Published:Updated:

அதிக கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்களுக்கு ஐகோர்ட் செக்!

விகடன் விமர்சனக்குழு
அதிக கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்களுக்கு ஐகோர்ட் செக்!
அதிக கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்களுக்கு ஐகோர்ட் செக்!
அதிக கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்களுக்கு ஐகோர்ட் செக்!

சென்னை: அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகமாக வசூலிக்கும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ர் பகுதிகளில் உள்ள தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து நடவடிக்கை எடுக்க ஆட்சியர் மற்றும் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் தேவராஜன் உயர்நீதி மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தியேட்டர்களுக்கு அரசு டிக்கெட் கட்டணத்தை நிர்ணயம் செய்து கடந்த 31.12.2006-ல் அரசாணை வெளியிட்டது. அதன்படி முதல் வகுப்பு டிக்கெட்டை ரூ.85-க்கும், இரண்டாம் வகுப்பு டிக்கெட்டை ரூ.75-க்கும், 3-ம் வகுப்பு டிக்கெட்டை ரூ.10-க்கும் விற்பனை செய்ய வேண்டும். ஆனால் தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் 10 ரூபாய் டிக்கெட்களை விற்பதே இல்லை. இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுகளை 100 ரூபாய்க்கும் முதல் வகுப்பு டிக்கெட்டுகளை 150 ரூபாய்க்கும் விற்கின்றனர்.

இந்த வகையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சட்ட விரோதமாக நாள் ஒன்றுக்கு 34 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை பொது மக்களிடம் இருந்து வசூலிக்கிறார்கள். இதை தடுக்க 21.7.2012 அன்று சென்னை கலெக்டரிடமும், போலீஸ் கமிஷனரிடமும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே கூடுதல் கட்டணம் வசூலிக்கும்  தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

##~~##
இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் புகார் முக்கியத்துவம் வாய்ந்தது. அரசு நிர்ணயித்த சினிமா டிக்கெட் கட்டண அரசாணையை பின்பற்ற வேண்டியது தியேட்டர் உரிமையாளர்களின் கடமையாகும். அதற்கு எதிராக கூடுதல் பணம் வசூலிக்க முடியாது. கலெக்டரிடமும், போலீஸ் கமிஷனரிடமும் மனுதாரர் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. நடவடிக்கை எடுக்க வேண்டியது அவர்கள் கடமையாகும். எனவே இப்புகார் குறித்து  போலீஸ் கமிஷனர் விசாரிக்க வேண்டும். விசாரணையில் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்ர்.