Published:Updated:

சிறுக்கி... சினிமா கிறுக்கி!

சிறுக்கி... சினிமா கிறுக்கி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

''நான் பிறந்து வளர்ந்தது கோயம்புத்தூர் - அன்னூர்பாளையம் தம்பி. சின்ன வயசுல  இருந்தே சினிமா ஆசை. சினிமாவுக்குப் போறேன்னு யார் கிளம்பினாலும் 'நானும் வர்றேன்’னு கிளம்பிடு வேன். 'இந்தச் சிறுக்கி சரியான சினிமாக் கிறுக்கியா இருக்காளே’னு அக்கம்பக்கத்துல கிண்டல் பண்ணுவாங்க. அதுவும் எம்.ஜி.ஆர். படம்னா முதல் நாள் முதல் ஷோ பாத்துடுவேன். அந்தச் சமயத்தில்தான் எனக்குக் கல்யாணம் நடந்துச்சு. தயாரிப்பாளர் தேவர் எங்க வூட்டுக்காரருக்கு ஃப்ரெண்டு. அப்ப தேவரு எம்.ஜி.ஆரை வெச்சு 'விவசாயி’ படம் எடுத்துக்கிட்டு இருந்தாரு. கோவையில் ஷூட்டிங். எம்.ஜி.ஆருடன் டான்ஸ் ஆட பொண்ணுங்களைத் தேடிட்டு இருந்தாங்க. நான் அப்ப செம டான்ஸ் போடுவேன். என் சினிமா ஆசை எங்க வூட்டுக்காரருக்கும் தெரியும். 'சரி கழுத நடிச்சுத் தொலை’னு நடிக்க பச்சைக் கொடி காட்டினாரு. அந்த 22 வயசுல தொடங்குன சினிமாப் பயணம், கடவுள் புண்ணியத்தால இன்ன மும் நிக்காம ஓடிட்டே இருக்கு ராசா!'' - வானத்தைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டபடி உற்சாகமாகப் பேசுகிறார் ரெங்கம்மா. இவரை சிறிதும் பெரிதுமான கேரக்டர்களில் ஏகப்பட்ட சினிமாவில் பார்த்திருப் போம்.

சிறுக்கி... சினிமா கிறுக்கி!
##~##

'' 'நீதிக்குத் தலைவணங்கு’, 'நான் ஏன் பிறந்தேன்’, 'காவல்காரன்’னு எம்.ஜி.ஆர் பட குரூப்லயே டான்ஸ் ஆடிட்டு இருந்தேன். 'மீனவ நண்பன்’ல ஒரு சீன்ல சேறும் சகதியுமா இருந்த ஒரு இடத்துல நடிக்க ஹீரோயினி லதா மேடம் ரொம்பப் பயந்தாங்க. அப்ப அவங்களுக்காக நான்தான் டூப் போட்டு அந்த ஸீனை ஒரே டேக்ல முடிச்சேன். 'பிரமாதம் ரெங்கம்மா’னு எம்.ஜி.ஆர். உட்பட எல்லாரும் பாராட்டினாங்க. எனக்கு எம்.ஜி.ஆர்னா உசுருங்க. கட்சி மீட்டிங், சினிமா ஷூட்டிங்னு அவரு எங்க இருந்தாலும் என்னையும் அங்க பாக்கலாம். அந்தச் சமயத்துலதான் அவரு தி.மு.க-வுல இருந்து பிரிஞ்சுவந்து அ.தி.மு.க-வை ஆரம்பிச்சாரு. அப்போ அவரோட உருவத்தைப் பச்சை குத்தி இருந்தேன். இது அவருக்குத் தெரியாது. இதை லதாம்மா அவர்கிட்ட சொல்லிடுச்சு. உடனே என்னைக்

சிறுக்கி... சினிமா கிறுக்கி!

கூப்பிட்டவரு, 'எதுக்கு இந்த மாதிரி எல்லாம் பண்றே?’னு திட்டினார். 'இது என் அண்ணன் உருவம். அதை வரைய உங்கக்கிட்டக்கூட அனுமதி வாங்க வேண்டியது இல்லை’னு சொன்னேன். உடனே அவர் 'நமக்கு எப்பவுமே தலைவர் அண்ணாதான்’னு சொல்லி ஆட்களை வரவெச்சு தன் முன் னாலேயே அண்ணா படத்தைப் பச்சை குத்தவெச் சார். இதுதான் அந்தப் படம்'' என்று கையைக் காட்டி சிரித்த ரெங்கம்மா தொடர்கிறார்.

''தம்பி, எம்.ஜி.ஆர். இன்னமும் ஃப்ரிஜ்லவெச்ச ரோசாப்பூ கணக்கா என் கண்ணுக்குள்ளவே நிக்கிறாரு. எம்.ஜி.ஆர். அளவுக்கு இல்லாட்டியும் சிவாஜியும் எனக்குப் பிடிக்கும். அப்பவே பிரமாண்டமா எடுத்த 'ராஜராஜசோழன்’ படத்துல அவர்கூட டான்ஸ் ஆடினது மறக்கவே முடியாது. அப்ப வந்த எல்லாப் படங்கள்லயும் நான் டூப், குரூப் டான்சர்தான். 'சின்ன டயலாக்கூடப் பேசாம நம்ம வாழ்க்கை இப்படியே போயிடுமோ’னு வருத்தமா இருக்கும். அந்த வருத்தத்தை 'வைதேகி காத்திருந்தாள்’ மூலம் போக்கினவரு ஆர்.சுந்தர்ராஜன்தான். 'அந்தப் பாட்டு வாத்தியார் மகள பாத்தீயா?  வெள்ளப் புடவை கட்டிட்டுப் போறதும் தெரியல... வர்றதும் தெரியல... அவ, தண்ணி அடிக்கிற அந்தப் பையனை வெச்சுட்டு இருக்காடீ. அதனாலதான் ஊருக்குள்ள மழை பெய்ய மாட்டேங்குது’னு பேசினதுதான் சினிமாவுல நான் பேசின முதல் வசனம்.

சிறுக்கி... சினிமா கிறுக்கி!

அர்ஜுனோட நடிச்ச 'சின்னா’ படத்துல வில்லன் மன்சூர் அலிகான் என்னை 70 அடி உயரத்தில இருந்து தண்ணியில தள்ளிவிடுறது மாதிரி சீன். டைரக்டர் ஆக்ஷன்னு சொன்னதும், மன்சூர் என் மேல கையவெச்சு லேசாத் தள்ளி விட்டாரு. ரியலா இருக்கட்டுமேனு நினைச்சு நான் உண்மையிலேயே  தண்ணில குதிச்சுட்டேன். ஒரு நிமிஷம் எல்லாரும் பயந்துட்டாங்க.  நான் ரொம்பச் சாதாரணமா நீச்சல் அடிச்சு மேல எந்திரிச்சு வந்தேன். செமத்தியா திட்டு விழுந்துச்சு.

அப்புறம் நம்ப தமிழ்நாட்டு மவராசன் காமராஜருக்கு அம்மாவா நடிக்கக் கூப்பிட்டாங்க. எவ்வளவு பெரிய புண்ணியம். உடனே ஒப்புக்கிட்டேன். சரியா ஷூட்டிங் அன்னைக்கு என்னைக் கண்ணும் கருத்துமா பார்த்துக்கிட்ட எங்கம்மா தவறிடுச்சு. என்ன ஆனாலும் பரவா யில்லைனு சொல்லி சங்கரன்கோயில் போய் எல்லாச் சீனையும் ஒரே டேக்ல முடிச்சுக் கொடுத்துட்டு வந்தேன்.  நான் வர்றதுக்குள்ள எங்க ஆத்தாவை எடுத்து அடக்கம் பண்ணிட் டாங்க. தெருவுல இறங்கிப் போறப்ப எல்லாரும் என்னை அடையாளம் கண்டுக்குறாங்க. ஏதோ அவங்களோட சொந்த பாட்டி மாதிரி உரிமை யோட பேசுறாங்க. 'அந்த வசனத்தைப் பேசு பாட்டி’ம்பாங்க. ஒரு சில பொடிப்பசங்க என் னைப் பாத்ததும் தயங்கி நிப்பானுங்க. 'அட கிட்ட வந்து பேசுடா’னு நானாப் போய் பேசு வேன். இந்தப் பெருமைதான் ராசா சினிமாவுல நான் கண்ட சொகம்!

தமிழ் மட்டுமில்லாம மலையாளம், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, இந்தினு ஏகப்பட்ட மொழிகள்லயும் நடிச்சுட்டு இருக்கேன். 'அலை கள்’னு ஒரு படத்துல கதாநாயகியா நடிச்சி அஞ்சு விருது வாங்கினேன். 'சுதந்திரம்’ படத்துல நடிச்சதுக்காக அசாம்ல விருது கொடுத்தாங்க. இப்ப சீரியல்லகூட நடிச்சுட்டு இருக்கேன். அப்ப இருந்த ஹீரோ எம்.ஜி.ஆர், சிவாஜியில இருந்து இப்ப இருக்கிற அஜீத், விஜய், சிம்பு, ஆர்யானு பலபேர்கூட நடிச்சு இருக்கேன். அதே மாதிரி நாகேஷ்ல இருந்து விவேக், வடிவேலு, கஞ்சா கறுப்புனு எல்லார்கூடவும் காமெடி பண்ணியிருக்கேன்.  54 வருஷமா ஓய்வே இல் லாம தொடர்ந்து ஓடிட்டே இருக்கேன்.

எனக்கு மூணு பொண்ணுங்க. ரெண்டு பசங்க. என் ரெண்டாவது பொண்ணு சரோஜாவும் நிறைய படங்கள்ல நடிச்சிருக்கா. இப்ப என் பேத்தி டினா, கதாநாயகியா நடிச்ச 'பாரி’ங்கிற படம் ரிலீஸ் ஆகியிருக்கு. மூணு தலைமுறையா நான் நடிச்சிட்டு இருக்கேன். இதைவிட இந்தச் சிறுக்கிக்கு என்ன சந்தோஷம் ராசா வேணும்?''

சிறுக்கி... சினிமா கிறுக்கி!

- நா.சிபிச்சக்கரவர்த்தி
படங்கள்: ப.சரவணகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு