராசை, பஞ்சாயத்து, திட்டமின்மை..." - தலைசுற்ற வைக்கும் தமிழ்சினிமா ரிலீஸ் சிக்கல்கள்

மீண்டும் ஒருமுறை, இப்படத்திற்காக 40 நாள்கள் அதிகம் நடித்திருக்கிறார் என்றும், அதற்கு சம்பளமாக விஷாலுக்கு இருக்கும் 1.5 கோடி ரூபாய் கடனை `அயோக்யா' படத்தின் தயாரிப்பாளர் தாகூர் அடைக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான், மீதமிருக்கும் காட்சிகளில் நடித்துக்கொடுப்பார் என்று சொல்லியிருக்கிறது, விஷால் தரப்பு. இதனால், படத்தின் பட்ஜெட் 30 கோடியிலிருந்து, 39 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. இப்படத்தைத் தயாரிக்க, தனது சொத்தில் ஒரு பங்கையே விற்றிருக்கிறார், மது. 

இன்றைய தேதியில் ஒரு தமிழ்ப் படத்தின் இந்தி மற்றும் வடஇந்திய மொழிகளுக்கான டப்பிங் உரிமையில் கிடைக்கும் பணத்தை நம்பித்தான், இங்கே பல தமிழ்ப் படங்கள் உருவாகிக்கொண்டிருக்கின்றன. இந்த டப்பிங் உரிமையும், `அயோக்யா' படத்தின் தயாரிப்பாளர் மதுவை சக்கையாய்ப் பிழிந்திருக்கிறது. `அயோக்யா' படத்தின் இந்தி உரிமையை 9 கோடி ரூபாய்க்கு விற்கத் திட்டமிட்டிருக்கிறார், மது. ஆனால், `டெம்பர்' படத்தின் தமிழ் ரீமேக்கை மதுவுக்கு விற்ற தெலுங்கு தயாரிப்பாளர், தனக்கு 3 கோடி ரூபாய் கொடுத்தால் மட்டுமே `அயோக்யா'வின் இந்தி டப்பிங் உரிமையை விற்க முடியும் என்கிறார். எப்படியெனில், `டெம்பர்' இந்தி டப்பிங் வாங்கிய ஒருவருடன் இணைந்து, `இந்தப் படத்தை எந்த வடிவத்தில், எந்த மொழியில் எடுத்தாலும்... முதல் முதலில் உரிமையைப் பெற்ற எங்களுக்குத்தான் சேரும்' என்று அக்ரிமென்ட்டை மாற்றியிருக்கிறார்கள். இந்தப் பிரச்னை ஒருபக்கம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

``பேராசை, பஞ்சாயத்து, திட்டமின்மை..." - தலைசுற்ற வைக்கும் தமிழ்சினிமா ரிலீஸ் சிக்கல்கள்

`அயோக்யா' படத்தை தமிழமெங்கும் வெளியிடும் உரிமையை `ஸ்கீரின் சீன்' என்ற நிறுவனம் 11.5 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறது. படத்தின் சேட்டிலைட் உரிமை 9 முதல் 11 கோடி ரூபாய் வரைக்கும் விற்கும் என்ற நிலை இருக்கிறது. இதர உரிமங்கள் மூலம் கிடைக்கும்... என அனைத்தையும் கணக்கிட்டுப் பார்த்தாலும், `அயோக்யா' மூலமாக 32 முதல் 35 கோடி வரை மட்டுமே வருமானம் வரும். இதை அறிந்த தயாரிப்பாளர் மது, தான் செலவு செய்த 39 கோடி ரூபாயில் தனக்கு நஷ்டமாகவிருக்கும் தொகையை விஷால் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும், அதுவரை படத்தை ரிலீஸ் செய்யமுடியாது எனவும் ஃபிலிம் சேம்பரில் புகார் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்துப் பேச அழைப்பு விடுத்தும், விஷால் வரவில்லை. விஷால் தரப்போ, 25 கோடியில் படத்தைத் தயாரித்து 37 கோடி ரூபாய்க்கு விற்றிருக்கிறார், மது எனச் சொல்கிறது. 

ஒரு நடிகனாக தனது வேலையைச் செய்து முடித்தாகிவிட்டது என இருந்தார், விஷால். தயாரிப்பாளர் சங்க நிர்வாகம் அரசு வசம் சென்றுவிட்ட நிலையில், தனது படம் குறித்த நேரத்தில் வெளியாகவில்லை என்றால், அது தனக்குப் பின்னடைவாக இருக்கும் என நினைத்த விஷால், தயாரிப்பாளரிடம் பேசி, `அயோக்யா' பிரச்னையை சுமுகமாகத் தீர்த்திருக்கிறார் எனத் தெரிகிறது. அதன் பிறகே, `அயோக்யா' திரையரங்குகளில் வெளியானது. 

இப்படி ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொருவிதமான பிரச்னைகள் தமிழ்சினிமாவில் நிலவுகிறது. `மன்னர் வகையறா' படத்திற்காக நடிகர் விமல் வாங்கிய கடனுக்கு, அவர் நடிப்பில் வெளியாகவிருக்கும் `களவாணி 2' படத்தைத் தடை கேட்கிறார்கள், விமலுக்குக் கடன் கொடுத்தவர்கள். இந்தத் தடையை விமலின் கடனுக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத இயக்குநர் சற்குணம் நீதிமன்றம் சென்று உடைக்கிறார்.  தவிர, அருண் குமார் - விஜய் சேதுபதி காம்பினேஷனில் உருவாகியுள்ள `சிந்துபாத்' படம் மே 16-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தப் படம் வெளியாவதிலும் ஒரு சிக்கல் உருவாகியுள்ளது.

``பேராசை, பஞ்சாயத்து, திட்டமின்மை..." - தலைசுற்ற வைக்கும் தமிழ்சினிமா ரிலீஸ் சிக்கல்கள்

`சிந்துபாத்', `எனைநோக்கி பாயும் தோட்டா' இந்த இரண்டு திரைப்படங்களையும் தமிழகத்தில் வெளியிட `கே புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம், `பாகுபலி 2' படத்தைத் தமிழில் வெளியிட்டபோது, `பாகுபலி'யைத் தயாரித்த ஆர்கா  நிறுவனத்திற்கு 17.60 கோடி ரூபாய் பாக்கி வைத்திருக்கிறது. ஆர்கா நிறுவனமானது ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில், கே புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்து, `தங்களுக்குத் தரவேண்டிய பணத்தைத் தராமல், கே ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் பிற படங்களை வெளியிடக் கூடாது' எனத் தடை கேட்கவே, ஹைதராபாத் உயர் நீதிமன்றமும் `சிந்துபாத்', `எனைநோக்கி பாயும் தோட்டா' படங்களை வெளியிட இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சிறந்த கதை, தேர்ந்த படக்குழு...  என அனைத்தும் இருந்தும், தயாரிப்பாளர்கள் தங்கள் படத்தை ரிலீஸ் செய்வது ஒரு பெரும் தவமாகவே இருக்கிறது. எந்த ஒரு தொழில் பிரச்னையிலும், கடைசிப் பயனாளருக்கு இருக்கும் பாதிப்பு மிகக் குறைவே! ஆனால், ஒரு சினிமா ரிலீஸாவதில் தாமதம் ஏற்பட்டால், தியேட்டரில் டிக்கெட் விற்பனை செய்பவர் தொடங்கி, படம் பார்க்கும் ரசிகர்கள் வரை... அனைவரது பணமும், நேரமும் வீணாகிறது. தவிர, தற்போதைய சூழலில் ஒரு படத்தின் அதிகபட்ச ஆயுள்காலம் மூன்று நாள்கள்தான் என்றாகிவிட்ட நிலை, தயாரிப்பு நிறுவனங்கள் ஒரு படத்தின் ரிலீஸை இடையூறுகள் இல்லாமல் பார்த்துக்கொள்வது, அப்படத்திற்குச் செய்யும் அதிகபட்ச மரியாதை!

Vikatan
அடுத்த கட்டுரைக்கு